RSS

Monthly Archives: April 2011

KO – Just கோ for it

வாரம் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்த என்னை. உலகக் கோப்பை, தேர்தல் போன்றவை இரண்டு மாதங்களாக பட்டினி போட்டுவிட்டன. அப்படியோர் அகோரப் பசியில் இருந்த எனக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கிடைத்த Continental Delight – கோ. படம் அவ்வளவு Rich & Colourful ஆக உள்ளது. முதல் பந்திலேயே சிக்சர் அடித்து விசில் போட வைத்துவிட்டார் இயக்குனர். ரஜினி, கமல், இளையராஜா, ஜெயகாந்தன், சச்சின், டோனி என அமர்க்களமான ஸ்டில் புகைப்படங்கள் டைட்டிலிலேயே அசத்திவிட்டார். நல்ல ஒரு Appetizer போல் பசியை மேலும் கிளப்பி விட்டது.

ஜீவா ஒரு புகைப்பட நிருபர் என்று அனைவரும் அறிந்ததே. முதல்வன் அர்ஜுனின் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. முடிந்தவரை தன் தனித்தன்மையை வெளிப்படுத்திருக்கிறார் ஜீவா. அவருடன் சினிமா செய்திகள் எழுதும் பியா அவரை ஒருதலையாக காதலிக்கிறார். வி.தா.வா வில் கௌதம் மேனனின் படங்களைப் பரிகாசம் செய்வது போல் இதிலும் கே.வி.ஆனந்தின் முந்தைய படத்தை பரிகாசம் செய்து ஒரு வசனம் பேசுகிறார் பியா.
அரசியல் செய்திகள் எழுதும் ஒரு துணிச்சலான நிருபராக அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் சேர்கிறார் கார்த்திகா. வழக்கமான சினிமா ஃபார்முலாவின்படி ஜீவாவுக்கும் கார்த்திகாவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால் பியாவின் காதல் அறிந்து கார்த்திகா விலக முயல்கிறார். ‘குவியமில்லாக் காட்சிப் பேழை’ என்று மதன் கார்க்கியின் அற்புதமான சொல்லாடலுக்குப் பொருத்தமாக அமைந்திருந்தன அந்த மாண்டேஜ் ஷாட்டுகள்.

அஜ்மலும் அவரது நண்பர்களும் அரசியலில் நுழைந்து ஊழலை ஒழித்து நல்லாட்சியைத் தரும் ஆர்வத்தில் முதல்வர் பிரகாஷ் ராஜ் (இருவர் தமிழ்செல்வன் Version 2.0) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கோட்டா சீனிவாச ராவ் (நல்ல வேலையாக பெண் கதாபாத்திரம் இல்லை) இருவரையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். (ஆய்த எழுத்து சூர்யா). அஜ்மல் தாக்கப் படுகிறார். பின் அவர் பேசும் மேடையில் வெடிகுண்டு வெடிக்கப்படுகிறது. அதனால் வெறுத்துப் பொய் தேர்தல் வேண்டாம் என்று ஒதுங்கும் அஜ்மலுக்கு ஜீவா ஆறுதலளித்து நிற்க வைக்கிறார். இளைஞர்கள் ஜெயிக்கின்றனரா என்பது பல சுவாரஸ்ய திருப்பங்கள் கொண்ட கிளைமாக்ஸ். இறுதியில் வரும் சண்டைக் காட்சிகளும், ஒளிப்பதிவும் A1. இந்தப் படம் மட்டும் தமிழகத் தேர்தலுக்கு முன் வெளியாகியிருந்திருந்தால் பல சலசலப்புகள் ஏற்பட்டிருக்கும்.

