RSS

Category Archives: Movies

அவள் ஒரு தொடர்கதையும் நானும்

அவள் ஒரு தொடர்கதை – என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படம். எனது 12-வது வயதில் பார்த்து பிரமிப்பூட்டி இயக்குனர் ஆகும் ஆசையைத் தூண்டியது. அதுவரை பாலசந்தரின் சின்னத்திரை மூலமாகத்தான் அறிமுகமாகி இருந்தார். அதன்பின் கே.பி.யின் படங்களைத் தேடித் தேடித் பார்த்தேன். அப்போது சன் மூவீஸ் சேனல் மிகவும் உதவியாக இருந்தது. 13 வயதைத் தொட்டிருக்கும் என் மாமா பெண் இன்னும் Harry Potter-ஐயும் கார்ட்டூனையும் மட்டுமே பார்க்கிறாள் 😦
அவள் ஒரு தொடர்கதை இரவுக்காட்சி பார்த்துவிட்டு சைக்கிளை திரையரங்கிலேயே விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து தன் அப்பாவிடம் டோஸ் வாங்கியதாகவும், பின் பாலசந்தரிடம் உதவி இயக்குனராகும் வாய்ப்பு கேட்டு சென்றதாகவும் இயக்குனர் வஸந்த் ஒரு பேட்டியில் சொன்னார். அதைக் கேட்டதும் என்னைப் போலவே இன்னொருவருக்கும் அதே போன்ற தாக்கம் இருந்திருக்கிறதே என்று என் பிரமிப்பு இரட்டிப்பானது.
எம்.எஸ்.பெருமாளின் மூலக்கதையைக் கொண்டு கே.பி. திரைக்கதை-வசனம் எழுதி இயக்கிய இப்படம்  மலையாளத்தில் Aval oru Thudarukatha (Dubbing), தெலுங்கில் Anthu leni Katha, கன்னடத்தில் Benkiyalli Aralida Hoovu, ஹிந்தியில் Jeevan Dhaara, பெங்காலியில் Kabita என்று பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரித்விக் கட்டக்கின் Meghe Dhaka Tara படத்தின் தழுவல்தான் இப்படம் என்று சொல்லப்பட்டாலும் (நான் இன்னும் பார்க்கவில்லை) பெங்காலியிலும் ரீமேக் ஆனது ஆச்சரியம்.
பெங்காலி உட்பட அனைத்து மொழிகளிலும் கமல் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் மேலாளர் கதாபாத்திரம், கன்னடத்தில் பஸ் கண்டக்டர் கதாபாத்திரம், பெங்காலியில் அதே விகடகவி கதாபாத்திரம் என்று செய்தவர் ஹிந்தியில் மட்டும் தவற விட்டுவிட்டார். கன்னட அ.ஒ.தொ சுஹாசினியும் கமல்ஹாசனும் இணைந்து நடித்த இரண்டே படங்களில் ஒன்று. மற்றொன்று Y.Gee.மகேந்திரன்-சுஹாசினி நடித்த உருவங்கள் மாறலாம். சிவாஜி கடவுளாக நடித்தார். ரஜினி, கமல், ஜெயஷங்கர் உள்ளிட்டோர் Cameo Appearance செய்தனர். நல்ல வேளையாக அவள் ஒரு தொடர்கதை படத்தில் இப்படி ஒரு பாட்டு இல்லாமல் போனது.
கே.பி.யின் பெண் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது கவிதா – நடமாடும் நெருப்புராட்(ச்)சஸி (அடுத்து சிந்து) அண்ணியின் காய்ச்சலுக்கு மருந்து வாங்க பணம் கொடுக்காமல் உதட்டுச்சாயம் வாங்க பணம் கொடுத்தனுப்புவது செயற்கையான, சினிமாத்தனமான குணாதிசயம் என்றாலும் அவளது திமிர் எனக்கு மிகவும் பிடிக்கும்.  முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை சுஜாதா அனாயாசமாக செய்திருப்பார். அவர் வாழ்நாள் முழுவதற்கும் இந்தப் படமே போதும். ஜெயப்ரதாவுக்கும், மாலா சின்ஹாவுக்கும் சுஜாதா அளவுக்கு திமிரும் மிடுக்கும் இல்லை. தெலுங்கில் மூர்த்தியாக ரஜினி கலக்கியிருப்பார் 🙂 கன்னடத்திலும் ஹிந்தியிலும் பார்த்ததில்லை. சுஹாசினியும் ரேகாவும் திறமையான நடிகைகள் என்றாலும் சுஜாதா அளவுக்குச் செய்திருப்பார்களா என்று பார்க்க வேண்டும். CD/DVD பல நாட்களாகத் தேடுகிறேன். பெங்களூருவில் கூட கிடைக்கவில்லை 😦
இன்றைய காலக்கட்டத்திற்கும் Relevant-ஆக இருக்கும் இப்படத்தை ரீமேக் செய்தால் இப்போதுள்ள கதாநாயகியரில் கவிதா கதாபாத்திரத்திற்கு யார் பொருந்துவார்? இப்போது இருப்பவர்கள் எல்லாம் எங்கே நடிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?. சில நாட்கள் முன்பு வரை என் சாய்ஸ் ஸ்நேஹா, பின் பத்மப்ரியா. இப்போது அனுஷ்கா 😉
Advertisements
 
