RSS

Monthly Archives: January 2011

சென்னை புத்தகக் காட்சி – 2011

சென்னை புத்தகக் காட்சி முடிந்து பல நாட்கள் ஆன பிறகு இதைப் பதிவிடுகிறேன். Draft-ல் இருந்த பதிவு இது.

சென்னையில் நடந்த 34வது புத்தகக் காட்சி எனக்கு முதல் முறை. சில வருடங்களாக விட்டுப் போயிருந்த வாசிப்புப் பழக்கம் சென்ற ஆண்டு மீண்டும் எட்டிப் பார்த்தது. புத்தகக் காட்சி என்பதைவிட புத்தகத் திருவிழா என்பதே சரி. இப்போது பல புத்தகங்களை புத்தகக் காட்சி அன்றி சில கடைகளிகேயே கிடைக்கின்றன. ஆனால் லட்சக் கனன்க்கான புத்தகங்களை ஓரிடத்தில் ஒருசேர பல வாசகர்கள் மற்றும் சில எழுத்தாளர்களுடன் பார்ப்பது புத்தக விரும்பிகளுக்கு (பார்த்தாலே) பரவசத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. முதல் வார இறுதியிலும் இரண்டாம் சனிக்கிழமையன்றும் சென்று புத்தகங்களை வேட்டையாடிக் கொண்டு வந்தேன். ஏற்கனவே வாங்கிய பல புத்தகங்களை முழுவதும் படிக்காமல் இருந்தபோதும் மேலும் பல புத்தகங்களை வாங்கிக் குவித்தேன். புத்தகங்களின் பட்டியல்:

கணையாழி கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
ஸ்ரீரங்கத்துக் கதைகள் – சுஜாதா
விஞ்ஞானச் சிறுகதைகள் – சுஜாதா
குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா
வண்ணத்துப்பூச்சி வேட்டை – சுஜாதா
அனிதா இளம் மனைவி – சுஜாதா
எதையும் ஒரு முறை – சுஜாதா
வைரங்கள் – சுஜாதா

உலக சினிமா – எஸ். ராமகிருஷ்ணன்
இலைகளை வியக்கும் மரம் – எஸ். ராமகிருஷ்ணன்
நகுலன் வீட்டில் யாரும் இல்லை – எஸ். ராமகிருஷ்ணன்

எழுதும் கலை – ஜெயமோகன்
சங்கச் சித்திரங்கள் – ஜெயமோகன்
ஆயிரம் கால் மண்டபம் – ஜெயமோகன்
இரவு – ஜெயமோகன்
அனல் காற்று – ஜெயமோகன்
விசும்பு – ஜெயமோகன்
உலோகம் – ஜெயமோகன்
மண் – ஜெயமோகன்

சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன்
என்பிலதனை வெயில் காயும் – நாஞ்சில் நாடன்
சதுரங்க குதிரை – நாஞ்சில் நாடன்
மிதவை – நாஞ்சில் நாடன்

ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி
ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் – சுந்தர ராமசாமி

கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள் – கி.ராஜநாராயணன்

நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்

அபிதா – லா.ச.ரா
உயிர் – அசோகமித்திரன்
இரவுக்குப் பின் வருவது மாலை – ஆதவன்
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா
ஒளியிலே தெரிவது – வண்ணதாசன்
சாவி சிறுகதைகள்
சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது – சிவசங்கரி
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – வாஸந்தி
எம் தமிழர் செய்த படம் – தியடோர் பாஸ்கரன்
சந்திரயான் – சரவண கார்த்திகேயன்
உள்ளுக்குள் ஓடும் ஆறு – வெ.இன்சுவை (அம்மாவின் பள்ளித் தோழி)

வைரமுத்து கவிதைத் தொகுப்பு
தினத்தந்தி சுவடுகள்

பாலுமகேந்திரா கதை நேரம் டிவிடி – பாகம் 1 & 2
நாதஸ்வரம் – ஆவணப் படம் டிவிடி – ஜே.டி.ஜெர்ரி

முத்துக்கள் பத்து என்று பிரபல எழுத்தாளர்களின் பத்து சிறுகதைகளை சிறிய புத்தகங்களாக தொகுத்து வழங்கியுள்ளது அம்ருதா பதிப்பகம். அருமையான தொகுப்பு. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், லா.ச.ரா, தி.ஜானகிராமன், ஆதவன், அசோகமித்திரன், சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், வண்ணதாசன் ஆகியோரது சிறுகதைகள் தொகுக்கப் பட்ட புத்தகங்களை வாங்கினேன்.