படத்தின் பெரிய பலங்கள் விறுவிறுப்பான திரைக்கதை, ஒளிப்பதிவு (இம்முறை கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவு செய்யாமல் ரிச்சர்ட் எம். நாதன் என்பவர் பிரமாதப் படுத்தி இருக்கிறார்), படத்தொகுப்பு (படத்தொகுப்பாளர் ஆண்டனி ஒரு காட்சியில் வருகிறார், வசனங்கள். ஐஃபோன், டேட்டா கார்ட், மேக்புக், பென் டிரைவ் என்று தொழில்நுட்ப வளர்ச்சியை மிகச்சிறப்பாக உபயோகப் படுத்தியுள்ளனர். குறிப்பாக இறுதிக் காட்சியில் 3G வீடியோ கால். ஜீவா தன் பாத்திரத்தை உணர்ந்து underplay செய்திருக்கிறார். ஜீவாவுக்கு இணையான மிகவும் பொருத்தமான கதாபாத்திரம் அஜ்மலுக்கு. அஞ்சாதேவிற்குப் பிறகு அசத்தியிருக்கிறார். இரண்டு கதாநாயகிகள் இருந்தும் அவர்களை ஊறுகாய் ஆக்காமல் நல்ல ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்கள் தரப்பட்டிருக்கின்றன. புதுமுகம் கார்த்திகா (என்ன ஹைட்) துணிச்சலான பெண் நிருபர் பாத்திரத்திற்குக் கச்சிதமாக பொருந்துகிறார்.ஆளை விழுங்கும் கண்களும் வில்லினையொத்த புருவங்களும் நிறைய பேசுகின்றன. (எனக்கு அந்தக் காலத்து மாதவியின் புருவங்கள் மிகவம் பிடிக்கும் :-)). சில கோணங்களில் அப்படியே ராதா. இருந்தாலும் ராதும்மா மாதிரி வராதும்மா. பியா இதிலும் நூடுல்ஸ் தலை, அரைகுறை ஆடைகளுடன் வருகிறார். ஆனால் செல்ல ராட்சசியாக நன்றாக நடித்திருக்கிறார். பிற்பாதியில் இவரால்தான் கதையே நகர்கிறது. நல்ல வேளையாக அஜ்மலுக்கு ஜோடியாக்கி டூயட் பாட வைக்கவில்லை 🙂

பாடல்கள் வெளிவந்த புதிதில் என்னமோ ஏதோ தவிர என்னக்கு எதையும் பிடிக்கவில்லை. அனால் காட்சிப்படுத்திய விதம் அற்புதம். முதல் பாதியின் பாடல்கள் நம்மை இருக்கையோடு கட்டிப் போட்டு விடுகின்றன. அக நக பாடலில் சூர்யா, கார்த்தி, தமன்னா, ஜெயம் ரவி, மிர்ச்சி சிவா, அப்பாஸ், இயக்குனர் சசிக்குமார், ஜெய், பரத், க்ரிஷ், அதர்வா, அனுஜா ஐயர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே ஆடியிருக்கிறது. இவர்களுடன் ஹாரிஸ் ஜெயராஜும், மதன் கார்க்கியும் கூட வருகிறார்கள். என்னமோ ஏதோ பாடல் பற்றி முதலிலே சொல்லிவிட்டேன். ஜீவா அதில் uber cool. அமளி துமளி பாடல்களின் லொகேஷன்கள் WOW என்று வாய் பிளக்க வைக்கின்றன. பள்ளத்தாக்குகளின் முகடுகளில் காதலர்கள் ஆடுகையில் எங்கே கீழே விழுவிடுவார்களோ என்று நெஞ்சம் பதைபதைக்கிறது. குறிப்பாக இரண்டு மலைகளுக்கு நடுவே அந்தரத்தில் இருக்கும் பாறை – Marvelous! நெற்றிப் பொட்டில் பாடல் கதையுடன் நகரும் காட்சிகளைக் கொண்டது. ஃபேஸ்புக் ட்விட்டரை எல்லாம் பெரிய திரையில் பார்க்கையில் மனம் குதூகலிக்கிறது. இடைவேளைக்குப் பின் வரும் வெண்பனியே பாடல் பெரிய குறை. எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் திரைக்கதையில் ஒரு ஸ்பீட் பிரேக்கர். இரண்டாம் இடைவேளை போல் மக்கள் வெளியே போய் விட்டனர். அப்பாடலுக்காக மெனக்கெட்ட கலை இயக்குனரின் உழைப்பு வீணாகிவிட்டது. ஆனால் Frozen in Love என்பதற்கேற்ப அந்தப் பனிச் சிற்பங்கள் கொள்ளை அழகு. அந்தப் பாடலை நீக்கியிருந்தாலோ, வேறு சூழ்நிலையில் அமைதிருந்தாலோ இன்னும் நன்றாக இருந்திருக்கும். கார்த்திகாவிற்கு பின்னணி குரல் கொடுத்த சின்மயிக்கு ஒரு முழுப்பாடல் கொடுத்திருக்கலாம் 😦