4 Comments

Posted by on October 9, 2011 in Chummaa, Movies

 

வசந்தபாலனும் வணிகக் குப்பைகளும்

இன்று மாலை பலரும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் முறையே சந்திரமுகி மற்றும் சிவாஜி படங்களை விளம்பர இடைவேளைகளில் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். ட்விட்டரிலும் கூட இப்படங்கள் இடைவேளை இன்றி ஓடிக்கொண்டிருந்தன. அறை நண்பர்கள் அனைவரும் டிவி முன் இருக்கையில் நான் மட்டும் மற்றொரு அறையில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். சந்திரமுகி இறுதிக் காட்சி மட்டும் ஜோதிகாவுக்காக பார்க்கச் சென்றேன். நண்பர் ஒருவர் ‘உடம்பு சரியில்லையா?‘ என்று கேட்டார். இல்லை என்றதும் ‘அப்பறம் ஏன் இவ்ளோ நேரம் படம் பாக்க வரல?’ என்றார். இரண்டு படங்களும் எனக்குப் பிடிக்காது என்று சொன்னதும் ஒரு வினோத ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தனர்.

சந்திரமுகியின் ஒரிஜினல் மணிச்சித்ரத்தாழ் தான் பிடிக்கும். ரஜினிக்காக வைக்கப்பட்ட    ஹீரோயிசக் காட்சிகளும் வடிவேலுவுடன் தோன்றும் மட்டமான நகைச்சுவைக் காட்சிகளும்  எரிச்சலின் உச்சம். ஆனாலும் ஜோதிகாவையும் ரஜினியின் வில்லத்தனமும் மிகவும் பிடிக்கும் என்பதால் இறுதிக் காட்சி மட்டும் பார்ப்பேன். தனது அனேக மலையாளப் படங்களைத் தமிழிலும் இயக்கும் ஃபாசில் ஏன் மணிச்சித்ரத்தாழை மட்டும் விட்டு வைத்தார்? ஷோபனாவையே நடிக்க வைத்திருக்கலாம். அல்லது அன்றைய பானுப்ரியா கூட அழகாகப் பொருந்தியிருப்பார்.

ஷங்கர் படத்தில் எனக்குப் பிடிக்காத படம் சிவாஜி. அதற்கு முன் வரை பாய்ஸ். நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த முதல் ரஜினி படம் சிவாஜி. கல்கத்தாவில் இருந்தபோது தமிழ்ப் படங்களே வராது. நான் இருந்த மூன்று வருடங்களில் வெளியான இரண்டே படங்கள் சிவாஜி மற்றும் தசாவதாரம். அதனால் இரண்டையும் முதல் நாளே பார்த்தேன்.  தசாவதாரத்தை நான்கு முறை பார்த்தேன். ஆனால் சிவாஜியை ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியவில்லை. அது போன்ற ஒரு பிரம்மாண்டக் குப்பையை எடுக்க ஷங்கர் தேவையில்லை  ரஜினியின் ஒப்பனையில் மட்டுமே ஷங்கர் தெரிந்தார். இறுதியில் வரும் மொட்டை பாஸாக ரஜினி வரும் காட்சிகள் மட்டும் பிடிக்கும். ஆனால் எந்திரனில் ரஜினி தன்னை முழுவதும் இயக்குனரிடம் ஒப்படைத்து கடினமாக உழைத்திருந்தது Making of Endhiran-ல் பார்த்து பிரமித்துவிட்டேன்.  இனிமேலாவது ஹீரோவாக நடிக்காமல் அமிதாப் பச்சன் போல் கதையின் நாயகனாக படங்களைத் தேர்வு செய்து அவர் நடிக்க வேண்டும்.
இரண்டு படங்கள் முடிந்ததும் ஜெயா டிவியில் அரவான் இசை வெளியீட்டு விழா கொஞ்சம் பார்க்க நேர்ந்தது. அதற்கு சற்று முன் தான் பாடல்களைத் தரவிறக்கிக் கொண்டிருந்தேன். அறை நண்பர் ஒருவர் வசந்தபாலன் யார் என்று கேட்டார். ‘வெயில்‘, ‘அங்காடித் தெரு‘ படங்களை இயக்கியவர்.ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஆல்பம் என்ற படத்தை முதலில் இயக்கினார்’ என்றேன். ‘அங்காடித் தெரு’ மட்டும் கேள்விப் பட்டிருப்பதாகவும் மற்ற எதுவும் ஹிட் ஆகவில்லையே என்றார். ஹிட் ஆகும் படங்கள் எல்லாம் நல்ல படங்கள் அல்ல என்று சொன்னேன். நல்ல படங்கள் தோல்வியடைந்து வணிகக் குப்பைகள் வெற்றிபெறும்போது ஒரு சினிமா ஆர்வலனாக மிகுந்த வேதனை அளிக்கிறது.
 ‘நல்ல படங்களை மட்டுமே எடுப்பேன் என்று ஒரு வெறியோடு இருப்பவர் வசந்தபாலன்’ என்று சேரன் சொன்னார். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் என்ற நாவலில் ஒரு பகுதியை அரவான் படத்தின் கருவாக்கியுள்ளார். வசந்தபாலன் வணிகரீதியாக சமரசமும் செய்துகொள்ளாமல் தரமான படைப்புகளைக் கொடுக்க முயற்சிக்கும் ஓர் இயக்குனர். என்னைப் பொறுத்தவரை பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களைப் போல் வரக்கூடியவர். *ஈரம்* படத்திலிருந்து ஆதியைப் பிடித்தது, பிரத்யேகமாக அவரது குரல் மிகவும் பிடிக்கும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடக்கும் பீரியட் கதை என்பதும், என் அபிமான பாடகர் கார்த்திக் முதன்முறையாக இசை அமைத்துள்ளார் என்பதும் எதிர்ப்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. ஹிந்தி நடிகர் கபீர் பேடி, மலையாள நடிகை ஸ்வேதா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நிடித்துள்ளனர். நடிகர் பரத் கேமியோ ரோலில் நடித்துள்ளார். தமிழ் இலக்கியவாதிகள் சிலர் கலந்து கொண்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. அரவான் வெற்றி பெற வாழ்த்துகள்!
 
