RSS

Category Archives: Celebrations

ஷுபோ மஹாளையா!

மஹாளய அமாவாசை – மிகவும் புனிதமாகக் கருதப்படும் இந்நாள் நம் ஊரில் பித்ருக்களை நினைத்து வணங்குகிறோம். வங்காளத்தில் இன்றுதான் துர்கா பூஜா பந்தல்களில் வைக்கப்படும் துர்கை சிலைகளுக்குக் கண் வரைவார்கள். துர்க்கை சிலை செய்வதற்கான முதல்பிடி மண்ணாக ஒரு விலைமகளின் காலடி மண்ணைத்தான் பயன்படுத்துவார்கள். இதையொட்டி நரசய்யா எழுதிய ஒரு சிறுகதையை விகடனில் படித்த நினைவு. பெயர் நினைவில்லை.

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில்தான் சேர்வேன் என்று அடம்பிடித்து அம்மாவின் இமோஷனல் ப்ளாக்மெயிலால் தோல்வியடைந்து துளியும் ஆர்வமில்லாத பொறியியல் படிப்பில் பொறியில் சிக்கிய எலிபோல் கல்லூரியில் சிக்கிய நாள். 27.9.2000, an unforgettable day in my life. 11 வருடங்கள் போனதே தெரியவில்லை.

What a coincidence! அன்றும் மஹாளய அமாவாசை 🙂

ஷுபோ மஹாளையா !

Advertisements
 
3 Comments

Posted by on September 27, 2011 in Celebrations, Functions

 

2nd Blogoversary

இந்த வலைப்பூவைத் துவங்கி இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. முதலாம் ஆண்டின் நிறைவின் போது எழுதியதுபோல் இரண்டாம் ஆண்டு குறைவான பதிவுகள் எழுதியிருந்தாலும் நிறைவாக எழுதி இருக்கிறேன் என்று மகிழ்கிறேன். படித்ததுப் பார்த்து விட்டு நன்றாக இல்லை என்று சொல்வது எவ்வளவு சுலபம் என்று எழுதும்போதுதான் தெரிகிறது. கடந்த வருடத்தில் இருந்து தமிழில் எழுதத் தொடங்கி இருந்தாலும் டிசம்பரில் இருந்துதான் என் எழுத்து கொஞ்சம் தேறி இருப்பதாக நினைக்கிறேன். என் வலைப்பூவை வாசிக்கும் வெகு சில வாசகர்களுக்கு இந்த மாற்றங்கள் தெரிந்திருக்கும். அடுத்த ஆண்டு மேலும் சில நல்ல பதிவுகளுடன் என் எழுத்தில் மேலும் மேன்மை கூடும் என்ற நம்பிக்கையோடு இந்தத் தளத்தை வாசிப்பவர்களுக்கும், மறுமொழி இடுபவர்களுக்கும் இடாதவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

 
Leave a comment

Posted by on August 7, 2011 in Celebrations, Milestones

 

விண்ணைத்தாண்டி வருவாயா – ஓராண்டு நிறைவு

எத்தனை படங்கள் பார்த்து ரசித்தாலும் சில படங்கள் எப்போதும் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமாக பிரத்யேகமாக இருக்கும். நம்மை பாதித்த படங்கள், பதின்ம வயதில் பார்த்த படங்கள், காதலன்/காதலியுடன் பார்த்த படங்கள் என்று நிறையவே இருக்கின்றன. அப்படி என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படங்கள் பல இருந்தாலும் நான் அப்படங்களைப் பார்த்த தேதிகள் முதற்கொண்டு அன்று நிகழ்ந்த சம்பவங்கள் வரை மீண்டும் மீண்டும் நினைத்து அசைபோடும் படங்கள் மிகச்சில. மௌன ராகம், அழகன், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற என் பிரத்யேக படங்களை நான் இதில் சேர்க்கவில்லை. என் பதின்ம வயதில் நான் திரையரங்கில் பார்த்த இரண்டு Romance Genre படங்கள் – காதலுக்கு மரியாதை, அலைபாயுதே. நடிகை ஷாலினி மீது தீவிரமான காதல் கொண்டிருந்தேன். (பிரியாத வரம் வேண்டும் படத்தைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்). அப்போதெல்லாம் எனக்கொரு காதலி கிடைத்ததும் இவ்விரண்டு படங்களையும் அவளுடன் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதுவரை அது நிகழவில்லை. இனிமேல் அந்தக் கொடுப்பினை நமக்கு இல்லை என்றிருந்தபோது வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. என்னை மிகவும் பாதித்தது. அதைப் பார்த்ததும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்தி காதலிக்க வேண்டும் போலிருந்தது.

