RSS

Monthly Archives: February 2011

விண்ணைத்தாண்டி வருவாயா – ஓராண்டு நிறைவு

எத்தனை படங்கள் பார்த்து ரசித்தாலும் சில படங்கள் எப்போதும் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமாக பிரத்யேகமாக இருக்கும். நம்மை பாதித்த படங்கள், பதின்ம வயதில் பார்த்த படங்கள், காதலன்/காதலியுடன் பார்த்த படங்கள் என்று நிறையவே இருக்கின்றன. அப்படி என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படங்கள் பல இருந்தாலும் நான் அப்படங்களைப் பார்த்த தேதிகள் முதற்கொண்டு அன்று நிகழ்ந்த சம்பவங்கள் வரை மீண்டும் மீண்டும் நினைத்து அசைபோடும் படங்கள் மிகச்சில. மௌன ராகம், அழகன், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற என் பிரத்யேக படங்களை நான் இதில் சேர்க்கவில்லை. என் பதின்ம வயதில் நான் திரையரங்கில் பார்த்த இரண்டு Romance Genre படங்கள் – காதலுக்கு மரியாதை, அலைபாயுதே. நடிகை ஷாலினி மீது தீவிரமான காதல் கொண்டிருந்தேன். (பிரியாத வரம் வேண்டும் படத்தைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்). அப்போதெல்லாம் எனக்கொரு காதலி கிடைத்ததும் இவ்விரண்டு படங்களையும் அவளுடன் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதுவரை அது நிகழவில்லை. இனிமேல் அந்தக் கொடுப்பினை நமக்கு இல்லை என்றிருந்தபோது வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. என்னை மிகவும் பாதித்தது. அதைப் பார்த்ததும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்தி காதலிக்க வேண்டும் போலிருந்தது.

சென்ற ஆண்டு இதே நாளில் வெளியானது. என் நண்பர்களுடன் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. முதலில் கௌதம் மேனன். மணிரத்னதிற்குப் பிறகு நகரத்துக் காதல் காட்சிகளைக் கவிதையாகக் காட்டியவர். Cute வசனங்களால் ஈர்த்தார். காக்க காக்க action படம் என்பதைவிட ஒரு Romance படமாகவே நான் பார்ப்பேன். திரையரங்கில் ஒரு முறை மட்டுமே அப்படத்தை முழுதாக பார்த்திருக்கிறேன். பின்பு டி.வி.டி வாங்கியதும் பலமுறை பார்த்திருந்தாலும் ஜோதிகாவைக் கடத்தும் காட்சி வரை மட்டுமே பார்ப்பேன். வேட்டையாடு விளையாடு படத்தில் கூட கமல்-கமலினி கமல்-ஜோதிகா காட்சிகள் ஹைக்கூ. வாரணம் ஆயிரம் சூர்யா-மேக்னா காட்சிகள், ப்ரியா-சூர்யாவிடம் காதலைச் சொல்லும் காட்சி என்று காதலுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா ஒரு முழுநீளக் காதல் படம் என்றதால் எப்படியும் முதலில் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணினோம். அடுத்தது இசை. இரட்டை ஆஸ்கருக்குப் பின் ரஹ்மானின் முதல் தமிழ்ப் படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அதுமட்டுமின்றி தன் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் ரஹ்மானிடம் இசையை ஒப்படைத்தார். சதுயமாக மன்னிப்பாயா தவிர வேறெந்த பாடலும் எனக்குப் பிடிக்கவில்லை. இரண்டு மாதங்களில் கேட்டுக் கேட்டு மிகவும் பிடித்து விட்டன. ரஹ்மானின் இசையிலுள்ள Magic அப்போதுதான் புரிந்தது. பாடல்களை எப்போதும் ஒரு அழகியல் தன்மையுடன் காட்சிப்படுத்துபவர் கௌதம். (மணிரத்னத்திற்கு அடுத்து என்று சொல்லத் தேவையில்லை) ஆனாலும் எனக்கு முற்றிலும் பிடிக்காத சிம்பு-த்ரிஷாவை திரையில் பார்க்க வேண்டுமே என்ற ஒருவிதமான எண்ணம் இருந்தது. பாடல்களை மட்டும் நம்பி படத்தை எதிர்பார்ப்பின்றி பார்க்கச் சென்றோம்.

ஆனால் எங்கள் எண்ணத்தைத் தவிடுபொடி ஆக்கிவிட்டார் கௌதம். அவ்வளவு அடக்கமான சிம்புவையும் அழகான த்ரிஷாவையும் அதுவரை பார்க்கவே இல்லை. அதுமட்டுமின்றி இருவரும் நன்றாக நடிக்கவும் செய்திருந்தனர். இறுதியில் வரும் எதிர்பாராத திருப்பம்தான் அப்படதின் அழகு. யே மாயா சேஸாவே என்று தெலுங்கில் இருவரும் இணைவதுபோல் காட்டி வழக்கமான சினிமாவகாமல் தனித்து நின்றது. ஒரே நாளில் சிம்புவும் த்ரிஷாவும் பலரது உள்ளங்களையும் கார்த்திக் ஜெஸ்ஸியாக கொள்ளை கொண்டனர். என்னைப் பொறுத்தவரை அலைபாயுதேவிற்கு அடுத்து சிறந்ததொரு காதல் படம் என நிச்சயம் சொல்வேன். கார்த்திக் என்ற பெயர் ராசிதானோ என்னமோ 😉 இரண்டாம் நாள் கல்லூரி நண்பர்களுடன் பார்த்தேன். மூன்றாம் முறை அம்மா மற்றும் தம்பியோடு பார்த்தேன். நான்காம் முறை அதன் நூறாவது நாள் பார்த்தேன். பின் இணையத்திலிரிந்து தரவிறக்கி தோன்றும்போதெல்லாம் பார்ப்பேன். நேற்று கௌதம் மேனனின் பிறந்தநாள். நடுநிசி நாய்கள் பார்த்துவிட்டு இரவில் வந்து இப்படத்தைப் பார்த்தேன், சலிக்கவே இல்லை.