புத்தகக் காட்சிக்கு செல்லும் முன் பட்டியலிட்ட முதல் மூன்று புத்தகங்கள் கிடைக்கவே இல்லை. எஸ்.ரா.வின் உறுபசி, ஆதவன் சிறுகதைத் தொகுப்பு, இரா.முருகனின் ரெட்டைத் தெரு. அடுத்த புத்தகக் காட்சி வரை இம்மூன்று புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் வாங்கக் கூடாது என்று தீர்மானித்துள்ளேன். இவைகளைப் படிக்கவே இரண்டு வருடங்களாகும் போலிருக்கு 🙂

எல்லோரும் பரிந்துரை செய்த லிச்சி ஜூஸை ஒவ்வொரு நாளும் இரு முரோய் பருகினேன். அருமையாக இருந்தது.

 
6 Comments

Posted by on January 31, 2011 in Books

 

எஸ்.ரா. தந்த இன்ப அதிர்ச்சி

இன்று காலை பாட்டி அவள் விகடன் கொடுத்து ‘என் மனைவி’ என்ற தொடரைப் படிக்கச் சொன்னார். அப்போது நான் அதன்பின் நிகழவிருக்கும் இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. என் ஆதர்ச எழுத்தாளர்களுள் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் தன் மனைவியைப் பற்றி எழுதி இருந்தார். எழுத்தாளனின் மனைவி ஒரே சமயத்தில் தேவதையாகவும் அடிமையாகவும் இரட்டை நிலையில் வாழ்கின்றனர் என்று வழக்கம்போல் அழகாக எழுதி இருந்தார். பின் அலுவலகம் சென்றதும் ஒரு மின்னஞ்சல் அந்த ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. நண்பர் மகேஷ் அவர்கள் அனுப்பி இருந்த மின்னஞ்சலில் எஸ்.ரா.வின் வலைதளத்தில் என் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக வாழ்த்துகளுடன் அனுப்பியிருந்தார். நேற்றே இதைப் பார்த்ததாகவும் என் அலைபேசிக்கு அழைத்து அது அணைக்கப்பட்டிருந்ததாகவும் ஜிடாக்கில் தெரிவித்தார். நான் சற்று குழப்பமடைந்தேன். நம்மைக் கலாய்க்கிறாரா என்று கூட யோசித்தேன். பின் சாருவின் தளத்தில் வந்திருக்குமோ என்றும் யோசித்தேன். ஏனென்றால் சென்ற வாரம் சாருவுக்குதான் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். தான் எப்போதும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் மகாநதி மற்றும் குருதிப் புனல் படங்களின் விமர்சனங்களைப் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். இன்னும் பதிவிடவில்லை.

பின் எஸ்.ரா. தளத்தைப் பார்வை இட்டேன். நீயா நானா நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்ட நூறு சிறந்த தமிழ் நூல்களின் பட்டியலை அவரது பழைய பதிவிலிருந்து எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அப்படியலை வாசகர்களின் வேண்டுகோள்களுக்கிணங்க மீள் பதிவு செய்திருந்தார். அதில் இருக்குமோ என்ற ஐயத்துடன் பார்த்தேன். இல்லை. பின் ‘மேடைப்பேச்சு’ என்ற தலைப்பில் எழுதி இருந்த பதிவைப் படித்தேன். அதன் இறுதியில் “இலக்கியக்கூட்டங்களில் எனது உரையைக் கேட்டவர்களுக்கும், அதைக் குறித்து சிறப்பாக பதிவிட்ட சுரேஷ் கண்ணன், பத்ரி சேஷாத்ரி , கார்த்திக் அருள். தமிழ் ஸ்டுடியோ அருண், உயிரோசை உள்ளிட்ட நண்பர்களுக்கும். தினமணி, தினமலர்,. தினகரன், உள்ளிட்ட நாளிதழ்களுக்கும். என்னைப் பேச அழைத்தவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முடித்திருந்தார்.

இதைப் படித்ததும் கொஞ்ச நேரம் வரை கால்கள் தரையில் இல்லை. இதை என் ஆதர்ச பதிவரான சுரேஷ் கண்ணனிடம் மின்னஞ்சலில் தெரிவித்தேன். ஏற்கனவே ஒருமுறை ஜெயமோகன் பதிவுலகில் திரைவிமர்சனங்கள் குறித்த தனது கட்டுரையில் சுரேஷ் கண்ணனின் விமர்சனங்களைப் பாராட்டி இருந்தார். அதையும் முதலில் நான்தான் அவரிடம் ட்விட்டரில் (அப்போது இருந்தார்) தெரிவித்தேன். அவரது எழுத்துகளை மிகவும் விரும்பி வாசிப்பவன். அவரது விமர்சனங்கள் எஸ்.ராவின் விமர்சனங்களைப் போல் இருப்பவை. கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி மற்றும் உயிரோசை சிற்றிதழ் உரிமையாளர் போன்றவர்களுடன் என் பெயர் வந்ததே எனக்கு பெருமையாக இருந்தது.