Leave a comment

Posted by on October 7, 2011 in Chummaa, Movies

 

எங்கேயும் எப்போதும்

இந்தப் படத்தின் எதிர்பார்ப்புக்கு ஒரே காரணம் ஹாலிவுட் நிறுவனமான Fox Star தயாரிக்கும் முதல் தமிழ்ப் படம் என்பது மட்டுமே. தவிர இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம். வேறு எந்த ஒரு நட்சத்திர அந்தஸ்தும் இல்லாததால் எவ்விதமான ஓர் எதிர்பார்ப்பும் முன்தீர்மானமும் இருக்கவில்லை. பாடல்களைக் கூட முன்னமே கேட்க்காமல் படத்தில்தான் முதன் முறை கேட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டு ஈரோட்டில் பார்த்தேன். (கடைசியாக அங்கு பார்த்த ‘வாரணம் ஆயிரம்’ படத்திற்குக்கூட வரிசையில் நிற்கவில்லை)

சென்னையில் இருந்து திருச்சிக்குச் செல்லும் தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து சென்னைக்குச் செல்லும் அரசுப் பேருந்தும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாவதோடு படம் தொடங்குகிறது. அந்தப் பயணத்திற்கு முன்னும் பயணத்தின்போதும் நடக்கும் காட்சிகளை பொதுவாக குழப்பமளிக்கும் நான்-லீனியர் உத்தி மூலம் தெளிவாக காட்சிப் படுத்தியுள்ளார் அறிமுக இயக்குனர் எம்.சரவணன். ஜெய்-அஞ்சலி, ஷர்வானந்த்-அனன்யா ஜோடிகளின் கதைகள் கிளைகளாக விரியும் காட்சிகள் மிகவும் அருமை. இறுதியில் யாரெல்லாம் இருந்தார்கள், இறந்தார்கள், காதலர்கள் என்ன ஆனார்கள் என்று பரபரப்பான இறுதிக் காட்சியில்தான் சொல்ல வந்த செய்தியை, பிரசார நெடியின்றி நுண்மையாக பதிவு செய்துள்ளார். கொஞ்சம் அசந்தாலும் டாகுமெண்டரி போல் ஆகிவிடக் கூடிய படத்தை ஜனரஞ்சகமாக கொடுத்திருக்கும் இயக்குனர் சரவணனுக்கு பெரிய பூங்கொத்து.

திருச்சியில் வரும் ஜெய்-அஞ்சலி காதல் காட்சிகள் புதுமையானவை. மிகவும் பிராக்டிகலான பெண்ணாக தடாலடியாக வரும் அஞ்சலி அப்பாவியான ஜெய்யை ரொம்பவே இம்சிக்கிறார். ஆனாலும் ஆனந்த இம்சை. படம் முழுவதும் அஞ்சலியை ஜெய் ‘நீங்க’ ‘வாங்க’ என்று அழைப்பதும் அஞ்சலி ஜெய்யை ஏகவசனத்தில் அழைப்பதும் அழகாகவே உள்ளது. நேர்முகத் தேர்வுக்கு திருச்சியில் இருந்து சென்னைக்குப் புதிதாக வரும் அனன்யா வழியில் உதவி செய்யும் ஷர்வானந்த் மீது முதலில் சந்தேகமும் பின்பு வழக்கம்போல் காதலும் கொள்கிறார்.ஒரே நாளில் காதல் மலருமா என்று நமக்கு இயல்பாக எழும் கேள்வியை கதாபாத்திரம் மூலமே எழுப்பி இன்னொரு கதாபாத்திரம் மூலமே விடையளிக்க வைத்தது இயக்குனரின் சாமர்த்தியம். படத்தில் தனியாக காமெடி டிராக் இல்லை. இவர்களைக் கொண்டே நகைச்சுவையைப் படம் முழுதும் இழைய விட்டுருக்கிறார் இயக்குனர். அஞ்சலி கிடைத்த பந்துகளில் எல்லாம் சிக்ஸர் அடித்து விளாசி ஆச்சரியப் படுத்துகிறார். ஜெய்யும் அபத்தமான ஹீரோயிசம் எதுவும் இன்றி இயல்பாக நடித்துள்ளார். ஷர்வானந்த் மற்றும் அனன்யாவும் நிறைவாக நடித்துள்ளனர்.