கோட்டா சீனிவாச ராவும், பிரகாஷ் ராஜும் ஹை டெசிபெல்லில் அலறாமல், ஓவர் ஆக்க்ஷன் செய்யாமல் இருந்தது பெரிய ஆறுதல். ஜெகன் அயனில் வந்தது போலின்றி கொஞ்சமாக வந்து போகிறார், கொஞ்சம் வெந்தும் போகிறார். போஸ் வெங்கட் இறுதிக் காட்சியில் போற்றும் படியான நடிப்பு. அதேபோல் சன் மியூசிக்கில் Anchorஆக இருந்த காஜல் (எ) தமிழ்ச்செல்வி (மானாட மயிலாட புகழ் Sandy-யின் மனைவி?) ஆச்சரியப் படுத்திவிட்டார். வசனகர்த்தா சுபாவில் சுரேஷ் ஓரிரு காட்சிகளில் தென்பட்டார். அதேபோல் ஜீவாவின் அப்பா அம்மாவாக வரும் ‘பட்டிமன்ற’ புகழ் ராஜாவும், வனிதா க்ருஷ்ணசந்தரும் ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் வந்து போகின்றனர். பைக்கில் வீலிங் விட்டுக்கொண்டு புகைப்படம் எடுப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். யார் கண்ணுக்கும் தெரியாத விஷயங்கள் ஜீவாவிற்கு மட்டும் தெரிகிறது. மென்பொருள் நிறுவனம் போல் இருக்கும் பத்திரிகை அலுவலகம் எங்கு இருக்கிறது?

முதல்வன் ஆய்த எழுத்து போன்ற படங்களை நினைவு படித்தினாலும், தன் விறுவிறு திரைக்கதையால் ஈர்க்கிறார் கே.வி.ஆனந்த். ஹாட் ட்ரிக் அடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ‘கனா கண்டேன்’ ஹிட் ஆகவில்லை என்றாலும் கூட, மூன்று தரமான படங்களைக் கொடுத்த வகையில் கே.வி.ஆனந்துக்கு வாழ்த்துகள். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

நானும் ஓர் இதழாளர் ஆகாமல் விட்டேனே என்ற வருத்தம் எஞ்சியது!

 
4 Comments

Posted by on April 24, 2011 in Movie Reviews, Movies

 

நான் கிரிக்கெட் பார்த்த கதை

முதலில் உலகக் கோப்பையை வெற்றிகரமாக வென்று நமக்குப் புகழைச் சேர்த்த இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகள். The Real Heroes! சச்சின் என்ற ஒற்றை மனிதன் நம் பெருமையை 21 வருடங்கள் வெற்றிகரமாக தன் தோள்களில் சுமந்திருந்த கம்பீரத்திற்கு ராயல் சல்யூட். இனிமேலும் அவருக்கு பாரத ரத்னா விருதைக் கொடுக்காமல் தாமதிக்கக் கூடாது.

கிரிக்கெட் – இந்தப் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வரும். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் சமயத்தில் யாராவது ஸ்கோர் என்ன என்று கேட்டால் அஃப்ரிடி பந்தை சச்சின் விளாசுவது போல் விளாசத் தோன்றும். கிரிக்கெட் பார்க்காமல் நீயெல்லாம் ஒரு மனுஷனா என்று யாராவது கேட்டால் ஹர்பஜன் ஸ்ரீஷாந்தை அடித்தது போல் அடிக்கத் தோன்றும். சினிமா, இசை, புத்தகங்கள் பற்றிய விவாதங்களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு நாள் முழுதும் உரையாடும் நான், அரசியலைப் பற்றியோ விளையாட்டைப் பற்றியோ குறிப்பாக கிரிக்கெட் பற்றி நண்பர்கள் விவாதித்தால் அங்கிருந்து ‘எஸ்ஸ்’ ஆகியிருப்பேன். BP, Tension அதிகமாகும் அளவுக்கு கிரிக்கெட்டை வெறித்தனமாக பார்ப்பவர்களைக் கண்டால் ஏன் இப்படி கிரிக்கெட் பார்த்து தறிகெட்டுப் போகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட லகான் மற்றும் சென்னை-600028 படங்களை மிகவும் ரசித்தது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