சென்ற ஆண்டு இதே நாளில் வெளியானது. என் நண்பர்களுடன் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. முதலில் கௌதம் மேனன். மணிரத்னதிற்குப் பிறகு நகரத்துக் காதல் காட்சிகளைக் கவிதையாகக் காட்டியவர். Cute வசனங்களால் ஈர்த்தார். காக்க காக்க action படம் என்பதைவிட ஒரு Romance படமாகவே நான் பார்ப்பேன். திரையரங்கில் ஒரு முறை மட்டுமே அப்படத்தை முழுதாக பார்த்திருக்கிறேன். பின்பு டி.வி.டி வாங்கியதும் பலமுறை பார்த்திருந்தாலும் ஜோதிகாவைக் கடத்தும் காட்சி வரை மட்டுமே பார்ப்பேன். வேட்டையாடு விளையாடு படத்தில் கூட கமல்-கமலினி கமல்-ஜோதிகா காட்சிகள் ஹைக்கூ. வாரணம் ஆயிரம் சூர்யா-மேக்னா காட்சிகள், ப்ரியா-சூர்யாவிடம் காதலைச் சொல்லும் காட்சி என்று காதலுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா ஒரு முழுநீளக் காதல் படம் என்றதால் எப்படியும் முதலில் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணினோம். அடுத்தது இசை. இரட்டை ஆஸ்கருக்குப் பின் ரஹ்மானின் முதல் தமிழ்ப் படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அதுமட்டுமின்றி தன் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் ரஹ்மானிடம் இசையை ஒப்படைத்தார். சதுயமாக மன்னிப்பாயா தவிர வேறெந்த பாடலும் எனக்குப் பிடிக்கவில்லை. இரண்டு மாதங்களில் கேட்டுக் கேட்டு மிகவும் பிடித்து விட்டன. ரஹ்மானின் இசையிலுள்ள Magic அப்போதுதான் புரிந்தது. பாடல்களை எப்போதும் ஒரு அழகியல் தன்மையுடன் காட்சிப்படுத்துபவர் கௌதம். (மணிரத்னத்திற்கு அடுத்து என்று சொல்லத் தேவையில்லை) ஆனாலும் எனக்கு முற்றிலும் பிடிக்காத சிம்பு-த்ரிஷாவை திரையில் பார்க்க வேண்டுமே என்ற ஒருவிதமான எண்ணம் இருந்தது. பாடல்களை மட்டும் நம்பி படத்தை எதிர்பார்ப்பின்றி பார்க்கச் சென்றோம்.

ஆனால் எங்கள் எண்ணத்தைத் தவிடுபொடி ஆக்கிவிட்டார் கௌதம். அவ்வளவு அடக்கமான சிம்புவையும் அழகான த்ரிஷாவையும் அதுவரை பார்க்கவே இல்லை. அதுமட்டுமின்றி இருவரும் நன்றாக நடிக்கவும் செய்திருந்தனர். இறுதியில் வரும் எதிர்பாராத திருப்பம்தான் அப்படதின் அழகு. யே மாயா சேஸாவே என்று தெலுங்கில் இருவரும் இணைவதுபோல் காட்டி வழக்கமான சினிமாவகாமல் தனித்து நின்றது. ஒரே நாளில் சிம்புவும் த்ரிஷாவும் பலரது உள்ளங்களையும் கார்த்திக் ஜெஸ்ஸியாக கொள்ளை கொண்டனர். என்னைப் பொறுத்தவரை அலைபாயுதேவிற்கு அடுத்து சிறந்ததொரு காதல் படம் என நிச்சயம் சொல்வேன். கார்த்திக் என்ற பெயர் ராசிதானோ என்னமோ 😉 இரண்டாம் நாள் கல்லூரி நண்பர்களுடன் பார்த்தேன். மூன்றாம் முறை அம்மா மற்றும் தம்பியோடு பார்த்தேன். நான்காம் முறை அதன் நூறாவது நாள் பார்த்தேன். பின் இணையத்திலிரிந்து தரவிறக்கி தோன்றும்போதெல்லாம் பார்ப்பேன். நேற்று கௌதம் மேனனின் பிறந்தநாள். நடுநிசி நாய்கள் பார்த்துவிட்டு இரவில் வந்து இப்படத்தைப் பார்த்தேன், சலிக்கவே இல்லை.