ஒரு பாடலைத் தவிர அனைத்து பாடல்களும் மாண்டேஜ் பாடல்கள். கதையுடனும் காட்சிகளுடனும் நகரும் பாடல்கள்தான் எப்போதும் என் சாய்ஸ். பாடல்கள் மனதில் பதியாவிடினும் காட்சிகள் பதிந்து விடுகின்றன. படத்தின் பாடல்களை விட அதிகம் ஈர்த்தவை பேருந்தில் ஒலிக்கும் இளையராஜா பாடல்கள்தான். ஆரண்ய காண்டம் போல் இதிலும் பின்னணியில் ராஜாவின் பாடல்கள் வரும் இடங்களில் நம்மையும் அறியாமல் உதடுகள் அப்பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடும். மெதுவாக செல்ல ஆரம்பித்திருக்கும் பேருந்தில் ஸ்வர்ணலதாவும் எஸ்.பி.பி.யும் இணைந்து ‘எ/உன்னைத் தொட்டு’ என்று பாடும்போது நாமும் அந்தப் பேருந்தில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறோம். Characterization-ல் மிகுந்த அக்கறை எடுத்துள்ளார் இயக்குனர். சிறு கதாபாத்திரம் கூட மனதில் பதிந்து விடுகிறது. பேருந்தில் அம்மாவைத் தூங்கவிடாத குழந்தை முதல் ஃபோனில் முகம் தெரியாதவரிடம் ‘சாப்டீங்களா?’ என்று கேட்கும் முகம் காட்டாத குழந்தை வரை கச்சிதம். மனைவியைப் பிரிய மனமின்றி அவளுடனே பேருந்தில் வரும் கணவன் பாத்திரம் மட்டும் செயற்கையாக திணிக்கப் பட்டதுபோல் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்றாசும் படத்தொகுப்பாளர் கிஷோரும் இயக்குனருக்குப் பக்க(கா) பலம். சத்யாவின் இசை நிறைவு.

ஆரம்பக் காட்சியே வாகன விபத்து காட்டப்பட்டதும் Alejandro González Iñárritu-ன் அமோரேஸ் பெர்ரோஸ், 21 Grams போன்ற படங்களின் தாக்கத்தில் உருவானது என யூகித்து விடலாம். ஆனால் அதன் தாக்கத்தில் மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்தை’ விட நன்றாக உள்ளது. காரணம் அதிக சிக்கல் இல்லாத தெளிவான திரைக்கதை. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளைப் புள்ளிகளாக்கி, திரைக்கதை என்ற கோடு மூலம் அவர்களை இணைத்து, கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு, மிக யதார்த்தமான வசனங்கள், அற்புதமான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நிறைவான இசை போன்ற வண்ணங்கள் கொண்டு அழகிய திரைக்கோலமிட்டுள்ள இயக்குனர் சரவணன் நம்பிக்கை அளிக்கிறார். எங்கேயும் எப்போதும் கவனம் தேவை என்று சொல்லி நம் கவனத்தை ஈர்க்கிறார். குடும்பத்துடன் சென்று நிச்சயம் பார்க்கலாம்.

பி.கு: ஈரோட்டில் இதுவரை படம் முடிந்ததும் மக்கள் கைதட்டி நான் பார்த்ததில்லை. இயக்குனருக்கு ‘ஓ’ கூட போட்டார்கள்!

 
1 Comment

Posted by on September 22, 2011 in Movie Reviews, Movies

 

‘தெய்வத்திருமகள்’ நிலா அம்மா யாரு?

பொதுவாக பாலச்சந்தரின் படங்களில் திரையில் தோன்றாத உருவமில்லாக் கதாபாத்திரங்கள் இருக்கும். க்ளீஷேவாக இருந்தாலும் ரசிக்கும்படி சித்தரித்திருப்பார். படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் அக்கதாபாத்திரத்தைப் பற்றி அடிக்கடி சொல்லியோ, வெறும் குரலை மட்டுமே கேட்கச் செய்தோ Invisible Character-களைப் படைப்பதில் கே.பி.க்கு நிகர் அவரே. சில பிரத்யேக குணாதிசயங்களுடன் அழகாக Characterization செய்யப்பட்டு, திரையில் தோன்றாமலே நம்மை ரசிக்க வைக்கும்.

எதிர் நீச்சல் படத்தில் ‘இருமல்’ தாத்தா, தில்லு முல்லுவில் ரஜினியின் அப்பா அய்யம்பேட்டை அறிவுடை நம்பி, சொல்லத்தான் நினைக்கிறேன்-ல் சமையல்காரர் ஆனா ரூனாவின் மனைவி, மனதில் உறுதி வேண்டும்-ல் எஸ்.பி.பி.யின் மனைவி(One of the best), அழகன்-ல் மம்மூட்டியின் மனைவி, கல்கியில் ஃபாத்திமா பாபுவின் கணவர் போன்றவை திரையில் தோன்றாமலே படம் நெடுக குறிப்பிடப்படும்.

