RSS

Monthly Archives: November 2010

நந்தலாலா – என் அனுபவம்

அன்பிற் சிறந்தது அன்னையின் அன்பு. தம் உயிரையும்விட மேலாக பிள்ளையை நேசிக்கும் தாயின் பாசத்திற்கு ஈடில்லாத தாயன்பின்றி வாழும் இரண்டு குழந்தைகள் தத்தம் தாய்களைத் தேடி மேற்கொள்ளும் பயணமே நந்தலாலா. வாழ்க்கை என்னும் பயணத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் ஏதாவது ஒன்றை அறிந்தும் அறியாமலும் நாம் கற்றுக் கொள்கிறோம், கற்றும் தருகிறோம். அவ்வாறு தங்கள் பயணத்தில் அன்பைக் கொடுத்து பேரன்பைப் பெறும் அவ்விரு உள்ளங்களும் தாயன்பைப் பெறுகிறார்களா என்று நெகிழ்வுடன் சொல்லும் ஓர் உணர்ச்சிப்பூர்வமான அனுபவம்தான் நந்தலாலா. கன்னத்தில் முத்தமிட்டால் படம் போல தோன்றினாலும் இது மிகவும் வேறுபட்டது.

‘அகி’யாக அஸ்வத் ராமும் மன நலம் பிறழ்ந்த பாஸ்கர் மணியாக மிஷ்கினும் அற்புதமான நடித்துள்ளனர்.மிஷ்கினைத் தவிர வேறு யாரும் அக்கதப்பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்க இயலுமா என்பது சந்தேகம். படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் என்று யாரும் இல்லை. கதை மாந்தர்களே உலவுகின்றனர். அனைத்து கதாபாத்திரங்களும் நமக்கு பரிச்சயமற்ற ஆனால் யதார்த்தமான முகங்கள் (சில நொடிகள் தோன்றும் நாசர் மற்றும் சில நிமிடங்கள் தோன்றும் ரோஹிணியைத் தவிர). ஸ்னிக்தா கூட இரண்டாம் பாதியில்தான் வருகிறார். மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள் இல்லை, கேட்டவர்களும் இல்லை. இரண்டும் கலந்த கலவைதான் நாம். அக்கலவையின்  விகிதாச்சாரமே நமக்கு நல்லவன் கேட்டவன் என்ற பிம்பத்தைத் தருகிறது. கதையினூடே மெலிதான நகைச்சுவையையும் தவழவிட்டிருக்கிறார். ஜப்பானியத் திரைப்படம் கிகுஜிரோவின் தழுவல் என்றாலும், தமிழுக்கு இது மிகவும் புதியதோர் அனுபவம். கிகுஜிரோவைவிட ஒரு படி மேலோங்கி இருப்பது மிஷ்கினின் வெற்றியே! மிஷ்கினுக்கு ஒரு பூச்செண்டு இல்லை பூந்தோட்டமே தரலாம்.