சென்ற வருடம்தான் இணையத்தில் நிறைய தமிழ் வலைப்பூக்களைத் தேடித் தேடித் படித்தேன். அப்படி விண்ணைத்தாண்டி வருவாயா விமர்சனத்தைத் தேடிக்கொண்டிருக்கும்போது பலதரப்பட்ட விமர்ச்னன்களைக் காண நேர்ந்தது. நான் அதுவரை படித்துக் கொண்டிருந்த பதிவர் சரவண கார்த்திகேயன் படத்தை குப்பை என்று விமர்சித்திருந்தார். ஆனாலும் அவர் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். பதிவர் அரவிந்தனின் இப்பதிவைக் கண்டேன். இவர் கௌதம் மேனனை விட உருகி எழுதியிருந்த விமர்சனமும் அவரது எழுத்துகளும் என்னை அவரது நண்பராக்கியது. பல தருணங்களில் படத்தின் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு அப்பதிவையும் படிப்பேன். மனதிற்கு இதமாக இருக்கும். பல நாட்கள் கழித்து பதிவர் சுரேஷ் கண்ணனின் பதிவைப் பார்க்க நேர்ந்தது. திருமணமாகிய அவருக்குக்கூட மீண்டும் ஒரு பெண்ணைக் காதலிக்கும் எண்ணத்தைத் தூண்டியது.  இம்மூவரும்தான் நான் தமிழில் எழுத காரணமானவர்கள். இப்போதுகூட புதிதாக ஒரு வலைப்பூவைப் பார்த்தால் விண்ணைத்தாண்டி வருவாயா பற்றி எழுதப் பட்டிருக்கிறதா என்று பிப்ரவரி 2010ல் இருந்து எழுதப்பட்டுள்ள இடுகைகளைப் பார்ப்பேன். காதல் மன்னனான கார்க்கியின் பதிவு மட்டும் எனக்கு குழப்பத்தைத் தந்தது.

அடுத்தது காதல் படம்தான் என்று அறிவித்துள்ள கௌதமிடம் இருந்து இன்னொரு வி.தா.வா வை எதிர்பார்க்கிறேன் 🙂

 
4 Comments

Posted by on February 26, 2011 in Anniversaries, Celebrations, Filmy Freak, Movies

 

எஸ்.ராமகிருஷ்ணன் நூல் வெளியீட்டு விழா

புத்தாண்டு தினத்தை சற்று வித்தியாசமாக கொண்டாட நினைத்திருந்த என் எண்ணத்தைப் பூர்த்தி செய்தவர் எஸ். ராமகிருஷ்ணன். அவரது நூல் வெளியீட்டு விழா பற்றி அவர் தளத்தில் பார்த்ததுமே போக வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். மிஷ்கினால் சர்ச்சைகள் கொண்ட சாரு நிவேதிதாவின் நூல் வெளியீட்டு விழா போலில்லாமல் நிறைவாகவே இருந்தது எஸ்.ராவின் புதிய நாவலான ‘துயில்’ வெளியீட்டு விழா.

