RSS

Category Archives: Books

அழகர்சாமியின் குதிரை

அழகர்சாமியின் குதிரை – உலகக் கோப்பை கிரிக்கெட், தமிழக சட்டமன்ற தேர்தல் இவ்விரண்டை அடுத்து இதுதான் இப்போது Talk of the Town. ஒரே காரணம் இளையராஜா. அதுவும் நகரத்தை மையமாகக் கொண்டு படங்கள் எடுக்கும் கௌதம் மேனன் தயாரிக்கும் படத்திற்கு கிராமிய மணம் கமழும் ராஜாவின் இசை என்பது ஓர் இனிய ஆச்சரியம். ஒரு சிறுகதையைப் படமாக எடுப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு. எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதிய அச்சிறுகதையை படத்தின் செய்தி வந்த நாள் முதலே தேடிக் கொண்டிருந்தேன். சென்னை புத்தகக் காட்சியில் தேடி கிடைக்கவில்லை. இன்றுதான் கிடைத்தது. கதையைப் படித்ததும் உணர்ந்தே. அது சிறுகதை அல்ல, ஓர் அருமையான திரைக்கதை! வெள்ளித்திரையில் காண ஆவலாய் இருக்கிறேன்.

கதை கீழே.
நன்றி : http://thoguppukal.wordpress.com/

அழகர்சாமியின் குதிரை

கிராமத்தின் லட்சணங்கள் எண்பதாம் வருடத்திலிருந்து மாறத் தொடங்கி இருப்பதாக, அதே ஊரில் வேலை பார்க்கும் காளமேக வாத்தியார் முப்பது வருடங்களாகச் சொல்லி வருகிறார். ஆனால் அவர் மட்டும் மாறுவதாக இல்லை! வேட்டி நுனியை இடக்கையால் தூக்கிப் பிடித்தபடி மூக்குப்பொடியும், ஹவாய் செருப்புமாக ஊருக்குள் திரிகிறார். காலம் அவர் தலைமுடியை மாற்றும் முயற்சியில்
இறங்கிவிட்டது. காளமேகம் அதை ஒப்புக்கொள்ளவில்லை. தன் பெயருக்கேற்ப தலையும் கருமேகம் போல் இருக்க வேண்டுமென்று மாதம் பிறந்தால் பக்கத்து டவுனுக்கு மொபெட்டில் போய் முடிவெட்டி, டை அடித்துத் திரும்பி வருகிறார்.

தாமரைக்குளம் மட்டுமில்லை, தமிழ்நாட்டின் தொண்ணூற்று ஒன்பது சதவிகித கிராமங்கள் காளமேக வாத்தியாரின் மண்டை மாதிரிதான், தங்கள் ஒரிஜினல் நிறத்தை இழந்து வெளிறிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை இயல்புப்படி மாறவிடாமல், முடிந்தவரை சாயம் பூசிப் பூசிப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், மாற்றமோ அவ்வப்போது வெளிவந்து கண்ணாமூச்சி காட்டுகிறது. தாமரைக்குளத்தின் மையம் ஆலமரத்தடிதான். அழகர்சாமி கோயிலை அடுத்து வளர்ந்திருந்த ஆலமரத்தை அணைத்தாற்போல் ஒரு மண்டபம் கட்டி, பிள்ளையாரைக் காவலுக்கு வைத்திருந்தார்கள். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட மண்டபம். தாங்கி நிற்கிற கல்தூண்கள், சிவப்புக் காவி பரவிய ஜில்லிடும் தரை. அதில் நிரந்தரமாக கிடந்த கோலம், சாய்ந்த கோலம், கவிழ்ந்த கோலம் என ஆறேழு கோலங்களில் ஏழெட்டுப் பேர் அலங்கோலமாகக் கிடப்பார்கள். பெரும்பாலும் ஐம்பதைத் தாண்டிய கிராமத்தின் சீனியர் சிட்டிசன்கள். ஊரு தலைப்பிரட்டுப் பயல்களுக்கு பெருசுகள். மரியாதையாகச் சொல்வதானால் வயசாளிகள். அனுபவஸ்தர்கள்.

பிள்ளையார்தான் பாவம்… இந்த வயசாளிகளின் புலம்பல்களையும், வெற்றிலை எச்சில் துப்பல்களையும், புகையிலைப் பெருமூச்சையும், விவஸ்தையின்றி அவர்கள் பேசும் கெட்ட வார்த்தைகளையும் பெரிய காதுகளால் கேட்டபடி நொந்து போயிருக்கிறார். பிள்ளையாருக்குப் பக்கத்து வீட்டுக்காரர் போல அழகர்சாமி. அவருக்குச் சின்னதாகக் கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். பிள்ளையார் மாதிரி முடங்கிக் கிடக்கிற அவசியம் அவருக்கு இல்லை. அவர் ஐம்பொன்னால் ஆனவர். எனவே ஊர்ப் பெரியகுடியின்
வீட்டு சாமி ரூமில் இருக்கிறார். அவரது வாகனமான குதிரை, ஐந்தாறு கிலோமீட்டர் தாண்டி, லையடிவார மண்டபம் ஒன்றில் ஏகாந்தமாக இருக்கிறது. சித்திரை மாதத் திருவிழாவுக்கு அழகர்சாமி ஊர்வலமாக
மலையடிவாரம் போய் தனது வாகனத்தில் ஏறி, மலையடிவாரம் தாண்டிய ஒரு காட்டாற்று மணலில் இறங்கி அருள்வார். பிறகு ஊர்வலமாக வந்து, கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மூன்று நாட்கள் கோலாகலத் திருவிழா. முதல் நாள் கரகாட்டம், மறுநாள் சமூக – சரித்திர நாடகம், மூன்றாம் நாள் பாட்டுக் கச்சேரி.

கேளிக்கைகள் குறைவாக இருந்த கிராமங்களில் திருவிழாக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடவுளருக்கு மகிழ்வு தந்து மக்களுக்கு மழை தருபவை. ஆலமரத்தடி மண்டபத்தில் காளமேக வாத்தியாரது மொபெட் வந்து நின்றபோது, வரப்போகும் திருவிழா பற்றி மூன்று பேர் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
“என்ன பேசிட்டு இருக்கீங்க?”
“திருனா நெருங்குதில்ல வாத்யாரே.. இந்த வருசம் எந்த நாடகம் போடறதுன்னுதான்!”
வாத்தியார் சுவாரஸ்யமின்றி, “என்னமோ அம்பது நாடகம் கைல இருக்கிற மாதிரிதான். வள்ளித்திருமணம், வீரபாண்டியக் கட்ட பொம்மன், கதம்ப காமிக்… இந்த மூணைத்தான் திரும்பத் திரும்பப் போடறோம். அழகர்சாமிக்கே ‘போர்’ அடிச்சுப் போயிருக்கும்!” பேசிக்கொண்டு இருந்த மூவரில் ஒருவர் காரை வீட்டுப் பெருமாள். மற்றவர், சின்னச்சாமி. இன்னொருவர் கோவிந்தசாமி. மூவரும் வாத்தியாரை எரிச்சலுடன் பார்த்தார்கள்.
“ஏன் வாத்யாரே! நீயும் வருசா வருசம் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்லித் தாற!
நீ சம்பளம் வாங்கலையா? ஏன்யா இப்படிக் கூறு கெட்டவன் மாதிரி பேசற…? நீ எல்லாஞ் சொல்லிக் குத்து, இந்தூர்ப் புள்ளைக கரை சேரவா?” என்றார் கோவிந்தசாமி.
“நான் கிளம்பறேன்!” என்றார் வாத்தியார்.
“அட என்னய்யா… வந்த கையோட போறேங்கறே? கோவிச்சுக்கிட்டியா?”
”அதில்ல.. வேலை கிடக்கு!”
“அடேயப்பா.. எங்களுக்குத் தெரியாம, உனக்கு அப்படி என்னய்யா வேலை? ஊர்லயே ராசாகணக்கா இருக்கிறது நீதான்யா! மாசமானா கவுர்மென்டு சம்பளம். நிழல்ல உக்கார்ந்திருந்து வாழ்ற! இதுல, வருசத்துல முக்காவாசி நாளு லீவு!” அடிக்கடி இவ்வாறான பொறாமைக் குரலை கோவிந்தசாமி வெளிப்படுத்துவார். அவருக்கு வாத்தியார் மீது லேசானதொரு விரோதம் உண்டு. அவர் வாத்தியார் வேலைக்குப் படிக்கப் போய், அது பிடிக்காமல் ஓடிவந்து, ஊரில் விவசாயம் பார்த்தவராம். தான் இழந்த
வாய்ப்பைக் கண் முன்னே அனுபவிக்கிற ஜீவனான காளமேகத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் இடித்துப் பார்ப்பார்.

வாத்தியார், இந்தப் பாமரர்களை ஒரு பார்வை பார்த்தார். அறிவாயுதம் கொண்டு அவர்களை வீழ்த்த எண்ணி, “வீட்டுக்குப் போனா நாலஞ்சு புக்ஸைப் படிக்கலாம். பசங்களுக்குச் சொல்லித் தர்றதுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். இங்க உக்காந்து வெட்டிக் கதை பேசறதுல என்ன பிரயோஜனம்?”
“வாத்தியார் பேச்சைப் பார்த்தியா? வருசம் பூரா இங்கன உக்காந்து, எங்ககூட வெட்டுப் புலி, தாயம் ஆடிட்டு, இப்ப திடுதிப்புன்னு மாத்திப் பேசறியே வாத்தியாரே… புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கற ஆளு.. பேச்சு சுத்தம் வாணாமா?” இன்றைக்குத் தனக்கு நேரம் சரியில்லை என்ற முடிவுக்கு காளமேகம் வரவேண்டியதாயிற்று. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமர்ந்தார்.
”ம்…! சம்சாரிக எல்லாம் இன்னிக்கு ஒரு விதமாகத்தான் பேசறீங்க. படிப்பு சொல்லிக் குடுக்கறவன் சாமி மாதிரி! அவனை மதிச்சுப் பழகணும். நீங்க பேசறதே இந்த லட்சணத்துல இருந்தா, நாலைக்கு உங்க புள்ளைங்க வாத்யாரை மதிக்குமா? கலிகாலம் வந்துருச்சு. மழை பெய்ய மாட்டேங்குதுன்னா, ஏன்? அம்புட்டுப் பேரும் இப்படிக் குணங்கெட்டு அலையிறதாலதான்!”
மூவரும் வாயடைத்தனர். என்ன இருந்தாலும் படித்தவனின் திறமையே திறமை என்று
காளமேகம் தன்னை மெச்சிக் கொண்டார்.

அவர்களை அவர்களது ரூட்டிலேயே மடக்கியாயிற்று. (மூன்று பேரும் கலி முத்திப்போனது
பற்றியும் மழை பொய்ப்பது பற்றியுமே தினமும் பேசிக்கொண்டு இருப்பார்கள்.)
“சரியாச் சொன்னீங்க வாத்யாரே!” அவர் முகத்தில் வருத்தம்.
இரண்டு வருடங்களாக ஊரில் மழை சரியில்லை. இயற்கைக்கு வஞ்சகம், சூது எல்லாம் இத்தனை வருசமாகக் கிடையாது. அது அப்பாவியாக இருந்தது. இப்போது அதுவும் மனுசனைப் போல் மாறிவிட்டதோ? பெருமாளின் நெடிய அனுபவத்தில், ஆடி மாதமானால் மழை தேடிவரும். ஓடைகளில் தண்ணீர் கரை தொட்டுப் போகும். ஊரைச் சுற்றியிருக்கும் எட்டுக் கண்மாய்களிலும் நீர்
நிறையும். பருத்தியும், நெல்லும், கரும்பும் மோட்டார் வைத்து ஒருபுறம் விவசாயம் செய்யும் அதே நேரம், காட்டு வெள்ளாமையாக சோளமும், மொச்சையும், எள்ளும், கடலையும், தட்டாம்பயிறுமாக.. ஊரில் யாரும் எதற்கு ஏமாந்து நின்றது கிடையாது. தாகம் எடுத்தால், எந்த வீட்டு வாசலிலும் நின்று மோர் கேட்டு வாங்கிக் குடிக்கலாம். அது ஒரு காலம். இப்போது அப்படியா இருக்கிறது? ஊரில் எல்லார் வீட்டிலும், பாலை சொஸைட்டிக்காரனுக்கு விற்கிறார்கள். காலை நேரத்தில் சைக்கிளில் வந்து, கேன்களில் பீய்ச்சிக்கொண்டு போய்விடுகிறான். ’மனுசப்பய சனம் எல்லாத்தையும் காசை வெட்டுக் கணக்குப் பண்ண ஆரம்பிச்சிடுச்சு!’ என்று தனக்குள் எண்ணிக்கொண்ட பெருமாள், அழகர்சாமியின் கோயிலைப் பார்த்து வணங்கினார். அவருக்கும் வயது அறுபதாச்சு. ஒவ்வொரு சித்திரை பவுர்ணமியிலும்
அழகர் ஆற்றில் இறங்குவதும், அந்த மூன்று நாட்களுக்குள் மழை பெய்வதும் தப்பாமல் நடந்து வருகிறது. போன வருசம் அப்படி நடக்கவில்லை. சாமி கோயிலில் இருந்த போதும் கூட மழை பெய்யவில்லை. கோயில் மறுநுழைவு எல்லாம் முடிந்து, சாமி திரும்பிப் போன பிறகுதான் கொஞ்சம் மழை பெய்தது.
“என்ன பெருமாளு, பலமான யோசனை?” என்றார் கோவிந்தசாமி.
“இந்த வருசம் அழகர் ஆத்துல இறங்கும்போது, கண்டிப்பா மழை பெய்யணும்டா கோயிந்து.
நான் மனசுல நினைச்சு வச்சிருக்கேன்!”
“அண்ணே, அதுக்கு நீ நினைச்சாப் பத்தாது. அழகர்சாமியில்ல மனசு வைக்கணும்..!”
”இந்த எகடாசிப் பேச்செல்லாம் வேணாம். போன தடவை மழை பெய்யலன்னதும், நாங்க
கமிட்டி கூடிப் பேசி சாமிகிட்ட குறி கேட்டோம். ‘வர்ற வருசம் திருவிழாவைச் சுத்த
பத்தமா, விமரிசையா பண்ணனும்’னு வாக்கு வந்துச்சு. ‘குதிரையைச் செப்பனிடணும்.
வரி வசூலைக் கூட்டிப் போட்டு, ஜாம் ஜாம்னு கொண்டாடணும்’னு முடிவு
பண்ணியிருக்கோம்!”
”அப்படியே… வருசா வருசம் கூட்டிட்டு வர்ற அந்த கரகாட்டக்காரியையும், வள்ளித்
திருமணம் நாடகசெட்டையும் மாத்திருங்க. போன வருசம் வந்திருந்த முருகனுக்கு வயது
அம்பத்தஞ்சு. வள்ளிக்கு நாப்பத்தேழு!” என்றார் வாத்தியார்.
“ப்ச்…! நக்கல் பண்ணாத வாத்யாரே… எனக்கு சமயத்துல எம்புட்டுச் சங்கடமா
இருக்கு, தெரியுமா? இப்புடியே போயிட்டு இருந்தா, ஊரு என்னத்துக்கு ஆகும்?
தோட்டத்துல தண்ணி சுத்தமா கீழ போயிருச்சு!”

வாத்தியாருக்கும் அது தெரியும். பருவநிலைகள் மாறித்தான் வருகின்றன. புதுசுபுதுசாகக் காரணங்கள் சொல்கிறார்கள். ஒருமுறை டவுனில் ஒரு வேன் வைத்து, மழை பெய்யாததற்குக் காரணம் மரங்களை வெட்டுவதுதான்’ என்று சொன்னார்கள். அதை வந்து இங்கே சரியாக எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. இவர்களிடம் கேலிப் பேச்சு வாங்கியதுதான் மிச்சம்.
இவர்கள் பேச்சு தொடர்கையில் பெருமாளின் மகன் ராமகிருஷ்ணன் தன் கூட்டாளி கனகுவோடு வந்தான். இரண்டு பயல்களும் பெருசுகளை சட்டை பண்ணாமல் வந்து மண்டபத்தின் வயர், சுவிட்சுபோர்டு மீட்டர்களைப் பார்வையிட்டனர்.
”ஏய்… இத்தினி பெரிய மனுசங்க இருக்கோம்… செருப்புக்காலோட அங்கியும்
இங்கியும் போறியா?”
“மன்னிச்சுக்குங்க நைனா!” என்று செருப்பை அவிழ்த்தான் கனகு.
“என்னடா பண்ணப் போறீங்க?”
“நாளைக்கு இங்கன ஒரு நாடகம் போடலாமின்னு இருக்கோம்!”
பெரியவர்கள் முகம் கறுத்தது. பெருமாளின் மகன் ராமகிருஷ்ணன் இரணியனுக்குப் பிறந்த பிரகலாதன் மாதிரி… ஆனால், நேர் எதிர்! கருடனைக் கண்டால் விரட்டி விரட்டிக் கும்பிடுகிறவர் பெருமாள். சாமியே கும்பிடாத தறுதலைப் பயல் ராமகிருஷ்ணன். கூடச் சேர்ந்திருக்கிற கனகு பற்றிப் பேசவே வேண்டாம். சரியான அரைக் கிறுக்கன். ரெண்டு பயல்களும் இப்போதுதான் காலேஜ் முடித்து கைலி கட்டி, ஊருக்குள் வெட்டிப் பொழுது ஓட்டித் திரிகிறார்கள்.
“ஏண்டா… போன தடவை நாடகம் போடுறோம்னு சொல்லி எங்களை எல்லாம் நக்கல் பண்ணீங்க.
இப்ப மறுபடியும் ஆரம்பிக்கிறீங்களா? உதை வேணுமா ரெண்டு பேருக்கும்?”
”இல்ல பெரியப்பா… இது விஞ்ஞான விளக்க நாடகம்!”
“அடேங்கப்பா… எங்களுக்குத் தெரியாம என்னடா விளக்கம்?”
”பூமி எப்படி உருவாச்சுன்னு கதையும் பாட்டுமா சொல்லப் போறோம்!”
சின்னச்சாமி மெதுவாகக் கண்காட்டினார். கோவிந்தசாமி காதைக் கடித்தார். வாத்தியாரையும் கூப்பிட்டார். “இந்தப் பயலுக சிக்கல் புடிச்சவனுக. எதையாவது சின்னப் புள்ளைத்தனமா இழுத்து விவகாரமாச்சுன்னா வம்பு. பெருமாள்கிட்ட சொல்லிப் பயலைத் தட்டி வைக்கணும்!”
“அதாஞ்சரி” என்று தீர்மானம் நிறைவேறியது. மூவரும் அறிவித்தார்கள்…..
“ஏலே இரண்டு பேரும் ஆளுக்குப் பத்து ரூபா வாங்கிட்டு டவுனுக்குப் போய் சினிமா பாருங்க. அதை விட்டுட்டு இந்தச் சில்லறைச் சோலி பார்த்துக்கிட்டுத் திரிஞ்சா நல்லது கிடையாது!”
“என்ன இப்படிச் சொல்றீங்க?”
“மேல பேசாதீங்கடா! ஓடிப்போங்க!”
அவர்கள் இருவரும் தொங்கிப்போன முகத்துடன் தமக்குள் குசுகுசு என்று பேசியபடியே,
இவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போனார்கள்.
“என்ன, பயலுகளை ரொம்பக் கடுசாப் பேசிப்புட்டீங்க,” என்றார் பெருமாள்.
“பின்ன என்னண்ணே… வயசுப் பசக.. என்னமாச்சும் ஏழரையைக் கூட்டிப்புட்டா நமக்குத்தானே பிரச்சனை? சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க.. இந்தப் பய நீங்க பெத்த புள்ளை மாதிரியா இருக்கான்? ஒரு மட்டு மரியாதை கிடையாது. எதற்கெடுத்தாலும் பதிலுக்குப் பதில் பேசிக்கிட்டு…”
“ப்ச்! என்ன பண்றது கோயிந்து! எனக்குப் புத்திர பாவத்துல சனீஸ்வரன் இருக்கானாம். அடங்காத புள்ளைதான் பொறக்கும்னு எழுதியிருக்கு…”
அவர்களது பேச்சு, தகப்பன்களுக்கு அடங்காத தறுதலைப் பிள்ளைகள் பற்றி வெகுநேரம் நடந்தது.

மூணு மணி வாக்கில், பெருமாள் எழுந்தார். வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்.
“திருவிழாவை நல்லா நடத்தணும். குதிரைக்கு பெயிண்ட் அடிக்கணுமில்ல? வாங்க, நாலு பேருமாப் போயி கதவைத் திறந்து குதிரைய துடைச்சிட்டு, அப்படியே என்ன செலவாகும்னு வெளில விசாரிச்சிட்டு வந்துடலாம்.”
பெருமாள், சின்னச்சாமி, கோவிந்தசாமி, காளமேகம் நால்வரும் இரண்டு மொபெட்களில் கிளம்பினார்கள். வாத்தியாரது மொபெட்டின் பின்னால் பெருமாள் இருந்தார். போகையில் வாத்தியார் கேட்டார்…
“எதுக்குப் பெருமாள் திடுதிப்புன்னு கிளம்பினீங்க.. குதிரையைப் பாக்கறதுக்கு?”
பெருமாள் கனமான குரலில் சொன்னார்… “கொஞ்ச நாளா மனசே சரியில்லை… வாத்யாரே!
சாமிக்கும் பூமிக்கும் நம்ம மேல கோவம் வந்திருச்சுடானு நாலு நாள் முன்னாடி எங்க அம்மா சொல்லுச்சு. நூறு வயசு ஆச்சு அதுக்கு! அது சொன்னது என் மனசில சாமி வாக்கு மாதிரி பட்டுச்சு. எப்படியாச்சும் இந்த வருசம் நல்லவிதமா ஊர் கூடி, அந்த அழகர் கால்ல விழுந்து, ‘எங்க தப்பையெல்லாம் மன்னிச்சிரு ஆண்டவா!’ன்னு சொல்லணும். மழை பிச்சிக்கிட்டுப் பெய்யணும். அதுவரைக்கும் நான் திங்கிறது சோறு கிடையாது வாத்யாரே!”
மலையடிவாரத்தை அடைந்தார்கள். மாலை நாலு மணி இருக்கும். சாயங்கால வெயில் கண்களைக் கூசியது. மலையடிவாரம் ஆதலால் குளிர்ந்த காற்றும், லேசான பச்சிலை வாசனையும் அடித்தன. பெருமாள் சட்டென்று தோள் துண்டை எடுத்து, இடுப்பில் அனிச்சையாகக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் போட்டபடி மண்டபத்தை நோக்கி நடந்தார். மண்டபத்தைப் பார்த்த அனைவரும் அதிர்ந்தனர். துருப்பிடித்த பூட்டு சங்கிலி ஓரமாகக் கிடக்க, பீடம் காலியாக இருந்தது. ஏழெட்டு பீடித் துண்டுகள் ஓரமாகக்
கிடந்தன. கடவுள் இன்னும் சில தினங்களில் ஏறி வரும் வாகனம் இருந்த இடம் வெறுமையாக இருந்தது.
அழகர்சாமியின் குதிரையைக் காணவில்லை!

