RSS

Monthly Archives: June 2011

180 – நூற்றெண்பது

சில படங்கள் பாடல்களுக்காகவே பார்க்கத் தூண்டும். சென்ற வருடம் பையா படம் அப்படித்தான் கதையே இன்றி பார்க்க நேர்ந்தது. இந்த வருடம் எங்கேயும் காதலைத் தொடர்ந்து 180. (நூற்றெண்பது என்று தலைப்பை மாற்றியது பிடிக்கவில்லை) எங்கேயும் காதல் பார்ப்பதற்கு முதல் நாள் ‘வானம்’ படத்தின் இடைவேளையில் 180 trailer பார்த்து பிரமித்து விட்டேன். அதி அற்புதமான ஒளிப்பதிவுதான் காரணம். ‘மணிரத்னம் படமா?’ என்று அம்மா சந்தேகமாக கேட்டார். அதுவே படத்திற்கு மிகப் பெரிய பிளஸ். ஆனால் அடுத்த நாள் எங்கேயும் காதல் பார்த்து நொந்து போனதால், 180-௦க்கு ஒளிப்பதிவு பாடல்களைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தேன். சத்யம் திரையரங்கின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் சத்யம்-ல் தான் பார்க்க வேண்டும் என்று முதல் நாள் முதல் ஷோ பதிவு செய்தேன். நான் எதிர்பார்த்த இரண்டு விஷயங்கள் நிறைவைத் தந்ததால் படம் பெரிய ஏமாற்றம் அளிக்கவில்லை.

சமீபமாக தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்ற பெயரில் சவரம் செய்யாத முகம், பரட்டைத் தலையுடன் இருக்கும் அழுக்குக் கதாநாயகர்களைக் காட்டி, மதுரையைக் களமாகக் கொண்டு அரிவாள், கத்தி, ரத்தம், வன்முறை, பஞ்ச டயலாக், என்றெல்லாம் காட்டி உயிரை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவற்றிலிருந்து மிகப் பெரிய ஆறுதல் இப்படம். சென்னையில் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அழகான நாயகன் நாயகியைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. விண்ணைத்தாண்டி வருவாயாவிற்குப் பிறகு, சொல்லப்போனால் அதைவிட கலர்ஃபுல்லான அட்டகாசமான ஒளிப்பதிவுடன் மிகுந்த அழகியல் தன்மையுடன் உள்ளது இப்படம். அதற்காகவே இயக்குனர் ஜெயேந்திராவைப் பாராட்டலாம். ராஜீவ் மேனன் போல் இவரும் விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார் என அறிகிறேன்.

தான் ஆறு மாதத்தில் (நூற்றெண்பது நாட்களில்) இறந்து விடுவோம் தெரியும் ஒருவன், நேற்றைப் பற்றி யோசிக்காமல், நாளை பற்றி கவலைப் படாமல், இன்று, இப்போது ஒவ்வொரு கணங்களையும் சந்தோஷமாக கழிக்கிறான். இதுதான் படத்தின் ஒன்லைன். பல நாட்களுக்குப் பின் தமிழில் சித்தார்த். கச்சிதமாகப் பொருந்துகிறார். நாயகி நித்யா மேனனும் இளம் பெண் பத்திரிகையாளர் பாத்திரத்திற்கு பாந்தமாக இருக்கிறார். இவருக்கு அழகான பேசும் கண்கள். கேரளா கஃபே என்ற மலையாளப் படத்தில் பத்து குறும்படங்களுள் ஒன்றில் ஜெகதியுடன் பஸ்ஸில் கலாய்க்கும் ஒரு குறும்புப் பெண்ணாக நடித்தபோதே கவர்ந்தார். இதில் சற்று பூசினாற்போல் இருக்கிறார். இப்படி இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று யாராவது சொல்லி விட்டார்களா? பல காட்சிகளில் அன்தஹீன் என்ற பெங்காலிப் படத்தில் நடித்த ராதிகா ஆப்தேவை நினைவு படுத்துகிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் ப்ரியா ஆனந்த் ‘லீடர்’ படத்தில் செய்த துரு துரு பெண் கதாபாத்திரத்தில் வந்து உயரம் குறைவாக இருந்தாலும் தம் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். மௌலி, கீதாவும் வந்து போகிறார்கள்.