சரியாக 6.30க்கு தேவநேய பாவாணர் நூலகத்தை அடைந்தபோது அவ்வளவு கூட்டமாக இல்லை. பதிவர்களில் நர்சிம், அதிஷா, யுவகிருஷ்ணா மற்றும் விஜய மகேந்திரன் ஆகியோரை அடையாளம் கண்டுகொண்டேன். பதிவர் சுரேஷ் கண்ணனை எதிர்பார்த்தேன். தென்படவில்லை. வந்தாரா என்று தெரியவில்லை. சில நிமிடங்களில் அந்தச் சிறிய அரங்கு நிரம்பியிருந்தது. சாருவுக்கு வந்தது போல் கூட்டமில்லை என்றாலும் வந்திருந்தவர் அனைவரும் எஸ்.ராவையும் அவர் எழுத்துகளையும் உண்மையாக நேசிப்பவர்களாகவே இருந்தனர். ஜால்ரா கோஷ்டிகளும், விசிலடிப்பவர்களும் இல்லாமல் நிம்மதியாக இருந்தது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இந்திரா பார்த்தசாரதி அழைக்கப் பட்டிருந்தார். மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து பேராசிரியர் சித்ரா நாவலைப் பற்றிய அறிமுக உரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து இயக்குனர்கள் ஜே.டி, ஜெர்ரி, முரளி அப்பாஸ், திரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவுக்காக முகஸ்துதி செய்யாமல் உளமார வாழ்தியதுபோல் இருந்தது. இயக்குனர் முரளி, எஸ்.ராவுக்கு சாஹித்ய அகடெமி விருதும், அவர் எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நோபல் பரிசும் கிடைக்க வேண்டும் என்று கொஞ்சம் ஓவராவே பேசினார். பின் சிறப்புரை ஆற்ற வந்த இ.பா, சாஹித்ய அகாதேமி எல்லா ஒரு விருதே இல்லை. மக்கள் ஆதரவை விட சிறந்த ஒரு பரிசு இல்லை என்றார். நாவலைப் பற்றி தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து பேசினார். புத்தகத்தைப் படிக்காமல் அதைப் பற்றி பேசுவதில்லை என்று குறிப்பிட்டார். அதனால் ஒருவாரம் முன் கொடுக்கப் பட்ட புத்தகத்தை நான்கு நாட்களில் படித்துவிட்டு வந்ததாக சொன்னார். இதை மிஷ்கின் போன்றவர்கள் கற்றுக் கொள்வது நல்லது. இ.பா வின் ‘குருதிப்புனல்’ நாவலைப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
அவரைத் தொடர்ந்து ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் பேச வந்தார். ஈரோடு என்றதும் உற்சாகமானேன். ஏனோ தெரியவில்லை அரசியல் மேடையில் பேசுவது போல் ஆவேசமாக பேசினார். எஸ்.ரா புராணம் பாடி அவரை நெளிய வைத்து விட்டார். கேப்டனுக்குப் போட்டியாக  புள்ளி விபரங்களைக் கூறினார். அதில் உருப்படியான இரண்டு இது எஸ்.ராவின் 50-வது நூல். உயிர்மை வெளியிடும் அவரது 27-வது நூல். அரங்கில் சிலர் அவரது நீ…ண்ட பேச்சைப் பொறுக்க முடியாமல் கைதட்டினர். அப்படியாவது அவர் உரையை முடித்துக் கொள்வாரென்று. ஆனால் அவரோ அதைப் பாராட்டு என்று தவறாக புரிந்துகொண்டு பேசிக்கொண்டே இருந்தார். ஒருவழியாக அவர் முடித்தபோது அப்பாடா என்று பலத்த கைதட்டல்கள்.
அதன்பின் ஒரு நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வாக வாசகருக்கும் எழுத்தாளருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார் எஸ்.ரா. இலக்கியம் சார்ந்த சிலருடன் நாவலைப் பற்றி மட்டுமின்றி பொதுவான இலக்கியச் சூழலைப் பற்றிய ஓர் உரையாடல். மனநல மருத்துவர் ருத்ரன், எழுத்தாளர்கள்  யுவன் சந்திரசேகரன் மற்றும் முருகேச பாண்டியனுடன் எஸ்.ரா உரையாடினார். மனுஷ்ய புத்திரன் ஒருங்கிணைத்தார். இதுபோல் வேறெந்த தமிழ்  நூல் வெளியீட்டு விழாவிலும் நடந்ததில்லை என்று குறிப்பிட்டார். மற்ற நூல் வெளியீட்டு விழாக்களும் இதுபோல் அனாவசிய அரசியல்களையும் ஜால்றாக்களையும் தவிர்த்து இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.
நாவல்களின் எண்ணிக்கை முன்பைவிட தற்போது மிகவும் குறைவாக உள்ளதைப் பற்றி ஆதங்கப் பட்டனர். வழக்கமாக நன்றாக பேசும் ருத்ரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சரியாக பேசவில்லை. ஆனால் பெயரளவில் மட்டுமே நான் கேள்விப் பட்டிருந்த யுவன் சந்திரசேகர் நன்றாகவே பேசினார். ஹாரி போட்டருக்கு இருக்கும் தமிழ் வாசகர்கள் தமிழ் நாவல்களுக்கு இல்லை என்றனர். ஆனால் இளைஞரளிடம் வாசிப்பு ஆர்வமும், எழுதும் ஆர்வமும் நல்ல ரசனையும் இருப்பதாக கூறியவர், நாவல் எழுதுவது மிகவும் எளிது என்று எல்லோரையும் முயற்சிக்கச் சொன்னார். நல்ல எழுத்தாளனைப் பற்றி அவரது எழுத்துகளும் வாசகர்களும் தான் பேச வேண்டும். எஸ்.ரா. தன்னைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளவில்லை. சாருவைப் போலன்றி தன்னடக்கத்தின் மறு உருவமாக தெரிந்தார்
துயில் நாவல் நோயைப் பற்றி, மருத்துவம் பற்றி, நம்பிக்கை பற்றியது என்று குறிப்பிட்டார். அதனால்தான் தன் நாவலை ‘மருத்துவத்தை மக்கள் சேவையாக நினைக்கும் மருத்துவர்களுக்கு’ அர்பணித்துள்ளார். செவ்வியல் தரத்தோடு இருப்பதாக அனைவரும் கூறினர். 350 ரூபாய் நாவலை 300 ரூபாய்க்கு வாங்கி அதில் எஸ்.ராவின் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டேன். சுஜாதாவிடம் கிடைக்காத அந்த வாய்ப்பு எஸ்.ராவிடம் கிடைத்தது. மனம் வருடும் எழுத்துகளை எழுதும் அவர் கைகளையும் தொட்டுப் பார்த்துக் கொண்டேன் 🙂 நிகழ்ச்சிக்கு எஸ்.ராவின் ரசிகரான என் மாமாவையும் அழைத்துச் சென்றிருந்தேன். புத்தாண்டு தினம் வித்தியாசமாக இருந்தது என்று நன்றி தெரிவித்தார்.
 