உண்மை இதுதான். நானும் என் தம்பியும் இந்தியா பாகிஸ்தான் போல. ஜென்ம விரோதிகள். அவனுக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காது, எனக்குப் பிடித்தது அவனுக்கு அறவே பிடிக்காது. அதனாலேயே அவனுக்கு உயிராய் இருந்த கிரிக்கெட் எனக்கு துளியும் பிடிக்காமல் ஒரு வெறுப்பு உண்டானது. எனது பத்தாவது வயது வரை நான் கிரிக்கெட் விளையாடிக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் அப்போது ஏழு வயதான என் தம்பி என்னை விட நன்றாக விளையாடியதால் ஒருவிதமான காம்ப்ளெக்ஸ் காரணமாக நான் விளையாடமால், பார்க்கக் கூட பிடிக்காமல் வெறுத்தேன். என் தம்பி இந்தியாவுக்கு ஆதரவு செய்தால் வேண்டுமென்றே நான் எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்பேன். என்னை தேசத்துரோகி என்பான். கிரிக்கெட் பார்த்துதான் நம் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பேன். பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் Cup of Joy என்ற Lesson இருந்தது. ஆங்கிலப் பாடத்தை விரும்பிப் படித்த நான் அதை மட்டும் தவிர்த்து விட்டேன். கிரிக்கெட் போட்டி நடந்தால் எங்கள் வீட்டில் யுத்தமே நடக்கும்.

அதனால் இசையிலும் படங்களிலும் புத்தகங்களிலும், என் தம்பிக்கு சுத்தமாக பிடிக்காத கர்நாடக இசையில் என் கவனத்தை செலுத்தினேன். கிரிக்கெட் பார்க்காமல் கர்நாடிக் பாடல் கேட்டால் நண்பர்கள் என்னை ஒரு ஜந்து போல பார்ப்பார்கள். மற்றவர்களிலிருந்து சற்று வேறுபட்டுத் தெரிவதை விரும்பும் நான் அவ்வாறே தொடர்ந்தேன். இதனால் என் ஒத்த கருத்துடைய நண்பர்கள் கிட்டவில்லை. நான் ஒரு தனித்தீவாகவே என் உலகத்தில் இயங்கிக் கொண்டிருந்தேன். சென்னை மீது நான் கொண்டிருக்கும் மோகம்தான் பல வருடங்கள் கழுத்து என்னை கிரிக்கெட் பார்க்கச் செய்தது. சென்ற வருட ஐ.பி.எல் நடந்து கொண்டிருந்த சமயம், என் சக பணியாளர்களில் உள்ள தெலுங்குக் காரர்கள் டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியைப் பற்றி இழிவாகப் பேசினர். சென்னையையும் இழிவு படுத்திப் பேசி எனக்கு கோபமூட்டினர். அரை இறுதியில் டெக்கன் சார்ஜர்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்தும் என்று சவால் விட்டேன். அதுவரை அந்த அணி எப்படி விளையாடும், அதில் தோனியைத் தவிர வேறு யாரெல்லாம் விளையாடுகின்றனர் என்று கூடத் தெரியாது. அதேபோல் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் மோதியது. சென்னைக்கு நிகரான மோகம் மும்பை மீதும் வைத்திருந்ததால் ஏதோ ஒன்று ஜெயிக்கட்டும் என்றிருந்தேன். என்னுடைய விருப்பம் அந்தந்த ஊர்களின் மீதுதானிருன்ததே தவிர விளையாட்டின் மீதோ வீரர்களின் மீதோ இல்லை. சச்சினை மட்டும் எனக்குப் பிடிக்கும். அவரது சாதனைகளையும் மீறி அவர் கொண்டிருந்த தன்னடக்கம் காரணமாக.

அதேபோல்தான் இம்முறை நடந்த உலகக் கோப்பைப் போட்டியையும் பார்த்தேன். உலகக் கோப்பை தொடங்கிய தினத்தன்று நான் தில்லியில் அலுவலக வேலையாக கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்தேன். உடன் இருந்த அனைவரும் துவக்க விழாவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நான் மட்டும் தனி அறையில் தி.ஜானகிராமன் சிறுகதைகள் வாசித்துக் கொண்டிருந்தேன். என்னை அழைத்த சிலர் எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வமில்லை என்றபோது விந்தையாக பார்த்தனர். அன்றிலிருந்து கிரிக்கெட் பற்றி அதிகம் அப்டேட் செய்யும் ஃபேஸ்புக் நண்பர்களை சிலகாலம் Hide செய்தேன். ட்விட்டரிலும் அதிகம் இயங்கவில்லை. எங்கு பார்த்தாலும் World Cup Fever என்ற வாசகம். எனக்கோ அது Headache 😦 

பெங்களூர் சென்ற பின்பும் நான் மட்டும் தனியாக புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன். புதிதாக நண்பர்களிடம் புரிய வைத்து சலிப்புற்றேன். இந்தியா-பாகிஸ்தான் அரை இறுதிக்கு முன்தினம், நண்பர்கள் சிலர் பாகிஸ்தான் அணி ஜெயித்து இறுதியில் ஸ்ரீலங்கா உலகக் கோப்பையை வெல்லும் என்று கூறிக் கொண்டிருந்தனர். அவர்களது எண்ணம் பொய்யாகும் இந்தியா வெல்லும் என்று சவால் விட்டேன். உனக்கு கிரிக்கெட்டைப் பற்றி என்ன தெரியும் என்று சிலர் ஏளனம் செய்தனர். எனக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் நம் நாட்டுக்கு ஆதரவளிக்கத் தெரியும் என்றேன்.