*****

ஊர் அரண்டுபோனது. ஊழிக்காலம் வந்துவிட்டது போன்றதொரு பதற்றம் கிளம்பியிருந்தது.
தாமரைக்குளத்தில் சைக்கிள்கள் திருடு போயிருக்கின்றன. அதெல்லாம் மனித வாகனங்கள். ஆனால், இப்போது காணாமல் போனதோ கடவுளின் குதிரை! இந்த ஊரையே கட்டிக் காத்துக் காவல் புரிகிற அழகர்சாமியின் குதிரையைத் திடீரெனக் காணோம் என்றால்…
”இப்ப நடந்திருக்கிறது சாதாரண விஷயமில்ல… கும்பிடற சாமியோட வாகனத்துல கை
வெச்சுட்டானுக.. நாம இத்தனை ஊர் சனம் இருந்தும் சாமியோட ஒத்தைக் குதிரையைப்
பாதுகாக்க முடியலைன்னா எப்படி… அசிங்கமால்ல..?”
ஊர்க்கூட்டத்தில் கோவிந்தசாமி பொருமியபோது ராமகிருஷ்ணன் எழுந்தான்.
“என்ன இப்படிப் பேசறீங்க? ஏழு ஊர் சனத்தையும் சாமிதான் பாதுகாக்குதுனு இம்புட்டு நாளா
சொல்லிட்டு இருந்தீங்க” என்றான்.
“வாயில போடுய்யா அவனை. இவனை மாதிரி தலைப்பிரட்டுப் பசங்க பயலுகளாலதான்
இப்படியெல்லாம் நடக்குது” நாலைந்து பேர் ராமகிருஷ்ணனை அடிக்கப் பாய்ந்தனர்.
சிலர் விலக்கினார்கள். சிறிய தள்ளுமுள்ளுக்குப்பின் அமைதி நிலவியது.
“அமைதியா இருங்கப்பா. பிரச்னையாகிப் போச்சு. என்ன பண்ணலாம்னு பேசறதுக்குக் கூடி
இருக்கோம். குழப்பம் பண்ணாதீங்க,” வாத்தியார் அமைதிப்படுத்தினார்.
“ஊரு கெட்டுப்போச்சு. எந்தக் காட்டுக் களவாணிப் பயலோ சாமியையே நடக்க விடணும்னு
யோசனை பண்ணி இப்படிக் கூத்துப் பண்ணிட்டான். இதுக்கு முன்னாடி சாமி வாகனத்துல
யாரும் கை வெக்கத் துணிஞ்சது கிடையாது.”
”என்ன வாத்தியாரே சொல்றீங்க? இதுக்கு முன்னால நம்மூர்ல ஏழெட்டு எருமைமாடுக காணாமப் போகலையா? எமதர்மராஜனோட வாகனத்தையே ஓட்டிட்டுப் போயி பாலைப் பீய்ச்சிட்டாங்க. களவாணிப் பயக. அழகருக்குப் பயப்படுவாங்களா?”
”கூறு இல்லாமப் பேசாதய்யா… அதெல்லாம் நிசமான எருமை. இப்ப காணாமப் போயிருக்கிறதோட மதிப்பென்ன… மரியாதை என்ன?”
தாமரைக்குளத்திலும் மூலத்தைவிட மாதிரிக்குத்தான் மரியாதை. குதிரையை உருவாக்கிய
கண்ணு ஆசாரி கலங்கிய கண்களுடன் முன்னே வந்தார்.
“என் உசுரைக் குடுத்து செஞ்ச குதிரைய்யா. அதைத் தொட்டவன் கை மரக்கட்டை மாதிரி ஆகிப்போகும். இது என் தொழில் மேல சத்தியம்!”
”சாபம் விடறதெல்லாம் சரிப்பா..” என்று பெருமாள் வாய் திறந்தார்.
”அடுத்து என்ன செய்யணும்? அதைப் பத்திப் பேசுவோம். வாத்தியாரே.. விவரமானவரு நீங்க
சொல்லுங்க..”
காளமேகம் தனது முக்கியத்துவத்தை உணர்ந்து தொண்டையைச் செருமினார்.
”இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரைங்கிற மாதிரி…”
‘வாத்தியார் தன்னைக்குறித்து ஏன் பேச ஆரம்பிக்கிறார்?’ என்று ராமகிருஷ்ணனும் கனகுவும் நினைத்தார்கள்.
“…. குதிரையில்லாட்டி பரவாயில்லை. சாமிய மட்டும் வெச்சு இந்த முறை சாமி கும்பிட வேண்டியதுதான்…”
“யோவ்… குதிரை காணாமப் போனதுக்கு என்ன மேல் நடவடிக்கை?, அப்படிங்கறதை பேசுவியா அதை விட்டுட்டு…”
வாத்தியார் சுதாரித்தார். “மேல் நடவடிக்கை தான… போலீஸ் கம்ளைண்ட் குடுத்திருவோம்.”
“சரி, அப்புறம்….?”
”அப்புறம் என்ன, சப்பரம் வெச்சு சாமியத் தூக்க வேண்டியதுதான்.”
“கோட்டி புடிச்ச வாத்தி, குதிரையில்லாம ஊர்வலம் போனா அது அழகரே கிடையாதுய்யா!”

கனகு, ராமகிருஷ்ணன் காதைக் கடித்தான். “பாத்தியாடா! வாகனத்தை வெச்சிதான் சாமிக்கு மரியாதை. மயில் இருந்தாத்தான் முருகன். குதிரை இருந்தாத்தான் அழகரு… பனி இல்லாத மார்கழியா.. படை இல்லாத மன்னவரா?” என்று மெதுவாகப் பாடினான்.
“கரெக்ட்தானடா, தொப்பியும் கூலிங்கிளாசும் இல்லாம நாம எம்.ஜி.ஆரை நினைச்சுப்
பாக்க முடியுதா?”
இளைஞர்கள் இருவரும் தமக்குள் பேசிச் சிரிப்பதை கோவிந்தசாமியின் கண்கள் கவனித்தன. அவர் சின்னசாமியின் காதில் கிசுகிசுத்தார். இருவரும் தமக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்.
பெருமாள் இறுதி அறிவிப்புக்காக தொண்டையைச் செருமினார்.
“சரி… போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிர வேண்டியது. அதுக்கப்புறம் நல்ல நேரம் பாத்து குறி கேக்க வேண்டியது. சம்மதந்தானா எல்லாருக்கும்?”
குறி கேட்கிற யோசனை உடனே ஏற்கப்பட்டது.
“ம்.. நம்ம ஊர் கோடாங்கியை வெச்சு அடிச்சுக் கேட்டுரலாமா?”
“அது சரியா வராதுங்க. வெளியூர் ஆளைக் கூட்டிட்டு வாங்க. மலையாளத்து ஆளுன்னா
மையைப் போட்டு கரெக்ட்டா சொல்லிருவான்.”
“அதுவும் சரிதான். உள்ளூர்க் கோடாங்கியை இதுல சம்மந்தப் படுத்தறது பல வகையிலயுஞ் சிக்கல். அந்தாளு, சரியா சொல்லிட்டாச் சரி. ஒருவேளை தப்பா கிப்பா சொல்லிட்டான்னா பேரு கெட்டுப் போயிரும்ல.. நாளப்பின்ன பொய் சொல்லிப் பிழைக்க முடியாதில்ல. என்ன கோடாங்கி?” ஒரு பெரிய மனுஷன் விளையாட்டாகச் சொல்ல, உள்ளூர் கோடாங்கிக்கு சட்டென்று கோபம் தலைக்கேறி விட்டது. அவர் எழுந்த வேகத்தில் குடுமி அவிழ்ந்து தொங்கியது. அகலக் குங்குமப் பொட்டும் அவிழ்ந்த கூந்தலுமாக ஆம்பளை பாஞ்சாலி போல் சூளுரைத்தார்.
”அவமானப்படுத்தறீங்களா என்னைய? ஏய்… இந்த ஊர்லயே எனக்குத்தாண்டா அருள் இறங்கும்…. பாரு! என்ன நடக்குதுன்னு பாரு. யார் யாரு என்ன ஆகப் போறீங்கனு பாரு.. எந்தச் சீமையிலிருந்து எந்தக் கொம்பனைக் கொண்டுவந்தாலும் சரி… என் துணை இல்லாம வாகனம் கிடைக்காது. எழுதி வெச்சுக்கங்கடா மாப்ளைகளா?” போறேன் போறேன் என்று ஒரு அன்பார்லிமெண்டரி வார்த்தையைச் சபையில் உதிர்த்துவிட்டு, கோடாங்கி வெளியேறினார். வருத்தத்திலிருந்த பெருமாளின் முகம் மேலும் கறுத்தது.
“இத பாருங்கப்பா… ஊருக்கே நேரம் சரியில்லாமதான் என்னென்னமோ நடக்குது. சும்மா
இருந்த கோடாங்கிய இப்படி அசிங்கப்படுத்தி விரட்டி விட்டுட்டீங்களே!…
அவங்கவங்க கொஞ்சம் வாய அடக்குங்க ஏன்யா சிக்கலைப் பெருசாக்கிறீங்க?”
”சரிங்கையா, பெரியவர் சொன்னா பெருமாள் சொன்ன மாதிரிம்பாங்க.. பெருமாளே சொல்லிட்டீங்க. அப்புறமென்ன?”
”முதல் வேலையா டேசன்ல போய் ஒரு பிராது குடுத்திருவோம். யார் யாரு வர்றீங்க?”
துடிப்பாக இருந்த கூட்டத்தினர் இதற்குத் தயங்கினார்கள். உள்ளூரில் ஆயிரம் வீரம் பேசினாலும் போலீஸென்றால் உள்ளூர பயம்தான்.
“என்னப்பா சத்தத்தையே காணம்?”
”முக்கியஸ்தர்கள்லாம் போங்க. எதுக்கு கண்டவங்களையும் கூப்பிட்டுக்கிட்டு.”
“ம்.. வாத்தியாரு, நான், சின்னசாமி, கோவிந்தசாமி, கண்ணு ஆசாரி அஞ்சு பேரும்
போறோம்.. என்னா.”
ஊர் தலையாட்டியது.

தலைவிரிக்கோலமாக வந்த கோடாங்கியைப் பார்த்ததும் சரசம்மாளுக்கு எரிச்சல் மேலிட்டது.
“ஏய்.. கூறுகெட்ட மனுசா! எதுக்கு இப்ப அவுத்துப் போட்டுக்கிட்டு வர்ற? பொம்பளைக பாத்தா கேலி பண்ணிச் சிரிப்பாளுகளா.. மாட்டாளுகளா?”
கோடாங்கிக்குச் சுருக்கென்றது. கீழே பார்த்தார். வேட்டியெல்லாம் ஒழுங்காய்த்தானிருக்கிறது.
”என்னடி சொல்ற பொச கெட்டவளே எல்லாம் ஒழுங்காய்த்தான இருக்கு?”
“அடச்சீ.. குடுமியைச் சொன்னேன்யா! பொட்டச்சி கெணக்கா இப்படி விரிச்சுப்போட்டுட்டு வர்றியே, பெத்த பிள்ளை வளந்து முருங்கை மரம் மாதிரி நிக்குது…. நீ இன்னும் இப்படி இருக்கியே!”
கோடாங்கி பெரிய மீசையுடன் இருந்தாலும் சரசம்மா அவரைத் தன் வீட்டுக் கன்னுக்குட்டி அளவுக்குத்தான் மதிக்கிறாள். கோடாங்கி தட்டி, பாட்டுப் பாடி, குறி சொல்லி, மந்திரித்து… வசியம், தாயத்து,
பில்லி, ஏவள் என்று பல வகையிலும் ஊரையும், ஊருக்குள் திரியும் அல்பாயுசு ஆவிகளையும் அச்சுறுத்தி என்ன பயன்? கட்டின மனைவியை வசியம் பண்ணவோ, வாயைக் கட்டவோ இயலாத மனிதனாகத்தான் கோடாங்கி இருந்தார். அவர்களுக்கு ஒரே ஒரு பெண். அவளுக்கு மாரியம்மா என்று கோடாங்கி பெயர் வைத்தார். ஆனால் சரசம்மா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தப் பெயரைச் செல்லமாக்கிவிட்டு தேவி என்றழைக்க அந்தப் பெயர்தான் துலங்கியது என்றாலும் கோடாங்கி மட்டும் அவளை வீட்டுக்குள் மாரி என்றுதான் அழைத்து வந்தார்.

“மாரி எங்கே?” கோடாங்கி குரலில் எரிச்சல்/
”அவளை எதுக்குத் தேடுறீங்க?”
”வெந்நீர் வெக்கச் சொல்லணும். குளிச்சுட்டு பூஜை கட்டப்போறேன்… காட்டேரி பூஜை!”
“அது எதுக்கு?”
“என்னை இளக்காரமாப் பேசுனவங்களை நாக்குத்தள்ள வைக்கப் போறேன். சபையில் வெச்சுக் கிண்டல் பண்ணிப்புட்டானுக.. அவனுக நாக்கைச் சுருட்டி உள்ள இழுக்கிற மாதிரி ஒரு பூஜை போடப் போறேன். காட்டேரித் தாயே! அம்மா! காட்டேரி…” கோடாங்கியின் உடல் வியர்த்தது. மூச்சு உஸ்ஸென்று பாம்பின் சீறலாக வெளிவந்தது. சரசம்மா வெகுநிதானமாக கோடாங்கியை ஏற இறங்கப் பார்த்தாள்.
”சுடுதண்ணியெல்லாம் வைக்க முடியாது. உனக்கு சுடுதண்ணி வெச்சே விறகெல்லாம் தீந்து போகுது. அப்புறம் சோறு வடிக்கிறது எப்படி? பேசாம பச்சத்தண்ணியில குளி!”
“வெந்நீர்லதான் குளிக்கணும்… நீ போட்டுத் தரவேணாம். எங்க என் பொண்ணு?
அதுகிட்ட சொன்னா போட்டுக்குடுக்கும். பூஜை கட்டணும்னு சொல்றேன்ல?”
“குடுப்பா குடுப்பா.. எதை வெச்சு போட்டுக் குடுப்பா? இதோ பாரு. நீ பூஜை கட்டு, கூட இன்னொரு பொண்டாட்டியும் வேணா கட்டு. சுடுதண்ணி வேணும்னு என் தாலிய மட்டும் அறுக்காத. விறகு ஒடிச்சே என் இடுப்பு ஒடிஞ்சு போச்சு!”
“மாரி எங்கே? அதைச் சொல்லு.”
“அவ எங்கயோ தோட்டத்துக்குப் போனா, கீரை பிடுங்கிட்டு வர்றதுக்கு…”
வேறு வழியின்றி கோடாங்கி பச்சைத் தண்ணீரை எடுத்துத் தலையில் ஊற்றினார். அவர் சர்வீஸில் பார்த்த எல்லா காத்து கருப்புகளையும்விட கடுமையான பெண் யாரென்றால், அது சரசம்மாதான்!
கோடாங்கியின் மனதில் சரசம்மா, காட்டேரி, சில குறளிப் பேய்கள் மற்றும் சில காத்துக் கருப்புகள் ஓடிக்கொண்டு இருந்த அதே நேரத்தில், ஊரைத்தாண்டி விலகியிருந்த குளத்தின் கரையில் ஒரு சைக்கிள் போய்க்கொண்டு இருக்கிறது. பெருமாளின் மகனான ராமகிருஷ்ணன் ஓட்டுகிறான். முன்புற பாரில், மாரி
அமர்ந்திருக்கிறாள்.காதல் சிட்டுகள் சைக்கிளில் விரைந்துபோய் தோப்புக்குள் மறைகின்றனர். ஆள் காட்டிப் பறவைகளான கனகுவும், சீரங்கனும் தோப்பின் வேலியோரம் மாங்காய்ப் பிஞ்சுகளைப் பொறுக்கித் தின்றபடி காவல் இருக்கின்றனர். ஊரில் என்ன களேபரங்கள் இருந்தாலும் இப்படியாகப்பட்ட விஷயங்கள் ஒருபுறம் சத்தம் இல்லாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

போலீஸ் ஸ்டேஷன், டவுனில் நடுநாயகமாக அமைந்து இருந்தது. ஸ்டேஷனுக்குப் போகணும் என்றாலே ஒரு பயம் சூழ்ந்து நா வறண்டுவிடுகிறது. ஐந்து பேரும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது ஏட்டய்யா மட்டும் இருந்தார்.
“வணக்கங்க…”
“ம்.. வாங்க. என்னா சமாசாரம்?”
“தாமரைக்குளத்திலிருந்து வர்றோமுங்க… ஒரு பிராது குடுக்கணும்…”
“என்ன… பிராது… எதுவும் கொலை பழி ஆயிப்போச்சா?”
“சேச்சே, அதெல்லாமில்லீங்க.. குதிரை காணாமப்போயிருச்சுங்க!”
ஏட்டு மேலும் கீழுமாகப் பார்த்தார். “ஏன்யா… இதென்ன போலீஸ் ஸ்டேஷனா, மாட்டுத் தாவணியா? குதிரை காணம்னா தேடிப்பாருங்க. கழுத எங்கயாவது மேஞ்சுக்கிட்டு இருக்கும். இங்க எதுக்கய்யா வந்தீங்க?” அதட்டினார் ஏட்டய்யா. இவர்களுக்கு உதறியது. என்னதான் உள்ளூர்ப் பெரிய மனிதர்கள் என்றாலும் காக்கி உடைக்கென்று ஒரு கலவரம் இருக்கிறது.
“ஏதாச்சும் அடிதடி வெட்டுக் குத்துன்னா பரவாயில்ல. ரூவா, நகை திருடுபோனா பரவா இல்ல.. குதிரை காணாமப் போச்சு ஆட்டுக்குட்டி காணாமப் போச்சுனு இங்க வந்தா எப்படி…? எங்கள என்ன அதிகாரினு நினச்சியா? ஆடு மேய்க்கிறவன்னு நினச்சியா?”
இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏட்டய்யா இடைமறிக்காமல் இருந்தால்
ஒட்டுமொத்த விவரத்தையும் கொட்டிவிடலாம். நெஞ்சுக்குள் இருக்கிறது. கோர்வையாக வரவில்லை.
“யாருதுய்யா குதிரை?”
“அழகர்சாமியோடதுங்க!”
“யாருய்யா உங்கள்ல அழகர்சாமி?” இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
”உங்கள்ல யாருமே அழகர்சாமி இல்லையா… முழிக்கறீங்க?”
“இல்லீங்க.”
“பறிகுடுத்த ஆளு வராம நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்க?”
காளமேகம் சுதாரித்து, “சார்… அழகர்சாமிங்கறது சாமிங்க! சித்திரைத் திருவிழாவுல வருவாரே.. அவருங்க.”
ஏட்டய்யா எரிச்சலுடன் எழுந்து முறைத்தபடி காளமேகத்தின் அருகே வந்தார்.
“ஊதுய்யா!”
காளமேகம் திகைப்பாய்… “எதுக்குங்க சார்?”
“ஊது சொல்றேன்.. வரவர ஸ்டேஷனுக்கு வர்றோம்ங்கிற மட்டுமரியாதையில்லாம தண்ணி அடிச்சிட்டா வர்றீங்க.. ஊது முதல்ல…!” என்றபடி மூஞ்சியை வாத்தியாருக்கு நேரே நீட்டினார்.
வேறுவழியின்றி வாத்தியார் ஊதினார். ஊதச் சொன்னது பெருந்தவறென்று ஏட்டய்யா உணர்ந்தார். மூக்குப்பொடி வாசம், ஒரு விதமாக அடித்து வயிற்றைக் குமட்டியது.
“எனக்குக் குடிக்கிற பழக்கம் இல்லீங்கய்யா.”
“எழவெடுத்த மனுசா.. குடிச்சவன்கிட்டகூட இம்புட்டு வீச்சம் அடிக்காது. ச்சேய்!”
அப்போது எஸ்.ஐ. உள்ளே நுழைந்தார். “என்னய்யா விஷயம்?”
“அய்யா.. குதிரையக் காணோம்னு பிராது குடுக்க வந்திருக்காங்கய்யா,தாமரைக்குளத்திலிருந்து.”
எஸ்.ஐ. சிரித்தார். “ஏங்க.. தேடிப் பாக்கிறதை விட்டுட்டு இதுக்கெல்லாமா ஸ்டேஷனுக்கு வர்றது?”
பெருமாள் தீர்மானித்தார். தடுமாறாமல் பேசும் உறுதியுடன் துவங்கினார். ”அய்யா,
காணாமப் போனது குதிரையில்லீங்க!”
“யோவ்! இப்பதான சொன்ன. அதுக்குள்ள மாத்திப் பேசற?” ஏட்டய்யா பதறினார்.
“இல்லீங்கய்யா, குதிரைதான் காணாமப் போனது. ஆனா, நிஜக் குதிரை இல்லீங்க. குதிரை
வாகனம். அழகர்சாமியோடது. ஊருக்கு வெளியே மலையடிவார மண்டபத்துல இருந்துச்சு.
அதைத்தாங்க காணோம்.”
ஏட்டய்யா, ‘அடடா, சாமி சமாசாரம்! இது தெரியாமப் பேசிட்டோமே..’ என்று மனசுக்குள்
பதறியபடியே, “ஏன்யா… முதல்லயே விவரமா சொல்ல வேணாமா?” என்றார்.
எஸ்.ஐ. யோசித்து, “ம்… சரி, என்ன நடந்ததுன்னு ஒரு புகார் மனு எழுதிக் குடுங்க!” என்று சொல்ல, காளமேகம் வாத்தியார் அமர்ந்து மனு எழுதினார்.
எஸ்.ஐ. சற்று தீவிரமாக யோசித்தவர் மெதுவாகக் கேட்டார். “ஏங்க… குதிரை திருடுதான் போயிருக்கும்னு நினைக்கிறீங்களா?”
”ஆமாங்க! ரெண்டாள் சேர்ந்துதான் அதை நகர்த்தவே முடியும். நல்ல வெயிட்டான குதிரை. கெட்டியான மரத்துல செஞ்சது.” என்றார் கண்ணு ஆசாரி.
“ம்.. அது சரி! அதை எதுக்குய்யா ஒருத்தன் திருடணும்! அதை வெச்சு என்ன பண்ண முடியும். என்ன பிரயோஜனம் அதனால!”

ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உண்மைதான்.. மரத்தாலான குதிரையால்
அந்த அழகர்சாமிக்கு மட்டும்தான் பிரயோஜனம். மனிதர்களுக்கு அதனால் ஆகக்கூடிய பயன் என்ன?
“உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?”
வீராச்சாமியும் சின்னச்சாமியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். வீராச்சாமி பெருமாளைப் பார்த்தார்.
“எங்க மனசுல ஒண்ணு இருக்கு பெருமாளு.. அதை அய்யாகிட்ட சொல்லலாமா.”
”தாராளமா சொல்லுங்க.. இதென்ன கேள்வி?”
“சரி.. பொது விஷயம்.. அதனால நான் தாட்சணியம் பார்க்காமச் சொல்றேன். இதோ இருக்காரே பெருமாளு… இவர் மகன் ராமகிருஷ்ணன் மேலயும், அவன் கூட்டாளிக மேலயும் சந்தேகம் இருக்குங்க..”
பெருமாள் திடுக்கிட்டார். ’தான் மனுநீதிச் சோழனாக மாற வேண்டிவருமோ?’
சற்று நேரம் அமைதி நிலவியது. கண்ணு ஆசாரி தொண்டையைச் செருமினார். “சீச்சீ.. இருக்காதுங்க. எங்க ஊர்ப் பயலுக இந்தக் காரியத்தைச் செய்யாதுங்க. அருமையான மரத்துல செஞ்ச குதுர.. வந்த விலைக்கு வித்துக் காசு பார்த்துரலாம்னு எவனோ களவாணிப் பய செஞ்ச காரியமா இருக்கும்?”
பெருமாளுக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டது. நண்பர்கள் சுமத்திய பாவத்திலிருந்து கண்ணு ஆசாரி அவரை ரட்சித்துவிட, ஆசாரியை விசுவாசத்துடன் நோக்கினார் பெருமாள். எஸ்.ஐ. எல்லோரையும் குழப்பத்துடன் பார்த்துவிட்டுச் சொன்னார்,
“ரூமுக்குள்ள இருக்கேன். ஒவ்வொருத்தரா உள்ள தனித்தனியா வரணும். வந்து அவங்க மனசுல உள்ளதை, யாரு மேல சந்தேகம் என்ன விவரம்கிறதை தெளிவா சொல்லணும். என்ன?”
”சரிங்க சார்!”
எஸ்.ஐ. அறைக்குள் சென்று அமர்ந்தார்.
ஐந்து பேரும் தனித்தனியே உள்ளே போய் பேசிவிட்டு வந்தனர். தாமரைக் குளத்துக்காரர்களிடம் தான் இந்த யுக்தியைப் பயன்படுத்தியது அசல் பைத்தியக்காரத்தனம் என்று எஸ்.ஐ. புரிந்து கொண்டார். ஐவரின் கற்பனைவளமும் எல்லை மீறியதாக இருந்தது. அது உள்ளூர் பெருமாள் மகனில் துவங்கி, பக்கத்து ஊர்,
பக்கத்து மாநிலம் வரை விரிந்தது. எஸ். ஐ.க்கு தலை சுற்றியது. ஏட்டையாவை அழைத்தார்.
”அய்யா… ஏதும் க்ளூ கிடைச்சதுங்களா?”
“நீ வேற… அவனுக உன்னையும், என்னையும் தவிர எல்லாரைப் பத்தியும் சந்தேகமாச் சொல்றாங்க!”
“அப்படிங்களா”
“யோவ் ..இதுல என்ன சிக்கல்னா இந்தப் பிரச்சினைய வச்சு இவங்களுக்கும் பக்கத்து ஊர்க்காரங்களுக்கும் சண்டை வரதுக்கும் சான்ஸ் இருக்கு,பொதுப் பிரச்சினை,கலவரம் அப்படி இப்படின்னு சிக்கலாயிரக் கூடாது,அதனால நீயும் வேலுவும் பொய் அங்க டூட்டி பாருங்க,ஊர்லையே இருக்கணும்,அது தவிர மப்டி யில் ஒரு ஆளை அங்க நிப்பாட்டனும்,அப்பத்தான் ஏதாச்சும் துப்பு கிடைக்கும்!”
“சரிங்கய்யா.. நம்ம கான்ஸ்டபிள் கைலாசத்துக்கு அந்த ஊர்லதாங்க பொண்ணு எடுத்திருக்கு. நம்ம சந்திரனை அந்த வீட்டுக்கு விருந்தாளி மாதிரி அனுப்பிரலாம். யாருக்கும் சந்தேகம் வராதுங்கய்யா!”

அடுத்த அரைமணி நேரத்தில் ஏட்டும், கான்ஸ்டபிள் வேலுவும் உடுப்புடன் ஆலமரத்தடி
மண்டபத்தில் வந்து அமர்ந்தார்கள். மஃப்டி போலீஸ் சந்திரம் மஞ்சள் பையுடன் விருந்தாளி போல வந்து ஊருக்குள் இறங்கினார். குறி கேட்க ஊர்சனம் கூடி இருந்தது. வெளியூர் ஆள் மண்டபத்தில் அமர்ந்திருந்தா. அவன் முன்னால் வெள்ளியால் செய்யப்பட்ட நாகமும், கறுப்பு நிற வழவழப்பான கல்
ஒன்றும் இருந்தன. தவிர, இடதுபுறம் நரியின் தலை ஒன்று வைத்திருந்தான். சிறுவர்கள் அதனை ஆர்வமும் குறுகுறுப்புமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். உள்ளூர் கோடாங்கி அவர் வீட்டுத் திண்ணையில், கைவிடப்பட்ட அநாதையாக உட்கார்ந்திருந்தார். சரசம்மாவும் மாரியும் கிளம்புகிற அவசரத்தில் இருந்தனர். சரசம்மா இரண்டாம் முறையாக கண்ணாடி பார்க்க, ஏற்கனவே ஃபுல் மேக்கப்பில் இருந்த மாரி மீண்டும் ஒரு முறை கண்ணாடியை தாயிடமிருந்து பிடுங்கி ஸ்டிக்கர் பொட்டைச்
சரியாக ஒட்டினாள்.
கோடாங்கி குமுறினார். “ஏலா! இந்த ஊர்ப் பயக என்னைய மதிக்காம வெளியூர்ல இருந்து குறிகாரனைக் கூட்டிட்டு வந்திருக்காங்களேனு நான் வயிறெரிஞ்சு உக்கார்ந்திருக்கேன்.. நீயும் உன் மகளும் சிங்காரிச்சிக்கிட்டு அங்கன போறிங்களா?”
”ஏன் , போனா என்ன? உன்னைய யாரு திண்ணைய தேய்ச்சுக்கிட்டு உக்காரச் சொன்னது?
நீயும் வந்து உன்னையொத்தவன் எப்படி குறி சொல்றான்னு பாத்துத் தெரிஞ்சுக்க!”
“ஏய்… எதைப் பத்தி வேணாப் பேசு.. எந்தொழிலைப் பத்தி தாழ்ச்சியாப் பேசாதே!
இந்தக் காலத்துல பகட்டுக்குத்தாண்டி மதிப்பு. என்னை மாதிரி தொழில்காரனை இருபத்தேழு ஜில்லாவுலயும் பாக்க முடியாது.. தெரிஞ்சுக்க!”
மாரி தந்தையைப் பரிதாபத்துடன் பார்த்தாள். இது அவரது வழக்கமான வசனம். இருபத்தேழு ஜில்லா என்று வருசக்கணக்காக சொல்லிக்க்கொண்டு இருக்கிறார், அது தப்பான தகவல் என்று தெரியாமலேயே! அவர் குறி சொல்லும் லட்சணமும் இப்படித் தான் என்று ஊர் மக்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.
”உங்காத்தாதான் புத்தி கெட்டுப் போறா, நீயுமா மாரி? என் மகளா இருந்துக்கிட்டு அசலூர்க்காரன் என்ன சொல்றான்னு கேக்கப் போலாமா?”
மாரி திரைப்படங்களின் பாதிப்பில். “உங்களை மாதிரி உள்ளவங்க மனசுல போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கக்கூடாதுப்பா” என்றாள். அஜீத்திடமோ, விஜய்யிடமோ இதைச் சொல்கிற பாவனையில்!
“என்னமோ பண்ணித் தொலைங்க” என்று பெருமூச்சு விட்டார் கோடாங்கி. சரசம்மாவும்,
மாரியும் கிளம்பினார்கள்.
கூட்டத்தில் மாரியின் கண்கள் ராமகிருஷ்ணனைத் தேடின. கனகு, சீரங்கனுடன் ஓரமாக நின்று சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தவனுக்கு மாரியைக் கண்டதும் முகம் பிரகாசமடைந்தது.
“ம்… சொல்லுங்க! இப்ப என்ன தெரியணும்?” என்றான் குறிகாரன். தமிழ் சுத்தமாக இருந்தது.
“சாமிக்கு மலையாளம்தானா?”
”ஏன் கேக்கிற?”
“பேச்சைப் பாத்தா மலையாளம் மாதிரி தெரியலையே?”
“நான் எல்லா ஊருக்கும் போறவன். எல்லாப் பேச்சும் எம் பேச்சுதான். எல்லா ஊர்த்
தண்ணியும் என் தண்ணிதான்.. புரியுதா?” என்றவனனின் கண்கள் சிவந்திருந்தன.
இடுப்பைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். பாட்டில் பத்திரமாயிருந்தது.
கனகு சொன்னான். “ராமகிருஷ்ணா, இவன் நிச்சயம் மலையாளத்து மந்திரவாதி கிடையாது.
சரியான ஃப்ராடு மாதிரி இருக்கான். இவனைக் கூப்பிட்டு வந்த ஆள் யாரு?”
“முனியாண்டிதான் கூப்பிடப் போனாப்ல” என்றான் சீரங்கன்.
“அப்ப சரிதான்! வாங்கிட்டுப் போன காசுல கொஞ்சத்தை ஒதுக்கிட்டு சீப் ரேட்ல இவனைக் கூட்டிட்டு வந்துட்டான் போலருக்கு!”
குறிகாரன் கண்ணை மூடி தியானித்து, பிறகு கண் திறந்தான். “சொல்லுங்க… என்ன தெரியணும்?”
“வாகனம் போன திசை… வழி தெரியணும். சாமி குத்தம் எதுவும் வந்திரக்கூடாது.
ஏற்கனவே ஊர்ல மழைத் தண்ணி குறைஞ்சு போயி சம்சாரியெல்லாம் சிரமப்படறோம்ங்க!”
“ம்…….” மறுபடி கண்களை மூடினான்.. திறந்தான்.
“வாகனம் காணாமப் போனது சாமியோட விளையாட்டு! நீங்க சரியானபடி சாமியை நினைக்கலை.
அதான் இப்ப இப்படி ஒரு அறிகுறியைக் காமிச்சிருக்கு!”
பெருமாள் பதறினார், “அய்யோ! இல்லீங்களே… இந்த வருசம் சிறப்பா கொண்டாடனும்னுதான கமிட்டி கூடி முடிவு பண்ணோம்.. அதுக்குள்ளாற.”
”ப்ச்! நடுவுல பேசாதீங்க. திருஷ்டிக்கு நடுவுல ஊடாடக் கூடாது. யாருப்பா அது?
சத்தம் போடாதீங்க!”

சுற்றும் முற்றும் பார்த்த குறிகாரன் ஒரு நபரை அழைத்தான். “வா இப்படி!”
அழைக்கப்பட்ட நபர் மஃப்டியில் இருந்த போலீஸான சந்திரன்.
”சாமி.. இவர் வெளியூரு விருந்தாளியா வந்தவரு!”
“பரவாயில்லை…. அது ரொம்ப விசேஷமாச்சே! இப்படி வந்து எதிரே உக்காரு!”
சந்திரன் குறிகாரன் எதிரே வந்து அமர்ந்தார். குறிகாரன் தனது பக்கத்திலிருந்த ஒரு பெட்டியைத் திறந்தான். “பயப்படாத! இது தலைச்சன் புள்ளை மண்டை ஓடு. இதை உள்ளங்கைல அமுத்தினாப்ல புடிச்சுக்க!”
துணியில் சுற்றப் பட்டிருந்த ஒரு சிறிய உருண்டையான வஸ்துவைக் கொடுத்தான்.
சந்திரனுக்கு உதறல் எடுத்தது.
“ம்.. புடி! கண்ணை மூடு!”
சந்திரன் கை நடுங்க அதைப் ப்டித்துக் கொள்வதை ஏட்டும், மற்றொரு போலீஸான வேலுவும் ஆர்வத்துடன் பார்த்தனர். ஏட்டு அவனிடம் கிசுகிசுத்தார். “பாருய்யா!
நம்ம டிபார்ட்மெண்ட் எல்லாவிதத்துலயும் சிறப்பா பணியாற்றுது பாத்தியா…”
”ஆமாங்கய்யா!”
குறிகாரன் இடி போல முழங்கும் குரலில் கேட்டான். “கண்ணுக்குள்ள என்னா தெரியுது?”
“இருட்டா இருக்கு! அங்கங்க சிகப்பா தெரியுது!”
“ம்…. அதைத் தவிர, என்ன தெரியுது? மஞ்சளா ஒண்ணு அசையுதா?”
“ம்ஹூம்!”
“நல்லாப் பாரு!”
”வெள்ளையாத்தாங்க ஏதோ தெரியுது!”
“ஆஹா!” என்றான் குறிகாரன். “அது அசையுதா?”
அவன் முகம் மலர்ந்தது “உத்தரவு கிடைச்சிடுச்சு.. ம்… உத்தரவு
கிடைச்சிடுச்சு!” என்றபடியே கண்களை மூடி, வாய்க்குள் ஆவேசமாக மந்திரங்களை
முணுமுணுத்தான். உடல் குலுங்கியது.
ஊர் சனம் வாயடைத்துப்போய் வெளியூர் கதாநாயகனைப் பார்த்தது. பருத்த தொந்தியும்,
மார்பு நிறைய விபூதியும், நெற்றியில் ரத்தத் திலகமுமாய் இருந்தான். அவன் காதில் இருந்த கடுக்கன் கூடியிருந்த அத்தனை பெண்களின் கவனத்தையும் ஈர்த்தது. கையில் தங்க மோதிரங்கள் செம்புக்காப்பு.
கண்ணைத் திறக்காமலேயே ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து சந்திரனிடம் நீட்டினான் குறிகாரன்.
“பத்துக்குள்ள நம்பர் ஒண்ணூ சொல்லு!”
“ஒண்ணு” என்றார் சந்திரன்.
“ம்… சரி, மேலே எறி இதை!”
சந்திரன் மேலே எறிந்த எலுமிச்சம் பழம் ஓர் இடத்தில் விழுந்து உருண்டோடியது.
”ம்.. திசை தெரிஞ்சுபோச்சு!” என்றபடி பெருமாளைப் பார்த்தான்.
“அப்படிங்களா… எப்படிங்க?”
“எலுமிச்சம் பழம் கீழே விழுந்து மேற்கு முகமா உருண்டுச்சில்ல… மேற்குத்
திசையிலதான் குதிரை இருக்குது.”
“ஓஹோ!”
“இந்தாளு கண்ணுக்குள்ள வெள்ளையா ஒரு ரூபம் அசைஞ்சதுனு சொல்லலே.. அது என்னது?
குதிரை.. வெள்ளைக் குதிரை!”
”அப்படிங்களா!” எல்லோரும் பிரமிப்பாகப் பார்த்தார்கள்.
“நம்பர் கேட்டப்ப இந்தாளு ஒண்ணுனு சொன்னான்ல! ஒரே நாள்ல தகவல் வரும். இல்லை குதிரையே வந்தாலும் வரும். ஏன்னா, மனசுக்குள்ளயே ஒரு மந்திரத்தை சொல்லி வருந்தியிருக்கேன். உங்க பிரச்சனை முடிஞ்சாச்சு!” கை நிறைய குங்குமத்தை அள்ளி சந்திரனின் நெற்றியில் அப்பினான் குறிகாரன்.
“நானும் பல இடங்கள்ல பார்த்திருக்கேன். கேட்டவுடனே அருள் இறங்கி துப்பு சொன்னது நீதான்! என் வாக்குல சக்தி இருக்கா. நாக்குல சூலி இருக்கா. இன்னிலேர்ந்து இந்தாளோட கடாச்சம் உனக்குப் பரிபூரணமா இருக்கு!” மஃப்டி சந்திரனின் வயிற்றுக்குள் பேரலைகள் புரண்டன..
”சாமி!” அவர் நாக்கு குழறியது. அவர் தலையில் கொஞ்சம் நீர் எடுத்துத் தெளித்தான் குறிகாரன்.
“இந்த செகண்டுலியிருந்து நீ ஆத்தாளோட புள்ள. எப்ப வேணா அவ உன்கிட்ட வருவா. உன்
மூலமா ஜனங்களுக்கு அருள் வாக்கு தருவா! போ!”
வரம் போலவும் , சாபம் போலவும் குறிகாரன் சொல்ல, சந்திரன் உடல் சிலிர்த்து அப்படியே அமர்ந்திருந்தார். கூட்டம் கலைந்தது. குறிகாரனை அழைத்துக்கொண்டு பெரிய மனிதர்கள் கிளம்பினார்கள். சின்னச்சாமி வீட்டு மாடியில் குறிகாரன் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எஸ்.ஐ. வந்து இறங்கினார். நெற்றியில் விபூதியும், கண்களில் பிரமிப்புமாய் ஏட்டும், கான்ஸ்டபிளும் நின்றிருந்தனர். மஃப்டி போலீஸ் மந்திரித்து விட்ட கோழி மாதிரி நெற்றியில் அப்பிய குங்குமத்துடன் எதிரே வந்து நின்று அனிச்சையாய் சல்யூட் அடிக்க எத்தனித்தார்.
“அடச் சீ! கையைத் தூக்காத! என்னய்யா இது கோலம்?”
ஏட்டய்யா பெருமிதமாக, “சார்! பிராப்ளம் சால்வ்ட் சார்! எந்தக் கேஸ்லயும்
இம்புட்டு ஈஸியா துப்புக் கிடைச்சது கிடையாதுங்கய்யா!” என்றார்.
“என்னய்யா சொல்ற?”
“அமா சார். ஃபைண்ட் த லொகேஷன் சார்! மேற்காலதான் குதிரை இருக்கு. ஒரே நாள்ல
கிடைச்சிடும் சார்!”
“யார்யா சொன்னது?”
“நம்ம சந்திரன்தான் சார்!”
“என்னய்யா, நிஜமாவா?”
”அப்படித்தான் சார் மெஸேஜ் வந்திருக்கு!”
“எங்கேர்ந்து?”
”ஸோர்ஸ் ஆஃப் இன்ஃபர்மேஷன் வந்து… ஆத்தா சார்.. சூலி!”
“என்னய்யா உளர்றே.”
”நான் விவரமா சொல்றேன் சார்” என்று நடந்ததை விவரித்தார் ஏட்டைய்யா. எஸ்.ஐ.க்கு முகமெல்லாம் கடுப்பு. “என்னய்யா இது பைத்தியக்காரத்தனம்? ஊர்க்காரன் அவன் மனச்சாந்திக்கு ஆயிரம் பண்ணுவான். கூடச் சேந்து நீங்களும் கூத்துப் பண்றீங்களா?”
”சாமி மேட்டரு சார்!”
“பாருங்க, மூணு பேரும் இங்க டூட்டில இருக்கீங்க… புரியுதா? ஊருக்குள்ள பிரச்சனை வந்திரக்கூடாது. நீங்க அதுல கவனமாக இருக்கணும். சந்திரன் அங்கங்க பேச்சு குடுத்து திருட்டைப் பத்தி ஏதாச்சும் தகவல் கிடைக்குதானு பார்க்கணும். அதை விட்டுட்டு இப்படி இருக்கீங்களே!”
“ஸாரி சார்!”
நாலு திட்டுத் திட்டிவிட்டு, எஸ்.ஐ. போய்விட்டார். இன்னும் ஒரு வித அரை மயக்க நிலையில் இருப்பது போலத் தெரிந்த சந்திரன் அவசரமாக ஓடி வந்து ஏட்டையாவைத் தேடினார். டீக்கடையில் காராச்சேவு வாங்கித் தின்றபடி இருந்த அவரை சைகை செய்து கூப்பிட்டார் சந்திரன்.
“என்ன சந்திரா?”
”கலவரம் வரும் போலத் தெரியுது ஏட்டய்யா…. எஸ்.ஐ.க்கு மெசேஜ் அனுப்புங்க!”
“என்ன சொல்ற?”
“ஆமா… பெருமாள், வாத்தியார், கோவிந்தசாமி… இன்னும் ஏழெட்டு பேரு கையில
டார்ச் லைட், பெட்ரோமாக்ஸ், வேல்கம்பு எல்லாம் எடுத்துக்கிட்டுப் போறாங்க!”
“அப்படியா” என்று பதறினார் ஏட்டய்யா.
அவரும் வேலுவும் சந்திரனுடன் விரைந்தனர். வழி மறித்தனர்.
”எங்கய்யா போறீங்க எல்லாரும்… கைல வெப்பன்ஸோட?”
”அது வந்து….”
“அதிகாரிங்க நாங்க இருக்கும்போதே என்ன தைரியம் உங்களுக்கு…. ம்? கலவரமா
பண்ணப் போறீங்க்?”
“அய்யய்யோ… அதில்லீங்க! நாங்க வேற சோலிக்கில்ல போறோம்!”
“வேற என்னய்யா சோலி?”
“முயல் பிடிக்கப் போறோங்க!”
“முயல் புடிக்கவா?”
”ஆமாங்க! காட்டு முயல்க நிறைய கிளம்பி வந்து திரியும். மாசத்துக்க ஒரு தரம்
இப்படிப் போறது!”
ஏட்டையாவுக்குச் சபலம் தட்டியது.
“எங்களுக்கு டவுட்டா இருக்கு! நாங்களும் வர்றோம்”
“தாராளமா வாங்க.. நாளைக்கு அதிகாரிகளுக்கு முயல்கறி வறுவல் குடுத்துருவோம்!”
”சரி” என்று கிளம்பினார்கள். சந்திரனும் உடன் வந்தார். ஏட்டையா காதைக்
கடித்தார். “துப்புக் குடுக்கிற லட்சணத்தைப் பாரு. நீயே சண்டையக் கிளப்பி
விட்டுருவ போலிருக்கே!”
“நான் என்னத்தைக் கண்டேன்… இவனுக கம்பும், லைட்டுமா கிளம்புனா?”
மேற்கு முகமாக நடந்தார்கள். மலை அடிவாரத்தை நோக்கித் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டு போனார்கள். சற்றுத் தள்ளித்தான் வாகனம் காணாமல் போன மண்டபம் இருக்கிறது. நான்கைந்து டார்ச்சுகள் முன்புற இருட்டைத் துழாவ நடந்தார்கள். பூச்சிகளின் ஓசை மட்டும் அச்சம் தரும் விதத்தில் ஒலித்துக்கொண்டு இருந்தது. மண்டபத்தில் சற்று இளைப்பாறிவிட்டு அதன் பிறகு முயல்களைத் தேடும் உத்தேசத்துடன் மண்டபம் நோக்கிப் போனார்கள்.