எஸ்.ரா மற்ற பதிவர்களின் பதிவுகளைப் பார்ப்பார் என்றுகூட அறிந்திருக்கவில்லை. ஆனால் எங்கள் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதுவார் என்று சற்றும் எதிபார்க்கவில்லை. இப்படி ஓர் அங்கீகாரம் எனக்கு மிகவும் அதிகம் என்று சொல்வதுகூட குறைவுதான். Milliblog-ல் என் பெயர் வந்ததற்கே பீற்றிக் கொண்டிருந்தேன், இப்போது கேட்கவே வேண்டாம் 🙂 சில நாட்களாக ‘என் பையனும் இலக்கிய விழாவுக்கும் புத்தகத் திருவிழாவுக்கும் போறான்!’ என்றிருந்த அம்மா Very good சொன்னார். இப்போது இந்த ச்சும்மாவை கொஞ்சம் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஓர்  உத்வேகத்தை அளித்துள்ளது. நண்பர் மகேஷிற்கு மீண்டும் நன்றிகள் பல. பெங்களூருவில் சந்திக்கையில் நிச்சயம் ட்ரீட் 🙂

பிற்சேர்க்கை: அவள் விகடனில் அவர் “கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள் கூட நினைவிருக்கிறது ஆனால் நண்பர்களின் பிறந்த நாட்கள் நினைவில் இருப்பதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்ததும் அந்த நூறு பெயர்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப நினைத்திருந்தேன்.

 
2 Comments

Posted by on January 20, 2011 in Books, Milestones, S.Ramakrishnan, Writers

 