கிரிக்கெட் விளையாட்டில் எனக்குத் தெரிந்தவை ஃபோர், சிக்ஸர், அவுட், நாட் அவுட், வைட் மட்டுமே. எப்படிப் போட்டால் நோ பால், யார்க்கர், எப்படி LBW அவுட் ஆவார்கள் என்றெல்லாம் தெரியாது. ஸ்லிப், மிட் ஆஃப் போன்ற சொற்களை மட்டுமே கேட்டிருக்கிறேன். இந்திய அணியில் விளையாடும் நபர்களைக் கூட நான் அறிந்திருக்கவில்லை. சச்சின், சேவாக், டோனி, யுவராஜ், ஹர்பஜன், ஸ்ரீஷாந்த் இவர்களை மட்டுமே தெரியும். புதியவர்களான கொஹ்லி, ரைனா, முனாஃப், யூசப் படான், தமிழரான அஷ்வின் போன்றவர்களைப் பார்த்தது கூட இல்லை. நெஹ்ரா மட்டும் “ஓரம் நேரா பந்து போடுறான், நேரா ஓரமா பந்து போடுறான்” என்ற குறுஞ்செய்தி மூலம் பிரபலம் (?!) ஆகியிருந்தார்.

முதன் முறையாக அரை இறுதியின் இரண்டாம் பாதியை அறையில் பார்க்க அமர்ந்த போது விளம்பர இடைவேளையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்க்க வந்தேன் என்று நினைத்து சேனலை மாற்றினர். ஆனால் நான் கிரிக்கெட்டைப் போடச் சொன்னதும் ஆச்சரியம் அடைந்தனர். இந்திய அணி வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் வெளியில் சிலர் வெடிகளை வெடித்து ஆரவாரித்துக் கொண்டிருந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அன்று இந்தியா வென்றது. ஆனால் இறுதியில் கோப்பையை வெல்லாது என்று உறுதியாக சொன்னார்கள். அடுத்தவரின் கருத்துகளை முறியடிப்பது எனக்கு மிகவும் பிடித்தது. நான் தோற்றாலும் அவர்கள் கூற்றைப் பொய்யாக்க மிகவும் முயல்வேன்.

இறுதிப் போட்டியன்று சென்னைக்கு வந்துவிட்டேன். அன்று மதியம் இரண்டரை மணிக்கு ஸ்டார் கிரிக்கெட் எந்த சேனல் எண் என்று தம்பியிடம் விசாரித்தபோது ‘நீயெல்லாம் கிரிக்கெட் பாக்கறியா?’ என்றான். இறுதிப் போட்டியை அவன் நண்பர்களுடன் காணச் சென்றுவிட்டான். பார்த்துக் கொண்டிருக்கும்போது உறங்கிக் கொண்டிருந்த அம்மா வெளியில் சென்ற தம்பி வந்து விட்டானா என்று கேட்டார். இல்லை என்றதும் ‘நீயா மேட்ச் பாக்குற?’ என்று விநோதமாகக் கேட்டார். பெங்களூர் போய் மாறிட்டியா?’ என்றார். நான் முறைத்ததும் என் தம்பிக்கு ஃபோனில் நான் மேட்ச் பார்ப்பதைத் தெரிவித்தார். என் வாழ்நாளில் தேசிய கீதம் முதல் இறுதிவரை பார்த்த ஒரே மேட்ச் இதுவாகத்தான் இருக்கும்.