2 Comments

Posted by on January 2, 2011 in Books, Functions

 

புதிய ஆண்டின் இனிய துவக்கம்

எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவலான “துயில்”  நூல் வெளியீடு விழாவிற்குச் சென்றிருந்தேன். வழக்கம்போலன்றி அமைதியாகவும் மன நிறைவோடும் இருந்தது இந்தப்புத்தாண்டு தினம். புத்தாண்டை இனிதாக துவங்கி வைத்த எஸ்.ரா விற்கு மிக்க நன்றி. விழா சிறப்பாக இருந்தது. விழாவைப் பற்றி அடுத்த பதிவில்.


 
Leave a comment

Posted by on January 1, 2011 in Books, Celebrations, Functions

 

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முன் கடந்த ஆண்டை நினைவுகூர எண்ணி இப்பதிவு.

பொதுவாக நாம் வருடத்தின் முதல் தினத்தில் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் அந்த ஆண்டு முழுதும் இருப்போம் என்ற மூட நம்பிக்கையைத் தகர்த்தது இவ்வாண்டு. 2010-ன் ஆரம்பமே உடல் நிலை சரியில்லாமல் மந்தமாக தொடங்கியது. அலுவலகத்திற்கு மட்டம் போட மட்டும் பொய்க்காய்ச்சல் வரும். ஆனால் 2009  இறுதியில் நிஜமான குளிர் காய்ச்சல் வந்து டிசம்பர் 31 இரவு ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் ஈரோடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தேன். அதனால் 12 மணிக்கு SMS-ல் மட்டும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். ஆனால் எல்லாவற்றையும் மீறி 2010 எனக்கு ஓர் ஆரோக்கியமான ஆண்டாக இருந்தது. Personal வாழ்க்கையிலும் Professional வாழ்க்கையிலும் நிறைய நல்ல மாற்றங்கள்.

2009-ல் அதீதமாக பணியிலிருந்த பளு 2010ல் பனிபோல் கரைந்தது. பெரிதாக ஒன்றும் இல்லையென்றாலும் தேவைக்கேற்ற சம்பள உயர்வு, பதவி உயர்வு, என் அலுவலகத்திலும் Client  அலுவலகத்திலும் நல்ல பெயர் என்று ப்ரோஃபஷனலாக நல்ல மாற்றங்கள் என்றால் அம்மாவின் பணி மாற்றம், சென்னையில் செட்டில் ஆகிக்கொண்டிருப்பது, ஊரிலுள்ள வீட்டைப் புதுப்பித்தது என்று சொந்த வாழ்க்கையிலும் பல நல்ல மாற்றங்கள். விட்டுப்போன சில உறவுகளையும் புதுப்பித்துக் கொண்டேன்.