ஆடுகளம் – என் பார்வையில்

பொதுவாக எனக்கு Action படங்கள் பிடிக்காது- நல்ல கதையம்சம் இருந்தாலொழிய. நாயகன், தளபதி போன்ற படங்கள் கூட சிறு வயதில் பிடிக்காமல் சற்று பக்குவமடைந்ததும் மிகவும் பிடித்தன. பார்த்ததும் பிடித்த படங்கள் தேவர் மகன், புதுப்பேட்டை, பொல்லாதவன். பொல்லாதவன் படத்தின் திரைக்கதையை மிகவும் ரசித்தேன். அதே கூட்டணியின் படம் என்பதால் ஆடுகளம் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பிருந்தது. மேலும் ஜி.வி.யின் இசையில் ‘யாத்தே யாத்தே’ மற்றும் ‘அய்யய்யோ’ பாடல்கள் மனதைக் கொள்ளை கொண்டு  எதிர்பார்ப்பை அதிகரித்தன. இப்போதெல்லாம் ஒரு சில படங்களைத் தவிர்த்து மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆனால் ஆடுகளம் என்னை ஏமாற்றாமல் முழுத் திருப்தியளித்தது.  மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆடுகளத்தின் கதைக்களமே தமிழ் சினிமாவுக்குப் புதிது. சேவல்சண்டை பல நாடுகளில் நடத்தப் பட்டாலும் அதன் மூலம் தமிழர்களுடையது (துவக்கத்தில் ஒரு Montage with narration கூட சொல்லப்படுகின்றது). இன்றும் கிராமங்களில் ஜல்லிக்கட்டுக்கு இணையாக திருவிழாக்களில் பொழுதுபோக்காகவும், சூதாட்டமாகவும், கௌரவத்திற்காகவும் நடத்தப்படும் சேவல் சண்டையை படத்தின் களமாக எடுத்திருக்கிறார். கிழக்குச் சீமையிலே படத்தில் சேவல் சண்டையை பாரதிராஜா ஒரு காட்சியில் பதிவு செய்திருந்தாலும் ஆடுகளத்தில் விஸ்தாரமாக கையாளப் பட்டிருக்கிறது. நாயகன் அறிமுகப் பாடல், பன்ச் டையலாக், குத்துப் பாட்டு, திணிக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் எதுவுமின்றி எவ்வித காம்ப்ரமைசும் செய்துகொள்ளாமல் இப்படியொரு யதார்த்தமான படத்தைத் தந்ததற்கு இயக்குனர் வெற்றிமாறனுக்கு முதலில் ஒரு பூங்கொத்து (பூந்தோட்டத்தையே தரலாம்). இரண்டாவது இயல்பாக நடித்திருக்கும் நடிகர்களுக்கு.
‘கருப்பு’ கதப்பாத்திரத்துக்கு தனுஷ் கனக்கச்சிதம்- Tailor-made Character! மதுரைத்தமிழ் பேசி (வசுவுகள் அனைத்தும் பீப் பீப் பீப்), அம்மாவைக் கூட ‘கொண்டே…போடுவேன்’ என்று முரட்டு சுபாவம் கொண்ட, கொண்டைகள் சிலுப்பும் சண்டைச் சேவல் போல் கோபம்கொண்டு, உரிச்ச கோழி டாப்ஸீயிடம் ‘ஐ யாம் லவ் யூ” என்று குழைந்து முதல் பாதி முழுதும் தனுஷின் அமர்க்களமான அதகளம். நிச்சயம் அவரது சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்! தனுஷ் தன் அப்பாவைவிட மதிக்கும் ‘பேட்டைக்காரன்’ ஜெயபாலனுக்கும் (யார் இவர்? அசத்தியிருக்கிறார் 🙂 ராதாரவி குரல் கொடுத்திருக்கிறார்!) உள்ளூர் காவல் அதிகாரி ரத்தினசாமிக்கும் (‘பாலுமகேந்திரா கதை நேரம்’ புகழ் நரேன். இனி வெள்ளித் திரையிலும் அதிகம் வலம் வருவார்!) சேவல் சண்டை எதிராளிகள். ஜெயபாலானை வீழ்த்தி ‘பேட்டைக்காரன்’ பட்டத்தை வெல்வதே நரேனின் லட்சியம். ஜெயபாலனின் வலது கையான துரையும் (விக் வைத்த கிஷோர்! வழக்கம்போல் கலக்கியிருக்கிறார்!) இளம் சீடனான கருப்பும் அவருக்கு உறுதுணையாக இருந்து எப்போதும் ஜெயித்து வருகின்றனர். இடையில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஐரீனுடன் கண்டதும் காதல் கொள்கிறார்.
படத்தின் முக்கிய இரண்டு வில்லன்கள் பொறாமை மற்றும் ஈகோ. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் எப்படியெல்லாம் மனிதர்களை மாற்றுகின்றன என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அவருக்கு பக்கபலமாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அதிலும் அதிகமாக வரும் இரவுக் காட்சிகளை இயல்பான Lighting-குடன் நடிகர்களின் உணர்ச்சிகளை அபாரமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். சேவல் சண்டை CG வேலை என்பது ஓரிரு காட்சிகளுள் மட்டுமே தெரிகிறது. யதார்த்தமான வசனங்கள் மேலும் அழகூட்டுகின்றன. தனுஷ் தன் அம்மாவிடமும் டாப்ஸீயுடனும் பேசும் வசனங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஜி.வி.பிரகாஷின் இசை ‘யாத்தே யாத்தே’ என்று காதலில் துள்ள வைத்து, ‘ஒத்த சொல்லால’ என்று குத்தாட்டம் போட வைத்து (லுங்கியை ஏத்திக்கட்டி தனுஷ் ஆடும் ஆட்டம் சூப்பர்! ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்), ‘ஏன் வெண்ணிலவே’ என்று காதலில் கரைந்துருகி, ‘அய்யய்யோ’ என்று செல்லமாக சிணுங்க வைக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு விஷயம் பாடல்களைப் படமாக்கிய விதம். எந்த ஒரு பாடலும் திணிக்கப் படாமல், நாயகன் நாயகி பாடுவது போன்றோ, கனவுப் பாடல்களோ இல்லாமல் கதையோடு காட்சிகளாக நகர்வது மிக அழகாய் காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. மதுரை என்றால் சண்டை இல்லாமலா. இதிலும் இருக்கின்றன. ஆனால்வழக்கமான மதுரைப் படங்களில் வரும் அரிவாள் கலாச்சாரமும் வன்முறையும் இன்றி கிராமத்துக் காரர்களுக்கே உரித்தான இயல்பான கோபங்களால் வரும் இயல்பான யதார்த்தமான சண்டைகள் கொஞ்சம் ஆறுதல் அளிக்கின்றன.
லொகேஷன்களும் கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருக்கின்றன. அதுவும் மலைப்பகுதியில் இருக்கும் பேட்டைக்காரனின் வீடு இருக்கும் பகுதி கொள்ளை அழகு. கதையின் அனைத்து பாத்திரங்களும், மனதில் பதிகின்றன. தனுஷின் அம்மா, நண்பன், பேட்டைக்காரனின் மனைவி, ரத்தினசாமியின் அம்மா, சேவல் தோற்கும் தருவாயில் அழும் சிறுவன், என்று அனைவரும் தம் பங்கைத் திறம்படச் செய்துள்ளனர். ஆனால் ஐரீன் அப்பாவின் நண்பராக வரும் அருமையான நடிகர் ஜெயபிரகாஷை (பசங்க, நான் மகான் அல்ல, வம்சம்) அநியாயமாக வீணடித்துவிட்டார் இயக்குனர். அவருக்கு ஓர் அழுத்தமான பாத்திரம் இருக்குமென நம்பி ஏமாற்றம் அடைந்தேன். அதேபோல் நாயகியின் வீட்டிலுள்ளோர் அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரரான கூலிங்கிளாஸ் இளைஞன் அளவுக்கு பதியவில்லை.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக, ஜனரஞ்சகமாக இருப்பதால், அந்த அளவு வேகமாக நகராத கொஞ்சம் வித்தியாசமான (சிறுகதை போன்ற) முடிவுடன் இருக்கும் இரண்டாம் பாதி (‘ஒரு படத்தை பாதிப்பாதியாக கூறு போடுவது எனக்குப் பிடிக்காது’ என்று சொல்லிக்கொண்டால்தான் விமர்சகன் என்று மதிப்பார்கள் 🙂 ) பலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் மாற்றுக்கருத்து கொண்ட, சினிமாவை பொழுதுபோக்காக அன்றி உண்மையாக நேசிப்பவர்களுக்கு, தமிழ் சினிமா மேலும் முன்னேற நினைப்பவர்களுக்கு இதன் முடிவு பிடிக்கும் (என்று நினைக்கிறேன்). உலகம் என்னும் ஆடுகளத்தில் வாழ்க்கை என்னும் விளையாட்டு மனிதர்களால் எப்படி விளையாடப்படுகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடனும் வித்தியாசமான முடிவுடனும் அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் வெற்றிமாறன். வெற்றிமாறனுக்கு நிச்சயம் வெற்றிதான். குருநாதர் பெயரை மீண்டும் காப்பாற்றியுள்ளார். Hat-trick அடிக்க வாழ்த்துகிறேன்.
சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்தி.ஜானகிராமனின் பாயாசம் போன்ற சிறுகதைகளை  நினைவு படுத்தியது (தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையை படம் பார்க்கும் முன் பேருந்தில் செல்லும்போது படித்தது தற்செயலாக நடந்தது என்று ஏனோ மனம் நம்ப மறுக்கிறது!)
மைனஸ் : படத்தில் சில குறைகள் இருந்தாலும் பல நிறைகள் இருப்பதால் மன்னிக்கலாம் (சுஹாசினி Effect?!). மிகப் பெரிய மைனஸ் பாயின்ட் சன் பிக்சர்ஸ். கலாநிதி மாறனின் அதிகப்பிரசங்கித்தனமான மார்க்கெட்டிங் உத்தி இல்லாமலே இப்படம் வெற்றி பெறும். ஆனால் அளவுக்குமீறிய அமுதம் விஷமாவது போல் அது பலரை எரிச்சலூட்டிவிடும் அபாயம் உள்ளது (என் ஆதர்ச பதிவர் சுரேஷ் கண்ணன் மற்றும் சிலர் எந்திரன் பார்க்காதது போல்!)
டிஸ்கி 1 : சங்கம் திரையரங்கில் ரசிகர்களின் கூச்சல்களுக்கிடையில் பார்த்ததால் முதல் பாதியில் பல வசனங்கள் புரியவில்லை. அதிலும் Hardcore Madurai Slang! சாந்தம்  எலைட்டில் இன்னொரு முறை பார்க்க வேண்டும்.
டிஸ்கி 2 : படம் முடிந்ததும் போடப்படும் End Credits-ல் Filmography என்று பல திரைப்படங்களின் பெயர்கள் வந்தன. ஆனால் முழுவதும் பார்க்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதையும் இரண்டாம்
முறை பார்க்க வேண்டும்!
ஈகோ, பொறாமை, வன்மம், காழ்ப்புணர்வு போன்ற தீய எண்ணங்களை போகித்தீயில் எரித்து, நிம்மதியும் இன்பங்களும் கலந்த இனிமையான பொங்கல் தங்கள் வாழ்வில் என்றும் பொங்கிட வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் 🙂
 