சென்ற வருடம்தான் இணையத்தில் நிறைய தமிழ் வலைப்பூக்களைத் தேடித் தேடித் படித்தேன். அப்படி விண்ணைத்தாண்டி வருவாயா விமர்சனத்தைத் தேடிக்கொண்டிருக்கும்போது பலதரப்பட்ட விமர்ச்னன்களைக் காண நேர்ந்தது. நான் அதுவரை படித்துக் கொண்டிருந்த பதிவர் சரவண கார்த்திகேயன் படத்தை குப்பை என்று விமர்சித்திருந்தார். ஆனாலும் அவர் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். பதிவர் அரவிந்தனின் இப்பதிவைக் கண்டேன். இவர் கௌதம் மேனனை விட உருகி எழுதியிருந்த விமர்சனமும் அவரது எழுத்துகளும் என்னை அவரது நண்பராக்கியது. பல தருணங்களில் படத்தின் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு அப்பதிவையும் படிப்பேன். மனதிற்கு இதமாக இருக்கும். பல நாட்கள் கழித்து பதிவர் சுரேஷ் கண்ணனின் பதிவைப் பார்க்க நேர்ந்தது. திருமணமாகிய அவருக்குக்கூட மீண்டும் ஒரு பெண்ணைக் காதலிக்கும் எண்ணத்தைத் தூண்டியது.  இம்மூவரும்தான் நான் தமிழில் எழுத காரணமானவர்கள். இப்போதுகூட புதிதாக ஒரு வலைப்பூவைப் பார்த்தால் விண்ணைத்தாண்டி வருவாயா பற்றி எழுதப் பட்டிருக்கிறதா என்று பிப்ரவரி 2010ல் இருந்து எழுதப்பட்டுள்ள இடுகைகளைப் பார்ப்பேன். காதல் மன்னனான கார்க்கியின் பதிவு மட்டும் எனக்கு குழப்பத்தைத் தந்தது.

அடுத்தது காதல் படம்தான் என்று அறிவித்துள்ள கௌதமிடம் இருந்து இன்னொரு வி.தா.வா வை எதிர்பார்க்கிறேன் 🙂

Advertisements
 
4 Comments

Posted by on February 26, 2011 in Anniversaries, Celebrations, Filmy Freak, Movies

 

நடுநிசி நாய்கள்

25-Feb-2011

Disclaimer: படத்தின் முக்கியமான திருப்பங்கள் முடிச்சுகள் சொல்லப்படவில்லை. கண்டிப்பாக வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவேண்டும். தயவுசெய்து குடும்பத்தோடு பார்க்கவேண்டாம்.  காதலியுடனோ தொழிகளுடனோ சென்று ஆண்கள் நெளிய வேண்டாம்.

பெயர்க் காரணம்: ‘பசுவய்யா’ என்ற பெயரில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய கவிதைகளை நடுநிசி நாய்கள் என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டார். மணிரத்னத்தை அடுத்து, தன் படங்களுக்கு தொடர்ந்து தமிழில் அழகாக பெயர்கள் வைக்கும் கௌதம் மேனன் இப்படத்திற்கு இப்பெயரைத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இரவில் கனவில் நாய்கள் வந்தால் கேடுகள் நடக்கும் என்ற நம்பிக்கை. கோவலன் மாதவி வீட்டிற்குச் சென்றபோது கண்ணகியின் கனவில் நாய்கள் குரைத்தன என்று சிலப்பதிகாரத்தில் உள்ளதாம். (ஆனால் படத்தில் யார் கனவிலும் நாய்கள் வரவில்லை)
உபயம்: http://ozeeya.com/ta/hot-news-tamil-archive/4490-2011-02-10-06-50-27

இப்படத்தை பல நாட்களாக எதிர்பார்த்திருந்தேன். முதல் நாள் முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்பதால் விடுப்பு எடுக்குமாறு நண்பர்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆனால் படம் வெளியானபோது நான் தில்லியில் இருந்ததால் என்னால் முதல் நாள் பார்க்க முடியவில்லை. அங்கு ரிலீஸ் ஆகவில்லை. ஆடுபுலி என்ற மொக்கைப் படம் கூட அங்கு வெளிவந்திருந்தது.  Worldwide Release என்று டிவியில்  சொல்லிக்கொண்டிருந்த கௌதம் மேனன் மீது கொஞ்சம் கோபம் கூட வந்தது. சென்னை வந்ததும் பார்த்து விட வேண்டும் என்றிருந்தேன். அதனால் இயக்குனரின் பிறந்த நாளான இன்று பார்த்தேன். சென்ற வருடம் Birthday Treat-ஆக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை அளித்திருந்தார். அது ஃ பைவ் ஸ்டார் ஹோட்டலில் தந்த ட்ரீட் என்றால் இது ஒரு காஃ பி ஷாப்பில் தந்த ட்ரீட். Still it’s a Treat!

படம் வந்த இரண்டே நாட்களில் வழக்கம்போல் அதைப்பற்றி விமர்சித்து கூறு போட்டு விட்டனர் நம் மக்கள். கலாச்சார சீர்கேடு என்றும் படத்தைப் பார்க்காமல் புறக்கணிப்போம் என்றும் அறைகூவல் விடுத்தனர். ஆனால் அந்த அளவுக்கும் மோசமில்லை. எனக்குப் பிடித்திருந்தது. நான் எப்போதும் பார்க்கும் ECR, OMR, IT Express Highway, Sathyam Theater போன்ற இடங்களைப் பார்க்கையில் சந்தோஷமாகவும் இருந்தது.