அதுமட்டுமன்றி உர்யிரற்றப் பொருட்களைக் கூட கதாபாத்திரம் ஆக்கி உயிரூட்டி விடுவார். அவர்கள் ‘ஜூனியர்’, அச்சமில்லை அச்சமில்லை ‘அருவி’ (டைட்டிலில் இவர்களுடன் ‘குற்றாலம் அருவி’ என்று போடப்படும்’!), அழகன் ‘தொலைபேசி’ (இதுவும் டைட்டில் கார்டில் இடம்பெறும்), அபூர்வ ராகங்கள் ‘நாற்காலி’, வானமே எல்லை ‘பணப்பெட்டி’, இருகோடுகள் FILE-ஐயும் புதுப் புது அர்த்தங்க ‘அமலா கட் அவுட்’டையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் மனைவி கதாபாத்திரமான பானுவை இறுதி வரைக் காட்டாமல் என் Curiosity-ஐ அதிகரித்துவிட்டனர். ஏற்கனவே இதுபோல் சில படங்களில் நடிகர்களைத் திரையில் காட்டாமல் புகைப் படங்கள் மட்டும் காட்டப் பட்டுள்ளன. மகாநதியில் கமலின் மனைவியாக ஜெயசுதா புகைப்படத்தில் மட்டும் காட்டப் படுவார். அதுபோல் ‘மேட்டுக்குடி’யில் ஜெமினியின் மனைவியாக கே.ஆர்.விஜயாவின் படம், ‘நினைவிருக்கும் வரை’யில் சுஜாதாவின் கணவராக முத்துராமனின் படம், ‘சிறுத்தை’-ல் கார்த்தியின் இறந்துபோன மனைவியாக பூமிகா போன்றவர்களின் புகைப்படங்கள் மட்டும் காட்டப்பட்டுள்ளன.

ஆனால் ‘தெய்வத்திருமகள்’-ல் ஃபோட்டோவில்கூட பானு காட்டப் படமாட்டார். அழகன் அளவுக்கு ஈர்க்காவிட்டாலும் என் மண்டைக்குள் நண்டைப் பிராண்டவிட்டதில் இயக்குனர் ஜெயித்துவிட்டார்! அந்தப் புகைப்படத்தை யார் பார்க்கிறார்களோ அவர்களது பிம்பம் மட்டுமே தெரியும். பின் நவீனத்துவம் அடிப்படையில் அலசி ஆராய்ந்ததில் சில குறியீடுகள் புலப்பட்டன. குழந்தை பிறந்து பானு இறந்ததும் அதை விக்ரம் பார்க்கும்போது அவர் பிம்பம் தெரியும். அப்போது அவர்தான் குழந்தைக்கு அம்மாவாகவும் இருக்கிறார். பின் நிலா வளர்ந்து அந்த ஃபோட்டோவைப் பார்க்கும்போது அவள் பிம்பம் தெரிகிறது. அப்போது அவள் விக்ரமுக்கு அம்மாவாக இருக்கிறாள். பின் அமலா பால் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது அவரது பிம்பம் தெரிகிறது. அதிலிருந்து நிலாவுக்கு அமலா பால்தான் அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள்கிறார் இதுபோன்ற பின் நவீனத்துவக் குறியீடுகள் வேறு யாருக்காவது தோன்றியதா? 😉

கடைசி இரண்டு பத்திகளைக் கண்டு கொள்ளாமல் தமிழ்த் திரையில் தோன்றாத மற்ற கதாபாத்திரங்களை மறுமொழியிடவும் 🙂

 
4 Comments

Posted by on July 28, 2011 in Chummaa, Movies

 

தெய்வத்திருமகள் – An Indianized Pizza

Disclaimer: 21.7.2011 அன்று Google Buzz-ல் எழுதியது. படம் வெளியாகி பலரும் பார்த்துவிட்ட நிலையில் சில காட்சிகளைக் குறிப்பிட்டு இப்பதிவில் சேர்த்துள்ளேன்.

‘அமெரிக்காக்காரனுக்கு சாப்பிட ப்ரெட் பட்டர் இருந்தா போதும். நம் ஆட்களுக்கு சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், அப்பளம் ஊறுகாய் என்று சகலமும் வேண்டும்’ என்று சுஜாதா சொன்னார். நம் மக்கள் நூடுல்ஸ், பீட்ஸாவைக் கூட கரம் மசாலா, கொத்துமல்லி கறிவேப்பிலையுடன்தான் சாப்பிட விரும்புகின்றனர். உணவு வகைகளை Authentic-ஆக சாப்பிடப் பிடித்தவர்களுக்கு அவ்வாறு சாப்பிடப்பிடிக்காது. தெய்வத்திருமகள் படமும் ஒரு Indianized Pizza போலதான் இருக்கிறது.