7 Comments

Posted by on January 15, 2011 in Movie Reviews, Movies

 

வாழ்த்துகள் CSK

பதிவர் மற்றும் நண்பர் சரவண கார்த்திகேயன் (Writer CSK) எழுதிய முதல் புத்தகமான ‘சந்திரயான்‘ தமிழக அரசின் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இவ்விருது பல்வேறு பிரிவுகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு வழங்கப்படுகிறது. 2009-ல் அறிவியல் பிரிவில் சிறந்த புத்தகமாக சந்திரயான் CSKவிற்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

சந்திரயானை விட சரவண கார்த்திகேயனின் இரண்டாம் புத்தகமான பரத்தை கூற்று கவிதைத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. நானும் அதைத்தான் முதலில் படித்தேன். சனியன்றுதான் இப்புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இன்று இந்த நற்செய்தியைக் கேட்டதும் எல்லோரிடமும் பெருமையாக பகிர்ந்து கொண்டேன். நாஞ்சில் நாடனுக்கு சாஹித்ய அகாடெமி விருது அறிவித்ததில் அவர் நண்பர்கள் அடைந்த மகிழ்ச்சியை நானும் அடைந்தேன். அவர் மேலும் பல புத்தகங்களை எழுதி பல விருதுகளைப் பெற மனமார வாழ்த்துகிறேன்.