படத்தின் முக்கிய இரு நாயகர்கள் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் மற்றும் இசையமைப்பாளர் ஷரத் மதன் கார்க்கியின் பாடல் வரிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கடைசியில் வரும் போர்ச்சுகீசியப் பாடலுக்கும் சேர்த்து. உவேசுலா ஊது, சந்திக்காத கண்களில், நீ கோரினால் பாடல்கள், ஏஜே பாடல்கள் படமாக்க பட்ட விதம் அருமை. பாலசுப்ரமணித்திற்கு படத்தைப் போலவே வண்ணமயமான எதிர்காலம் இருக்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றையும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். Crystal Clear! ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில் வந்தால் சுஹாசினி கொண்டாடி விடுவார். பாடல்களில் கவர்ந்த ஷரத் பின்னணி இசையில் அவ்வளவாக கவரவில்லை.

கண்களுக்கும் காதுகளுக்கும் ராஜபோக விருந்தளித்த இயக்குனர் கதை திரைக்கதை விஷயத்தில் பத்திய சாப்பாடு போட்டுவிட்டார். மிகவும் சாதாரண கதை, தொய்வான திரைக்கதை படத்தின் மைனஸ். ‘அயன்’, ‘கோ’ படங்களுக்கு விறுவிறுப்பான திரைக்கதை, வசனம் எழுதிய எழுத்தாளர்கள் சுபா இதில் கோட்டை விட்டது வருத்தமாக உள்ளது.
சில காட்சிகள் கிங், ஓய் படங்களை நினைவு படுத்துகின்றன. மெஸ் வைப்பது, ஒரே பாடலில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி அளிப்பது என்று நாகடத்தனமான விக்ரமன் பாணி காட்சிகள் சகிக்க முடியவில்லை. இரண்டாம் பாதி ஆரம்பித்ததும் முதல் பாதியே பரவா இல்லை என்றாகி விட்டது. ஒரு மருத்துவர் தம் உடல்நிலையைப் பற்றி அறிந்தால் இவ்வளவு பாதிக்கப் படுவாரா? எமனாக ஒரு கோட் அணிந்த நீக்ரோவைக் காண்பிக்கின்றனர். அவைதான் படத்தின் மிகப் பெரிய காமெடிக் காட்சிகள்.

பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவில் இருந்த புதுமை காட்சிகளில் இருந்து கொஞ்சம் சுவாரசியம் கூட்டியிருந்தால் நிச்சயம் ரசித்திருக்கலாம். நல்ல வேளையாக இறுதிக் காட்சி அழுவாச்சியாக இல்லாமல், இரண்டு நாயகியரில் ஒருவருடனும் சேராமல் பாசிட்டிவாக முடிக்கப் பட்டது சற்று ஆறுதலளித்தது. ஆனால் ஒரு காட்சியில் ஆறு மாதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு Justify செய்யப்படவில்லை அட்டகாசமான ஒளிப்பதிவுக்காகவும் பாடல்களுக்காகவும், திரையரங்கு முழுதும் விசிலடித்து ஆரவாரம் செய்யும் சித்தார்த் ரசிகைகளை சைட் அடிப்பதற்காகவும் படத்தை ஒரே ஒரு முறை பார்க்கலாம். இல்லாவிட்டாலும் தீபாவளிக்குள் விஜய் டிவியில் ஒளிபரப்பினால் பார்க்கலாம்! சென்னை வாசிகள் சத்யம்/எஸ்கேப் திரையரங்குகளில் பார்த்தால் தெள்ளத் தெளிவான ஒளிப்பதிவை ரசிக்கலாம்.