“பெருமாளு…. அது என்ன? என்னமோ அசையற மாதிரி இருக்கே?”
சட்டென்று அனைவரும் நின்றனர். ஒரு வித பீதி மின்னலாக அனைவர் மனதிலும் எழுந்தது.
சந்திரனுக்கு தலைப்பிள்ளை மண்டை ஓடு மனதில் வந்து பயமுறுத்தியது.
“ஆமா, எருமையா இருக்குமா? ஏய் ஒரே ஒரு டார்ச்சை மட்டும் அடிங்க. எல்லாரும்
அப்படியே பம்மி உக்காந்துக்குங்க!”
அனைவரும் பதுங்க, வாத்தியார் தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த அசைவின் மீது
டார்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.
அங்கே ஒரு குதிரை நின்றிருந்தது. நிஜமான குதிரை!
காலையிலேயே எஸ்.ஐ.க்குத் தகவல் வந்துவிட்டது. ஊர் தலையாரி போன் பண்ண, எஸ்.ஐ. பைக்கில் கிளம்பிப் போய் சேர்ந்தபோது, ஊர் கலைக்கட்டி விட்டது. ஆலமரத்தடி மண்டபத்தின் முன்னே நீளக் கயிற்றில் குதிரை கட்டப்பட்டு அப்பிராணியாகப் புல் மேய்ந்துகொண்டு இருந்தது. சுற்றிலும் பத்துப்
பதினைந்து சிறுவர்கள் குத்தவைத்து அமர்ந்து, ஆர்வமாக வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். எஸ்.ஐ. அவர்களிடம் வந்து நின்றதை அவர்கள் சட்டை பண்ணவேயில்லை.
“டேய் தம்பி!” என்றார் எஸ்.ஐ. அதட்டலாக. “என்னங்க சார்” என்று எழுந்தான் ஒருவன்.
“எங்கடா பெரியாளுக எல்லாம்?”
”அந்தா… அங்கன இருக்காங்க சார்!”
பையன் கை காட்டிய சற்றுத் தொலைவில், ஒரு கும்பல் கூடியிருந்தது. நட்ட நடுவில் ஒரு ஆள் அருள் இறங்கி சவுண்டு கொடுத்துக்கொண்டு இருந்தார். மஃப்டி போலீஸ் சந்திரன்தான் அது. அவர் மூஞ்சியில் வெளியூர் குறிகாரன் விபூதியை விசிறி விசிறி அடித்தபடியே கேள்விகளைத் தொடுத்தான்.
“சாமி! இது என்ன அறிகுறி… எங்களுக்கு விளங்கலையே?”
“ஏய்ய்… ஏய்ய்… ப்ர்ர்ர்ர்… ப்ர்ர்ர்… “ என்று வினோத ஒலிகளை சந்திரன்
எழுப்பினார். பார்வை நிலைக்குத்தி இருக்க… முகம், தலையெங்கும் விபூதி.
தண்ணீரை அவர் மேல் கொட்டி இருக்க வேண்டும். ஆளே தொப்பலாக கொச கொச என்று இருந்தார்.
”இது என்ன சாமி… நாங்க என்ன பண்ண?”
”என் வாகனம்தான்டி… இது என் வாகனம்தான்!”
குறிகாரன் நிதானித்தான். இடக்கையை நீட்ட, அவனிடம் ஒரு குளிர்பானப் பாட்டில்
நீட்டப்பட்டது. குடித்து விட்டு ஏப்பம் விட்டபடி, “அதான் சாமியே சொல்லுதில்ல…இனியும் என்ன சம்சயம்? இது அவரோட வாகனம்தான்!”
வாத்தியாரும் பெருமாளும் மற்றொரு குழப்பத்துடன் தலையைச் சொறிந்தனர்.
”அது எப்படிங்க?”
“அது அப்படித்தான்யா… கடவுள்கிட்ட கேள்வி கேக்கறதுக்கு மனுசப்பயலுக்கு உரிமை
கிடையாது. என்னா சாமி?” என்றான் சந்திரனிடம்.
“ஆம்மா… கடவுள்வாக்கு… என் வாகனம்… மூச்… திருவிழா கொண்டாடு… போ” என்றார் சந்திரன், துண்டு துண்டாய்! அவரிடம் இருந்து அமானுஷ்ய உச்சரிப்பில் வார்த்தைகள் தெறித்தன.
கண்ணு ஆசாரி மெதுவாகக் கேட்டார்….
“அது நல்ல வாகான மரமுங்க. இப்ப அது எங்க இருக்குனு தெரிஞ்சாத் தேவலை.”
”ஏய்… சொன்னபடி வாகனம் கிடைச்சாச்சு! ஆக வேண்டியதைப் பாரு” என்றார் சந்திரன் அதட்டலாக.
“த பாருங்க… ‘ஒரு நாள்ல தெரியும். மேற்கதான் குதிரை இருக்கு’னு குறிவந்துச்சு. அன்னிக்கு ராத்திரியே, மேற்கால போனீங்க.. உங்களைத் தேடி வாகனம் வந்துச்சா, இல்லையா?” என்றான் குறிகாரன்.
”வாஸ்தவம்தாங்க… ஆனா, இது நிசமான குதிரையால்ல இருக்கு!”
“கடவுள் விளையாட்டுய்யா.. அதை நாம கேள்வி கேக்க முடியுமா? வாகனத்தைப் பராமரிப்பா வெச்சிருங்க. மேற்கொண்டு என்ன நடக்கணும்கிறதைப் பத்தி சீக்கிரமே இன்னொரு அறிகுறி வரும். புரியுதா?” என்றான் குறிகாரன் முடிவாக. மறுப்பேச்சு பேச யாருக்கும் தோன்றவில்லை.

இரண்டே நாளில், ஊரின் தீர்மானிக்கும் சக்தியாக அவன் பரிமாணம் அடைந்திருந்தான்.
எஸ்.ஐ. கடுப்புடன் ஓரமாக நின்றிருக்க… நெற்றி நிறைய விபூதியுடன் கையில் குறிகாரன் கொடுத்த பிரசாதங்களோடு வந்த ஏட்டய்யாவும் வேலுவும், எஸ்.ஐ. நிற்பதைப் பார்த்ததும் பதறி ஓடி வந்தனர்.
”என்னய்யா நடக்குது இங்கே?”
“சார், அவன் சொன்ன மாதிரியே குதிரை சிக்கிப் போச்சு சார்! ரொம்ப பவர்ஃபுல் பார்ட்டியா இருக்கான் சார்.”
“எல்லாக் கூத்தையும் பாத்துட்டுட்தான்யா இருக்கேன். டிபார்ட்மெண்ட் பேரைக் கெடுக்காம விடமாட்டீங்க போலிருக்கே மூணு பேரும்!”
“சார், தயவு செஞ்சு தப்பா நினைக்காதீங்க. கரெக்டா அவன் குறி சொன்ன அன்னிக்கே
ஆச்சரியமா ஒரு குதிரை வந்து எதிர்க்க நின்னு வாலாட்டுது சார்!”
“எதுய்யா ஆச்சர்யம்? குதிரை வால் ஆட்டுறதா?”
”அதில்ல சார்.. இந்த ஊர்ல குதிரையே கிடையாதாம் சார்…!”
பெருமாளும் வாத்தியாரும் வந்து எஸ்.ஐ.க்கு வணக்கம் சொன்னார்கள்.
“என்னங்க.. உங்க ஊரு! ஒண்ணு போலீஸை நம்புங்க.. இல்ல, குறி சொல்றவனை நம்புங்க!
எங்கக்கிட்ட கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு, குறிகாரன் சொல்றான்னு உசிரோட இருக்கிற
குதிரையைப் புடிச்சு வெச்சிருக்கீங்க. நாளைக்கு இந்தக் குதிரை மேல ஊர்வலம்
விடப் போறீங்களா?”
எங்கிருந்தோ வந்து பின்னால் நின்றிருந்த உள்ளூர் கோடாங்கிக்கு குஷி பிறந்து
விட்டது. “நல்லா கேளுங்க சார். தாமரைக்குளத்தான்களுக்கு புத்தி இல்லேனு
தெரிஞ்சுகிட்டு, அந்த வெளியூர்காரப் பய நல்ல மொளகா அரைக்கிறான்.” என்ற உள்ளூர்
கோடாங்கியையும், அவர் குடுமியையும் ஏற இறங்கப் பார்த்தார் எஸ்.ஐ.
“நீ யார்யா?”
”நான் உள்ளூர் கோடாங்கி சார். நான் ம் ஐ போட்டுப் பார்த்திருந்தேன்னா கதையே வேற சார்!”
“முதல்ல உங்களை மாதிரி ஃப்ராடுக அம்புட்டுப் பயலையும் உள்ள தள்ளணும்யா”
கோடாங்கிக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. பெருமாளையும் வாத்தியாரையும் பார்த்த எஸ்.ஐ.
“இதப் பாருங்க. நீங்க ரெண்டு பேரும்தான் ஊர்ல முக்கியமானவங்க. நீங்க சொல்லுங்க. என்ன பண்றதா இருக்கீங்க?”
வாத்தியார் சொன்னார்… “அய்யா காணாமப் போன வாகனத்தை நீங்க தேடுங்க.. நாங்களும்
தேடிப் பார்க்கிறோம். திருவிழாவுக்குள்ள அது கிடைச்சுட்டா நல்லதுங்க.”
“அதை விடுங்கய்யா.. இப்ப ஒண்ணைப் புடிச்சுக் கட்டி வெச்சிருக்கீங்களே.. அதை
என்ன பண்றதா உத்தேசம்? அதோட சொந்தக்காரன் தேடி வந்துட்டான்னா…?”
”அதெப்படி? அது அழகரோட குதிரை. அவரோட வாகனம். அதுக்கு உரிமை கொண்டாடிக்கிட்டு
எவன் வருவான்?”
தனக்கெதிராக யாரது இவ்வளவு தைரியமாகக் குரல் கொடுப்பது என்று திரும்பிய எஸ்.ஐ. திகைத்தார்! மஃப்டி போலீஸ் சந்திரன்தான், சாதாரண சந்திரன் எஸ்.ஐ.க்கு முன்னால்
நேராக நிற்கவே தயங்குவார். சாமி இறங்கிய சந்திரனோ உலகத்துக்கே அதிபதி போல நின்றிருந்தார். கலங்கிய கண்கள், கலைந்த தலை, குங்கும நெற்றி.
“ஏய்…. சாமிக்கிட்ட விளையாடாத! என் வாக்குல நம்பிக்கை வை. என்கிட்ட விளையாண்டேன்னு வை… சர்வ நாசம்! குல நாசம்!”
எஸ்.ஐ.யின் டென்ஷன் உச்சத்துக்குப் போனது. பதறிப்போன ஏட்டய்யாவும், வேலுவும் சந்திரனை அழுத்தித் தள்ளிக்கொண்டு போனார்கள்.
“அய்யா! தப்பா எடுத்துக்காதீங்க. அவன் வெளியூர் ஆளு. விருந்துக்கு வந்த இடத்துல அவன் மேல சூலி இறங்கிட்டா அதான்” என்ற ஊர்காரரிடம், “ம்.. இருக்கட்டும்..இருக்கட்டும்” என்றப்படி நடந்து ஆலமரத்தடி மண்டபத்தருகே வந்தார் எஸ்.ஐ. குதிரையினருகே நின்று ராமகிருஷ்ணனும் சீரங்கனும் ஆராய்ந்துகொண்டு இருந்தனர்.

”என்னப்பா பாக்கறீங்க?” என்றார் எஸ்.ஐ.
“எங்க ஊர் ஆளுங்க பைத்தியக்காரத்தனம் பண்றாங்க… இது எப்படி சார் சாமியோட வாகனமா இருக்கும்? பாருங்க.. முதுகு நடுவுல தழும்பேறிப் போயிருக்கு. புட்டத்துல நாலஞ்சு புண்ணு.. எங்கியோ சுமை சுமந்துட்டு இருந்த குதிரை மாதிரி தெரியுது சார்.”
எஸ்.ஐ.க்கு கடைசியாக இரண்டு விவரமான பயல்களை தாமரைக் குளத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி பொங்கியது.
”வெரிகுட்! படிச்ச பசங்களா நீங்க?”
”ஆமா சார்.”
“உங்க ஊர் ஆளுகளுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா?”
“எங்கன சார்? குறிகாரன், கோடாங்கி பேச்சுதான் இங்க எடுபடும். நாங்க பேசினா தலைப்பிரட்டு பிடிச்சவங்கன்னு பட்டம் குடுத்துருவாங்க.”
“அதுவும் நிஜம்தான்” என்று சிரித்த எஸ்.ஐ. “ஏம்பா உங்களுக்கு யார் மேயலாயவது
சந்தேகம் இருக்கா?” என்றார்.
“ஆமா சார்.” என்றான் ராமகிருஷ்ணன். “போன மாசம் எங்க தோட்டத்து மோட்டார் களவு போச்சு. அதைப் பண்ண கோஷ்டிதான் இதையும் பண்ணி இருப்பாங்களோன்னு ஒரு டவுட்டு!”
“ம்… உங்கப்பாவும் சொன்னாரு.. பெருமாள்தான அவர் பேரு?” என்று யோசித்தவர்,
“தம்பி… நீங்க ஒரு காரியம் பண்றீங்களா?” என்றார்.
”சொல்லுங்க சார்.”
“கொஞ்ச நாளைக்கு.. நைட்ல தூங்காம ஒரு பத்துப் பன்னிரண்டு மணி வாக்குல மலையடிவார
மண்டபம் பக்கம் அப்படி இப்படி சுத்திப் பாருங்க. நீங்க எத்தனை பேர்
ஃப்ரெண்ட்ஸ்?”
“நாலஞ்சு பேரு சார்.”
“குட். நாலஞ்சு பேருமா போங்க. ஏதாவது வித்தியாசமா தட்டுப்படுதான்னு பாருங்க. எனக்கென்னவோ.. அந்தக் குதிரை அந்த ஏரியாவுலதான் எங்கியோ இருக்கணும்னு டவுட்டு.”
”சார்… எங்களை ஏன் சார் போகச் சொல்றீங்க?”
“தம்பி… நீங்க உள்ளூர். அதுலயும் கால நேரமில்லாம கண்டபடி சுத்தறவங்கன்னு என்கிட்ட சொன்னாங்க. அதனால, உங்க மேல யாருக்கும் டவுட் வராஅது. நீங்க தோட்டத்துக்கோ காட்டுக்கோ காவலுக்குப் போற மாதிரி போங்க. வித்தியாசமா, புதுசா எவனாவது அந்தப் பக்கம் வந்தா.. அடையாளம் பாத்து எனக்குத் தகவல் சொல்லுங்க. புரியுதா?”
”ஓகே. சார்” என்றார்கள் இருவரும் பெருமையாக. எதையோ சாதிக்கப் போகிற பரபரப்பு
இருவரையும் தொற்றிக்கொண்டது. இரவு உள்ளூர்க்கடையில் இட்லியும், புரோட்டாவும், ஆம்லெட்டும் சாப்பிட்டுவிட்டு, ஏட்டய்யாவும், வேலுவும் மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். ஏழெட்டுப்பேர்
மண்டபத்தில் படுத்திருக்க.. அங்கே கட்டப்பட்டு இருந்த குதிரையைப் பார்த்தபடி இவர்கள் இருவரும் அமர்ந்தனர். குதிரை அரைத் தூக்கத்தில் இருந்தது. வாலை அவ்வப்போது சாமரம்போல் வீசியது. ஏட்டய்யா பெருமூச்சுவிட்டார்.
”ஏன்யா வேலு… இப்ப நாம இந்தக் குதிரைக்கு வேற காவலா இருக்கிற மாதிரி
ஆயிப்போச்சேய்யா. ம்… சாமி சமாச்சாரம்? இதை ஒரு விரதம் மாதிரி நினைச்சுப்
பண்ண வேண்டியதுதான்! என்னா வேலு…?” என்றவர் ஏதோ யோசனையுடன், “அதென்னய்யா நம்ம
சந்திரன் இப்படி ஆகிப்போனான்?” என்றார் வருத்தமாக.
“மதி பிடிச்சிருச்சுங்க அவனுக்கு.”
“ஏன் வேலு.. இது எல்லாம் நிசமா?”
“எதைக் கேக்குறீங்க?”
”இந்தக் குறி சொன்னது, அருள் வந்தது, இந்தக் குதிரை வந்தது… எஸ்.ஐ. அய்யா சொன்ன மாதிரி நாம ஒருவேளை பைத்தியக்காரத்தனமா இதெல்லாம் நம்பறமோ?” வேலுவும் ஒரு விநாடி யோசித்தான். குதிரை கனைத்தது. “பார்த்தீங்களா? இது மாதிரி நினைக்கிறதே தப்பு… சாமி அதட்டறாரு பாத்தீங்களா!”
”ஆமா! தப்பு தப்பு” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார் ஏட்டய்யா.

பத்து மணிக்கு மேல், ராமகிருஷ்ணன் தலைமையில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்தார்கள். மொத்தம் ஏழு பேர். மூன்று நபரை மேற்கே மலையடிவாரத்துக்கு அனுப்பிவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து சீரங்கன், கனகு, ரமேஷ் மூவரையும் போகச் சொன்னான் ராமகிருஷ்ணன். “அப்ப நீயி?” என்ற சீரங்கனிடம்,
”நீங்க போங்க, நான் பின்னால வாரேன்” என்று ராமகிருஷ்ணன் கண்சிமிட்டினான். புரிந்துகொண்டவனாக சீரங்கன் மற்றவர்களுடன் கிளம்பினான். அவர்கள் போனதும் ராமகிருஷ்ணன் தனியே கோடாங்கியின் வீட்டை நோக்கி நடந்தான். அங்கே வெளியே கொல்லைப்புற மறைவில், மாரி இவனுக்காகக் காத்துக்கொண்டு இருப்பாள்!

சங்கதிகள் நிகழ்ந்தேறி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியிருந்தது. தாமரைக்குளத்தின் வழமைகளில் சில புதியவை பழகிவிட்டிருந்தன. ஏட்டய்யாவும் வேலுவும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்காமலேயே உள்ளூர்வாசிகளாகி இருந்தனர். டீக்கடையில் ஏட்டய்யாவுக்கு கணக்குத் துவங்கி, இருநூறு ரூபாய் சொச்சம் பாக்கி இருந்தது. சமயங்களில் பெருமாள், வாத்தியார் வீடுகளிலிருந்து மதிய சாப்பாடு தூக்கில்
வந்தது. சாப்பிட்டுவிட்டு ஆலமரத்தடி மண்டபத்தில் கோடு கிழித்து பதினெட்டாம் புள்ளி, தாய விளையாட்டுகளை ஆடித் தேர்ந்துகொண்டு இருந்தனர் இருவரும். தனது சர்வீஸில் முன்னெப்போதும் இவ்வளவு நிம்மதியாக தான் வாழ்ந்ததில்லை என்று உணர்ந்தார் ஏட்டய்யா. நேரத்துக்குச் சாப்பாடு, சுத்தமான காற்று, பொழுதுபோக்க விளையாட்டு, பேச்சுத் துணை என்று ஏட்டய்யாவும் வேலுவும் திளைத்து மகிழ்ந்தனர். மஃப்டி போலீஸ் சந்திரனோ வேறொரு தளத்தை எட்டியிருந்தார். காலமெல்லாம் கையைத் தூக்கி சல்யூட் அடித்துக்கொண்டு இருந்தவரை, ஊரே பக்தியுடன் பார்ப்பதும்
வணங்குவதும் புளகாங்கிதமாயிருந்தது. ஊரின் பொதுப் பிரச்னையில் துவங்கியவர், இப்போது வீட்டுப் பிரச்னை, தீராத வயிற்றுவலி, கனவுக்குப் பலன் என்று சகல சமாச்சாரங்களையும் டீல் செய்ததில், தாமரைக்குளத்தின் பெண்களில் பலர் தங்களது பிரச்சனைகளை இப்போதெல்லாம் அவரிடம்தான் சொல்கிறார்கள். அதில் கோடாங்கி மனைவி சரசம்மாவும் அடக்கம். அவரும் வெளியூர் குறிகாரனும் வந்து தனது ஸ்தானத்தைக் கவர்ந்துகொண்டதில், நொந்துபோய்க் கிடக்கிறார் கோடாங்கி. இரண்டு, மூன்று தினங்களாகத் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் குறளி ஒன்றை ஏவி, அவர்கள் இருவரையும் காலி பண்ணி
விடுவதென்கிற முடிவில் இருக்கிறார்.

பெருமாள், வாத்தியார், கோவிந்தசாமி வகையறாக்களின் கவலையோ நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருந்ந்தது. திருவிழா நாள் நெருங்கிக் கொண்டே வருகிறது. காணாமல் போன வாகனம் பற்றி ஏதும் தகவல் தெரியவில்லை. குறிகாரனும் ஆத்தா இறங்கினவனும் “இதுதான் வாகனம்!” என்று நிஜக் குதிரையைக் காட்டி சாதிக்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு எப்படித் திருவிழா கொண்டாட முடியும்… ஊர்வலம் போக முடியும்? அந்தக் குதிரை இப்போது ஊர் சிறுவர்களுடன் வெகு சகஜமாகிவிட்டது. எந்நேரமும் பத்து சிறுவர்கள் அதனைச் சுற்றி அமர்ந்து பேச்சுக் கொடுத்தபடி, புல்லும் கொடுக்கிறார்கள். தத்தம் வீடுகளில் அம்மாவிடம் அழுது பிடிவாதம் பண்ணி, கானம் (கொள்) அவித்து வாங்கி வந்து குதிரைக்கு வைக்கிறார்கள். நேற்று எல்லாப் பசங்களும் கூடி குதிரையை ஏழெட்டு லைஃபாய் சோப்பு போட்டுக் குளிப்பாட்டி, பிடரி முடிக்கும் வாலுக்கும் ஸ்பெஷலாக ஷாம்பு போட்டு அதன் மேனி எழிலைப்
பராமரித்தார்கள். எஸ்.ஐ. அவ்வப்போது வந்து போய்க்கொண்டு இருக்கிறார். அவருக்கு வயிற்றெரிச்சல்..
குறிப்பாக சந்திரன் மீது. இந்த பிரச்னையும் திருவிழாவும் முடிந்த பின்னர்தான் அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு இருந்தார். ராமகிருஷ்ணன், சீரங்கன் மூலமாக அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு துப்பு கிடைத்திருந்தது. கரும்புத் தோட்டத்திலிருந்து ஆலைக்கொட்டகைக்கு சில வெளியூர் ஆட்கள் சந்தேகப்படும்படி வந்து போகிறார்கள். அது குறித்து வேறு ஒரு திசையில் விசாரித்துக்கொண்டு இருந்தார்.