I am Sam பார்ப்பதற்கு முன் இதைப் பார்த்திருந்தால் நானும் எல்லோரைப் போலவும் நெகிழ்ந்து, கண்ணைக் கசக்கி, அழுது சிலாகித்திருப்பேன் – கிகுஜிரோவுக்கு முன் பார்த்த நந்தலாலாவைப் போல. எந்தவித முன் தீர்மானமுமின்றி பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தும் முடியாமல் போனது. குழந்தைக்கு ஷூ வாங்கும் காட்சி, விக்ரமின் நண்பர்கள் கோர்ட்டில் சாட்சி சொல்லும் காட்சி போன்றவற்றை அப்பட்டமாகக் காப்பியடித்து மற்ற காட்சிகளை சாமர்த்தியமாக மாற்றிவிட்டார் இயக்குனர். திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்தது சற்று ஆறுதலளித்தது. இறுதியில் நாயகனும் நாயகியும் சேர்ந்தே ஆக வேண்டும் என்ற தமிழ் சினிமா ஃபார்முலாவை உடைத்தெறிந்ததற்காக இயக்குனரைப் பாராட்டலாம். நிலாவாக நடித்திருக்கும் கொள்ளை சாரா அழகாலும் அபாரமான நடிப்பாலும் நம் மனத்தைக் கொள்ளை கொள்கிறாள். நிலாவைப் பற்றி நண்பர் கார்க்கியின் பதிவு

அவன் இவன் படம் பார்த்து விஷாலுக்கு தேசிய விருதுக்குப் பரிந்துரைத்தவர்கள் இப்போது விக்ரமுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்து விட்டனர். விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் I am Sam-ல் ஷான் பென் நடித்தது போலவே தெரியாது. அதுதான் ஹாலிவுட்டுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். சில செயற்கையான சினிமாத்தனமான காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. நாசர் மகனுக்கு விக்ரம் மருந்து வாங்கித் தரும் காட்சி எரிச்சலின் உச்சக்கட்டம். மென்சொகத்தைப் பிழிய வேண்டுமென்றே இதுபோல் பல காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளன.

தேவையே இல்லையென்றாலும் ‘விழிகளில் ஒரு வானவில்’ பாடலும், பிக்ச்சரைசேஷனும் அருமையோ அருமை! (அனுஷ்காவும் ;-)). அதேபோல் ‘கத சொல்லப் போறேன்’ பாடல் ஒரு குழந்தையின் கண்ணோட்டத்தில் படமாக்கி இருப்பது நன்றாக இருந்தது. I am Sam-ல் இல்லாத மூன்று நல்ல விஷயங்கள் தெய்வத்திருமகள்-ல் இருக்கின்றன – அனுஷ்கா, அமலா பால், சந்தானம். விஜய் அவார்ட் நிகழ்ச்சியில் சந்தானம் தனது காட்சிகள் அனைத்தும் ஆண்களுடனே இருப்பதாக வருத்தப் பட்டார். ஆனால் இதில் படம் முழுவதும் அனுஷ்காவுடனேயே வருகிறார்.

இரண்டு அழகான கதாநாயகியர் இருந்தும் கவர்ச்சிப் பாடல்கள் இல்லை விக்ரமுக்கு சண்டைக் காட்சிகள் இல்லை, சந்தானத்துக்கு தனி காமெடி ட்ராக் இல்லை. குடும்பத்துடன் சென்று பார்க்கும்படியான படம் தந்ததற்காக விஜய்க்கு மீண்டும் பாராட்டுகள். அதே சமயம் ஆடுகளம், ஆரண்ய காண்டம், போன்ற படங்கள் வந்து நம் ரசனையை மேலெழுப்பி அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்கையில், Melodrama, Sentiment என்று சோகத்தைப் பிழிந்து அழவைத்தால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்று நம் ரசனையை வளர விடாமல் மட்டுப் படுத்துவது ஒரு சினிமா ஆர்வலனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பின்குறிப்பு: வெகு சில அயல் சினிமாக்களைப் பார்த்த எனக்கே திருப்தியில்லாதபோது ஒலக சினிமா ரசிகர்களுக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லை 🙂

 
Leave a comment

Posted by on July 28, 2011 in Movie Reviews, Movies

 

போறானே போறானே – வாகை சூடவா

சமீபத்தில் வந்த பலரும் நன்றாக இருப்பதாக சொன்ன ‘வாகை சூடவா’ பாடல்களை வார இறுதியில் தரவிறக்கி வைத்திருந்தேன். இன்றுதான் கேட்க முடிந்தது. களவாணி இயக்குனர் சற்குணம் இயக்கும் இப்படத்தில் மீண்டும் விமல்தான் நாயகன். களவாணி என்னை வெகுவாகக் கவராததால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தேன். ஆனால் 70களில் நடப்பதுபோல் கதை கொண்ட இந்த பீரியட் படத்தின் ஸ்டில்களை விகடனில் பார்த்தபோது ‘அட’ போட வைத்தன.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்த ஜிப்ரான் என்பவரின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. கேட்டவுடனே இரண்டு பாடல்கள் மிகவும் ஈர்த்துவிட்டன. ஒன்று சின்மயி பாடி ‘சாரக் காத்து’. இன்னொன்று நேஹா பசின் மற்றும் ரஞ்சித் பாடிய ‘போறானே போறானே’.
இரண்டாவது பாடலை மாலையிலிருந்து இப்போதுவரை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