அம்மாவுக்கும் இரவுப் பணி என்பதால் மாலையிலிருந்து தனியாக பார்த்தேன். அப்போதுதான் நண்பர்களுடன் மேட்ச் பார்ப்பது எவ்வளவு உவப்பான தருணம் என்பதை உணர்ந்தேன். இத்தனை நாட்கள் இப்படி ஒரு பேரானந்தத்தைத் தவற விட்டோமே என்று வருந்தினேன். ஆனால் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பகிர்ந்து கொண்டு அதைக் கொஞ்சம் போக்கிக் கொண்டேன். ட்விட்டர் Website அன்று Down ஆகிவிட்டது. அந்த அளவிற்கு ரசிகர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். சேவாகைத் தொடர்ந்து சச்சின் அவுட் ஆனதும் பலர் நம்பிக்கையை இழந்தனர். சேனலை மாற்றி விடவும் என்றிருந்தனர். ஆனால் அப்போதும் சிலருடன் நானும் நம்பிக்கை இழக்காமல் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்தேன். நண்பர் கார்க்கியின் சில பதிவுகளும் ட்வீட்களும் குறிப்பிடத்தக்கவை. This guy will go places.

இந்தியா வென்றதும் கத்திக் கூச்சலிட வேண்டும் என்று தோன்றியது. சில வீரர்கள் கண்ணீர் விட்டதும் நெகிழ்ந்து விட்டேன். சச்சின் முகத்தில் தோன்றிய பரவசத்தை விவரிக்க முடியாது. ஒரு நாள் பார்த்த எனக்கே இப்படி ஆனது என்றால், கிரிக்கெட்டையே உயிராக நினைப்பவர்கள் எப்படி ஒரு உச்சக்கட்ட உற்சாகத்தை அடைந்திருப்பார்கள் என்று நினைத்ததும் அவர்கள் மீது சிறு பொறாமையும் ஏற்பட்டது. பொதுவாகவே எதிர்மறை எண்ணம் கொண்ட என்னுள் Positive Thinking உண்டானதை உணர்ந்தேன். A cynic is becoming an Optimist என்று நினைத்துக் கொண்டேன். தனித்து வித்தியாசமாக இருக்க வேண்டும் போலியாக என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறேன். “You think you are Unique and extra-ordinary. You are not extra-ordinary, you are abnormal.” என்று ஒரு வாக்குவாதத்தில் என் நண்பன் ஒருவன் சொன்னதை எண்ணி சிரித்துக் கொண்டேன்.

எனது ஃபேஸ்புக் Status Message-களைப் பார்த்து நண்பர்கள் கடுப்பாகி ஃபோனில் அழைத்து திட்டினர். ‘உனக்கு கிரிக்கெட் பத்தி என்ன தெரியும்னு இப்படி எல்லாம் அப்டேட் பண்ணி சீன போடுற’ என்றனர். அதற்காக இனி கிரிக்கெட் ரசிகன் ஆகிவிடுவேன் என்று சொல்லிவிட முடியாது. ஒரு விஷயத்திற்கு எதிர்மறையாக பேசுவதற்கும் அதைப் பற்றிய அடிப்படை அறிவு தேவை என்பதைப் புரிந்து கொண்டேன். அடுத்து நடக்கவிருக்கும் ஐ.பி.எல். போட்டிக்குள் தெரியாத சில வார்த்தைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். சுஜாதாவின் ‘நிலா நிழல்’ என்ற நாவல் கிரிக்கெட் பற்றியது என்று இதுநாள் வரை வாங்காமல் இருந்தேன். இப்போது அதைப் படிக்க எண்ணியுள்ளேன். பாமரனுக்கும் புரியும் வகையில் கிரிக்கெட் பற்றிய சங்கதிகளை வாத்தியார் எழுதியிருக்கிறார் என்று இப்பதிவில் படித்தேன்.

நான் பிறந்த வருடம் இந்தியா முதல் உலகக் கோப்பையை வென்றது (அய்யய்யோ என் வயசு தெரிஞ்சிடுச்சா?!). அதனால் இம்முறை இந்தியா வெற்றிபெற்றால் திருமணம் செய்து கொள்கிறேன் (‘உன் லாஜிக் சகிக்கலை’ என்று யார் சொல்வது :-)) என்று அம்மாவிடம் சொன்னது எனக்கே வினையாகிவிட்டது. நல்ல வேளை இந்தியா வெற்றி பெற்று 24 நாட்களில் திருமணம் முடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை 🙂

P.S: ஒரே ஒரு வருத்தம். 1983-ல் உலகக் கோப்பை வென்ற போது அணியில் இருந்தவர்கள் குழுவாக வந்திருந்து பாராட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சாதாரண போட்டிகளில் முகம் காட்டும் ஸ்ரீகாந்த், அப்போதைய கேப்டன் கபில் தேவ் போன்றவர்களாவது வந்து வாழ்த்தி இருக்கலாம்.

 
4 Comments

Posted by on April 4, 2011 in Chummaa, Cricket