இவை எல்லாம் இவ்வாறு இருக்க.. ஊருக்குள் ஒரு புது ஆள் சைக்கிளில் வந்தான். கைலி
வேட்டி, அழுக்கேறிய காக்கிச் சட்டை, கலைந்த தலை, டயர் செருப்பு.. வந்தவன் ஆலமரத்தடி மண்டபத்தருகே சைக்கிளை நிறுத்திவிட்டு, ஓடிப்போய் ஓரத்தில் கட்டியிருந்த குதிரையைப் பார்த்தான். “ஐயோ! என் எசமானே… நீ இங்கியா இருக்கே?
நான் உன்னைத் தேடி ஊர் ஊரா அலையிறனே.”
கட்டித் தழுவி, தடவிக் கொடுத்து காதல் உணர்வையும் செண்டிமெண்ட்டையும் ஓரிரு விநாடிகளுக்கு நிகழ்த்தினான். குதிரையின் தோழர்களாயிருந்த சின்னப் பசங்களெல்லாம் அவனை விநோதமாகப் பார்த்தார்கள். அவன் அதோடு நிறுத்தியிருக்கலாம்.
ஏதோ ஒரு விஜயகாந்த் படத்தின் பாதிப்பில் தலை சிலிர்த்து திரும்பி, குரலை முழக்கினான்….
“எந்த களவாணிப் பய மகன்டா என் குதிரையைக் கட்டி வச்சவன்? என்னா தைரியம் இருந்தா குதிரையைக் களவாண்டு கட்டி வெச்சிருப்பீங்க?”
ஊரின் இளவட்டங்கள் ரத்தம் கொதித்து, அவன் சட்டையைப் பிடித்தார்கள். குதிரையைத் தேடி ஊர் ஊராக சைக்கிளில் அலைந்த கடுப்பில் இருந்தவன் தடித்த வார்த்தைகளைப் பேச, உள்ளூர் இளவட்டங்கள் இப்படியொரு தருணத்துக்காகவே காத்திருந்தது போல தங்களது பராக்கிரமத்தைக் காட்டி, அவனைப் புரட்டியெடுத்துத் தூணில் கட்டினார்கள். சம்பவம் நடந்த பிறகே வந்து சேரும் மரபைக் காப்பாற்றும் விதமாக ஏட்டய்யாவும் வேலுவும் குளிப்பதற்காக மோட்டார் தோட்டத்துக்குப் போயிருந்தார்கள்…
தகவலறிந்து ஈரப்பதத்துடன் விரைந்து வந்தார்கள்.
“சேச்சே… என்னப்பா தம்பிகளா! நாங்க அதிகாரிக இருக்கோம். எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்ல வேணாமா.. இப்படியா அடிக்கிறது? செத்துக்கித்துப் போய்ட்டான்னா நாங்களும் சேர்ந்துல்ல பதில் சொல்லணும்!”
”பின்ன ஊர் நடுவுல நின்னுக்கிட்டு பெரிய இவன் மாதிரி எல்லாரையும் வையுறான்!
வெட்டுவேன்.. குத்துவேன்ங்கிறான்!”
“சரி சரி.. சும்மா இருங்கப்பா!” என்று அடக்கின வாத்தியார், “சார்… நாங்களும்
இல்லாமப் போயிட்டோம். இந்தாளு வார்த்தையை விட்டுருக்கான். இளவட்டப் பசங்க கை
நீட்டிட்டாங்க. மேற்கொண்டு நீங்க விசாரிங்க”
ம்… என்றபடி ஏட்டய்யா அவனை நெருங்கினார். கட்டுகளை அவிழ்த்து விட்டார்.
தூணில் சாய்ந்திருந்தவன் சரிந்தான். அடிபட்ட வேதனையில் முகம் சுருங்கியது.
அங்கங்கே கண்ணிப்போயிருந்தான்.
“எந்த ஊர்றா நீ?”
“வட்டப்பாறைங்க.”
”எது… மலைமேல இருக்குதே அந்த வட்டப்பாறையா?”
“ஆமாங்க!”
“ஏண்டா.. அங்க இருந்து இங்க எதுக்கு வந்தே.. எதுக்கு அக்குருமாப் பேசினா?”
”அய்யா.. என் குதிரையைத் தேடி வந்தேங்க. இதப் பாருங்க. இது என்னுதுங்க.”
“குதிரை உன்னுதா?” ஊர் ஜனங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
”ஆமாங்க… மலைல இருந்து பலாக்காய், காப்பி, எலுமிச்சை எல்லாம் கீழ கொண்டாந்து விக்கிறதுக்கோசரம் மூணு குதிரை வெச்சிருந்தேங்க. அதுல ஒண்ணை ஏழெட்டு நாளாக் காணோம். மேய்ச்சலுக்கு விட்டிருந்தப்ப நரிக் கூட்டம் விரட்டினதுல எங்கியோ திசை தப்பிடுச்சு. சரி.. கீழ தரைக்கு இறங்கி வந்திருக்கும்னு வந்து ஒவ்வொரு இடமாப் பாத்தா கடைசியில இங்க கட்டிப்போட்டுக் கிடக்கு”
”சரி. வந்தே… குதிரையைப் பாத்தே.. அதுக்கப்புறம் என்ன ஏதுனு ஊர்ல விசாரிக்க வேணாமா? நீ பாட்டுக்கு மானாங்காணியாப் பேசினா எப்படி? சுத்த அறிவு கெட்டவனா இருக்கியே!” என்றபடி ஏட்டய்யா ஊர் மக்கள் பக்கம் திரும்பினார்.
“என்ன பெருமாளு, குதிரை இந்தாளுதுங்கறான்! என்ன பண்ணலாம்?”
மஃப்டி சந்திரன் உரத்த குரலில் சொன்னான். “அந்தப் பேச்சே வேணாம். அருள்வாக்குப்படி சாமி குறி சொல்லி நம்மகிட்ட வந்தது. தெய்வகுத்தம் ஆயிப் போகும். யோவ்… வெளியூரு! வந்த வழியே திரும்பிப் போயிரு.. இல்லேன்னா சபிச்சுருவேன்!”
“சந்திரா… கொஞ்சம் சும்மா இரு! விசாரிக்கிறோம் இல்ல?”
“ஐயா! லௌகீகம்னா நீங்க விசாரிக்கலாம். இது சாமி காரியம். ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடக் கூடாது” என்றான் வெளியூர் குறிகாரன். அவன் மனதுக்குள் வேறு விதமான சிந்தனை. இந்தக் குதிரை, சாமியின் வாகனம் இல்லை என்றாகிவிட்டால், தனது வாக்கின் மீது ஜனங்களின் நம்பிக்கை குறைந்துவிடும். கொஞ்ச நாளாக இந்த ஊர் ஜனங்கள் புண்ணியத்தில் வண்டி சொகுசாக ஓடுவது கெட்டுவிடக் கூடாது இல்லையா?
“அதும் சரிதான்.. அவசரப்படக்கூடாது. கொஞ்ச நாள் பார்ப்போம்!”
”என்னய்யா கொஞ்ச நாள் பாக்கறது? என் பொழைப்பு கெட்டுப்போய் ஊர் ஊரா சைக்கிள்ல
அலைஞ்சு வந்திருக்கேன். ஏழெட்டு நாளா கஞ்சியில்லை… என் குதிரையைக் குடுங்க..
நான் கிளம்பணும்.”
ஏட்டய்யா செருமினார், “தம்பி! அதுல ஒரு சிக்கல் என்னான்னா.” என்று நடந்ததை
விவரித்தார்.
“என்னய்யா! கதையா விடறீங்க.. நான் காசு குடுத்து வாங்கி வளர்த்த குதிரையை நோகாம அமுக்கலாம்ன்னு பாக்கறானுகளா இந்த ஊர்க்காரப் பயக.”
“ஏலேய்! ஊரைப் பத்திப் பேசின, வாயைக் கிழிச்சிருவோம்.”
”ஐயா.. இவங்களை விடுங்க. நீங்க போலீஸ்.. எனக்கு நியாயம் சொல்லுங்க.”
“ம்.. நீ குதிரையைக் காணோம்னு கம்ப்ளைண்ட் குடுத்தியா?”
“இல்லைங்க. அதான் ஊர் ஊரா தேடி அலையுறனே!”
வாத்தியார் பாயிண்டைப் பிடித்தார். “ஆனா, நாங்க கம்ப்ளைண்ட் குடுத்திருக்கோம்.
அதனால குதிரை சட்டப்படி எங்களுக்குத்தான் சொந்தம்.”
“அடப்பாவிங்களா! இது என்னா நியாயம்டா? இன்னிக்கு வித்தாலும் பத்தாயிரம் ரூவாய்க்கு போகும்டா என் குதிரை. அதை நம்பித்தாண்டா என் பொழப்பே இருக்கு.. ஊர் கூடி வயித்துல அடிக்கிறீங்களே.. இது நியாயமா?”

ஏட்டய்யாவுக்கு அவனது நியாயம் புரிந்தாலும், ஊர் மக்களின் கருத்தை மீறிப் பேச முடியவில்லை. ஒரு வார செஞ்சோற்றுக் கடனாக… அவரும் அந்த ஊர் நபராகவே தன்னை உணர்ந்துகொண்டு பேசினார், “சரி தம்பி, ஒரு ஊரே கூடிச் சொல்லும்போது, அதையும் நாம பாக்கணுமில்லையா.. வேணா ஒண்ணு செய்யி. திருவிழா வரைக்கும் நீயும் இதே ஊர்ல இரு.. திருவிழா முடிஞ்சதும் உக்காந்து பேசுவோம்.”
உள்ளூர் கோடாங்கிக்கு பொறுக்க முடியாமல் கேட்டே விட்டார். “ஏன்யா.. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க! இந்த ஊர்ல அசலூர்க்காரங்க எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது. இப்ப இவனையும் இருக்கச் சொல்றீங்க.. எல்லாப் பிரச்சனைக்கும் காரணமே இந்த வெளியூர் குறிகாரப் பயதான். அவனை விரட்டுங்க. எல்லாம் சரியாப் போகும்.”
“சரி.. சரி.. நீங்க எதுக்கு இப்ப சத்தம் போடுறீங்க” என்று அடக்கிய ஏட்டய்யா,
“சரி தம்பி.. நீயும் போய் எங்க ஸ்டேசன்ல எஸ்.ஐ.கிட்ட தகவல் சொல்லி, ஒரு பிராது குடுத்துட்டு வந்துடு. அதான் மொறை. இல்லாட்டி அவரு எங்களை வைவாரு.” என்று வெளியூர் நபரிடம் சொன்னார்.
“சரிங்க.”
“உன் பேர் என்ன?”
அவன் சொன்ன பதிலைக் கேட்டு அனைவரும் புல்லரித்தனர். “அழகர்சாமிங்க!”
வெளியூர் குறிகாரனும், மஃப்டி சந்திரனும் மகிழ்ச்சி பொங்கக் குரல் கொடுத்தார்கள்…
“பார்த்தீங்களா.. சாமியோட விளையாட்டை!”
“என்னய்யா விளையாட்டைக் கண்டீங்க?” குதிரைக்கார அழகர்சாமி டென்ஷன் ஆனான்.
“அந்த அழகர்சாமி…. தன்னோட பெயர் கொண்ட ஒருத்தனோட குதிரையையே தனக்கு வாகனமா
தேர்ந்தெடுத்து இங்க வரவழைச்சிருக்காரு. என்னா ஒரு மகிமை.. சாமி!” கைகளை உயரத் தூக்கி வணங்கினான் வெளியூர் குறிகாரன். “என்னோட வாக்கு தப்பாதுன்னு நிரூபிச்சிட்ட சாமி.”
லேசாக அவன் உடல் ஆடியது.
அழகர்சாமி தனது குதிரையை ஒரேயடியாக அபகரிக்க பெரும் சதிவலை பின்னப்படுவதை உணர்ந்து, கண்களில் நீர் வழிய சின்னப் பிள்ளை போல அழுதான். “அடப்பாவிகளா! என் பொழப்புல மண்ணள்ளிப் போட்டுராதீங்கடா. என் குதிரைய விட்ருங்க. நான் கூட்டிட்டுப் போறேன்!”

அவன் தனது குதிரையின் அருகே சென்று அதன் கழுத்தைத் தடவிக் கொடுக்க, அது கனைத்தது. குதிரையைச் சுற்றி நின்ற சிறுவர்கள் அவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கும் கண்கள் கலங்கின.
ஒருவன் சொன்னான். “நாங்க டெய்லி இதுக்கு புல்லு, கானம் எல்லாம் குடுக்கறோம்ணே.”
மற்றவன் சொன்னான். “நேத்துக்கூட சோப்பு போட்டு குளிப்பாட்டினோம். எங்க கூட இது ஃப்ரெண்டு தெரியுமா?” அவன் அந்தச் சிறுவர்களை அன்புடன் பார்த்தான். பிறகு தனது சைக்கிளை எடுத்தான்.
“என்னப்பா கிளம்பிட்ட?”
”ஐயா.. நான் உங்க ஸ்டேசன்ல போய் எஸ்.ஐ. கால்ல விழுந்து கம்ப்ளைண்ட் குடுக்கறேன். வேறென்ன பண்றது? அவராவது எனக்கு ஒரு நியாயத்தைச் சொல்லட்டும்.”
“வேலு…. நீயும் அந்தாள்கூட போ! எஸ்.ஐ.கிட்ட விவரம் சொல்லு” என்றார் ஏட்டய்யா.
வேலுவும் அழகர்சாமியும் கிளம்பிப் போனார்கள். ஊர் ஜனங்கள் மத்தியில் நம்பிக்கை, அவநம்பிக்கை, குழப்பம் எல்லாமும் இருந்தது. ஏட்டய்யா, பெருமாள், வாத்தியார், கோவிந்தசாமி நால்வர் மட்டும் மண்டபத்தில் இருந்தனர். ஊர் கலைந்து போய்விட்டது.

“ரொம்ப ஆச்சர்யம்தான் வாத்தியாரே” என்றார் ஏட்டய்யா.
”எதுங்க?” என்றார் வாத்தியார்.
“உங்க ஊர் அழகர்சாமியோட குதிரை காணாமப் போச்சு. வட்டப்பாறை அழகர்சாமியோட குதிரையும் அதே நேரம் காணாமப் போயி.. இந்த ஊர் அழகர் சாமியைத் தேடி வந்துச்சு. அந்த அழகர் சாமியோட குதிரைதான் எங்க அழகர்சாமியோட வாகனம்னு நீங்க சொல்றீங்க. ’இல்லையா.. அது என் குதிரைன்னு’ அவன் சொல்றான்” கோர்வையாகப் பேசிவிட்ட திருப்தியோடு ஏட்டய்யா சிரிக்க, இவர்கள் குழப்பத்தோடு தலையாட்டினர். வாத்தியார் நிதானமாகச் சொன்னார். “என்ன ஒண்ணு.. எங்க ஊர் அழகர்சாமி, குதிரை
ரெண்டுமே உயிருள்ள ஜீவன் கிடையாது. அவன் மனுசன், அவன் குதிரை நிஜமான குதிரை!”
வாத்தியார் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். ஏதோ பெரிசாக அர்த்தம் இருப்பது போல தோன்றியது. ஆனால், புரியவில்லை. யாரும் எதுவும் பேசத் தோன்றாமல் இருந்தனர்.
உயரமாக குதிரை நின்றிருக்க, ஒரு பையன் தடவிக் கொடுத்தபடி இருந்தான். ஒருவன் புல் நீட்டி சாப்பிட வைத்துக்கொண்டு இருந்தான். மற்றொருவன் தன் வீட்டில் இருந்த பவுடர் டப்பாவை எடுத்து வந்து குதிரையின் பின்புறம் இருந்த புண்களின் மீது பவுடரைக் கொட்டி வைத்தியம் பார்த்துக்கொண்டு இருந்தான். சாயந்திரம் ஆகிவிட்டது. சைக்கிளில் போன அழகர்சாமியும் வேலுவும் வருவார்கள் என்று ஏட்டய்யா எதிர்பார்த்துக் காத்திருக்கையில், ஆச்சர்யமான தகவல் வந்தது. ராமகிருஷ்ணனும் , சீரங்கனும் மொபெட்டில் சீறி வந்து தகவல் சொன்னார்கள். காணாமல் போன குதிரை கிடைத்து விட்டதாக!
ஊர் கூடியிருந்தது! கடந்த சில தினங்களாக அடிக்கடி ஊர் கூடுவது வழக்கமாகிவிட்டது. இது நல்ல
பொழுதுபோக்காகவும், அதே சமயம் வேலையைக் கெடுக்கிறதாகவும் இருந்தது. என்றாலும் சாமி சமாச்சாரம் என்பதால், எல்லோரும் கூடிவிட்டார்கள். எஸ்.ஐ. வருவதற்காகக் காத்திருந்தார்கள்.

வட்டப்பாறை அழகர்சாமி ஸ்டேஷனுக்குப் போனபோது அங்கே எஸ்.ஐ. இல்லை. இரண்டு
கான்ஸ்டபிள்கள் மட்டும் இருந்தனர்.
”ஐயா வணக்கமுங்க.”
“என்னய்யா.”
“ஒரு புகார் குடுக்கணும்ங்க”
“என்னன்னு?”
”என் குதிரையை மீட்டுத்தரணும்ங்க.. எஸ்.ஐ. ஐயா இல்லீங்களா?”
கான்ஸ்டபிள்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “என்னய்யாது.. வர்றவன்லாம் குதிரை குதிரைன்னே வர்றாய்ங்க. நாட்ல களவாணிப் பயலுக காசு பணம் திருடுறதை விட்டுட்டு குதிரையா களவாங்குறானுகளா?”
“எஸ்.ஐ. ஐயா இல்லிங்களா?” என்றான் அழகர்சாமி மறுபடியும்.
“இத பாருய்யா! எஸ்.ஐ. ஐயா, ஏட்டய்யா ரெண்டு பேரும் அழகர்சாமியோட குதிரை காணாமல்
போனது சம்பந்தமா.. தாமரைக்குளம் போயிருக்காங்க.”
”ஐயா! நா அங்கிருந்துதானுங்க வர்றேன்.. என் குதிரையை எப்படியாச்சும் மீட்டுக்
குடுங்க. என் பொழப்பே அதை வெச்சுத்தானுங்க இருக்கு.”
“உன் பேரென்ன?”
“அழகர்சாமிங்க.”
அவருக்கு டென்ஷனாகிவிட்டது. “என்னடா.. நக்கலா பண்ற? அதான் கம்ப்ளைண்ட் குடுத்து.. களவாண்டவன் சிக்கிட்டானே.. மறுபடியும் இங்க எங்கடா வந்து நீ புகார் குடுக்கற?”
”அய்யா.. நீங்க வேற மாதிரி நினைச்சுக்கிட்டுப் பேசறீங்க… என்ன பிரச்னைன்னா,”
என்று வட்டப்பாறை அழகர் சாமி விவரிக்க, அவர்களுக்குத் தலை சுற்றியது.
“இத பாருப்பா! எங்களுகுக் கிறுக்குப் புடிச்சிரும் போலிருக்கு. எஸ்.ஐ.தாமரைக்குளம்தான் போயிருக்காரு. நீ எங்கூட வா, யோவ்… நான் இவனைக் கூட்டிட்டுப் போறேன். ஸ்டேஷனைப் பாத்துக்க.”
“ஆமாய்யா.. ஒத்தைல விட்டுட்டு நீயும் கெளம்பு… ஸ்டேஷனே தாமரைக்குளத்துக்குப் போயாச்சு.. என்னமோ பண்ணு போ!”

எஸ்.ஐ. வந்து சேர்ந்ததும் கூட்டத்தின் ஆவல் எல்லை மீறியது. எஸ்.ஐ. நடுநாயகமாக சேர் போட்டு அமர்ந்தவாறு, நிதானமாகச் சொன்னார். “இதபாருங்க. குதிரை சிக்கிருச்சு. அது வேற எங்கயும் இல்லை. உங்க ஊர்லயே ஒரு தோட்டத்துல குதிரையைத் திருடிக் கொண்டு போய் வெச்சுட்டு.. அது மேல கரும்புச் சோகையை அம்பாரமாப் போட்டு ஒளிச்சு வெச்சிருந்தாங்க.”
ஊர், மூக்கில் விரலை வைத்தது. “அடேயப்பா! எமகாதகப் பயலுகளா இருக்கானுகளே. யாருங்க அவனுக…?”
“அவனுக ஊர் ஊராப் போய் மோட்டாரு, எலெக்ட்ரிக் ஒயர் திருடுற கோஷ்டி. மோட்டார் திருடத்தான் வந்தானுகளாம். உங்க ஊர் கிணத்துல படி எல்லாம் அவனுகளுக்கு வசதியா இல்லையாம். இறங்கித் திருடுறதுக்கு தோது இல்லாம ஆழமா கிணத்தை வெட்டி வெச்சிருக்கீங்களாம்.”
சிலர் மெல்லிய குரலில் சிரித்தனர்.
“அதனால என்ன பண்றதுன்னு பார்க்கறப்ப.. பாதுகாப்பேயில்லாம, இத்துப்போன பூட்டைப் போட்டு வெறும் கம்பி கேட் மண்டபத்துல சாமியோட குதிரையைப் பாத்திருக்கானுக.
பூட்டையும் உடைச்சு குதிரையைத் தூக்கியிருக்கானுக. ரொம்ப கனமா இருந்ததால…
கரும்புத் தோட்டத்துல கொண்டு போய் மறைச்சு வெச்சிருக்கானுக.. இந்த ஊர்ல கிரஷர் போடறதுக்கு வந்து தங்கியிருக்கிற ஒரு வெளியூர் குடும்பம் இதுக்கு உடந்தை. அந்தத் தோட்டத்துலதான் இப்ப குதிரை இருக்கு.”
“அடடா!” என்று பிரமித்தனர்.
“உங்க ஊர்ல இந்த ராமகிருஷ்ணன், சீரங்கன்னு இளவட்டப் பசங்க இருக்கானுகள்ல.. அவங்கதான் கவனிச்சுத் துப்பு சொன்னாங்க. அதை வெச்சு இப்ப ஆளை மடக்கிட்டோம். அவனும் விபரத்தைச் சொல்லிட்டான். உங்க ஊர்ப் பசங்க உதவி பண்ணதாலதான் இதைக் கண்டுபிடிக்க முடிஞ்சது.”
எஸ்.ஐ. இளைஞர்களை அழைத்துப் பாராட்ட, ஊரில் பட்டென்று அவர்களது மரியாதை உயர்ந்தது.