நட்பு வட்டம் விரிந்து நிறைய நண்பர்கள், அதுவும் என் எண்ண அலைவரிசைகளுடன் ஒத்துப் போகும் நண்பர்கள் (Like-minded Friends) கிடைத்துள்ளனர். வாரம் ஒரு படமாவது பார்த்துவிட்டிருந்தேன். கல்லூரியை bunk செய்து  சினிமாவுக்குச் சென்றதுபோல் அலுவலகத்திற்கு மட்டம் போட்டு முதல் நாள் முதல் ஷோ பார்த்தது, (விண்ணைத்தாண்டி வருவாயா நூறாவது நாள் ஷோ பார்த்தது டூ மச் என்ற நண்பர்கள், முதல் நாளே தமிழிலும் ஹிந்தியிலும் ராவணன்/ராவண் பார்த்தது ட்வென்டி மச் என்றார்கள்). சனிக்கிழமையானால் அம்மாவே ‘இன்னைக்கு எந்த படம்?’ என்று கேட்பார். சனி இரவு வீட்டில் இருந்தால் பாட்டிகூட ஆச்சரியமாக பார்ப்பார். அந்த அளவுக்கு என் சினிமா பைத்தியத்துக்குத் தீனி போட்ட வருடம். சென்ற மூன்று வருடங்களில் நான் அதிகமாக பார்த்துக் கொண்டிருந்த ஹிந்தி படங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டதில் சிறு வருத்தமே.
பல வருடங்களாக விடுபட்டுப் போன புத்தக வாசிப்பு என் பாட்டியின் காரணமாக மீண்டும் கிடைத்தது அவருக்காக நான் விரும்பும் புத்தகங்கள் வாங்க ஆரம்பித்து என்னளவில் ஒரு குட்டி நூலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். (வாங்கிய சில நூல்களை இன்னும் படிக்கவில்லை என்பது வேறு விஷயம்) சுஜாதாவைத் தாண்டியும் மற்ற எழுத்தாளர்களையும் தேடித் பிடித்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதற்குப் பெரிதும் உறுதுணையாய் இருப்பது இணையம். மூலம் பல இணைய நண்பர்களின் ஆரோக்கியமான நட்பு  கிடைத்துள்ளது. ட்விட்டரில் சென்ற வருடமே கணக்கைத் துவங்கியிருந்தாலும் இந்த ஆண்டுதான் அதிகமாக அதில் இயங்கியுள்ளேன். சென்ற வருடம் சீந்தப்படாமல் இருந்த ஃபேஸ்பூக் நான்கு ஆண்டுகள் என் சுவாசமாக இருந்த ஆர்க்குட்டை மறக்கச் செய்துவிட்டது. தமிழில் என்னை பதிவெழுதத் தூண்டிய சில பதிவர்களுக்கு என்றும் கடமைப்பட்டவனாவேன்.
முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பல வருடக் கனவையும் நிறைவேற்றிக் கொண்டேன். கிட்டார் வாசிக்கும் ஆசியில் கிட்டார் வாங்கி விரல்களில் ஏற்படும் வலி பொறுக்காமல் கைவிட்டுவிட்டேன். பாடினால் மற்றவர்களுக்குத்தானே காது வலி ஏற்படும் 😉 அர்த்த ஜாமத்தில் பாடி, பதிவு செய்த கோப்புகளை நண்பர்களுக்கு அனுப்பி அவர்களைக் கேட்க வைத்து இம்சித்தேன். கேட்ட அனைவருக்கும் என் மன்னிப்பு கலந்த நன்றிகள்.
முத்தாய்ப்பாக இவ்வாண்டை நிறைவு செய்தது டிசம்பர் மாதம். அதற்குத் தனிப் பதிவே எழுதலாம். சங்கீதக் கச்சேரி, சர்வதேச திரைப்பட விழா, நூல் வெளியீட்டு விழா என்று களை கட்டியது. என் வாழ்க்கையில் செய்யவே மாட்டேன் என்று தீர்மானமாக நம்பிக் கொண்டிருந்த Trekking நண்பர்களின் அன்புத் தொல்லையால் நிறைவேறியது. நிறைய இன்பச் செலவுகள் செய்தது மனநிறைவைத் தந்தது. என் அபிமான இணைய நண்பர்களுடன் நட்பு வலுப்பெற்றது. ஆறு மாதமாக மைசூரில் Training-ல் இருந்த என் தங்கைக்கு சென்னையில் posting கிடைத்து நேற்று முன்தினம் வந்து சேர்ந்தாள்.
காதல் வாழ்க்கை மட்டும் வழக்கம்போல் இருந்தது. Single-ஆக இன்னொரு வருடம் கழிந்தது. Numerology-ல் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. என் ராசி என் 1 என்பதால் 1, 10, 19, 28 வயது நடக்கையில் என் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். 1வது வயது எனக்கு நினைவில்லை, 10-வது வயதில் பள்ளி, இருப்பிடம், நண்பர்கள் என மாற்றங்கள், 19-வது வயதில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு என் பொற்காலம் என்றே கூறலாம். இப்போது 28-வது வயதிலும் நினைத்தது போல் இனிய மாற்றங்கள் நடந்தது இன்னும் ஆறு மாதங்களில் காதல் வாய்க்கிறதா என்று பார்ப்போம். இந்த ஆண்டைப் போலவே அடுத்த ஆண்டும் இனிதாக அமைய வேண்டுகிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 🙂
 
4 Comments

Posted by on December 31, 2010 in Celebrations, Chummaa, Memories n Memoirs

 

8th Chennai International Film Festival

சினிமாவுக்கும் எனக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் உள்ளது என்றே எனக்குத் தோன்றும். அந்த அளவுக்கு சினிமா மோகம் உள்ளவன். வெகு நாட்களாகவே திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் ஆசை இருந்தாலும் இம்முறைதான் வாய்ப்பு கிடைத்தது. சென்ற வருடம் பணிச்சுமையின் காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாமல் போனது. 8வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் விளம்பரத்தை இணையத்தில் பார்த்ததும் நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது போல் உணர்ந்தேன். திரைத்துறையினரைப் பார்க்கும் போது ஏதோ என் குடும்ப உறுப்பினரைப் பார்ப்பதுபோல் ஒரு பரவசம் அடைவேன். படங்கள் பார்ப்பதைவிட அங்கு வரும் நடிகர், நடிகையர், இயக்குநர்களைப் பார்க்கவே சென்றேன்.