தொழில்நுட்ப ரீதியில் அனைவரது பாராட்டைப் பெற்றதில் எள்ளளவும் சந்தேகமில்லை. த்ரில்லருக்கே உரித்தான ஒளிப்பதிவும், கோணங்களும் காட்டி ஈரதிற்குப் பின்  மனோஜ் பரமஹம்சா ஈர்த்திருக்கிறார்.  ஆண்டனியின் ஒளிப்பதிவும் வழக்கம்போல் Crisp. ஆனால் Thriller படங்களுக்கு காட்சிகளைவிட திகிலூட்டக் கூடியது பின்னணி இசை. ஒரு திகிலான காட்சி வரும்போது கண்களை மூடிக் கொண்டாலும் அதன் இசை நம்மை பயமுறுத்தும். சிகப்பு ரோஜாக்கள், நூறாவது நாள் போன்ற படங்களின் பின்னணி இசை இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பள்ளி நாட்களில் அந்த இசையைக் கேட்டாலே பயந்து விடுவேன் இப்படத்தில் பின்னணி இசை இல்லை என்ற குறையே இல்லை. இயற்கையாக வரும் சப்தங்களையே ஒலிப்பதிவு செய்துள்ளனர். அபாரம். நடிப்பைப் பொறுத்த வரை score செய்வது மீனாக்ஷியாக வரும் ஸ்வப்னா அப்ரஹாம் (சின்னத்திரை யுவஸ்ரீ சாயலில் இருக்கிறார்) மற்றும் வீராவாக வரும் வீரா. ஒரு பாடகியான முன்னவரும், உதவி இயக்குனரான பின்னவரும் நிகழ்த்தியிருப்பது அற்புதம். சமீராவும் தம் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். பாலிவுட் படங்களில் ரகசியா ரேஞ்சுக்கு Item song ஆடும் இவரை Dignified மேக்னாவாக மாற்றினார் கௌதம். அதற்கடுத்து இப்படத்தையும் அவர் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். இன்ஸ்பெக்டராக வருபவரும் அரவிந்தாக வருபவரும் குறும்படங்களில் நடித்தவர்கள் போல் இருந்தனர்.

கதைகூட பலருக்குப் பிடித்திருந்தது. காட்சிப் படுத்தலும், வசனங்களும், குறிப்பாக Flash Back-க்கும்தான் பலருக்குப் பிடிக்கவில்லை. சிறுவயதில் Child Abuse எனப்படும் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் ஒருவன் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு ஒரு சைக்கோ ஆகிறான். பெரிதானதும்  பெண்களுடன் உறவுகொண்டு அவர்களைக் கொல்கிறான். ஏற்கனவே சிகப்பு ரோஜாக்கள் (இயக்குனரே இப்படத்தை சிகப்பு ரோஜாக்களுடன் ஒப்பிடுகின்றார்), மூடுபனி, மன்மதன் போன்ற படங்களில் இதுபோல் வந்துவிட்டதால், சற்று வித்தியாசமான Flash Back-ஐ  இயக்குனர் காட்டியுள்ளார். அதில் காட்டப் படுவதுபோல் இதுவரை நாம் கண்டிராததால் ஆனால் எங்கோ ஒரு மூலையில் நடந்திருக்கிறது என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

பெண்கள் அனைவரும் இப்படத்தில் வருவதுபோல் இல்லை. இப்படியும் சில பெண்கள் இருக்கின்றனர் என்று காட்டியுள்ளார். சிகப்பு ரோஜாக்களில் கமல் ஒரு Casanova போல் பெண்களை முதலில் மயக்கியபின்தான் உறவு கொண்டு கொல்வார். இதில் பலவந்தமாக சில பெண்களைக் கடத்தி வருகிறான். இயக்குனர் எந்தக் காட்சியையும் திணிக்கவில்லை. பார்வையாளர்களுக்கு கிலியூட்டவே இப்படம் கிளர்ச்சியூட்ட அல்ல. எஸ்.ஜே சூர்யா வாலியில் காட்டியது இயல்பாக இருந்தது. நியூ, அ ஆ படங்களில் காட்டியது கிளர்ச்சிக்காக. (சாருவின் அந்தக் கால மற்றும் இந்தக் கால எழுத்துகள் போல் :-)) இதில் வக்கிரம் என்று காட்டப்படுவது கசப்பான உண்மை.

படங்களில் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. சிறுவயது வீராவாக வரும் சிறுவன் பெரிய வீரா போலவே இருக்கிறானே என்று ‘அட’ போட்டால், பத்தாவது படிக்கும் பையனாக பெரிய வீரா வருவது பொருந்தவே இல்லை. சமீராவுக்கு வழக்கம்போல் சின்மயி குரல். ஆனால் வசனங்களுக்கு மட்டும். பெரும்பாலான அவரது அலறல்களும் அழுகைகளும்  வேறொருவர் குரல் குரல் போல் ஒலித்தன. (அலறல் கூட இனிமையாய் இருப்பது ஸ்ரீதேவிக்கு மட்டுமே ;-)). இறுதியில் மனநல மருத்துவர் கொடுக்கும் லெக்சர் ஒரு டாக்குமென்ட்ரி போல் ஆகிவிட்டது சிறுவயதுமுதல் பம்பாயில் வளர்ந்த ஒருவன் தமிழ் கெட்ட வார்த்தைகளைவிட ஹிந்தி கெட்ட வார்த்தைகளையே அதிகம் உபயோகிப்பான். கௌதமின் Trade Mark-ஆன சென்னை கெட்ட வார்த்தை சென்னைவாசிகளைப் போல் மற்றவர்களுக்கு அவ்வளவு இயல்பாக, சரளமாக வராது என்பது என் அவதானிப்பு. தர்க்கப் பிழைகளையெல்லாம் சுட்டிக்காட்டுகிறேன்! Buzz என்னை மிகவும் கெடுத்துவிட்டது 😉

ஹாலிவுட் படங்களை சிலாகிக்கும் பலர் அதுபோன்ற முயற்சிகள் தமிழில் வந்தால் ஏற்றுக் கொள்வதில்லை. உண்மையில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை. இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு ஒரு Attitude வேண்டும். ‘A’ Certificate கொடுத்த படத்தில் ஆபாசக் காட்சிகள் உள்ளன என்று சொல்வதே முட்டாள்த்தனம். பலர் குடும்பங்களுடன் வந்திருந்தனர், காதலியுடன் வந்திருந்தனர். ஒருவர் மனைவி, பதின்ம வயதில் உள்ள மகனையும் மகளையும் கூடிக்கொண்டு வந்திருந்தார். இவர்களைத்தான் முதலில் கண்டிக்க வேண்டும். இயக்குனரை அல்ல. கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு வந்திருந்தவரை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முக்கியக் கட்டங்களில் எல்லாம் குழந்தை அழுதுகொண்டே இருந்தது.