 
2 Comments

Posted by on June 26, 2011 in Movie Reviews, Movies

 

ஆரண்ய காண்டம் – சுந்தர காண்டம்

Disclaimer: படம் பார்க்காதவர்கள் இதைப் படிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாக எனக்கு ஆக்ஷன்/வன்முறை அதிகமுள்ள திரைப்படங்கள் பிடிக்காது. நாயகன், தளபதி விதிவிலக்குகள் . தமிழர்களால் அதிகம் ரசிக்கப்படும் ஹாலிவுட் ஆக்ஷன் படங்களான டெர்மினடர் போன்ற படங்களைக் கூட பார்க்கமாட்டேன். ‘காக்க காக்க’ படத்தைக் கூட சூர்யா-ஜோதிகா காதல் காட்சிகள் மட்டுமே பார்ப்பேன். ஒரு நாள் எதேச்சையாக நண்பனின் மடிக்கணினியில் வெகு நாட்களாக பார்க்காமலிருந்த ‘புதுப்பேட்டை’ மற்றும் ‘அஞ்சாதே’ படங்களைப் பார்த்து ஸ்தம்பித்துவிட்டேன். அதிலிருந்து ஆக்ஷன் கம் ட்ராமா படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். டிரெய்லர் வந்ததிலிருந்தே ஆரண்ய காண்டம் ஓர் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. சர்வதேச விருது பெற்ற படம் என்றபோது இன்னும் கூடியது. கடந்த ஆறு மாதங்களாக காத்திருக்கும் ஒரு படம். தணிக்கைக் குழுவின் கத்திரிக்குப் மிகுந்த Work Pressure கொடுத்து எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டு சற்று தாமதமாக வந்தாலும் It’s Worth the Wait!

ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சுரேஷ் கண்ணன் ‘தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா’ என்று தமது Buzz-ல் தெரிவித்திருந்தார். ஆம் தமிழ் சினிமா இதுபோன்ற முயற்சிகளால் முதிர்ச்சி பெற்று வயதுக்கு வந்துவிட்டது! முதிர்ச்சி என்பது வயதில் இல்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். பக்குவப்பட்ட ரசிகர்களுக்கானது. வழக்கமான சினிமாவின் சூத்திரங்களை சுக்கல் சுக்கலாக்கி புதியதொரு அனுபவத்தைக் கொடுத்தது. சற்றே வித்தியாசமான Gangster படம். படத்தில் நல்லவர்களே இல்லை எனலாம். ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் என்று எவரும் இல்லை. அனைவரும் கதாபாத்திரங்கள்! அதிலும் வில்லன்கள். அதிபயங்கர டெசிபெல்லில் அலறும் வில்லன்களைப் பார்த்து பழகிப்போன நமக்கு மணிரத்னம் படத்தில் பேசுவதுபோல் பேசும் இந்த வில்லன்கள் மிகுந்த ஆறுதல் அளிக்கின்றனர். ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் இருந்தாலும், Raw-வாக, யதார்த்தமாக இருக்கிறது.

முதல் காட்சியே தமிழ் சினிமா கண்டிராத ஒரு காட்சி. தான் கட்டாயப் படுத்தி ‘வைத்திருக்கும்’ பெண் சுப்புவுடன் (யாஸ்மின் பொன்னப்பா) முழுமையாக சல்லாபிக்க முடியாத ஒரு முக்கால் கிழட்டு தாதா சிங்கம்பெருமாள் (ஜாக்கி ஷ்ராஃப்) அவளை அடித்துத் துன்புறுத்துகிறான். வெளியில் அவரது அடியாட்கள் Auntyகளை மடக்குவது எப்படி என்று சுவாரசியமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கம்பெருமாளின் பிரதான சிஷ்யனான பசுபதி (சம்பத்) அவருக்கு வயதாகிவிட்டதால் (டொக்கு ஆகிவிட்டதென்று சொல்லப்படுகிறது) தான் ரிஸ்க் எடுத்து தனியாக வியாபாரத்தை ஆரம்பிப்பதாகக் கூறியதும், இருவருக்கும் ஈகோ மோதல் ஆரம்பமாகிறது. பசுபதியிடம் தனியாக ஆரம்பிக்கச் சொல்லிவிட்டு அவனைப் போட்டுத் தள்ளி அவன் கடத்திய போதை மருந்தை எடுத்து வர தன் ஆட்களை அனுப்புகிறான். சேவல் சண்டை மூலம் பணம் பெற்று தன் கடனை அடைக்க கிராமத்திலிருந்து வரும் ஒரு அப்பா மகன் ஜோடியிடம் அந்த போதை மருந்து கிடைக்கிறது. போதை மருந்தைத் தேடிவரும் கஜேந்திரன் (ராம்போ ராஜ்குமார்) என்ற இன்னொரு தாதாவின் கும்பல் இருவரையும் துரத்துகிறது. இதற்கிடையில் சிங்கம்பெருமாளின் நம்பிக்கையைப் பெற்ற காயடித்த காளை போலிருக்கும் அடியாள் சப்பையும் (ரவி கிருஷ்ணா) அவரது கீப் சுப்புவும் சேர்ந்து அவரை ஏமாற்றி பணத்தை எடுத்து மும்பை செல்ல திட்டமிடுகின்றனர்.இறுதியில் என்ன ஆகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையால் சொல்லி அசத்தலான ஓர் அனுபவத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் குமாரராஜா.