அலுவலகத்திலிருந்து அவசரமாகக் கிளம்பி மழை காரணமாக ஆட்டோவில் சென்று 6.45-க்கு வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலித்த உட்லண்ட்ஸ் அடைந்து Delegate Pass கிடைக்கும் Counterக்குச் சென்றால் பூட்டப்பட்டிருந்தது. நாளை வரவும் என்று ஒரு பெரியவர் சொன்னார். ஏமாற்றத்துடன் நின்றிருந்தேன். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், குறைந்த பட்சம் சினிமா பிரமுகர்களையாவது பார்த்துவிட்டுச் செல்லாலாம் என்று நின்றிருந்தேன். அப்போது ஒருவர் அருகில் வந்து ‘Pass வேணுமா?’ என்றார். நண்பனுக்காக வாங்கினேன், அவர் வரவில்லை என்றும் 500 ரூபாய் Pass-ஐ 4oo ரூபாய்க்குத் தருவதாக கூறினார். முதலில் சற்று தயங்கினேன். காரணம் அவர் நண்பர் புகைப்படத்துடன் பெயர் எழுதப் பட்டிருந்தது. யாரேனும் கண்டுபிடித்துவிட்டால் மானம் போய்விடும் என்று தயங்கினேன். இவ்வளவு கூட்டத்தில் யாரும் பார்க்க மாட்டார்கள், கழுத்தில் அணிந்திருந்தால் போதுமானது என்று சொல்லி வாங்க வைத்துவிட்டார். அவர் சொன்னது போல் யாரும் கண்டுகொள்ளவில்லை. அரங்கில் நுழைந்து ஓர் ஓரமான இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டேன். அடுத்த நாள் என் பெயரில் என் புகைப்படத்துடன் ஐநூறு ரூபாய்க்கு ஒரு வாங்கிக் கொள்ள எண்ணினேன்.

அரங்கில் நுழைந்த போது வயலின் கலைஞர் லலிதா நின்றுகொண்டே காபியையும் சாருகேசியையும் தவழ விட்டுக் கொண்டிருந்தார். காதல் ரோஜாவே, ஏதோ ஏதோ ஒன்று, ஆருயிரே என்று முடியும் தருணத்தில் சென்றதால் முழுவதும் கேட்க முடியவில்லை. மேடையின் பின் இருளில் இரு தொகுப்பாளர்களில் விஜய் டிவி ரம்யா மட்டும் மின்னினார். (நல்லவேளை DD இல்லை!)  கோட் அணிந்த ஆண் தொகுப்பாளர் யாராக இருக்குமென்று யோசித்துக் கொண்டிருந்தேன். வெளிச்சத்தில் வந்ததும்தான் தெரிந்தது அது Maddy!தனக்கே உரிய ஸ்டைலில் சிறப்பு விருந்தினர்களை மேடைக்கு அழைத்தார் மாதவன். ஜெர்மன் நாட்டிலிருந்து இருவர் வந்திருந்தனர். மீசையின்றி ஸ்மார்ட்டாக வெள்ளை கோட்டில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், வெள்ளை கோட் அணிந்து, முகத்தை மறைக்கும்  தொப்பி காண்ணாடியுடன் நடிகர் விக்ரம் (உயரம் சற்று குறைவாகவும் மெலிந்தும் காணப்பட்டார். பெயர் சொல்லாவிட்டால் அடையாளம் தெரிந்திருக்காது), கேரள சர்வதேச திரைப்பட விழா முடித்த கையோடு நடிகர் ஜெயராம், எஸ்.வீ .சேகர் மற்றும் சில உறுப்பினர்கள் மேடையில் இருந்தனர். அனைவரும் தொலைதொடர்பு அமைச்சர் பரிதி இளம்வழுதிக்காக காத்திருந்தனர்.  வழக்கம்போல் அமைச்சர் தாமதமாக வந்ததும் அனைவரும் பேசத் தொடங்கினர்.
சரத்குமாரும் விக்ரமும் நல்ல தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசினர். எஸ்.வீ சேகர் வந்ததும் அரங்கில் கலகலப்பு கூடியது. அவர் வழக்கமாக சொல்லும் திரைப்பட தயாரிப்பாளர் பற்றிய ஜோக்கை சொன்னார். திரைப்பட விழாக்களின் இன்றைய நிலை குறித்து ஜெயராம் பேசினார். 20 வருடங்களுக்கு முன் தில்லியில் தான் பங்குகொண்ட ஒரு திரைப்பட விழா பற்றி பேசினார். குளிக்காமல் நீண்ட தலைமுடி தாடி வளர்த்தவர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஐம்பது வயதைக் கடந்தவர்கள் இவரை ஒரு மாதிரி பார்த்ததாகவும் கூறினார். நகைச்சுவைக்காக எதையாவது பேசி இப்படி மாட்டிக் கொள்வார் போலும். மலையாள சேனலில் தன் வீட்டில் வேலை செய்யும் தமிழ்ப்பெண்ணைப் பற்றி சொன்னது போல்! அந்நிலைமை மாறி இப்போது இளைஞர்களே அதிகம் தென்படுகிறனர் என்றார். சாருவின் விழாவில் கேட்டதுபோல் இருந்தது. இவ்விழாவிற்கு கலைஞர் 25 லட்சம் ரூபாய் நிதி கொடுத்ததாக பரிதி இளம்வழுதி கூறினார். சந்தடி சாக்கில் எஸ்.வீ. சேகர் காலையும் வாரினார். இவர் எப்போதும் இதே ஜோக்கையே சொல்கிறார் என்றார். அரங்கில் மக்களுடன் அமர்ந்திருந்த இயக்குனர் ஷங்கரை மேடைக்கு அழைத்தனர். போட்டியில் பங்குபெறும் தமிழ்ப்படங்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் சிங்கீதம் சீனிவாச ராவ்,  சாருஹாசன் மற்றும் நடிகை அர்ச்சனா ஆகியோரை அறிமுகம் செய்தனர். அன்று அர்ச்சனா வரவில்லை.
‘களவாணி LC112’ ஓவியாவும் ‘கற்றது தமிழ் ஆனந்தி’ அஞ்சலியும் குத்து விளக்கேற்றி விழாவை ஆரம்பித்தனர். பேசிய அனைவரும் விழாவிற்கு ஏற்பாடு செய்து முன் நின்று நடத்தும் சுஹாசினி மற்றும் ரேவதிக்கு நன்றி கூறினர். ரேவதி மேடையில் தோன்றி மாதவனுக்கும் ரம்யாவுக்கும் நன்றி கூறினார். பின் சினிமா பிரமுகர்கள் அனைவரும் பால்கனிக்குச் சென்றனர். ரோஹிணி, பார்த்திபன், பூர்ணிமா ஜெயராம், லிஸி ப்ரியதர்ஷன், லிங்குசாமி, உமா பத்மநாபன், லக்ஷ்மி (பாஸ் படத்தில் ஆர்யா அம்மா) ஆகியோர் தென்பட்டனர்.  சுஹாசினி தோன்றி அன்றைய திரைப்படமான Soul Kitchen பற்றி பேசினார். விழாவின் Logo Film-ஐ கௌதம் மேனன் இயக்கியதாக கூறினார். விளம்பரங்கள் முடிந்ததும் உடனே படம் ஆரம்பித்து விட்டனர். பிறகுதான் தெரிந்தது அந்த விளம்பரன்களுள் ஒன்றுதான் அந்த லோகோ படம். புது வசந்தம் படத்தில் வரும் வானொலியில் லைஃப்பாய் பாடல் மாதிரி ஆகிவிட்டது. சுமார் 7.45க்கு படம் ஆரம்பித்தது. Balck Comedy Genre-ல் அமைந்த ஒரு படம். Soul Kitchen was not Soul Touching  😦