வசீகரிக்கும் வாஸந்தி ராகத்தில் அமைந்த இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவது இசை, வைரமுத்துவின் வைடூரிய வரிகள் மற்றும் நேஹா பசினின் மண் மணம் கமழும் குரல். ‘சத்தம் போடாதே’ படத்தில் அவர் பாடிய ‘பேசுகிறேன் பேசுகிறேன்’ பாடல் மிகவும் பிடித்திருந்தாலும் இதுபோன்ற ஒரு கிராமியப் பாடலை Nativity சிறிதும் சிதைக்காமல் பாடியிருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. சில இடங்களில் ஹிந்தி பாடகி ரேகா பரத்வாஜை நினைவு படுத்துகிறார். புதிய இசையமைப்பாளர் ஜிப்ரான் ‘வாகை சூடவா’ மூலம் தமிழ்த்திரை இசையில் நிச்சயம் வெற்றி வாகை சூடுவார் 🙂

வைரமுத்துவின் பிறந்த நாளான இன்று அந்தப் பாடல் வரிகளை இங்கு பகிர்கிறேன்.

Lyrics Courtesy http://www.dhool.com

போறானே…போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல

போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

பருவம் தொடங்கி ஆசை வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூசை வச்சேன்
மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட
ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா
அட நல்லாங்குருவி ஒண்ணு மனச மனச
சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன தொரட்டிப்பொண்ணு
கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட
உன்னை பார்த்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்
மூக்கணாங்கவுற போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடை காக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு
அடி மஞ்சக்கிழங்கு உன்னை நினைச்சு நினைச்சு
தினம் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிட்டேன்
உன் பிஞ்சுவிரல் பதிச்ச மண்ணை எடுத்து
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்

போறாளே…போறாளே
போறாளே…போவாமத்தான் போறாளே

அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே…போறானே…போறானே

காத்தோட தூத்தல போல போறானே,

மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட

டீத்தூளு வாசம் கொண்ட மோசக்காரா

ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட

மூக்கணாங்கவுறப் போல உன் நெனப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு

உன்னை பாத்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்

போன்ற வரிகளை வெகுவாக ரசித்தேன்!

 
7 Comments

Posted by on July 13, 2011 in Movies, Music

 

180 – நூற்றெண்பது

சில படங்கள் பாடல்களுக்காகவே பார்க்கத் தூண்டும். சென்ற வருடம் பையா படம் அப்படித்தான் கதையே இன்றி பார்க்க நேர்ந்தது. இந்த வருடம் எங்கேயும் காதலைத் தொடர்ந்து 180. (நூற்றெண்பது என்று தலைப்பை மாற்றியது பிடிக்கவில்லை) எங்கேயும் காதல் பார்ப்பதற்கு முதல் நாள் ‘வானம்’ படத்தின் இடைவேளையில் 180 trailer பார்த்து பிரமித்து விட்டேன். அதி அற்புதமான ஒளிப்பதிவுதான் காரணம். ‘மணிரத்னம் படமா?’ என்று அம்மா சந்தேகமாக கேட்டார். அதுவே படத்திற்கு மிகப் பெரிய பிளஸ். ஆனால் அடுத்த நாள் எங்கேயும் காதல் பார்த்து நொந்து போனதால், 180-௦க்கு ஒளிப்பதிவு பாடல்களைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தேன். சத்யம் திரையரங்கின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் சத்யம்-ல் தான் பார்க்க வேண்டும் என்று முதல் நாள் முதல் ஷோ பதிவு செய்தேன். நான் எதிர்பார்த்த இரண்டு விஷயங்கள் நிறைவைத் தந்ததால் படம் பெரிய ஏமாற்றம் அளிக்கவில்லை.

சமீபமாக தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்ற பெயரில் சவரம் செய்யாத முகம், பரட்டைத் தலையுடன் இருக்கும் அழுக்குக் கதாநாயகர்களைக் காட்டி, மதுரையைக் களமாகக் கொண்டு அரிவாள், கத்தி, ரத்தம், வன்முறை, பஞ்ச டயலாக், என்றெல்லாம் காட்டி உயிரை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவற்றிலிருந்து மிகப் பெரிய ஆறுதல் இப்படம். சென்னையில் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அழகான நாயகன் நாயகியைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. விண்ணைத்தாண்டி வருவாயாவிற்குப் பிறகு, சொல்லப்போனால் அதைவிட கலர்ஃபுல்லான அட்டகாசமான ஒளிப்பதிவுடன் மிகுந்த அழகியல் தன்மையுடன் உள்ளது இப்படம். அதற்காகவே இயக்குனர் ஜெயேந்திராவைப் பாராட்டலாம். ராஜீவ் மேனன் போல் இவரும் விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார் என அறிகிறேன்.