பதிவர்கள் எழுதும் புத்தகத்தில் தரம் இல்லை என்று ஒரு கட்டுரையைப் பிரசுத்திருந்த அதே தினமணியில் இச்செய்தியும் வந்திருப்பது இனிய முரண். சில பிரபல எழுத்தாளர்களை விடவும் நன்றாக எழுதுகின்ற பதிவர்களுக்கு CSKவின் இவ்விருது ஊட்டமும் நம்பிக்கையும் அளிக்கும். தனது எண்ணத்தை தினமணியும் மாற்றிக் கொள்ளுமென நம்புவோம்.

தினமணி கட்டுரை : http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_8292.html

விருது பற்றிய செய்தி : http://thoughtsintamil.blogspot.com/2011/01/2009.html

 
Leave a comment

Posted by on January 11, 2011 in Awards, Bloggers, Books

 

Happy B’day A.R.Rahman

விவரம் தெரிந்து நான் முதலில் விரும்பிக் கேட்ட இசையமைப்பாளர் ரஹ்மான். பள்ளி, கல்லூரி நாட்களில்  இவரது பரம விசிறியாக அல்ல ஏ.சி.யாக இருந்தேன் (மொக்கை போடாதே என்று சொல்வது கேட்கிறது!) அதன் பின் இளையராஜா பக்தன் ஆனது வேறு விஷயம். எனக்கு 9 வயது இருக்கும்போது ரோஜா படம் வெளியானது. அதற்கு முன் பாடல்களை ரசித்துக் கேட்டதாக நினைவில்லை. ஆனால் ரோஜா பாடல்கள்  என்னுள் ஒரு தாக்கத்தை, ரசனையை, இசையார்வத்தை ஏற்படுத்தின. அப்போது டேப் ரிக்கார்டரில் காசெட்டுகளில் பாடல்களைக் கேட்போம். ரோஜா பாடல்களை Rewind, Forward, Pause, Play செய்து அதன் வரிகளை எழுதி மனனம் செய்திருக்கிறேன். சின்ன சின்ன ஆசை, புது வெள்ளை மழை, காதல் ரோஜாவே என்று மீண்டும் மீண்டும் ஒலிக்கப்பட்டு அந்த காசெட்டே தேய்ந்து விட்டது.

பிறகு ஜென்டில்மேன், காதலன், புதிய முகம், திருடா திருடா, மே மாதம், டூயட், பம்பாய், மின்சார கனவு, ரட்சகன், இந்தியன் என்று எந்த கேசட் வந்தாலும் வாங்கி விடுவேன் அப்போது கம்பெனி காசெட் என்று ஒரிஜினல் காசெட்டுகள் கிடைக்கும். ஆனால் அப்பா ஒரே ஒரு படத்திற்கு 50 ரூபாய் போட்டு வாங்கித் தரமாட்டார். பதிவு செய்யப்பட்ட காசெட்டில் இரண்டு படப் பாடல்கள் 35 ரூபாய்க்குக் கிடைத்ததால் அதையே வாங்கித் தருவார். பொதுவாக தமிழ்ப்படப் பாடல்கள் நான்கிலிருந்து ஐந்து நிமிடங்களில் முடிந்துவிடும். அதனால் ஒரு காசெட்டின் பக்கத்தில் 30 நிமிடங்களுள் படத்திற்கு ஆறு பாடல் வீதம் ஒரு படப் பாடல் பொருந்திவிடும். ஆனால் ரஹ்மான் பாடல்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஒலிக்கக் கூடியவையாக இருந்ததால் TDK-60 காசெட்டில் பதிவு செய்யப் பட்டால் பாடல்களில் ஒரு பாடல் பாதிதான் இருக்கும். அதனால் TDK-90 காசெட்டுகளை வாங்கி நானே பாடல்களைத் தேர்வு செய்து பதிவு செய்யக் கொடுப்பேன்.முதன்முதலாக ரஹ்மானின் ஒரிஜினல் கம்பெனி காசெட் வாங்கியது அலைபாயுதே இரண்டாவது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இவ்விரண்டையும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி வாங்கி கேட்டுக் கொண்டே இருந்தேன். எதிர்பார்த்தது போலவே மதிப்பெண்களும் குறைவாக பெற்றேன்.