இந்தப் படத்தை கௌதம் எடுத்ததுதான் பெரிய தப்பு என்பது போலாகிவிட்டது. பாய்ஸ் படத்தை ஷங்கர் எடுத்ததுபோல, கே.பி மன்மத லீலை எடுத்தது போல்! இதையே செல்வராகவன் அல்லது ஓர் அறிமுக இயக்குனர் எடுத்திருந்தால் நிச்சயம் இந்த அளவுக்கு அவதூறுகள் இருந்திருக்காது என நினைக்கிறேன். பாய்ஸ், துள்ளுவதோ இளமை, மன்மதன் போன்ற படங்களில் தேவையின்றி கிளர்ச்சிக்காக திணிக்கப் பட்ட காட்சிகள் இருக்கின்றன. இதில் அப்படி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை எதிர்ப்புகள் வந்ததால் சில காட்சிகளை நீக்கி விட்டார்களா என்று தெரியவில்லை. ஆயிரத்தில் ஒருவன் படத்தை முதல் நாள் பார்த்துவிட்டு இரண்டாம் நாள் பார்க்கும்போது சில காட்சிகள் நீக்கப்பட்டிருந்து எனக்கு பிடித்திருந்தது. முதல் நாள் பார்க்காததன் விளைவுகள் இவை.

சிகப்பு ரோஜாக்கள் வெளிவந்த புதிதில் பாரதிராஜா இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களைத் தொடர்ந்து இப்படி ஒரு படத்தை சாதாரண ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்பது ஐயமே. அதுபோல் கௌதமிடமிருந்து இன்னொரு விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் போன்ற படங்களை எதிர்பார்த்துச் சென்று ஏமாந்தவர்களே இதை நன்றாக இல்லை, கேவலமாக இருக்கிறது என்று சொல்கின்றனர். ஒரு படைப்பாளி எப்போதும் ஒரே மாதிரி படங்களைத்தான் எடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது.

இதுபோன்ற பாலிவுட்டில் சகஜமாகிவிட்டது. மதூர் பண்டார்க்கரின் சாந்தினி பார், பேஜ் த்ரீ, ஃபேஷன், திபாகர் பேனர்ஜீயின் Love. Sex aur Dhoka போன்ற படங்களை சாதாரண தமிழ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது தமிழ்த்திரையுலகில் இன்னும் ஆரோக்கியமான சூழல் உருவாகவில்லை என்பதையே காட்டுகிறது. பத்து ஆண்டுகள் கழித்து இப்படத்தைப் புரிந்துகொள்வார்கள் என நம்பலாம்.

படம் முடிந்து அரங்கில்  பல ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்த பல பெண்களைப் பார்க்கையில் சுகன்யாக்களும், சந்த்யாக்களுமாகவே தெரிந்தனர் . யுத்தம் செய் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை பெண்களை கவனமாக இருக்கச் சொல்லியிருக்கும் படம்.

Kudos to Gautam Vasudev Menon for the Daring Attempt 🙂 and Happy Birthday too 🙂

P.S: சென்ற வார விகடனில் ஆண்களின் அல்லல்களை எழுதியிருந்த பாரதி தம்பியைத்தொடர்ந்து இப்போது ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளைக் காட்டியிருப்பது ஆண்களுக்குக் குரல் கொடுக்கக் கூட ஆட்கள் இருக்கிறார்களே என்று ஆறுதலாக இருக்கிறது!

 
11 Comments

Posted by on February 26, 2011 in Movie Reviews, Movies

 

ஞானமுள்ள மூர்க்கன்

சொர்க்கத்தின் மார்க்கத்தைக் காட்டவல்ல கலைவடிவில்
தர்க்கங்களைப் பற்றி குதர்க்கமாக தர்க்கம் செய்து
தனது ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்பவன்
தீர்க்கமான ஞானம் இருப்பினும் மூர்க்கன்!

 
5 Comments

Posted by on February 18, 2011 in கவிதை

 

பூலோக மேனகை

தவம் பூண்டிருந்த விஸ்வாமித்திரனை
சலனப்படுத்தி வசீகரித்தாள் இந்திரலோக மேனகை
சலனங்கள் கொண்ட என்னை வசியம்செய்து
தவமிருக்கச் செய்கிறாள் ஒரு பூலோக மேனகை !