முதலில் தயாரிப்பாளர் எஸ்.பி.சரணுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். சென்னை-28, குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும், நாணயம் போன்று தொடர்ந்து பல வித்தியாசமான முயற்சிகளைத் தயாரித்து புதியவர்களுக்கு ஆதரவளித்து தமிழ் சினிமாவில் ஓர் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியுள்ளார். அடுத்து அறிமுக இயக்குனர் குமாரராஜா. ‘ஓரம்போ’ படத்தின் வசனகர்த்தா. (புதுமையான முயற்சி என்று பலரும் சொல்லியும் இன்னும் நான் அப்படத்தைப் பார்க்கவில்லை)இதிலும் வசனங்கள் நறுக்குதெரித்தாற்போல் இருக்கின்றன. அன்றாட வாழ்வில் பேசப்படும் வசனங்களைக் கொஞ்சம் மெருகூட்டியிருக்கிறார். “சப்பையும் ஒரு ஆம்பளைதான், எல்லா ஆம்பளைங்களும் சப்பைதான்”, “உன் அப்பாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா? அப்படியில்ல..ஆனா அவர் என் அப்பா..”; “மவனே! நீ மட்டும் உயிரோட இருந்தே உண்ணக் கொன்னுருப்பேண்டா” போன்று விசிலடிக்க வைக்கும் வாசனைகள் மூலம் சிக்ஸர் அடிக்கிறார் குமாரராஜா!

பின் கனக்கச்சிதமான பாத்திரத் தேர்வு. ஜாக்கி ஷ்ராஃபை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ரங்கீலாவில் பார்த்தவரா இவர்! வசனத்தை விட உடல்மொழியிலேயே அதிகம் பேசுகிறார்! நல்ல வேளை! பிரகாஷ் ராஜைத் தேர்வு செய்யாமல் இருந்தவரை நிம்மதி. சம்பத் வழக்கம்போல் அருமை. ரவிகிருஷ்ணா 7-ஜிக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு பாத்திரம். அந்த அப்பா-மகன் ஜோடியை எங்கிருந்து பிடித்தனர்? அதிலும் கொடுக்காப்புள்ளியாக வரும் அந்தச் சிறுவன் Simply Superb! ஒரே உறுத்தல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப் படும் படங்களில் சிறுவர்களை எப்படி நடிக்க வைக்கின்றனர்? அதுவும் தன் அப்பாவிடமே கெட்ட வார்த்தைகள் சரமாரியாக உதிர்க்கிறான்! யாஸ்மின் பொன்னப்பா பெங்களூர் மாடல் என்று படித்தேன். அவர் தன் பங்கைச் செவ்வனே செய்திருக்கிறார். முதலில் பூஜாவை அணுகி பின் இவரைத் தேர்ந்தெடுத்த செய்தியை அறிந்ததும் இவரைக் கொஞ்சம் பிடிக்காமல் போய் விட்டது. Miss you Pooja 😦