இவ்வாறாக கல்லூரிக் காலம் வரை அவரது தீவிர ரசிகனாக இருந்தேன். இப்போதும் இருக்கிறேன் ஆனால் இளையராஜாவுக்கு அடுத்த நிலையில். காரணம் 2000க்கு முன்பு போல் இப்போது உள்ள ரஹ்மானின் பாடல்கள் இல்லை என்பதில் மிகுந்த வருத்தம். முக்கியமாக தமிழில் அவரது கவனம் இல்லை. பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் மிகுந்த கவனம் செலுத்துவதால் தமிழ்ப்படங்களைக் கண்டு கொள்ளாததுபோல் தெரிகிறது. ஆனால் அவரது இரட்டை ஆஸ்கார் இந்தியாவிற்கே பெருமையான ஒரு விஷயம். ஆஸ்கார் அரங்கில் தமிழில் பேசி தமிழர்களைத் தலை நிமிரச் செய்தார். இந்த வருடமும் ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டு இம்முறையும் அவ்விருதைத் தட்டிச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

Picture Courtesy : http://blog.pkp.in/2008/09/r-rahman-childhood-pictures.html

For more Rare Pictures of A.R.Rahman : http://devanss.blogspot.com/2010/05/blog-post.html

 
 

எஸ்.ராமகிருஷ்ணன் நூல் வெளியீட்டு விழா

புத்தாண்டு தினத்தை சற்று வித்தியாசமாக கொண்டாட நினைத்திருந்த என் எண்ணத்தைப் பூர்த்தி செய்தவர் எஸ். ராமகிருஷ்ணன். அவரது நூல் வெளியீட்டு விழா பற்றி அவர் தளத்தில் பார்த்ததுமே போக வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். மிஷ்கினால் சர்ச்சைகள் கொண்ட சாரு நிவேதிதாவின் நூல் வெளியீட்டு விழா போலில்லாமல் நிறைவாகவே இருந்தது எஸ்.ராவின் புதிய நாவலான ‘துயில்’ வெளியீட்டு விழா.