 
4 Comments

Posted by on February 16, 2011 in கவிதை, Chummaa

 

தனி ஒரு அன்றில்

ஆப்பிள் மூலம் ஆதாம் ஏவாள் ஆரம்பித்த காதல் எனக்கோ இப்போது ‘ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்றாகிவிட்டது. காதலர்களின் செல்ஃபோன் சிணுங்கல்களைக் கேட்டாலோ பார்த்தாலோ சிக்கு புக்கு ரயில் பாட்டில் பிரபு தேவாவின் காதில் வருவதுபோல் புகைதான் வருகிறது.பொது இடங்களில் கட்டிக்கொண்டு  செல்லும்  காதலர்களைப் பார்த்தல் மௌனம் பேசியதே சூர்யா போல் நன்கு சாத்தலாம் போல் ஆகிறது. ‘காதல் என்ற ஒற்றை வார்த்தைதான் மனிதனை இயக்குகிறது’, ‘உலகெல்லாம் ஒரு சொல்; ஒரு சொல்லில் உலகம் – காதல்’, ‘நம் காதலை இந்த உலகமே தடுத்தாலும், அந்த ஆண்டவனே நினைத்தாலும் பிரிக்க முடியாது’, இப்படியெல்லாம் சினிமா வசனங்களை டிவியில் கேட்டால் கடுப்பாகி அணைத்து விடுகிறேன். இத்தனைக்கும் அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை!  ஆனால் இதே வசனங்களை (இதைவிட சில மொக்கையான வசனங்களைக்கூட) ஒரு காலத்தில் உருகி உருகி ரசித்திருக்கிறேன்.

என் பதின்ம வயதின் ஆரம்பத்தில் காதல் என்றாலே பள்ளியில் கெட்ட வார்த்தை, A Taboo (நல்ல வேளையாக வீட்டில் இல்லை) . அப்புறம் எங்கிருந்து காதலர் தினம்? பெரும்பாலும் சீருடைகளில் கழியும் காதலர் தினங்கள், ஒரு முறை சனிக்கிழமை வந்தது. சனிக்கிழமை கலர் ட்ரெஸ். ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்திற்கு ஒரு Colour Code இருக்கும். அந்த வருடம் என் Favorite Colour வயலெட். அந்தக் கலரில் என்னிடம் சட்டை எதுவும் இல்லாததால் நான் வேறு கலர் சட்டை அணிந்து சென்றேன். ஆனால் வயலெட் & வெள்ளை சுடிதார் அணிந்து வந்த ஒரு சொர்க்கத்திடம் மனம் சென்றது. பள்ளிக் காலத்தின் சிறந்த தருணங்கள் அவளை எண்ணியே கழிந்தன. காதல் பாடல்களின் வரிகளை உன்னிப்பாய்க் கேட்டு என் கனவுகளில் அவளுடன் டூயட் பாடினேன். பல காதல் காட்சிகளை ரசித்து நாயகன் நாயகியாக எங்களை நினைத்து மனதில் ஒத்திகை பார்த்துள்ளேன்.

பின் கல்லூரி வந்ததும் நாயகிகள் மாறினர். ஆனால் பாடல்களும் காட்சிகளும் மாறவில்லை. ஆனால் அவை  ‘கன்றுக் காதல்’ (அதாங்க Calf Love!) என்று பின்புதான் புரிந்தது. ‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்று சொன்னவன் மட்டும் கையில் கிடைத்தால் அவனைக் கட்டிவைத்து ‘சுறா’ படத்தை பார்க்கவைக்க வேண்டும். அந்த அபத்தமான பழமொழியை நம்பிக்கொண்டு நண்பர்களின் காதலுக்கு தூது செல்வது, ஆலோசனை சொல்வது, பரிசுகள் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது போன்ற அரும்பணிகள் செய்தும் என் காதல் துளிர்க்கக்கூட இல்லை. காதல் வயப்படாமலே காதல் ஆலோசகன் ஆகியிருந்தேன். இப்படியே நான்கு காதலர் தினங்களும் தனியாகவே கழிந்தன. பிறகு கல்கத்தாவிற்கு முதன் முதலில் ஒரு காதலர் தினத்தின் முதல் நாள் வேலையில் சேர்ந்தேன். தென்னிந்தியப் பாரம்பரியப் பெண்களைத் தவிர்த்து என் கண்கள் மற்ற பெண்களின் மீது ஏனோ விழவில்லை. அப்படியே விழுந்தாலும் அவர்கள் மீது பதிய மறுத்தன.

எல்லாம் நன்மைக்கே! ஆர்க்குட், ஃபேஸ்பூக் போன்ற தளங்களில் Relationship Status – Single-ஆக இருப்பதன் அனுகூலங்கள் கிடைத்தன. என்னுடைய தோழியர் வட்டத்தைப் பார்த்து நான் Single-ஆக இருப்பதைப் பலர் நம்ப மறுத்தனர். கடலுக்கு fishing net, காதலுக்கு internet என்று வலையிலும் வலைவீசி என் காதல் தேவதையைத் தேடித் தேடி சலித்து விட்டது. இதற்கு காரணம் ரசனை என்னும் ஒரு புள்ளியில் இதயங்கள்  இணைய வேண்டும் என்று நினைக்கும் எதிர்பார்ப்புகளாக இருக்கலாம். இதுபோல் ஒரு பெண் எதிர்பார்த்தால் என்னைப் போன்றவர்கள் அம்பேல்! இப்போது என் பதின்ம வயது தொடங்கி பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போல் கழிந்துவிட்டது. காதல் வயப்படாமல் இருப்பதை விட காதலித்துத் தோற்பது சிறந்தது என்பது எவ்வளவு அனுபவப்பூர்வமான உண்மை.

வீட்டில் பெண் தேடும் படலம் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் காதல் திருமணத்திற்கு எங்கள் வீட்டில் எப்போதும் மறுப்பு இருந்ததில்லை. குறைந்த பட்சம் பெண்ணாக மட்டும் இருந்தாலே போதும் என்று என் விருப்பத்திற்கே விட்டுவிட்டனர். ‘இவனுக்கு பல்பு எரிந்து மணி அடிக்கும் வரையெல்லாம் என்னால் பொறுக்க முடியாது’ என்று தம்பியும் கூறிவிட்டான். அம்மாவின் வேகத்தைப் பார்த்தால் அடுத்த காதலர் தினத்துக்குள் என் பெயரை தன் வலப்பக்கம் சேர்த்துக்கொள்ள ஒருத்தி வந்துவிடுவாள் போலிருக்கிறது. ஆனால் என் நெஞ்சின் இடப்பக்கம் பழகாத ஒரு பெண்ணின் பெயரை சேர்ப்பேனா என்பது சந்தேகமே. ஒரு வண்ணத்துப்பூச்சியைத் துரத்திக்கொண்டே  போனால் அது நம் கையில் அகப்படாமல் நாம் வெறுத்துப் போய் திரும்பும்போது அது நம் தோளில் வந்து அமர்வதுபோல், நான் பல வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கும் காதல் எனக்குக் கிடைக்காமல், இப்போது நான் சலிதுவிட்டபோது அது தானாக வந்தாலும் அதன் மீதுள்ள மோகம் தணிந்து விடாமல் இறுதி வரை தனி ஒரு அன்றில் போலவே இருந்து காதலை மட்டும் காதலித்துக் கொண்டிருக்க ஆசை (அப்பாடா டைட்டில கொண்டுவந்தாச்சு ;-))