“பரவால்லிங்க பெருமாளு.. உங்க மகன் சாமி கும்புடமாட்டான்னு வருத்தப்பட்டிங்க. இப்ப சாமிக்கே உதவி பண்ணி இருக்கான் பாத்தீங்களா!” என்று வாத்தியார் சொன்னதும், பெருமாள் கண்கள் பனிக்கத் தலையாட்டினார்.
எஸ்.ஐ. எழுந்தார். “பிரச்ச்னை முடிஞ்சிருச்சு! பெரிய மனுஷங்க எல்லாரும் இருக்கீங்க. வாங்க போய் குதிரையை எடுத்துட்டு வந்து ஊருக்குள்ள வெச்சிருவோம். நல்ல விதமா திருவிழா கொண்டாடுங்க.. என்ன?”
”நல்லதுங்க” என்றார் பெருமாள்.
”திருட்டுப்போன குதிரை. அதை ஊருக்குள்ல கொண்டு வரணும்னா சில பரிகார பூஜை எல்லாம் பண்ணனும்” என்று ஒரு கோரிக்கைக் குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தார் எஸ்.ஐ. உள்ளூர்க் கோடாங்கிதான் இதனைப் பெருமாளைப் பார்த்துச் சொன்னார். எஸ்.ஐ.க்கு ‘சுர்’ என்றது.
“எங்கய்யா அந்த வெளியூர் குறிகாரன்?”
“அவன் ஆளு எஸ்கேப் ஆய்ட்டாங்க. குதிரை கிடைச்ச விஷயம் தெரிஞ்சதும் நைஸா கிளம்பிப் போய்ட்டான்” என்ற கோடாங்கியின் குரலில், இழந்த அந்தஸ்து திரும்பிக் கிடைத்த மகிழ்ச்சி புரண்டது.
எஸ்.ஐ. தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு சொன்னார். “இத பாருங்க. குதிரையை மீட்டுக் குடுத்தாச்சு. அடுத்து நீங்க என்ன பண்றதுன்னாலும் அதைப்பத்தி எனக்கொண்ணுமில்ல. பிரச்சனை மட்டும் வரக்கூடாது, ஆமா!”
அப்போது வட்டப்பாறை அழகர்சாமி வந்து சேர்ந்தான். ஏட்டய்யா ஏற்கனவே அவனைப் பற்றி
எஸ்.ஐ.யிடம் சொல்லி இருந்தார்.
“என்ன அழகர்சாமி.. உன் குதிரை வேற நடுவுல வந்து குழப்பம் பண்ணிடுச்சு. முதல்ல அதை கூட்டிட்டுக் கிளம்பு!” என்றார் எஸ்.ஐ. புன்னகையுடன். அவன் நன்றிப் பெருக்குடன் கை கூப்பிவிட்டு, தனது குதிரையை அவிழ்த்தான். சுற்றி நின்றிருந்த சிறுவர்களின் முகத்தில் ஒரு ஏக்கம் தென்பட்டது. அவன் அவர்களை ஒவ்வொருவராக குதிரை மேல் ஏற்றியபடியே கொஞ்ச தூரம் நடத்திக்கொண்டே போனான். சோகத்துடன் சிறுவர்கள் கூடவே போய் பிறகு திரும்பினார்கள்.

ஒருவழியாக ஊரிலிருந்து ஒரு கும்பல் கிளம்பி எஸ்.ஐ.யுடன் சென்றது. குதிரையை எடுத்துத் துடைத்து தூக்கி வந்தார்கள். உள்ளூர் பூஜை என்று எதையோ செய்தார். ஊரில் குதிரையைக் கொண்டு வந்து வைத்து செப்பனிட்டு, பெயிண்ட் அடிக்கும் வேலை கண்ணு ஆசாரி தலைமையில் துவங்கியது.
எஸ்.ஐ எழுந்தார் … “அப்ப கிளம்பறோம்! திருவிழா நடந்து முடியற வரைக்கும் அப்பப்ப வந்து போவோம்” என்றவர் ,ஏட்டய்யா பக்கம் திரும்பி , “எங்கய்யா அவன் சந்திரன் ஆளையே காணோம்.”
எங்கேயோ மறைவாக உட்கார்ந்திருந்த சந்திரனை வேலு அழைத்து வந்தார்.
“என்னய்யா குறி எல்லாம் சொல்லி முடிச்சாச்சா ?”
தலை குனிந்து நின்றான் சந்திரன்.
“சூலி இன்னும் உன்கிட்டதான் இருக்காளா?”
சந்திரன், தலை நிமிரவில்லை.
“நீ ஸ்டேசனுக்கு வா…பேசிக்கறேன்”
“……..”
எஸ்.ஐ., ஏட்டய்யா,வேலுவுடன் பலியாடு போல சென்றான் சந்திரன். ஊர் களை கட்டத் துவங்கியது. மக்கள் எல்லாம் உவப்போடு வரி கொடுத்து சாமி கும்பிடத் தயாரானது அந்த வருடத்தில்தான். குதிரைக்கு விசேஷ வர்ணங்களைப் பூசி பளபள என்று ஆக்கியிருந்தார்கள். இத்தனை நாள் நிஜக் குதிரையைச் சுற்றி
அமர்ந்திருந்த சிறுவர்கள் இபோதெல்லாம் அழகர்சாமியின் வாகனத்தை சுற்றி அமர்ந்திருந்தனர்.
பெருமாள் மனதில் லேசான நிம்மதி பூத்திருந்தது, ஊரை அடக்கி போடப்பட்டுக் கொண்டு இருந்த பந்தல் ஏற்பாடுகளைப் பார்வையிட்டபடி நின்றிருந்தார். வெயில் கொளுத்தி வியர்வை வழிந்தது. வாத்தியார் அவரிடம் வந்தார்.
“வாங்க வாத்தியாரே!”
“ஏன்னா பெருமாளு…ஏற்பாடெல்லாம் எந்த அளவுல நடக்குது?”
“எல்லாம் ரொம்ப ஜரூர்தான், இன்னும் கொஞ்ச நேரத்துல கொட்டகை போட்டு
முடிச்சிருவாங்க. பெருமாளின் கண்கள் கவலையோடு வெறித்து வானத்தை பார்த்தன.
“என்ன அமைதியாகிட்டிங்க?”
“நல்ல வேலையாப் போச்சு வாத்யாரே… இந்த முறை எந்தத் தடங்கலும் இல்லாம திருவிழா நடக்குமா நடக்காதான்னு நானா ரொம்பப் பதறிட்டு இருந்தேன். அன்னிக்குக் கூட சொன்னேனே… இந்த முறையாவது மழை தண்ணி நல்லாப் பேயனும்… அதனால எந்தக் குறையும் இல்லாம சாமி கும்பிடனும்னு நினைச்சிட்டு இருக்கிறதா…!”
“ஆமா சொன்னிங்க”
“குதிரை காணாமப் போனதும் பதறிப் போயிட்டேன். திருவிழா தடைப்பட்டுப் போயி ஊரு இந்த வருஷமும் காய்ஞ்சு போகுமோனு பயந்தேன். நல்ல வேளை.. குதிரை திரும்பிக் கிடைச்சிருச்சு. திருவிழாவை நல்லபடியா நடத்தி முடிச்சு..மழையும் பேய்ஞ்சுட்டா மனசு நிம்மதி ஆயிரும்”
“மழை பேஞ்சிச்சுன்னா சரி ” என்றார் வாத்தியார்,
“என்ன வாத்யாரே இழுக்கறிங்க… சாமியை நம்புவோம். நிச்சயமா மழை பேயும்” என்றார் பெருமாள். கருடன் ஒன்று அந்நேரம் வானில் வட்டமடிக்க, படபடவென்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

பவுர்ணமி… ஊரே கோலாகலாமாயிருந்தது. வாணவேடிக்கைகள் ஸ்பெசலாக வரவழைக்கப்பட்டு,
மூன்று பேர் ஊர் மந்தையில் வெடித்து தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு மூன்று செட்டு மேளக்காரர்கள் மாறி மாறி ஊருக்குள் வாசித்துக் கொண்டு இருக்க மைக் செட்டுகள் கதறின.
ஊரில் முக்கியஸ்தர்களும், ஜனங்களுமாக நூறு நூற்றைம்பது பேர் சென்றனர். மலையடிவார மண்டபத்தில் புதுப் பெயின்ட் பொலிவுடன் குதிரை காத்திருந்தது. அதனைப் பார்த்த பெருமாள், வாத்தியார், கண்ணு ஆசாரி ஆகியோர் மனம் நிறைந்து கண்கள் கசிந்தன. கீழே விழுந்து வணங்கி தேங்காய் உடைத்த பின், குதிரை கிளம்பியது. வாண வேடிக்கைகள் உயரச் சென்று வெடிப்பதைப் பார்த்தபடி நின்ற பெருமாளுக்குள் சிறிய சஞ்சலம் தோன்றியது. வானத்தில் ஒரு மேகத் துணுக்கு கூட இல்லை.. ’கடவுளே! இந்த வருஷமும் ஏமாத்திறாத’ என்று தனக்குள் தொழுதார்.
ஆத்துல இறங்கின சாமி கோயில்ல எழுந்தருளரதுக்குள்ள ரெண்டு தூறலாவது போடணும் என்று மனம் இறைஞ்சியது. கொட்டித் தீர்க்கணும் என்று இருக்க வேண்டிய வேண்டுதல், இப்போது தூறலில் நிற்கிறது.
எப்போதும் அழகர் ஆற்றில் இறங்குகையில் குதூகலித்துப் பரவசத்தில் லயிக்கிற மனநிலை இன்றைக்கு அவருக்கு வாய்க்கவில்லை. பந்தத்தை எடுத்துக்கொண்டு குரல் கொடுத்தபடி ஒருவன் முன்னால் ஆடிச் செல்ல, அந்த நள்ளிரவில் அழகர்சாமி தனது குதிரை சகிதம் ஆற்றை அடைந்தார். அந்த காட்டாற்றின் வறண்ட மணற்பரப்பில் மக்களின் குரலொலியும், வாத்திய சத்தங்களும் வான வேடிக்கைகளும் உச்சத்தை எட்ட, அழகர் ஆற்றில் இறங்கினார். வானம் துல்லியமாக இருந்தது. பவுர்ணமியின் பால் போன்ற வெளிச்சம், நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டு இருக்க…பெருமாளின் மனதில் துயரம் கவிந்தது. சாமி சந்நிதியில் குடிகொண்டு விட்டார். இன்னும் ஒரு வாரத்துக்கு அவர் கோயில்வாசி தான். கரகாட்டம் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்தது. ஊரே கூடி அதை வேடிக்கைப் பார்க்க, தனது வீட்டு திண்ணையில் சாய்ந்து தனியே அமர்ந்திருந்தார் பெருமாள்.

அவரைத் தொட்டு எழுப்பியவன் மப்டி போலீஸ் சந்திரன். திடுக்கிட்டு விழித்தார் பெருமாள். மணி அதிகாலை ஐந்து இருக்கலாம். கரகாட்டம் உச்சத்திலிருந்தது. பந்தல் பக்கம் ஜனங்களின் கரவொலி.
“என்னங்க?”
“எஸ்.ஐ. ஐயா உங்களை கையோட ஸ்டேசனுக்கு கூட்டி வரச் சொன்னார்!”
“எதுக்கு ?” என்றார் குழப்பமாக.
“உங்க பையன் ராமகிருஷ்ணனும்,கோடங்கி மக மாரியும் ராத்திரியோட ராத்திரியா ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிகிட்டாங்க. இப்ப ஸ்டேசன்ல வந்து என்கிட்டே அடைக்கலாமாயிட்டாங்க. கூப்பிட்டுப் பேசணும்னு உங்களை எஸ்.ஐ. ஐயா வரச் சொன்னாரு,”
உச்சந்தலையில் இடி விழுந்தது போல இருந்தது பெருமாளுக்கு. எழுந்து நின்றவருக்கு லேசாகத் தலை சுற்றியது. பிரச்சினை இல்லாமல் எல்லாம் நடந்து விட்டதென்ற சந்தோசம் காணாமல் போக, தூணைப் பிடித்து கண்மூடி சற்று நின்றார். சந்திரன் மொபெட்டில் வந்திருந்தார்.
“சீக்கிரம் இருங்க,போலாம்.. விடிஞ்ச பிறகு ஊர்ல விவரத்தை சொல்லுவோம்”
என்னென்ன கூத்து நடக்கப் போகிறதோ ஊரில் என்ற பீதி பெருமாளின் அடிவயிரைப் புரட்டியது. இப்படிப் பண்ணிட்டானே படுபாவி! சாதி விட்டு சாதி கல்யாணம்! இந்த ஊர்ல, அதிலேயும் என் புள்ள, பாவி! படுபாவி! கலி முத்திப் போச்சு.. பஞ்சம் வந்து அழியப் போகுது ஊரு! அப்போது பெருத்ததோர் இடியோசை சடசடத்தது. கண்ணைப் பொசுக்குவது போன்றதொரு மின்வெட்டு! கணநேரம் அதிர வைத்து அடங்க, வானமே கிழிந்தது போல் மழை கொட்டத் தொடங்கியது.

 
 

சென்னை புத்தகக் காட்சி – 2011

சென்னை புத்தகக் காட்சி முடிந்து பல நாட்கள் ஆன பிறகு இதைப் பதிவிடுகிறேன். Draft-ல் இருந்த பதிவு இது.

சென்னையில் நடந்த 34வது புத்தகக் காட்சி எனக்கு முதல் முறை. சில வருடங்களாக விட்டுப் போயிருந்த வாசிப்புப் பழக்கம் சென்ற ஆண்டு மீண்டும் எட்டிப் பார்த்தது. புத்தகக் காட்சி என்பதைவிட புத்தகத் திருவிழா என்பதே சரி. இப்போது பல புத்தகங்களை புத்தகக் காட்சி அன்றி சில கடைகளிகேயே கிடைக்கின்றன. ஆனால் லட்சக் கனன்க்கான புத்தகங்களை ஓரிடத்தில் ஒருசேர பல வாசகர்கள் மற்றும் சில எழுத்தாளர்களுடன் பார்ப்பது புத்தக விரும்பிகளுக்கு (பார்த்தாலே) பரவசத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. முதல் வார இறுதியிலும் இரண்டாம் சனிக்கிழமையன்றும் சென்று புத்தகங்களை வேட்டையாடிக் கொண்டு வந்தேன். ஏற்கனவே வாங்கிய பல புத்தகங்களை முழுவதும் படிக்காமல் இருந்தபோதும் மேலும் பல புத்தகங்களை வாங்கிக் குவித்தேன். புத்தகங்களின் பட்டியல்:

கணையாழி கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
ஸ்ரீரங்கத்துக் கதைகள் – சுஜாதா
விஞ்ஞானச் சிறுகதைகள் – சுஜாதா
குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா
வண்ணத்துப்பூச்சி வேட்டை – சுஜாதா
அனிதா இளம் மனைவி – சுஜாதா
எதையும் ஒரு முறை – சுஜாதா
வைரங்கள் – சுஜாதா

உலக சினிமா – எஸ். ராமகிருஷ்ணன்
இலைகளை வியக்கும் மரம் – எஸ். ராமகிருஷ்ணன்
நகுலன் வீட்டில் யாரும் இல்லை – எஸ். ராமகிருஷ்ணன்

எழுதும் கலை – ஜெயமோகன்
சங்கச் சித்திரங்கள் – ஜெயமோகன்
ஆயிரம் கால் மண்டபம் – ஜெயமோகன்
இரவு – ஜெயமோகன்
அனல் காற்று – ஜெயமோகன்
விசும்பு – ஜெயமோகன்
உலோகம் – ஜெயமோகன்
மண் – ஜெயமோகன்

சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன்
என்பிலதனை வெயில் காயும் – நாஞ்சில் நாடன்
சதுரங்க குதிரை – நாஞ்சில் நாடன்
மிதவை – நாஞ்சில் நாடன்

ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி
ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் – சுந்தர ராமசாமி

கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள் – கி.ராஜநாராயணன்

நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்

அபிதா – லா.ச.ரா
உயிர் – அசோகமித்திரன்
இரவுக்குப் பின் வருவது மாலை – ஆதவன்
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா
ஒளியிலே தெரிவது – வண்ணதாசன்
சாவி சிறுகதைகள்
சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது – சிவசங்கரி
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – வாஸந்தி
எம் தமிழர் செய்த படம் – தியடோர் பாஸ்கரன்
சந்திரயான் – சரவண கார்த்திகேயன்
உள்ளுக்குள் ஓடும் ஆறு – வெ.இன்சுவை (அம்மாவின் பள்ளித் தோழி)

வைரமுத்து கவிதைத் தொகுப்பு
தினத்தந்தி சுவடுகள்

பாலுமகேந்திரா கதை நேரம் டிவிடி – பாகம் 1 & 2
நாதஸ்வரம் – ஆவணப் படம் டிவிடி – ஜே.டி.ஜெர்ரி

முத்துக்கள் பத்து என்று பிரபல எழுத்தாளர்களின் பத்து சிறுகதைகளை சிறிய புத்தகங்களாக தொகுத்து வழங்கியுள்ளது அம்ருதா பதிப்பகம். அருமையான தொகுப்பு. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், லா.ச.ரா, தி.ஜானகிராமன், ஆதவன், அசோகமித்திரன், சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், வண்ணதாசன் ஆகியோரது சிறுகதைகள் தொகுக்கப் பட்ட புத்தகங்களை வாங்கினேன்.

புத்தகக் காட்சிக்கு செல்லும் முன் பட்டியலிட்ட முதல் மூன்று புத்தகங்கள் கிடைக்கவே இல்லை. எஸ்.ரா.வின் உறுபசி, ஆதவன் சிறுகதைத் தொகுப்பு, இரா.முருகனின் ரெட்டைத் தெரு. அடுத்த புத்தகக் காட்சி வரை இம்மூன்று புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் வாங்கக் கூடாது என்று தீர்மானித்துள்ளேன். இவைகளைப் படிக்கவே இரண்டு வருடங்களாகும் போலிருக்கு 🙂

எல்லோரும் பரிந்துரை செய்த லிச்சி ஜூஸை ஒவ்வொரு நாளும் இரு முரோய் பருகினேன். அருமையாக இருந்தது.

 
6 Comments

Posted by on January 31, 2011 in Books

 

எஸ்.ரா. தந்த இன்ப அதிர்ச்சி

இன்று காலை பாட்டி அவள் விகடன் கொடுத்து ‘என் மனைவி’ என்ற தொடரைப் படிக்கச் சொன்னார். அப்போது நான் அதன்பின் நிகழவிருக்கும் இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. என் ஆதர்ச எழுத்தாளர்களுள் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் தன் மனைவியைப் பற்றி எழுதி இருந்தார். எழுத்தாளனின் மனைவி ஒரே சமயத்தில் தேவதையாகவும் அடிமையாகவும் இரட்டை நிலையில் வாழ்கின்றனர் என்று வழக்கம்போல் அழகாக எழுதி இருந்தார். பின் அலுவலகம் சென்றதும் ஒரு மின்னஞ்சல் அந்த ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. நண்பர் மகேஷ் அவர்கள் அனுப்பி இருந்த மின்னஞ்சலில் எஸ்.ரா.வின் வலைதளத்தில் என் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக வாழ்த்துகளுடன் அனுப்பியிருந்தார். நேற்றே இதைப் பார்த்ததாகவும் என் அலைபேசிக்கு அழைத்து அது அணைக்கப்பட்டிருந்ததாகவும் ஜிடாக்கில் தெரிவித்தார். நான் சற்று குழப்பமடைந்தேன். நம்மைக் கலாய்க்கிறாரா என்று கூட யோசித்தேன். பின் சாருவின் தளத்தில் வந்திருக்குமோ என்றும் யோசித்தேன். ஏனென்றால் சென்ற வாரம் சாருவுக்குதான் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். தான் எப்போதும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் மகாநதி மற்றும் குருதிப் புனல் படங்களின் விமர்சனங்களைப் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். இன்னும் பதிவிடவில்லை.

பின் எஸ்.ரா. தளத்தைப் பார்வை இட்டேன். நீயா நானா நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்ட நூறு சிறந்த தமிழ் நூல்களின் பட்டியலை அவரது பழைய பதிவிலிருந்து எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அப்படியலை வாசகர்களின் வேண்டுகோள்களுக்கிணங்க மீள் பதிவு செய்திருந்தார். அதில் இருக்குமோ என்ற ஐயத்துடன் பார்த்தேன். இல்லை. பின் ‘மேடைப்பேச்சு’ என்ற தலைப்பில் எழுதி இருந்த பதிவைப் படித்தேன். அதன் இறுதியில் “இலக்கியக்கூட்டங்களில் எனது உரையைக் கேட்டவர்களுக்கும், அதைக் குறித்து சிறப்பாக பதிவிட்ட சுரேஷ் கண்ணன், பத்ரி சேஷாத்ரி , கார்த்திக் அருள். தமிழ் ஸ்டுடியோ அருண், உயிரோசை உள்ளிட்ட நண்பர்களுக்கும். தினமணி, தினமலர்,. தினகரன், உள்ளிட்ட நாளிதழ்களுக்கும். என்னைப் பேச அழைத்தவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முடித்திருந்தார்.

இதைப் படித்ததும் கொஞ்ச நேரம் வரை கால்கள் தரையில் இல்லை. இதை என் ஆதர்ச பதிவரான சுரேஷ் கண்ணனிடம் மின்னஞ்சலில் தெரிவித்தேன். ஏற்கனவே ஒருமுறை ஜெயமோகன் பதிவுலகில் திரைவிமர்சனங்கள் குறித்த தனது கட்டுரையில் சுரேஷ் கண்ணனின் விமர்சனங்களைப் பாராட்டி இருந்தார். அதையும் முதலில் நான்தான் அவரிடம் ட்விட்டரில் (அப்போது இருந்தார்) தெரிவித்தேன். அவரது எழுத்துகளை மிகவும் விரும்பி வாசிப்பவன். அவரது விமர்சனங்கள் எஸ்.ராவின் விமர்சனங்களைப் போல் இருப்பவை. கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி மற்றும் உயிரோசை சிற்றிதழ் உரிமையாளர் போன்றவர்களுடன் என் பெயர் வந்ததே எனக்கு பெருமையாக இருந்தது.