முதல் காட்சியே நம்மை நிமிர்ந்து அட போட வைக்கிறது. வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு காட்சிகளால் கதை நகர்த்தும் உத்தியை பாலுமகேந்திரா, மணிரத்னம்,பாலா போன்றவர்கள் சில காட்சிகளில் உபயோகித்திருக்கிறார்கள். ஆனால் நந்தலாலாவில் படம் முழுவதுமே அவ்வாறு அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹைக்கூ போல் கவிதையாய் இருக்கிறது. (காட்சிகளெல்லாம் ஜென் தத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது என்று சொல்லப்படுகிறது. ஆனால் எனக்கு ஜென் தத்துவத்தைப் பற்றி தெரியாததால் அவ்வாறு சொல்லமுடியவில்லை) இதற்குப் பெரிதும் பக்க(கா)பலமாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. படம் நெடுக வியாபித்து விஸ்வரூபமெடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் பேசுவதைவிட ராஜாவின் இசைதான் அதிகம் பேசுகிறது. சில சமயம் பேசாமலும் உணரச் செய்கிறது. மெல்ல ஊர்ந்து ஊர்ந்து என்னும் பாடல் தொடங்கும் பொது நாமும் அவர்களுடன் சேர்ந்து ஊர்ந்து பயணிக்கும் உணர்வைத் தருகின்றது. அன்பு மட்டும்தான் அனாதையா என்று ஜேசுதாஸ் பாடுகையில் அந்த வெறுமையை நம்மால் உணர முடியும். முத்தாய்ப்பாக தாலாட்டு கேட்க நானும் என்று ராஜா மேன்சொகமாக பாடுகையில் நம்மை அறியாமல் கண்ணீர் வருவதைத் தடுக்க முடியாது. பின்னணி இசைக்கான இரண்டாவது தேசிய விருதையும் பெறப்போகிறார் (விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பின்னணி இசைக்காக ரகுமான் விருது பெறுவார் என்ற இதுவரையிலிருந்த எண்ணம் போய்விட்டது!)
இசைக்கு அடுத்ததாய் நம் கவனம் ஈர்ப்பது ஒளிப்பதிவு. காட்சிகள் மூலமே படம் நகர்வதால் ஒளிப்பதிவுக்கு முக்கியப் பங்குண்டு. மகேஷ் முத்துசாமி சிறப்பாக தம் வேலையைச் செய்துள்ளார். பல காட்சிகள் Long Shots -ஆகவும் அத்தியாவசியக் காட்சிகள் Close up-பிலும் உணர்சிகளைப் படம் பிடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்கான என் எண்ணத்தைப் பதிவிட விரும்பினாலும், படம் பார்க்காதவர் இதைப்படித்தால் படம் பார்க்கும்போது சுவாரசியம் குறையுமென்பதால் பதிவிடவில்லை.  பள்ளிச்சிறுமி வரும் காட்சி (அஞ்சாதே படத்தில் இறுதியில் கடத்தப்படும் இருவரில் ஒருவர்), ஊனமுற்றவர் வரும் காட்சி (கண்கலங்கிவிட்டது), இளநீர் வியாபாரி, ஐஸ் வண்டிக்காரர் வரும் காட்சிகள், ஸ்நிக்தாவைக் குளிக்கச் சொல்லும் காட்சி, குறவன் வரும் காட்சி, மிஷ்கின் தாயைக் காணும் காட்சி என்று பல காட்சிகளை மிகவும் ரசித்தேன். போலீஸில் பிடிபடும் காட்சி மட்டும் சுவையான உணவில் இடறிய கல். மேலும் படத்தில் பல குறியீடுகள் உள்ளன. அன்னைவயல், தாய்வாசல் போன்ற நேரிடையான குறியீடுகளைத் தவிர சில சூசகமான சில குறியீடுகளும் உள்ளன. முதன் முறையே எல்லாவற்றையும் அறிவது எனக்குக் கடினமாவதால் இன்னொரு முறை காண வேண்டும். கூழாங்கற்கள் குறியீடு என்னவென்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை . யாரேனும் விளக்கினால் கடமைப் பட்டவன் ஆவேன்.
இப்படத்தை தமிழின் ஆகச் சிறந்த படமாக சொல்ல முடியாது. சில லாஜிக் மீறல்களும் உள்ளன. எந்த ஊரில் கதை நிகழ்கிறதென்றே தெரியவில்லை. (இறுதியில் ஈரோடு-கோவை நெடுஞ்சாலை பெயரைப் பார்த்து கொஞ்சம் பெருமை கலந்த இன்பமடைந்தேன்) பெற்றோர்களின்றி கண்ணிழந்த பாட்டியுடன் வாழும் சிறுவன் நிறைய பணம் வைத்திருப்பது, மிஷ்கின் முற்றிலும் மனம் பிறழ்ந்தவரா இல்லை குணமடைந்து வருபவரா என்று தெளிவாக சொல்லப் படவில்லை. இருந்தாலும் பல நிறைவான காட்சிகள் இக்குறைகளை மறைத்துவிடுகின்றன. இது போன்ற தரமான படங்கள் உருவாவதற்கு சில குறைகளை மன்னிக்கலாம்.
தாய்மை என்பது பிள்ளை பெறுவதில் இல்லை; தூய்மையான அன்பு காட்டுதலில் உள்ளது என்றஅற்புதமான தத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அம்மாவுடன் நிச்சயம் பார்க்க வேண்டும்!
பி.கு. இப்படத்தை முதன்முறை பார்ப்பவர்கள் வழக்கமான மசாலா சினிமா விரும்பிகளுடன் பார்க்க வேண்டாம். நல்ல சினிமா விரும்புபவர்களுடன், அல்லது தனியாக பார்ப்பதே உத்தமம். நல்லதொரு திரையரங்கில் காண பரிந்துரைக்கிறேன். நான் சத்யம் திரையரங்கில் பார்த்தபோது ஒருவர் கூட கமென்ட் அடிக்காமல் கைகள் மட்டும் தட்டி ரசித்தனர். இறுதியில் கண்களைத் துடைத்துக்கொண்டு Standing Ovation அளித்தது நிறைவாக இருந்தது! மீண்டும் ஒரு முறை இவ்வனுபவத்தை உணர வேண்டும்!
 
Leave a comment

Posted by on November 30, 2010 in Ilayaraja, Movie Reviews, Movies

 

Tags: , , ,