ஆனால் இப்போது ஒவ்வொரு முறையும் விண்ணைத்தாண்டி வருவாயா பார்க்கப் பார்க்க நம்மையும் ஒரு காதல் போட்டுத் தாக்காதா என்று ஏங்க வைக்கிறது !

HAPPY VALENTINE’S DAY !!! 🙂

ரசனை என்னும் ஒரு புள்ளியில் இதயங்கள்  இணைய வேண்டும் என்று நினைக்கும்
 
7 Comments

Posted by on February 14, 2011 in Chummaa

 

யுத்தம் செய்

இரண்டாம் நாளே பார்த்துவிட்டேன். இப்போதுதான் நேரம் கிடைத்தது.


படம் பார்க்கச் சென்ற ஒரே காரணம் மிஷ்கின் மட்டுமே. (மூன்று காரணங்கள்: 1.மிஷ்கின் 2.மிஷ்கின் 3.மிஷ்கின் என்று சொன்னால் CSKவைக் காப்பி அடித்தது போல் ஆகிவிடும்) கதாநாயகன் சேரனுக்கு போலீஸ் வேடம் என்றதும் சிரிப்புதான் வந்தது. ராமன் தேடிய சீதையில் நவ்யா நாயரிடம் அடிவாங்கும் அப்பாவி இளைஞனாக மட்டுமே ஏற்றுகக் கொள்ளக் கூடிய தோற்றம். பாடல்களை முன்பே கேட்கவில்லை. யாரோ புதிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், முக்கியமாக
கதாநாயகி என்று யாரும் இல்லை. இப்படி எந்தவித நிறைகளின்றி எதிர்பார்ப்புமின்றி போன என் நம்பிக்கையைக் குலைக்காமல் மேலும் ஆச்சரியங்களில் ஆழ்த்திவிட்டார் இயக்குனர் மிஷ்கின்.

இப்படி ஒரு படம் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டது என்று சொல்ல முடியாது. இப்படி ஒரு படத்தை நான் இதற்குமுன் பார்த்ததே இல்லை. காதலை மட்டுமே இன்னும் நம்பியிருக்கும் தமிழ்ச்சினிமாவில் இப்படம் நிச்சயம் ஓர் ஆறுதல், த்ரில்லர் திரைப்படங்களில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். ஆரம்பம் தொடங்கி இறுதி வரை மர்மம் கொண்ட த்ரில்லர் வகை திரைப் படங்களை தமிழில் பார்த்ததில்லை. த்ரில்லராக இருந்தாலும் அதிலும் காதலை நுழைத்து டூயட் பாடலைச் செருகி, கிளர்ச்சியூட்டும் காட்சிகளைப் புகுத்தி ஒரு வழி செய்துவிடுவார்கள். ஆனால் மர்ம முடிச்சுகள் கொண்ட த்ரில்லரை அதன் அழகியல் கெடாமல் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியதுபோல் இயக்கியதற்கு மிஷ்கினுக்கு ஒரு பூங்கொத்து! (இன்னும் எத்தனை நாளைக்குதான் பூச்செண்டையும் பூங்கொத்தையுமே கொடுக்கறது  புதுசா ஏதாவது கொடுக்கணும் 🙂 )

போலீஸ் கதாப்பாத்திரம் என்றால் திடகாத்திரமான உடலும், எப்போதும் விறைப்பாக இருந்து கர்ஜிக்கும் குரலும் இருக்கும் என்ற மரபைத் தகர்த்திருக்கிறார் மிஷ்கின். சிபிசியிடிக்கு மூளையும் Presence of mind-ம் மட்டுமே அவசியம் உடல் அல்ல என்று ஜேகே கதாப்பாத்திரத்தில் சேரன் கச்சிதமாகப் பொருந்தி உணர்த்தியுள்ளார். மம்மூட்டியையும் அவ்வப்போது கமலையும் இதுபோன்ற கதாபாத்திரத்தில் ஜோலித்துள்ளனர். இப்போது சேரனும் மிளிர்கிறார். வழக்கமான Melodramatic நடிப்பை மூட்டை கட்டிவைத்து செய்து முழுக்க முழுக்க தன்னை ஓர் இயக்குனரின் நடிகனாக மிஷ்கினிடம் ஒப்படைத்து அடுத்த பூங்கொத்தைப் பெறுகிறார் சேரன். குறிப்பாக நகவெட்டியை மட்டும் வைத்துக்கொண்டு வரும் சண்டை கலக்கல். ஆனாலும் வழக்கமான சோகமூஞ்சி சேரன் இறுதியில் வரும் தங்கை செண்டிமெண்ட் காட்சியில் தலைநீட்டுகிறார். But not an issue.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்தாலே த்ரில்லர் படங்கள் 75 %  வெற்றி பெற்றுவிடும். ஈரம் மற்றும் யாவரும் நலம் நல்ல உதாரணங்கள். இவ்விரு படங்களையும் மிஞ்சி விட்டது இப்படத்தின் பிரமிப்பூட்டும் பின்னணி இசையும், துல்லியமான ஒளிப்பதிவும் கோணங்களும் . புதியவர்களான கே (கார்த்திக்?) மற்றும் சத்யாவிற்கு முறையே பூங்கொத்துகள். இசையையும் ஒளிப்பதிவையும் மட்டும் சிலாகிக்கும் பலர் ஒலிப்பதிவையும், படத்தொகுப்பையும்  மறந்துவிடுகின்றனர். ஒலிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக ஒரே இடத்தில் காட்சிகள் அன்றும் இன்றுமாக மாறும்போது  அபாரம். இதேபோல் வேறு சில படங்களில் வந்திருக்கிறது. யாரேனும் நினைவு படுத்தினால் நல்லது.