எஸ்.ரா மற்ற பதிவர்களின் பதிவுகளைப் பார்ப்பார் என்றுகூட அறிந்திருக்கவில்லை. ஆனால் எங்கள் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதுவார் என்று சற்றும் எதிபார்க்கவில்லை. இப்படி ஓர் அங்கீகாரம் எனக்கு மிகவும் அதிகம் என்று சொல்வதுகூட குறைவுதான். Milliblog-ல் என் பெயர் வந்ததற்கே பீற்றிக் கொண்டிருந்தேன், இப்போது கேட்கவே வேண்டாம் 🙂 சில நாட்களாக ‘என் பையனும் இலக்கிய விழாவுக்கும் புத்தகத் திருவிழாவுக்கும் போறான்!’ என்றிருந்த அம்மா Very good சொன்னார். இப்போது இந்த ச்சும்மாவை கொஞ்சம் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஓர்  உத்வேகத்தை அளித்துள்ளது. நண்பர் மகேஷிற்கு மீண்டும் நன்றிகள் பல. பெங்களூருவில் சந்திக்கையில் நிச்சயம் ட்ரீட் 🙂

பிற்சேர்க்கை: அவள் விகடனில் அவர் “கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள் கூட நினைவிருக்கிறது ஆனால் நண்பர்களின் பிறந்த நாட்கள் நினைவில் இருப்பதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்ததும் அந்த நூறு பெயர்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப நினைத்திருந்தேன்.

 
2 Comments

Posted by on January 20, 2011 in Books, Milestones, S.Ramakrishnan, Writers

 

வாழ்த்துகள் CSK

பதிவர் மற்றும் நண்பர் சரவண கார்த்திகேயன் (Writer CSK) எழுதிய முதல் புத்தகமான ‘சந்திரயான்‘ தமிழக அரசின் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இவ்விருது பல்வேறு பிரிவுகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு வழங்கப்படுகிறது. 2009-ல் அறிவியல் பிரிவில் சிறந்த புத்தகமாக சந்திரயான் CSKவிற்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

சந்திரயானை விட சரவண கார்த்திகேயனின் இரண்டாம் புத்தகமான பரத்தை கூற்று கவிதைத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. நானும் அதைத்தான் முதலில் படித்தேன். சனியன்றுதான் இப்புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இன்று இந்த நற்செய்தியைக் கேட்டதும் எல்லோரிடமும் பெருமையாக பகிர்ந்து கொண்டேன். நாஞ்சில் நாடனுக்கு சாஹித்ய அகாடெமி விருது அறிவித்ததில் அவர் நண்பர்கள் அடைந்த மகிழ்ச்சியை நானும் அடைந்தேன். அவர் மேலும் பல புத்தகங்களை எழுதி பல விருதுகளைப் பெற மனமார வாழ்த்துகிறேன்.

பதிவர்கள் எழுதும் புத்தகத்தில் தரம் இல்லை என்று ஒரு கட்டுரையைப் பிரசுத்திருந்த அதே தினமணியில் இச்செய்தியும் வந்திருப்பது இனிய முரண். சில பிரபல எழுத்தாளர்களை விடவும் நன்றாக எழுதுகின்ற பதிவர்களுக்கு CSKவின் இவ்விருது ஊட்டமும் நம்பிக்கையும் அளிக்கும். தனது எண்ணத்தை தினமணியும் மாற்றிக் கொள்ளுமென நம்புவோம்.

தினமணி கட்டுரை : http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_8292.html

விருது பற்றிய செய்தி : http://thoughtsintamil.blogspot.com/2011/01/2009.html

 
Leave a comment

Posted by on January 11, 2011 in Awards, Bloggers, Books

 

எஸ்.ராமகிருஷ்ணன் நூல் வெளியீட்டு விழா

புத்தாண்டு தினத்தை சற்று வித்தியாசமாக கொண்டாட நினைத்திருந்த என் எண்ணத்தைப் பூர்த்தி செய்தவர் எஸ். ராமகிருஷ்ணன். அவரது நூல் வெளியீட்டு விழா பற்றி அவர் தளத்தில் பார்த்ததுமே போக வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். மிஷ்கினால் சர்ச்சைகள் கொண்ட சாரு நிவேதிதாவின் நூல் வெளியீட்டு விழா போலில்லாமல் நிறைவாகவே இருந்தது எஸ்.ராவின் புதிய நாவலான ‘துயில்’ வெளியீட்டு விழா.

சரியாக 6.30க்கு தேவநேய பாவாணர் நூலகத்தை அடைந்தபோது அவ்வளவு கூட்டமாக இல்லை. பதிவர்களில் நர்சிம், அதிஷா, யுவகிருஷ்ணா மற்றும் விஜய மகேந்திரன் ஆகியோரை அடையாளம் கண்டுகொண்டேன். பதிவர் சுரேஷ் கண்ணனை எதிர்பார்த்தேன். தென்படவில்லை. வந்தாரா என்று தெரியவில்லை. சில நிமிடங்களில் அந்தச் சிறிய அரங்கு நிரம்பியிருந்தது. சாருவுக்கு வந்தது போல் கூட்டமில்லை என்றாலும் வந்திருந்தவர் அனைவரும் எஸ்.ராவையும் அவர் எழுத்துகளையும் உண்மையாக நேசிப்பவர்களாகவே இருந்தனர். ஜால்ரா கோஷ்டிகளும், விசிலடிப்பவர்களும் இல்லாமல் நிம்மதியாக இருந்தது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இந்திரா பார்த்தசாரதி அழைக்கப் பட்டிருந்தார். மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து பேராசிரியர் சித்ரா நாவலைப் பற்றிய அறிமுக உரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து இயக்குனர்கள் ஜே.டி, ஜெர்ரி, முரளி அப்பாஸ், திரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவுக்காக முகஸ்துதி செய்யாமல் உளமார வாழ்தியதுபோல் இருந்தது. இயக்குனர் முரளி, எஸ்.ராவுக்கு சாஹித்ய அகடெமி விருதும், அவர் எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நோபல் பரிசும் கிடைக்க வேண்டும் என்று கொஞ்சம் ஓவராவே பேசினார். பின் சிறப்புரை ஆற்ற வந்த இ.பா, சாஹித்ய அகாதேமி எல்லா ஒரு விருதே இல்லை. மக்கள் ஆதரவை விட சிறந்த ஒரு பரிசு இல்லை என்றார். நாவலைப் பற்றி தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து பேசினார். புத்தகத்தைப் படிக்காமல் அதைப் பற்றி பேசுவதில்லை என்று குறிப்பிட்டார். அதனால் ஒருவாரம் முன் கொடுக்கப் பட்ட புத்தகத்தை நான்கு நாட்களில் படித்துவிட்டு வந்ததாக சொன்னார். இதை மிஷ்கின் போன்றவர்கள் கற்றுக் கொள்வது நல்லது. இ.பா வின் ‘குருதிப்புனல்’ நாவலைப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
அவரைத் தொடர்ந்து ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் பேச வந்தார். ஈரோடு என்றதும் உற்சாகமானேன். ஏனோ தெரியவில்லை அரசியல் மேடையில் பேசுவது போல் ஆவேசமாக பேசினார். எஸ்.ரா புராணம் பாடி அவரை நெளிய வைத்து விட்டார். கேப்டனுக்குப் போட்டியாக  புள்ளி விபரங்களைக் கூறினார். அதில் உருப்படியான இரண்டு இது எஸ்.ராவின் 50-வது நூல். உயிர்மை வெளியிடும் அவரது 27-வது நூல். அரங்கில் சிலர் அவரது நீ…ண்ட பேச்சைப் பொறுக்க முடியாமல் கைதட்டினர். அப்படியாவது அவர் உரையை முடித்துக் கொள்வாரென்று. ஆனால் அவரோ அதைப் பாராட்டு என்று தவறாக புரிந்துகொண்டு பேசிக்கொண்டே இருந்தார். ஒருவழியாக அவர் முடித்தபோது அப்பாடா என்று பலத்த கைதட்டல்கள்.
அதன்பின் ஒரு நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வாக வாசகருக்கும் எழுத்தாளருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார் எஸ்.ரா. இலக்கியம் சார்ந்த சிலருடன் நாவலைப் பற்றி மட்டுமின்றி பொதுவான இலக்கியச் சூழலைப் பற்றிய ஓர் உரையாடல். மனநல மருத்துவர் ருத்ரன், எழுத்தாளர்கள்  யுவன் சந்திரசேகரன் மற்றும் முருகேச பாண்டியனுடன் எஸ்.ரா உரையாடினார். மனுஷ்ய புத்திரன் ஒருங்கிணைத்தார். இதுபோல் வேறெந்த தமிழ்  நூல் வெளியீட்டு விழாவிலும் நடந்ததில்லை என்று குறிப்பிட்டார். மற்ற நூல் வெளியீட்டு விழாக்களும் இதுபோல் அனாவசிய அரசியல்களையும் ஜால்றாக்களையும் தவிர்த்து இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.
நாவல்களின் எண்ணிக்கை முன்பைவிட தற்போது மிகவும் குறைவாக உள்ளதைப் பற்றி ஆதங்கப் பட்டனர். வழக்கமாக நன்றாக பேசும் ருத்ரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சரியாக பேசவில்லை. ஆனால் பெயரளவில் மட்டுமே நான் கேள்விப் பட்டிருந்த யுவன் சந்திரசேகர் நன்றாகவே பேசினார். ஹாரி போட்டருக்கு இருக்கும் தமிழ் வாசகர்கள் தமிழ் நாவல்களுக்கு இல்லை என்றனர். ஆனால் இளைஞரளிடம் வாசிப்பு ஆர்வமும், எழுதும் ஆர்வமும் நல்ல ரசனையும் இருப்பதாக கூறியவர், நாவல் எழுதுவது மிகவும் எளிது என்று எல்லோரையும் முயற்சிக்கச் சொன்னார். நல்ல எழுத்தாளனைப் பற்றி அவரது எழுத்துகளும் வாசகர்களும் தான் பேச வேண்டும். எஸ்.ரா. தன்னைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளவில்லை. சாருவைப் போலன்றி தன்னடக்கத்தின் மறு உருவமாக தெரிந்தார்
துயில் நாவல் நோயைப் பற்றி, மருத்துவம் பற்றி, நம்பிக்கை பற்றியது என்று குறிப்பிட்டார். அதனால்தான் தன் நாவலை ‘மருத்துவத்தை மக்கள் சேவையாக நினைக்கும் மருத்துவர்களுக்கு’ அர்பணித்துள்ளார். செவ்வியல் தரத்தோடு இருப்பதாக அனைவரும் கூறினர். 350 ரூபாய் நாவலை 300 ரூபாய்க்கு வாங்கி அதில் எஸ்.ராவின் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டேன். சுஜாதாவிடம் கிடைக்காத அந்த வாய்ப்பு எஸ்.ராவிடம் கிடைத்தது. மனம் வருடும் எழுத்துகளை எழுதும் அவர் கைகளையும் தொட்டுப் பார்த்துக் கொண்டேன் 🙂 நிகழ்ச்சிக்கு எஸ்.ராவின் ரசிகரான என் மாமாவையும் அழைத்துச் சென்றிருந்தேன். புத்தாண்டு தினம் வித்தியாசமாக இருந்தது என்று நன்றி தெரிவித்தார்.
 
2 Comments

Posted by on January 2, 2011 in Books, Functions

 

புதிய ஆண்டின் இனிய துவக்கம்

எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவலான “துயில்”  நூல் வெளியீடு விழாவிற்குச் சென்றிருந்தேன். வழக்கம்போலன்றி அமைதியாகவும் மன நிறைவோடும் இருந்தது இந்தப்புத்தாண்டு தினம். புத்தாண்டை இனிதாக துவங்கி வைத்த எஸ்.ரா விற்கு மிக்க நன்றி. விழா சிறப்பாக இருந்தது. விழாவைப் பற்றி அடுத்த பதிவில்.


 
Leave a comment

Posted by on January 1, 2011 in Books, Celebrations, Functions

 

சாரு நிவேதிதா நூல் வெளியீட்டு விழா – 13.12.2010

Charu’s wife Avantika receives Book from Nalli Kuppuswamy

நான் முதன் முதல் ஒரு புத்தக வெளியீடு விழாவிற்குச் சென்றது என்றால் பதிவர் சரவணா கார்த்திகேயனுடைய (Writer CSK)  “பரத்தை கூற்று” வெளியீட்டு விழாதான். வெளியிட்டவர் சாரு. ஒரு புகழ் வாய்ந்த எழுத்தாளருடையது என்றால் நேற்று காமராஜர் அரங்கில் நடந்த சாருவின் (Notorious?!?!) புத்தக வெளியீட்டு விழாதான். எனக்கு சாரு மேல் நல்ல அபிப்ராயம் இல்லை. அவரது புத்தகங்களைப் படித்ததில்லை. அவரது தளத்தில் மற்றும் மனங்கொத்தி பறவை மட்டுமே அவரைப் படித்திருக்கிறேன். அதனால் எல்லோராலும் பரவலாகச் சொல்லப்படும் ஸீரோ டிகிரியை CSK-யின் விழாவில் வாங்கினேன். மூன்று பக்கங்களுக்கு மேல் படிக்கவில்லை. வீட்டில் யாரும் அதை படித்துவிடக் கூடாதென்று மறைத்து வைத்தேன். எல்லோரும் ஒருமித்து சொல்லும் கருத்து அதை முழுமையாக படிக்க வேண்டும் என்று. அதற்காக அவரது சிறந்த படைப்புகளான ராசலீலாவைப் படித்துவிட்டுப் பிறகு ஸீரோ டிகிரியைத் தொடலாம் என்றிருந்தேன். இந்நிலையில் அவரது ஏழு புத்தகங்கள் வெளியீட்டு விழ பற்றி அவர் விளம்பரப் படுத்தியதைக் கண்டேன். அவரது புதிய நாவலுடைய கருவை CSK-யின் விழாவில் சொன்னார். அது ஒரு காரணமாக இருந்தாலும் முழு முதற் காரணம் நான் மிகவும் மதிக்கும் சமகால எழுத்தாளரான  எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றுவதாக அறிந்ததே. இரண்டாவது மிஷ்கின். மூன்றாவது பதிவர்கள் பலரைச் சந்திக்கலாம் என்று. அடுத்து மனுஷ்யபுத்திரன். அவரது பேச்சு நீயா நானாவில் அருமையாக இருந்ததென்று என் மாமா கூறியிருந்தார். உயிர்மையை பல இன்னல்களுக்கிடையில் நடத்துகிறார் என்று அறிந்து கொண்டேன். குஷ்பூ முக்கிய காரணம் இல்லை.

வெளியிடப் பட்ட புத்தகங்கள் :
1. தேகம் (நாவல்) – வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி – புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
3. சரசம்-சல்லாபம்-சாமியார் – நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
4. கனவுகளின் நடனம் – சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்
5. கலையும் காமமும் – விவாதங்கள்
6. மழையா பெய்கிறது – சர்ச்சைகள்
7. கடவுளும் சைத்தானும் – கட்டுரைகள்
ஆறு மணிக்கே என்னால் அலுவலகத்தில் இருந்து கிளம்ப முடிந்ததால் சுமார் ஏழு மணியளவில்தான் அரங்கில் நுழைந்தேன். பெரிய அரங்கம். அந்த அளவு கூட்டம் இல்லை. பின்வரிசையில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். தெரிந்த முகங்களே இல்லை. மேடையில் தெரிந்த முகங்கள் சாரு, மிஷ்கின், மதன், மனுஷ்யபுத்திரன் கனிமொழி, தமிழச்சி, எஸ்.ரா. புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருந்த அவரை முதன்முதலாக நேரில் பார்த்தேன். கொஞ்சம் பருமனாக இருந்தார். அவரை விட பருமனான குஷ்பூவை கண்கள் தேடியலைந்தன. எங்கு தேடியும் தென்படவில்லை. பெருத்த ஏமாற்றம் 😦 எழுத்துச் சித்தர் பாலகுமாரன் வந்திருப்பதாக சொன்னார்கள். அட! காலையில்தான் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் அவரைப் பார்த்தோம். இப்போது நேரில் பார்க்கப் போகிறோம் என்று எட்டிப் பார்த்ததில் அவர் வெண்பட்டுத் தலைதான் தெரிந்தது. விசிலடித்து கைதட்டி ஆரவாரித்துக் கொண்டிருந்த திசையை நோக்கினேன். பதிவர் கூட்டம். ஜாக்கி சேகர், அதிஷா, லக்கிலுக் ஆகியோரைத் தெரிந்தது. CSK- வைப் பார்க்கவில்லை. இவ்வளவு கம்மியான கூட்டம் இருக்கிறதே. காமராஜர் அரங்கம் பத்தாமல் வெளியில் பலர் நிற்பார்கள் என்று எஸ்.ரா. சொன்னதாக சாருவின் தளத்தில் படித்ததை எண்ணி உள்ளுக்குள் சிரித்தேன்.
Audience in Charu’s Book Release Function
இருப்பினும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சற்று அதிகமான கூட்டம் என்று அனைவரது பேச்சிலிருந்து அறிந்து கொண்டேன். நான் செல்லும் முன் மனுஷ்யபுத்திரன் தன் உரையை முடித்துவிட்டார். அடுத்து நல்லி குப்புசாமி _________ பேசிக்கொண்டிருந்தார் (சமீபத்தில் தி.ஜா.வின் மிஸ்டர் கோடு கோடு கோடு படித்ததன் விளைவு) அதன் பின் எழுத்தாளரும் சட்ட மன்ற உறுப்பினரான ரவிக்குமார் (எனக்கு தெரியாது) சரசம்-சல்லாபம்-சாமியார் பற்றி பேசினார். ஏன் ஏழு புத்தகங்களை வெளியிட்டார் என்று ஒரு காரணம் சொன்னார். இது சங்கீத பருவம், அவ்வரங்கில் அடுத்த வாரத்திலிருந்து ‘சென்னையில் திருவையாறு’ நடக்க விருப்பதால் சங்கீதத்தின் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும் விதமாக ஏழு புத்தகங்களை வெளியிடுகிறார் என்று சாருவே எண்ணாத ஒரு மொக்கையைப் போட்டார். மிஷ்கினே அறியாத குறியீடு. சுரேஷ் கண்ணன் அறிந்திருக்கலாம். ரவிக்குமாரை விடவும் சுமாராக நடராசன் பேசினார் (அவர் எங்கள் தூ…..ரத்து உறவினர் என்று இன்று அம்மா சொன்னார்)
Thamizhachi Thangapandiyan Speech

தமிழச்சி தங்கபாண்டியன் – எனக்குப் பிடித்த அழகான தமிழச்சிகளுள் ஒருவர். ஆனால் அவர் பேசி நேற்றுதான் கேட்டேன். தமிழ் மட்டும் அல்ல ஆங்கிலத்திலும் நன்றாக ‘மழையா பெய்கிறது’ பற்றி பேசினார். சாருவின் தளத்தில் வாசகர்களுடைய கேள்வி பதில்கள் புத்தக வடிவில் வந்துள்ளது. சில பகுதிகளை வாசித்துக் காண்பித்தார். A good speech, they say, should be like a mini-skirt, short enough to be interesting, and long enough to cover the essentials என்று சொன்னவர் தன்னுடைய உரையை மினி ஸ்கர்ட் போலின்றி புடவையாக்கிவீட்டார். தமிழச்சி ஆயிற்றே. (ஆனால் சல்வாரில் வந்திருந்தார் என்பது வேறு விஷயம்).

Kanimozhi Speech
அடுத்து பேச வந்த கனிமொழி எந்தப் புத்தகத்தைப் பற்றியும் பேசாமல், பொதுவாக சாருவைப் பற்றியும், அவர்களது நட்பைப் பற்றியும், தமிழ் இலக்கிய சூழல் பற்றியும் பேசினார். தமிழச்சி போல் எந்தவித தயாரிப்புமின்றி பேசியதுபோல் இருந்தது. மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன? தான் அதிகம் சண்டைபோட்ட நண்பர் சாரு என்றும், அவருடன் பல விஷயங்களில் உடன்பாடு இல்லை என்றும் பேசினார். இலக்கியம் குறித்த விழாக்களுக்கு பெரும்பாலும் பார்த்த முகங்களும் வயதானவர்களுமே தென்படுவர். ஆனால் அங்கிருந்த புதிய இளைய முகங்களைப் பார்ப்பது இன்பமாக இருப்பதாக சொன்னார். சாரு அடிக்கடி தன்னை இளைஞன் என்று சொல்லிக் கொள்வது பற்றியும் சொன்னார்.
Speech by Madhan
பேசிய அனைவரும் தனது உரை முடிந்ததும் கிளம்பிக் கொண்டிருந்தனர். கனிமொழி பேசியதும் சாருவும் தமிழச்சியும் அவரை வழியனுப்பப் பொய் விட்டனர். அடுத்து உரையாற்ற வந்த மதன் வந்ததும் பலத்த கரகோஷம். மேடையிலுள்ள அனைவருக்கும் என்று சொல்ல மேடயில் எஸ்.ரா மற்றும் ம.பு தவிர யாரும் இல்லை என்று நகைச்சுவையாக ஆரம்பித்தார். சற்று முன் வரை colourful-ஆக இருந்தது இப்போது இல்லை என்றும் கூறினார். கனவுகளின் நடனம் புத்தகம் பற்றி பேசினார். சாருவின் தைரியமான தில்லான attitude மிகவும் பிடிக்கும் என்று சொல்லி, அதுபோல் எல்லா நேரங்களிலும் இரக்க வேண்டாம் என்று சொன்னார். சாருவிற்கு கதாநாயகனாகம் ஆசையிருப்பதால் எல்லோரிடமும் பகைமையை வளர்த்து முகத்தை சேதப் படுத்திக் கொள்ளவேண்டாம் என்றும் கூறினார். Inception மற்றும் நந்தலாலா பற்றிய சாருவின் விமர்சனம் நன்றாக இருந்ததாகவும், மிஷ்கின் தன் நண்பர் என்பதற்காக அவரது குறைகளைச் சுட்டிக்காட்டாமல் இருக்கக் கூடாது என்றும் சொன்னார்.
Speech by Mysskin

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த மிஷ்கின் வந்தார். மிஷ்கின் கனவுகளின் நடனம் பற்றி பேசுவார் என்றெண்ணி இருந்தேன். ஆனால் முக்கிய நூலான தேகம் பற்றி பேசினார். அவர் ஒரு சிறந்த வாசகர் என்று பரவலாக பேசப்படுவதால் இப்புத்தகத்தைப் பற்றி சாரு பேசச் சொல்லியிருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் நூலைப் பற்றி பேசாமல் நந்தலாலாவினால் அவர் நொந்தலாலா ஆனா கதையை இருபது நிமிடங்கள் புலம்பித் தீர்த்தார். நந்தலாலாவைப் பலர் காப்பியடித்திருப்பதாகச் சொன்னது அவருக்கு வேதனை அளித்ததாம். ஒரு தந்தையிடம் பிள்ளை கற்றுக் கொள்வதற்குப் பெயர் காப்பியா என்று கேள்வி எழுப்பினார். அவர் குரோசோவாவையும் கிடாநோவையும் மட்டுமே பார்த்து திரைப்படம் கற்றுக் கொண்டாராம். அதனால் அவர்கள் படம் போல் தெரியலாம் என்று மழுப்பினார். சாருவின் நூலைப் பற்றி பேசாமல் இதையே பேசி வெறுப்படையச் செய்தார். என்ன படித்து என்ன புண்ணியம். மேடை நாகரிகம் தெரியவில்லை. CSK நூல் வெளியீட்டு விழாவில் சாரு செய்ததுபோல் சாருவுக்கு மிஷ்கின் செய்துவிட்டார். சாரு எத்தன் என்றால் மிஷ்கின் எத்தனுக்கு எத்தன் என்று நிரூபித்து விட்டார். சரவணகார்த்திகேயன் போல் சாருவும் நினைத்திருப்பார் ‘இவனையும் மதிச்சு கூப்ட்டோமே. எம்புத்திய….”  என்று. சாருவின் நடிப்புத் திறனைப் பற்றியும் கூறினார். அவருக்கு நடிப்பு சுட்டுப் போட்டாலும் வரவில்லையாம். அவர் பல டேக்குகள் வாங்கியதால் யுத்தம் செய் படத்திற்கு நஷ்டமாம். தேகம் பற்றி அவர் சொன்னது: ‘சரோஜா தேவி’ என்ற காமக்கதைகள் இடம்பெறும் புத்தகமே (சத்தியமாக நான் படித்ததில்லை) தேவலாம், வீட்டில் வைத்து படிக்க முடியாது என்று. இதைவிட ஒரு எழுத்தாளரை அவமதிக்க முடியாது. சபை நாகரிகமற்ற இவரது இலக்கிய அறிவை மெச்சிய, படத்தைக் கொண்டாடிய சாருவுக்கு சவுக்கடி. இதுபோல்  எத்தனையோ பேரை சாரு காட்டமாக தாக்கியிருக்கிறார் என்று நினைத்தாலும் முதன் முதலாய் சாரு மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. நாவலைப் படிக்கும் எண்ணமே போய்விட்டது. மிஷ்கின் மீதிருந்த மதிப்பும் உடைந்து விட்டது.