இப்படி ஒரு விழா நடக்கையில் திரையரங்கைச் சீர் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கலாம். வெளி அலங்காரம் பார்த்துவிட்டு  உள்ளே சென்றால் திரையும் இருக்கைகளும் பல்லிளித்தன. அரங்கில் ரங்குஸ்கி தொல்லை வேறு! INOX-ல் VIP-க்களுக்காக Red Carpet Screening ஏற்பாடு செய்திருப்பதாக சுஹாசினி சொன்னார். துவக்க விழாவை மட்டுமாவது INOX-ல் ஏற்பாடு செய்திருக்கலாம். சில அயல்நாட்டு முகங்களும் தென்பட்டன. தம் உடல் வாகிற்குப் பொருந்தாத ஆடையணியும் நம் நாட்டுப் பெண்களை விட சுடிதாரில் தென்பட்ட அயல் நாட்டுப் பெண்கள் மிகவும் பாந்தமாக இருந்தனர். முக்கியமாக அவர்கள் துப்பட்டாவை அழகாக அணிந்திருந்தனர். நம் பெண்கள் அதை அணிவதே இல்லை.

படம் பார்க்கும்போது ஒரு விஷயம் தோன்றியது. சர்வதேச திரைப்படங்கள் அரிதாக இருந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற விழாக்களைக் கொண்டாடினர். அரிதாக கிடைக்கும் வீடியோ காசெட்டுகளை வைத்து சிறிய Projector-ல் திரையிட்டனர். தொழில்நுட்பம் வளர்ந்தவிட்ட இக்காலத்திலும் அதே போன்று சிறிய Projector  வைத்து திரையின் முக்கால்வாசி அளவு மட்டும் திரையிடுவது வேடிக்கையாக இருக்கிறது. இணையத்தில் குவிந்திருக்கும் டாரெண்டுகளின் மூலம் எந்த ஒரு சிறந்த உலகப் படத்தையும் காணும் வாய்ப்புகள் இன்று இருக்கின்றன. விழாவில் பார்ப்பதைவிடத் தரமான பிரிண்ட்களை  நம் மடிக்கணினியில் காணலாம். அதனால் அரங்கில் பார்க்கும்போது ஒருவிதமான Uncomfortable Feeling-ஐத் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் பலபேருடன் ஆங்கிலம் அல்லாத ஓர் அயல் மொழித்திரைப்படத்தைக் காண்பது ஒரு வித்தியாச அனுபவம்தான்.

 
Leave a comment

Posted by on December 15, 2010 in Functions, Movies