சரியாக 6.30க்கு தேவநேய பாவாணர் நூலகத்தை அடைந்தபோது அவ்வளவு கூட்டமாக இல்லை. பதிவர்களில் நர்சிம், அதிஷா, யுவகிருஷ்ணா மற்றும் விஜய மகேந்திரன் ஆகியோரை அடையாளம் கண்டுகொண்டேன். பதிவர் சுரேஷ் கண்ணனை எதிர்பார்த்தேன். தென்படவில்லை. வந்தாரா என்று தெரியவில்லை. சில நிமிடங்களில் அந்தச் சிறிய அரங்கு நிரம்பியிருந்தது. சாருவுக்கு வந்தது போல் கூட்டமில்லை என்றாலும் வந்திருந்தவர் அனைவரும் எஸ்.ராவையும் அவர் எழுத்துகளையும் உண்மையாக நேசிப்பவர்களாகவே இருந்தனர். ஜால்ரா கோஷ்டிகளும், விசிலடிப்பவர்களும் இல்லாமல் நிம்மதியாக இருந்தது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இந்திரா பார்த்தசாரதி அழைக்கப் பட்டிருந்தார். மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து பேராசிரியர் சித்ரா நாவலைப் பற்றிய அறிமுக உரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து இயக்குனர்கள் ஜே.டி, ஜெர்ரி, முரளி அப்பாஸ், திரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவுக்காக முகஸ்துதி செய்யாமல் உளமார வாழ்தியதுபோல் இருந்தது. இயக்குனர் முரளி, எஸ்.ராவுக்கு சாஹித்ய அகடெமி விருதும், அவர் எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நோபல் பரிசும் கிடைக்க வேண்டும் என்று கொஞ்சம் ஓவராவே பேசினார். பின் சிறப்புரை ஆற்ற வந்த இ.பா, சாஹித்ய அகாதேமி எல்லா ஒரு விருதே இல்லை. மக்கள் ஆதரவை விட சிறந்த ஒரு பரிசு இல்லை என்றார். நாவலைப் பற்றி தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து பேசினார். புத்தகத்தைப் படிக்காமல் அதைப் பற்றி பேசுவதில்லை என்று குறிப்பிட்டார். அதனால் ஒருவாரம் முன் கொடுக்கப் பட்ட புத்தகத்தை நான்கு நாட்களில் படித்துவிட்டு வந்ததாக சொன்னார். இதை மிஷ்கின் போன்றவர்கள் கற்றுக் கொள்வது நல்லது. இ.பா வின் ‘குருதிப்புனல்’ நாவலைப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
அவரைத் தொடர்ந்து ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் பேச வந்தார். ஈரோடு என்றதும் உற்சாகமானேன். ஏனோ தெரியவில்லை அரசியல் மேடையில் பேசுவது போல் ஆவேசமாக பேசினார். எஸ்.ரா புராணம் பாடி அவரை நெளிய வைத்து விட்டார். கேப்டனுக்குப் போட்டியாக  புள்ளி விபரங்களைக் கூறினார். அதில் உருப்படியான இரண்டு இது எஸ்.ராவின் 50-வது நூல். உயிர்மை வெளியிடும் அவரது 27-வது நூல். அரங்கில் சிலர் அவரது நீ…ண்ட பேச்சைப் பொறுக்க முடியாமல் கைதட்டினர். அப்படியாவது அவர் உரையை முடித்துக் கொள்வாரென்று. ஆனால் அவரோ அதைப் பாராட்டு என்று தவறாக புரிந்துகொண்டு பேசிக்கொண்டே இருந்தார். ஒருவழியாக அவர் முடித்தபோது அப்பாடா என்று பலத்த கைதட்டல்கள்.
அதன்பின் ஒரு நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வாக வாசகருக்கும் எழுத்தாளருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார் எஸ்.ரா. இலக்கியம் சார்ந்த சிலருடன் நாவலைப் பற்றி மட்டுமின்றி பொதுவான இலக்கியச் சூழலைப் பற்றிய ஓர் உரையாடல். மனநல மருத்துவர் ருத்ரன், எழுத்தாளர்கள்  யுவன் சந்திரசேகரன் மற்றும் முருகேச பாண்டியனுடன் எஸ்.ரா உரையாடினார். மனுஷ்ய புத்திரன் ஒருங்கிணைத்தார். இதுபோல் வேறெந்த தமிழ்  நூல் வெளியீட்டு விழாவிலும் நடந்ததில்லை என்று குறிப்பிட்டார். மற்ற நூல் வெளியீட்டு விழாக்களும் இதுபோல் அனாவசிய அரசியல்களையும் ஜால்றாக்களையும் தவிர்த்து இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.
நாவல்களின் எண்ணிக்கை முன்பைவிட தற்போது மிகவும் குறைவாக உள்ளதைப் பற்றி ஆதங்கப் பட்டனர். வழக்கமாக நன்றாக பேசும் ருத்ரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சரியாக பேசவில்லை. ஆனால் பெயரளவில் மட்டுமே நான் கேள்விப் பட்டிருந்த யுவன் சந்திரசேகர் நன்றாகவே பேசினார். ஹாரி போட்டருக்கு இருக்கும் தமிழ் வாசகர்கள் தமிழ் நாவல்களுக்கு இல்லை என்றனர். ஆனால் இளைஞரளிடம் வாசிப்பு ஆர்வமும், எழுதும் ஆர்வமும் நல்ல ரசனையும் இருப்பதாக கூறியவர், நாவல் எழுதுவது மிகவும் எளிது என்று எல்லோரையும் முயற்சிக்கச் சொன்னார். நல்ல எழுத்தாளனைப் பற்றி அவரது எழுத்துகளும் வாசகர்களும் தான் பேச வேண்டும். எஸ்.ரா. தன்னைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளவில்லை. சாருவைப் போலன்றி தன்னடக்கத்தின் மறு உருவமாக தெரிந்தார்
துயில் நாவல் நோயைப் பற்றி, மருத்துவம் பற்றி, நம்பிக்கை பற்றியது என்று குறிப்பிட்டார். அதனால்தான் தன் நாவலை ‘மருத்துவத்தை மக்கள் சேவையாக நினைக்கும் மருத்துவர்களுக்கு’ அர்பணித்துள்ளார். செவ்வியல் தரத்தோடு இருப்பதாக அனைவரும் கூறினர். 350 ரூபாய் நாவலை 300 ரூபாய்க்கு வாங்கி அதில் எஸ்.ராவின் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டேன். சுஜாதாவிடம் கிடைக்காத அந்த வாய்ப்பு எஸ்.ராவிடம் கிடைத்தது. மனம் வருடும் எழுத்துகளை எழுதும் அவர் கைகளையும் தொட்டுப் பார்த்துக் கொண்டேன் 🙂 நிகழ்ச்சிக்கு எஸ்.ராவின் ரசிகரான என் மாமாவையும் அழைத்துச் சென்றிருந்தேன். புத்தாண்டு தினம் வித்தியாசமாக இருந்தது என்று நன்றி தெரிவித்தார்.
 
2 Comments

Posted by on January 2, 2011 in Books, Functions

 

புதிய ஆண்டின் இனிய துவக்கம்

எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவலான “துயில்”  நூல் வெளியீடு விழாவிற்குச் சென்றிருந்தேன். வழக்கம்போலன்றி அமைதியாகவும் மன நிறைவோடும் இருந்தது இந்தப்புத்தாண்டு தினம். புத்தாண்டை இனிதாக துவங்கி வைத்த எஸ்.ரா விற்கு மிக்க நன்றி. விழா சிறப்பாக இருந்தது. விழாவைப் பற்றி அடுத்த பதிவில்.


 
Leave a comment

Posted by on January 1, 2011 in Books, Celebrations, Functions