Speech by S.Ramakrishnan
அடுத்து என்னைப்போல் பலர் ஆவலோடு காத்திருந்த எஸ்.ரா பேரைத் தொகுப்பாளினி சொன்னதும் அரங்கம் முழுக்க கைதட்டல். சாருவே எதிர்பார்த்திருக்க மாட்டார். நிகழ்ச்சியின் Show Stopper அவர்தான். அவரது எழுத்துகள் போல் அவர் குரல் மென்மையாக இல்லை. ஆனால் பேச்சு அப்படியே இருந்தது. வதை பற்றி அவர் பேசியதில் மயங்கித்தான் போனேன். அதனாலேயே முழுவதுமாக புரியவில்லை. ஜி.நாகராஜன் பற்றி அவர் கூறிய சம்பவம் நெகிழச் செய்தது. பாலுணர்வையும் கடவுளையும் பற்றி அருமையாக சொன்னார். இரண்டையுமே நாம் தலைமேல் தூக்கி வைத்துக் கொள்கிறோம் இல்லை, காலில் போட்டு மிதிக்கின்றோம். கமல் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. செக்ஸ் போல் பக்தியையும் வீட்டோடு வைத்துக் கொள்ள வேண்டும். எஸ்.ரா பேசிய பின்தான் நாவலை வாங்கப் படிக்கும் எண்ணம் வந்தது.
இறுதியாக சாரு நன்றியுரை ஆற்ற வந்தார். CSK-வின் விழாவில் சாரு உளறிக் கொட்டினார். சரியாக தயார் செய்துகொண்டு வரவில்லை. ஆனால் நேற்று சற்று சுவாரசியமாகவே பேசினார். அவரது பேச்சில் இளமையும் வசீகரமும் ததும்பியது. வந்த அனைவருக்கும் நன்றி சொன்னவர் கடைசிவரை இருந்த தமிழச்சிக்கு நன்றி சொன்னதாக தெரியவில்லை. ஆனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சாரதாவுக்குச் சொன்னார். பின் தன் சுயதம்பட்டத்தை ஆரம்பித்துவிட்டார். Economic Times பத்திரிகையில் தனது முழுப்பக்க பேட்டி வந்ததை வெட்டியெடுத்து ஜெராக்ஸ் செய்து கொண்டுவந்ததை மேடையிலிருந்த அனைவருக்கும் வழங்கினார். ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததும் எல்லோரும் கொண்டாடினர், வாடா இந்தியாவில், கேரளாவில் கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் யாரும் மதிக்கவில்லை, கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டினார். தமிழர்களுக்கு இலக்கிய அறிவு மற்ற மாநிலக்காரர்கள் அளவுக்கு இல்லை என்று தமிழர்கள் முன் சொன்னது மிகுந்த வருத்தத்தை அளித்தது. மணி வரை அவர்குக்காக உட்கார்ந்திருந்த தமிழ் வாசகர்களை அவமானப் படுத்தும் விதமாக இருந்தது. இவ்வளவும் மீறி அங்கு உட்கார வேண்டுமா என்று தோன்றியது. பின் தேள் சாமியார் கதையை நினைத்துக் கொண்டேன். ஒருவழியாக நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்து தேகம் நாவல் மட்டும் வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் உயிர்மைக்காகவும், மனுஷ்யபுதிரனுக்காகவும் ஏழு நூல்களையும் வாங்கிகொண்டு புறப்பட்டேன். வெளியில் CSK-வைப் பார்த்தேன். ஊருக்குப் போகும் அவசரத்திலிருந்த அவரிடம் கைகுலுக்கிவிட்டு வீடு வந்தடைந்தேன். பதிவர் சுரேஷ் கண்ணன் வந்திருந்தது வீடு வந்ததும் அவரது buzzஐப் பார்த்து அறிந்தேன். முன்பே தெரிந்திருந்தால் சந்தித்திருப்பேன்.
இது வரை முக்கிய எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாவைக் காணாததால் இது சற்று வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எழுத்துகள் மூலம் மனம் வருடும் எஸ்.ராவின் கைகளைப் பற்றி வருடவேண்டும் போல் இருந்தது. ஆனால் நேரமின்மை காரணமாக பாலகுமாரன் முகத்தைக்கூட பார்க்காமல் வந்துவிட்டேன். தேன்கிண்ணம் மறுஒளிபரப்பில் மீண்டும் பாலகுமாரன். புத்தாண்டன்று நடக்கவிருக்கும் எஸ்.ரா.வின் “துயில்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.
Love him or Hate him, but you can’t Ignore Charu 🙂

படங்கள் உபயம் : http://kaveriganesh.blogspot.com/2010/12/7.html
 
2 Comments

Posted by on December 14, 2010 in Books, Functions

 

பரத்தை கூற்று – புத்தக வெளியீட்டு நிகழ்வு

சரவண கார்த்திகேயன் (CSK) எனக்கு 2008-ல் ஆர்க்குட் மூலம் அறிமுகமானார். அறிமுகம் செய்தவர் திரு. சுஜாதா. விந்தையாக உள்ளதா? ஆம் சுஜாதாவின் முதலாம் ஆண்டு அஞ்சலிக்காக ஆர்க்குட் சுஜாதா கம்யூனிட்டியில் ஒரு பதிவிட்டேன். அதில் CSK-வின் பதிவும் இருந்தது. அவர்தான் சுஜாதா Community Owner.  உடனே அவரது Profile-ஐப் பார்த்தேன். அதிலிருந்த  அவரது வலைத்தள முகவரியைச் சொடுக்கி சில பதிவுகளை வாசித்தேன். மிகவும் ரசித்தேன், வியந்தேன். சுஜாதாவின் எழுத்துகள் போல இருந்ததே காரணம். உடனே அவருக்கு Friend Request கொடுத்தேன். அவரும் அதை accept செய்து நாங்கள் chat செய்தோம். அவர் மனைவி எங்கள் குடும்ப நண்பரின் மகள் மற்றும் என் சிறு வயது தோழி என்று தற்செயலாக தெரிய வந்தது. அதனால் அவருடன்  மேலும் நெருக்கம் ஏற்பட்டது. அவர் வலைப்பூவை தொடர்ந்து வாசித்தேன். அவருடைய  சில கருத்துகளில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லையென்றாலும் அவரது எழுத்துகளும் தேர்ந்த நடையும் என்னைக் கவர்ந்தன.
CSK-வின் முதல் புத்தகமான சந்திரயானை இன்னும் படிக்கவில்லை என்று வருந்துகிறேன். இரண்டாம் புத்தகத்தின் தலைப்பே புருவம் உயர்த்த வைத்தது. “பரத்தை கூற்று” – இதுபோன்ற கவிதைத் தொகுப்பை வெளியிட சாரு நிவேதிதாதான் சரியான ஆள். மேலும் சாருவை அவரது வலைத்தளத்தில் மட்டுமே வாசித்துள்ளேன். அவரது புத்தகங்களைப் படித்ததில்லை, அவர் பேச்சையும் கேட்டதில்லை. சாருவை எனக்கு அவ்வளவாக பிடிக்காது என்றபோதிலும் அவர் எப்படித்தான் பேசுகிறார் என்பதைக் கேட்கவே இவ்விழாவைத் தவற விடக் கூடாது என்று சென்றேன்.
 
CSK-வின்  உறவினர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களுள் பெண்களும் பதின்ம வயதுச் சிறுமிகளும் அடக்கம். அதனால் சாரு uneasy-ஆக உணர்ந்தார்.  சற்றே தயக்கத்துடன் தன் பேச்சைத் துவங்கினார். தான் எதையும் பாராட்டுவதில்லை என்றும் குறைகளைச் சுட்டிக்காட்டி படைப்பாளிக்கு உதவி செய்வதாக கூறினார். இங்கேயும் எந்திரனை விடவில்லை. ஷங்கரையும், ரஜினியையும் கமலையும் வாரினார். பிறகு வைரமுத்து. CSK தனது கவிதைத் தொகுப்பை “கவிப்பேரரசு” வைரமுத்துவிற்கு அர்பணித்திருந்தார். அதற்குக் காரணம் பள்ளிப் பருவத்தில் அவருடைய கவிதை வைரமுத்துவால் முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு குங்குமத்தில் வெளியானது. சாருவுக்கு அந்த அடைமொழி பிடிக்காமல் நிலபிரபுத்துவம், மன்னராட்சி, சமத்துவம் என்றெல்லாம் கதைத்தார். சாருவின் எழுத்துகளைப் போல் அவரது பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இல்லை. சராசரிதான். He distracts from a topic and travels to many other topics. சாருவின் பேச்சிலிருந்து சில இங்கே 
(Courtesy : Tweets of @writercsk)
 
ஒரு பரத்தையின் உண்மையான உணர்வுகளை அந்த வலியை கவிதைல கொண்டு வர முடியுமான்னே சந்தேகமா இருக்கு.வேசியின் வலியை அப்படியே உண்மையாகச் சொல்லி கவிதையோ, திரைப்படமோ எடுத்தால் இங்கே வெளியிட முடியாது. இந்தத் தலைப்பில் எழுதுவதற்கு தைரியம் வேண்டும். அதற்கு முதலில் பாராட்டுகிறேன்.
 
இதுல எல்லாக் கவிதையும் Quotable Quotes.. ஆனா கவிதையா? நல்ல கவிதைங்கிற‌து டைனமைட் மாதிரி. அது சுலபமா வராது. அதை எழுத பிரசவ வேதனை அடையணும். பரத்தை கூற்று தொகுப்பில் இருப்பவை கவிதை என்ற நிலையை அடையவில்லை.நல்ல கவிதை எழுதுவது மிகக்கடினம். அதனாலேயே நல்ல க‌விஞர்கள் குறைவு. தமிழில் நல்ல் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் குறைவாகவே நல்ல கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள்.
 
எல்லோரும் கூப்பிட்டதுக்காக‌ ஆஹா ஓஹோன்னு புகழந்துட்டு போயிடுவாங்க. நான் அப்படி செய்ய விரும்பலை. கவிதை நல்லாயில்லைன்னு சொல்லி நான் இவருக்கு நல்லது தான் செய்யறேன்.. எல்லோரும் உண்மை சொல்ல மாட்டாங்க.
 
தான் பேசிய ஒரு மணி நேரத்தில் அதிகபட்சம் 15 நிமிடங்கள்தான் பரத்தை கூற்று பற்றிப் பேசியிருப்பார். மற்றவர்களைத் தாக்கிப் பேசுவதில்தான் அதிக ஆர்வமாக இருந்தார்.
 
 ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டவர் இப்படி விமர்சகராக மாறி அப்படைப்பாளியை “ஏண்டா இவரைக் கூப்பிட்டோம்” என்று எண்ணும்படி செய்துவிட்டார். எல்லாவற்றிற்கும் மேல் பரத்தைகள் இப்படி அவர்களது வலியினை மறந்து கவி பாட மாட்டார்கள் என்றும் பிதற்றினார். கவிதைகளில் லாஜிக் பார்க்கும் எழுத்தாளரை என்னவென்று சொல்வது. அவர் மேல் மிகவும் கொஞ்சமாக ஒட்டியிருந்த ஈடுபாட்டையும் சுத்தமாக துடைத்தெறிந்து  விட்டேன். ஆனாலும் ஒரு விதத்தில் அவரைப் பிடித்திருந்தது. தான் ஒரு காலத்தில் “Male Prostitute ” ஆக இருந்ததையும் அதைப் பற்றித்தான் இப்போது புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அது உண்மையோ பொய்யோ, அப்படிச் சொல்வதற்கும் ஒரு ‘கெத்து’ வேண்டும்.
 
“விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய்
எவனும் மனசு தொட்டதில்லை!”
என்ற கவிதையை மேற்கோள் காட்டிப் பேசினார்.
 
‘குழந்தைகள் காதுகளைப் பொத்திக் கொள்ளுங்கள்’ என சொல்லிவிட்டு,
கண்களும் காம்புகளும்
பெரிதாக இருக்க வேண்டும்
உதடுகளும் பிளவுகளும்
சிறிதாக இருக்க வேண்டும்
நேயர் விருப்பம்

என்ற கவிதை படித்தார். இடையே நல்ல கவிதைக்கு உதாரணமாய் ஒரு கனடா கவிஞரின் கவிதையை தமிழில் வாசித்தார்.

 
இறுதியில் CSK தனது நன்றியுரையை ஒரு Paper பார்த்துப் படித்தார். ஒப்பித்தது போலிருந்தது. அடுத்த  முறை அதைத் தவிர்த்தல் நலம்!
 
கவிதைகளை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை. பரத்தைக் கூற்று விலைமகளிரின் கதறல்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கவில்லை. ‘அரங்கேற்றம் பிரமிளா’ போலின்றி, ‘தப்புத்தாளங்கள் சரிதா’ போல் எள்ளலும் பரிகாசமும் செய்கின்றனர் இப்பரத்தையர்கள். தர்ம பத்தினியிடம்  தம்மைச்  சிலாகிக்கச் சொல்கின்றனர், தம் யோனிகளுக்குக் காப்பீடு கேட்கின்றனர், கடன் வைத்தால் மனைவியுடன் செல்கையில் வந்து வசூலிப்போம் என்று எச்சரிக்கை செய்கின்றனர்,
 
பல கவிதைகளை எனக்குப் பிடித்திருந்தாலும், அவற்றுள் சில:
 
இருபதாண்டு நெடிய
பரத்தைமைக்குப் பின்பும்
புடவையுடுத்துகையில்
மாராப்பைச் சரிசெய்யும்
விரல்களின் அனிச்சை!
பெண்களுக்கே உரித்தான நாணத்தை  ஓர் ஆண்மகன் வெளிப்படுத்துவது ஆச்சரியம் அளிக்கிறது.
 
உனக்கது களிப்புருப்பின் உச்சங்கள்
எனக்கோ கழிப்புருப்பின் எச்சங்கள்
நான் சகித்துப் புணர்வது உன் பணம்
நீ சுகிக்கப்புனர்வதோ என் பிணம் 
இக்கவிதை மூலம் வேசிகளின் வேதனைகளை வெளிப்படுத்துகிறார்.
 
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். “கலிகால ராமன்கள்” மற்றும் “பெய்யெனப் பெய்யும் மழை” கவிதைகளும் கவர்ந்தன.  
 
வாத்ஸ்யாயனர் பற்றிய கவிதையில் எனக்கு உடன்பாடில்லை. அது தங்களையும் சந்தேகப் பட வைக்கிறது.

“என் போலுருத்தியிடம் போகாமல்

நிச்சயம் எழுதியிருக்க முடியாது

சரவண கார்த்திகேயன் – பரத்தை கூற்றை”
என்றால் ஒப்புக்கொள்வாரா??
இரவு முழுவதும் இருமுறை எல்லாக் கவிதைகளையும் வாசித்துவிட்டு இப்போது நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.
P.S : சாருவுக்கு பதில் லீனா மணிமேகலையை அழைத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது
 
1 Comment

Posted by on October 17, 2010 in Books

 

Mouna Raagam – Vikatan’s Review

When Raavan/Raavanan is the talk of the Town, I’m penning down my views on Mani Ratnam’s one of the most loved films Mouna Raagam. This is one of my most favourite films and so as to most of Tamilians. I would have watched this film for more than 100 times. I’ve been thinking of writing a post on this since I started my first blog in blogspot. But this week’s issue of Tamil weekly Anandda Vikatan made me write this post. Regular readers of Vikatan know that it has reserved a few pages for Old articles of Ananda Vikatan (Pokkisham Vikatan). In fact I still buy Vikatan (which has now almost become a B Grade Magazine) only for this and S.Ramakrishnan’s “Siridhu Velicham”. Mouna Raagam’s Review of Mouna Raagam was published in this week’s issue. It has got 43/100. Vikatan’s reviews were valued a lot those days which has been degraded in recent times. 40+ out of 100 in Vikatan was very rare which has become a minimum mark now. The thing that surprised me is not even a single word was mentioned about Karthik’s character (Manohar), which is like the soul of the movie. It’s the best cameo performance in Tamil Cinema till date and has been a chapter on Best Supporting Actor category in Pune Film Institute. I was a bit worried for that though it had given a rave review on Direction, Cinematography, Revathy-Mohan’s performances and Music. Music was also mentioned just like that. The background score is one of the best of Ilayaraja. I’ve never seen anyone that they wont like Mouna Ragam’s music. The Theme Music would be everyone’s favourite. If I were a reader of those time, i would have certainly written a harsh letter for this. I wonder how Actor Karthik would have reacted for this review.

Once Actor Sivakumar has mentioned in an article (Vikatanum Naanum) that his performance in performance in K.Balachander’s classic Sindhu Bhairavi as JKB was not appreciated while Suhasini and Sulakshana were appreciated for their performances. When he asked about this to Vikatan Editor, he told Sivakumar that Suhasini was a budding artist who needed an encouragement unlike Sivakumar who has already achieved in Film Industry. But Karthik was also a new actor then who needed a special mention. Let’s see whether they publish any reaction of Karthik in the next week’s issue

 
 

Sujatha – An Immortal Writer

Sujatha Rangarajan– The Man who inspired me a lot for writing. I was awe-inspired by his versatality. He has written in almost all genres, from Sangathamizh to Science Fiction; fromAganaanooru to Astro Physics; from Naalayiram Dhivya Prabandham to Nanotechnology. He was the first writer to introduce Computers to common man. He was a Prophet, who had predicted the computerized world in the early 70s. Being an Electronics Engineer, he started writing as an amateur author which gave him an Identity.

I came to know abt Sujatha from my mom when I was 10. There was a Scientific serial “En Eniya Iyandhira” that was telecast inDoordarshan on Mondays. He wrote about computers and Robotics in the 80s, which might be an inspiration for Director Shankar to make his magnum opus “Robo aka Endhiran”. (In fact, Robot was written for Kamal during his Indian days, with Preity Zinta as female lead. But due to the high budget and some other reasons, it was dropped.) That time I haven’t watched the movie Vikram which is based on Sujatha’s Scientific novel with the same title. As a small boy, I liked the Robot Jeeno of En Iniya Iyanthira.

Mom has told more about his novels that were made into films.GayathriPriyaVikramKaraiyellam Shenbagappoo Ratham Orey Niram (His only Historic Novel), etc. Ninaithale Inikkum’sstory was by Sujatha. Among which Karaiyellam Shenbagappoowas filmed exactly as the novel. But it would have been better if it was directed by a good director. His thriller novel came as a serial in DD “Kolaiyudhir Kaalam” that introduced me to Ganesh and Vasanth, the main characters created by him.

There are still many fans for ganesh and Vasanth. Ganesh is a calm and composed advocate; Vasanth is his naughty Junior and always talks about sex and the fairer sex. Director Vasanth changed his name for films because of the Vasanth character. Vivek played the role of Vasanth in Kolaiyudhir kaalam. In fact, he did full justice to the Vasanth. Once Sujatha said in an interview that he’s 50% Ganesh and 50% Vasanth. That is evident from his youthful writings.

Later actress Suhasini directed Sujatha’s crime novels as bi-weekly serials in Sun TV with actor Suresh as Ganesh and Vijay Adhiraj as Vasanth. Suresh with his wooden expressions spoiled the character of Ganesh whereas Vijay Adhiraj was just ok. Still i remeber an episode “Edhaiyum Oru Murai” where a psycho rich man wants to try everything in the world and eventually he would die by trying suicide. That’s “Edhaiyum Oru Murai

I became an ardent reader of Sujatha when I was in 12th, via his“Katradhum Petradhum” in Anada Vikatan. He dealt with the topics, which normal man cannot think of. In my 2nd yr B.E., I joined a nearby Lending Library and started reading his books. I was taken aback by his Creativity and Imagination Skills that were far ahead of his age. His first novel “Nylon Kayiru” was wriiten in early 70s i think, but the style was so westernised. I like his Srirangathu Devadhaigal,Kanaiyaziyin Kadaisi PakkangalPirivom Sandhippom (Both parts), Apsara, and almost all the stories with Ganesh and Vasanth. He implements Science and Technology in his stories. In early 80s, he had written about COBOL Programming language and its codings in his Apsara, which is about a Psycho Computer Programmer in Bangalore who kills by writing COBOL coding. He would be caught as there were very few programmers in Blore, but today??!! He had very good knowledge in Carnatic Music too.

He encouraged new talents and gave them recognition in his writings. Shankar and Mani Ratnam made use of him as Dialogue Writer works in Films like Indian, Mudhalvan, Boys, Kannathil Muthamittal, Aayidha Ezhuthu, Shivaji, and Endhiran (Concept of Sujatha).

P.S: This was written by me in my previous blog last year same day. Due to lack of time I just did CTLR+C & CTRL+V. Now I wonder how the man had time to write a lot inspite of having several other works.

 
1 Comment

Posted by on February 27, 2010 in Books, Sujatha