தான் ஆறு மாதத்தில் (நூற்றெண்பது நாட்களில்) இறந்து விடுவோம் தெரியும் ஒருவன், நேற்றைப் பற்றி யோசிக்காமல், நாளை பற்றி கவலைப் படாமல், இன்று, இப்போது ஒவ்வொரு கணங்களையும் சந்தோஷமாக கழிக்கிறான். இதுதான் படத்தின் ஒன்லைன். பல நாட்களுக்குப் பின் தமிழில் சித்தார்த். கச்சிதமாகப் பொருந்துகிறார். நாயகி நித்யா மேனனும் இளம் பெண் பத்திரிகையாளர் பாத்திரத்திற்கு பாந்தமாக இருக்கிறார். இவருக்கு அழகான பேசும் கண்கள். கேரளா கஃபே என்ற மலையாளப் படத்தில் பத்து குறும்படங்களுள் ஒன்றில் ஜெகதியுடன் பஸ்ஸில் கலாய்க்கும் ஒரு குறும்புப் பெண்ணாக நடித்தபோதே கவர்ந்தார். இதில் சற்று பூசினாற்போல் இருக்கிறார். இப்படி இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று யாராவது சொல்லி விட்டார்களா? பல காட்சிகளில் அன்தஹீன் என்ற பெங்காலிப் படத்தில் நடித்த ராதிகா ஆப்தேவை நினைவு படுத்துகிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் ப்ரியா ஆனந்த் ‘லீடர்’ படத்தில் செய்த துரு துரு பெண் கதாபாத்திரத்தில் வந்து உயரம் குறைவாக இருந்தாலும் தம் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். மௌலி, கீதாவும் வந்து போகிறார்கள்.

படத்தின் முக்கிய இரு நாயகர்கள் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் மற்றும் இசையமைப்பாளர் ஷரத் மதன் கார்க்கியின் பாடல் வரிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கடைசியில் வரும் போர்ச்சுகீசியப் பாடலுக்கும் சேர்த்து. உவேசுலா ஊது, சந்திக்காத கண்களில், நீ கோரினால் பாடல்கள், ஏஜே பாடல்கள் படமாக்க பட்ட விதம் அருமை. பாலசுப்ரமணித்திற்கு படத்தைப் போலவே வண்ணமயமான எதிர்காலம் இருக்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றையும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். Crystal Clear! ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில் வந்தால் சுஹாசினி கொண்டாடி விடுவார். பாடல்களில் கவர்ந்த ஷரத் பின்னணி இசையில் அவ்வளவாக கவரவில்லை.

கண்களுக்கும் காதுகளுக்கும் ராஜபோக விருந்தளித்த இயக்குனர் கதை திரைக்கதை விஷயத்தில் பத்திய சாப்பாடு போட்டுவிட்டார். மிகவும் சாதாரண கதை, தொய்வான திரைக்கதை படத்தின் மைனஸ். ‘அயன்’, ‘கோ’ படங்களுக்கு விறுவிறுப்பான திரைக்கதை, வசனம் எழுதிய எழுத்தாளர்கள் சுபா இதில் கோட்டை விட்டது வருத்தமாக உள்ளது.
சில காட்சிகள் கிங், ஓய் படங்களை நினைவு படுத்துகின்றன. மெஸ் வைப்பது, ஒரே பாடலில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி அளிப்பது என்று நாகடத்தனமான விக்ரமன் பாணி காட்சிகள் சகிக்க முடியவில்லை. இரண்டாம் பாதி ஆரம்பித்ததும் முதல் பாதியே பரவா இல்லை என்றாகி விட்டது. ஒரு மருத்துவர் தம் உடல்நிலையைப் பற்றி அறிந்தால் இவ்வளவு பாதிக்கப் படுவாரா? எமனாக ஒரு கோட் அணிந்த நீக்ரோவைக் காண்பிக்கின்றனர். அவைதான் படத்தின் மிகப் பெரிய காமெடிக் காட்சிகள்.

பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவில் இருந்த புதுமை காட்சிகளில் இருந்து கொஞ்சம் சுவாரசியம் கூட்டியிருந்தால் நிச்சயம் ரசித்திருக்கலாம். நல்ல வேளையாக இறுதிக் காட்சி அழுவாச்சியாக இல்லாமல், இரண்டு நாயகியரில் ஒருவருடனும் சேராமல் பாசிட்டிவாக முடிக்கப் பட்டது சற்று ஆறுதலளித்தது. ஆனால் ஒரு காட்சியில் ஆறு மாதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு Justify செய்யப்படவில்லை அட்டகாசமான ஒளிப்பதிவுக்காகவும் பாடல்களுக்காகவும், திரையரங்கு முழுதும் விசிலடித்து ஆரவாரம் செய்யும் சித்தார்த் ரசிகைகளை சைட் அடிப்பதற்காகவும் படத்தை ஒரே ஒரு முறை பார்க்கலாம். இல்லாவிட்டாலும் தீபாவளிக்குள் விஜய் டிவியில் ஒளிபரப்பினால் பார்க்கலாம்! சென்னை வாசிகள் சத்யம்/எஸ்கேப் திரையரங்குகளில் பார்த்தால் தெள்ளத் தெளிவான ஒளிப்பதிவை ரசிக்கலாம்.

 
2 Comments

Posted by on June 26, 2011 in Movie Reviews, Movies