தன் முந்தைய படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பதில் புதியவர்களை அறிமுகப் படுத்திஇருந்தாலும்  அவற்றை விட (நந்தலாலாவின் பின்னணி இசையைக் கணக்கில் கொள்ளவில்லை) சிறப்பாகவே அமைந்துள்ளது. அவரது வழக்கமான பாணியில் பாடல் இடம் பெற்றிருந்தாலும் இப்படத்தில் இடைச்செருகல் போல் தெரியவில்லை. கதையை நியாயப் படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. அதுவும் படு சீரியசாக போய்க்கொண்டிருக்கும் படத்தில் சாரு தோன்றும் காட்சிகள் நல்ல நகைச்சுவை. அதுவும் ஆர்மோனியம் வாசிக்கும் அந்த விரல்கள்! சிக்கில் ஷண்முகசுந்தரமாக சிவாஜி நாதஸ்வரம் வாசித்ததை எல்லாம் தூள் தூள் ஆக்கிவிட்டார் சாரு 😉 இருந்தாலும் அமீருக்கு இது தேவையா??

Casting பிரமாதம். வழக்கமாக குணசித்திர வேடங்களுக்கேன்றே சில default நடிகர்கள் தமிழில் இருந்து வந்தனர். நாகேஷ், மனோரமா, தேங்காய் சீனிவாசனைத் தொடர்து சிவகுமார், ஜெய்ஷங்கர், விஜயகுமார், லக்ஷ்மி, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயசித்ரா, டெல்லி கணேஷ். பின் நாசர், பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி, டெல்லி குமார், கிட்டி, கலைராணி, ஜானகி சபேஷ், ராஜசேகர்.

அதுபோல் இப்போது சில புதியவர்கள் ஆச்சரியப் படுத்துகின்றனர். முதலில் ஜெயப்ரகாஷ். பசங்க, நாடோடிகள், வம்சம், நான் மகான் அல்ல என்று மனிதர் எந்த வேடத்திலும் பிச்சு உதறுபவர். இவரைப் பற்றி பதிவர்/நண்பர் கார்க்கி ஒரு பதிவு எழுத முற்பட்டது குறிப்பிடத்தக்கது ஆடுகளம் படத்தில் நல்ல கதாபாத்திரம் தரப்படவில்லை குறித்து மிகவும் வருந்தினேன். இறுதியில் அவர் பேசும் நாலு வரி வசனம் நறுக் என்று இதயத்தில் குத்துகிறது. அக்காட்சியில் காமிரா கோணமும் அருமை. அடுத்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன். ஈரம் படத்தில் எதிர் வீட்டு Auntyயாக வந்து நீருக்கு இரையாகி, பாஸ் என்கிற பாஸ்கரனில் நகைச்சுவை அம்மாவாக வந்தாலும் இன்னும் என்னாலும் என் நண்பர்களாலும் விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸியின் அம்மா  என்றே எப்போதும் அறியப்படுவார். ஆனால் இனி ‘யுத்தம் செய்’ இவரது அடையாளமாக ஆகப் போகிறது. அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். ரோஹிணியைத் தொடர்ந்து இவருக்கும் மொட்டை போட்டுவிட்டார் மிஷ்கின். ஆனால் வீண் போகவில்லை. இனி குணசித்திர அப்பா அம்மா வேடங்கள் என்றால் கூப்பிடு ஜெயப்ரகாஷ் லக்ஷ்மியை என்ற நிலைமை வந்துவிடும் .

செல்வா என்ற கதாநாயகனை (கோல்மால், சக்திவேல் படங்கள் ஞாபகம் வரவில்லையா? ராஜாவின் அருமையான ‘மல்லிக மொட்டு மனச தொட்டு’ என்ற பாடலில் வருவாரே அவரேதான்! டாக்டர் ராஜசேகரின் தம்பி) பலரும் மறந்திருக்கையில் இப்படத்தில் மீண்டும் வந்திருக்கிறார் வில்லனாக. அதேபோல் யுகேந்திரன். மாணிக்க விநாயகம் இதுபோன்ற ஒரு பாத்திரத்திற்கு எப்படி ஒப்புக் கொண்டார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இவரும் நன்றாகவே செய்திருக்கிறார். பிரசன்னாவையும் பாண்டியராஜனையும்  வில்லன்களாக யாராவது நினைத்திருப்பார்களா? மிஷ்கின் மீது இப்போதும் அந்த வியப்பு இருக்கிறது! கொலைசெய்யப் படும் ஒரு மகனின் அம்மாவாக ஒரு சினிமா வாடையே இல்லாத ஒரு பெண் அசத்தியுள்ளார். சேரனின் உதவியாளராக வரும் தீபா ஷாவின் முகம் முதலில் பொருந்தாததுபோல் இருந்தாலும் பிறகு பழகிவிட்டது. தமிழ் முகம் உள்ள பெண்களே கிடைக்கவில்லையா? சேரனின் சீனியராக வரும் நரேன் (‘ஆடுகளம்’ ரத்தினசாமி) தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