படத்தில் கதாநாயகன் இல்லை என்று முதலில் சொன்னேன். திருத்திக் கொள்கிறேன். இரண்டு பிரதான நாயகர்கள் உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் வினோத். அதிஅற்புதமான பின்னணி இசை மூலம் இளையராஜாவின் வாரிசென மீண்டும் நிரூபித்துள்ளார் யுவன். வன்முறைக் காட்சிகளுக்கு ரொமாண்டிக்கான இசையும் ரோமான்ஸின்போது கொஞ்சம் திகிலான இசையும் இழைத்து புதுமை செய்திருக்கிறார். குறிப்பாக கொடுக்காப்புள்ளி பையை மறைத்துவைக்குபோது வரும் பின்னணி இசையும் இறுதியில் பசுபதி மற்றும் கஜேந்திரன் மோதிக்கொண்டு சண்டையிடுமிடத்தில் வரும் பின்னணி இசையும் உலகத்தரம்! படத்தில் பாடல்களே இல்லை. ஆன்னால் பின்னாணியில் ஆங்காங்கே பாடல்கள் ஒலிப்பது, குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கும்போது பரம சுகம். மணிரத்னம் படமா என்று எண்ணுமளவு அருமையான ஒளிப்பதிவு. நிழல் உலகைக் காட்டுவதால் அதிகம் இருளில் படமாக்கப் பட்டிருக்கிறதோ?

பலரால் சிலாகிக்கப்படும் இத்திரைப்படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. சிங்கம்பெருமாளின் ஆட்களிடமிருந்து தப்பித்து ஓடும் பசுபதி, அவரது மனைவிக்கு ஆபத்து என்று தெரிந்தும் அவருக்கு ஒரு ஃபோன் செய்து எச்சரிக்காமல் இருப்பது பெரிய குறை. அவர் தப்பிச் செல்ல பைக் கிடைத்தது போல் காட்டுவதில் இருந்த கவனம் இதில் செலுத்தியிருக்க வேண்டாமா> அட்லீஸ்ட் அவர் மொபைலுக்கு அழைக்க முயற்சி செய்து ‘Not Reachable’/’Switched off’ என்று வருவது போலாவது காட்டியிருக்கலாம். உயிருக்கு பயந்து ஓடும் பசுபதி ஓட ஓட புத்திசாலித்தனமான முடிவுகள் எடுப்பதைக் கூட ஓரளவு ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இறுதிச் சண்டைக் காட்சியில் அவனுக்கு ஒன்றுமே ஆகாமல் அசால்ட்டாக கஜேந்திரனைப் போட்டுத் தள்ளுவது எல்லாம் கொஞ்சம் நெருடுகிறது.இருந்தாலும் படம் முடிந்ததும் மனதுக்கு ஒரு நிறைவைத் தருகிறது.

க்வெண்டின் டாரண்டினோ படத்தைத் தமிழில் பார்த்ததுபோல் இருந்தது. Guy Ritchie படங்களை இதனுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் நான் அவரது படங்களைப் பார்த்ததில்லை. பார்க்கும் எண்ணம் தோன்றியிருக்கிறது. ஹிந்தியில் அனுராக் காஷ்யப் படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். Cliche கதைகளில்கூட ஒரு Niche plot இருக்கும். அதுபோல் க்ளீஷேவான தாதா கதையில் (சொல்லப்போனால் கதையே இல்லை, வெறும் திரைக்கதை மட்டும்தான்) புதுமையான விஷயங்களைப் புகுத்தி பார்வையாளர்களை புத்திசாலிகளாக எண்ணிய இயக்குனருக்கு Hats Off!
நல்லதொரு படம் பார்த்து மனதுக்கு மிக நிறைவாய் இருந்தது. ஆனால் நான் வழக்கமாக படம் பார்க்கும் நண்பர்களுடன் பார்க்க முடியாததால் தனியாக பார்த்து அவர்களை மிகவும் மிஸ் செய்தேன் 😦

ஆரண்ய காண்டம் – ஆகா 🙂

ஆரண்ய காண்டம் படத்தின் பின்னணி இசைத்துணுக்குகளைத் தரவிறக்கம் செய்து கேட்கவும் http://www.backgroundscore.com/2011/06/aaranya-kaandam-background-score.html

 
1 Comment

Posted by on June 17, 2011 in Movie Reviews, Movies