ஜெயமோகன் கதைகளைப் படித்தாலே சிறுகதை எழுதலாம் என்று எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தம் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுபோல்  மிஷ்கின் படங்களைப் பார்த்து திரைப்பட இயக்கம் கற்றுக் கொள்ளலாம்! அந்த அளவுக்கு காட்சிக்குக் காட்சி பிரமிக்க வைக்கிறார். தன் வழக்கமான Longshots ,கால்களின் close-up, top angle -கள் என்று கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் மிஷ்கின். தகேஷி கிடாநோவிடமிருந்தும் அகிரா குரோசாவாவிடமிருந்தும் சுட்டுவிட்டார் என்று பல அறிவுஜீவிகள் சொல்லலாம். நந்தலாலாவின் மூலம் கிகுஜிரோ என்பதுபோல் இதன் மூலமும் ஒரு கொரியப் படம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. நான் அதைப் பார்க்கவில்லை. அதனால் சுடப் பட்டதா என்று தெரியவில்லை. கமலும், மணிரத்னமும் சுடவில்லையா? தான் வியந்து ரசித்த ஒன்றைத் தம் நாட்டு மக்களும் ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கப் பட்டாலும் அதை தைரியமாக ஒப்புக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம்.

படத்தில் குறைகள் என்று எனக்குத் தெரிந்தது நகவெட்டி சண்டைக் காட்சியில் சேரனை அடிக்க வருபவர்கள் ஒருவராக, இருவராக, மூவராக என்று அடிமேல் அடிவைத்து நகர்வது
சொல்லிக் கொடுத்த Choreography போல் உள்ளது. அதேபோல் இறுதியில் லக்ஷ்மி நடக்கும் போதும் உள்ளது. (நந்தலாலா விமர்சனத்தில் சுஹாசினி சொன்னது!). தனது பிரதேயக்மான காட்சிகள் என்று கால்களையும் Long Shot களையும் மிஷ்கின் தன் அடுத்த படத்திலும் காட்டினால் சலிப்பு ஏற்பட்டுவிடும். இறுதிக் காட்சியின் லொகேஷன் அஞ்சாதே படத்தில் வருவது போலவே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். சமீபத்தில் வெளிவந்த ஈசன் படம் போல் உள்ளது என்று பலரும் சொல்கின்றனர். நான் பார்க்கவில்லை. ஆனால் அதைவிட பன்மடங்கு நன்றாகவே இருக்கிறதாம். ஈசனைப் பார்க்க வேண்டும்.

அந்தக் கடைசி Long-shot ஏதோ ஓர் அயல் சினிமாவை நினைவூட்டினாலும் கண்கள் பனிக்கச் செய்தது. The film deserves Standing Ovation. நூறு சதவிகித நிறைவை அளித்தது. நன்றி மிஷ்கின் 🙂

மிஷ்கின் தமது ஒளிப்பதிவாளர்களை மிகவும் நேசிப்பவர் போலிருக்கிறது. ஒரு கதாபாத்திரத்திற்கு தன் முந்தைய படங்களின் ஒளிப்பதிவாளரான மகேஷ் முத்துஸ்வாமியின் பெயரை வைத்ததோடு மட்டுமின்றி, படம் முடிந்து “A Film by Mysskin” என்று போடாமல் ‘ஒளிப்பதிவு-சத்யா’ என்று போட்டது பாராட்டத்தக்கது. இறுதி வரை மிஷ்கின் பெயரே வரவில்லையே என்று நண்பன் சொன்னான். Longshot-ல் கால்களின் Close-up காட்டியதிலேயே ‘இயக்கம் -மிஷ்கின்’ என்ற குறியீடு உள்ளதே என்றேன் அவனிடம் 🙂

ஒரு படமாக ரசிக்க முயன்றாலும் இதுபோன்ற குற்றங்கள் நம்மைச் சுற்றி நடக்கின்றன
என்று நினைக்கையில் திக் என்கிறது. பெண்கள் அந்நியர்களிடம் மட்டுமின்றி அன்னியோன்யமானவர்களிடமும் கவனமாக செயல்பட வேண்டுமென்ற எச்சரிக்கை மணியை சற்று பலமாகவே அடிக்கிறது.

பி.கு : த்ரில்லர் படங்கள் மா…ஆஆஆதம் போலிருக்கிறது. பயணம், நடுநிசி நாய்கள், ஆரண்ய காண்டம் என்று வரிசையாக இம்மாதம் சினிமா ரசிகர்களுக்கு விருந்து. ‘கோ’ கூட அயன் போல் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம். அடுத்து வரும் படங்கள் குறிப்பாக நடுநிசி நாய்கள் இந்த அளவு இருக்குமா இல்லை இன்னும் சிறப்பாக இருக்குமா இல்லை கௌதம்  காதலைச் செருகி சொதப்பிவிடுவாரோ என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
12 Comments

Posted by on February 9, 2011 in Movie Reviews, Movies

 

My Most Visited Websites A-Z

Listed below are the most used websites by me against each alphabet when typed in the address bar.

A – http://azhiyasudargal.blogspot.com/
B – http://baradwajrangan.wordpress.com/
C – http://charuonline.com/blog/ (Wonder my blog doesn’t come first!)
D – http://www.dinamalar.com/
E – http://enakkul-kavidhai.blogspot.com/
F – http://www.facebook.com/
G – http://www.google.co.in/
H – http://www.hdfcbank.com
I – http://irctc.co.in/
J – http://www.jeyamohan.in/
K – http://karkibava.com/
L – http://www.licindia.in/
M – http://www.mudaliarmarriages.com/
N – http://www.nee-kelen.blogspot.com/
O – http://www.orkut.co.in/
P – http://pitchaipathiram.blogspot.com/
Q – http://www.qualcomm.co.in/
R – http://www.raaga.com/
S – http://sirumazai.wordpress.com/
T – http://www.twitter.com/ (Followed by http://www.thecinema.in/ & http://www.torrentz.com/)
U – http://www.uyirvani.com/
V – http://vidhoosh.blogspot.com/
W – http://www.writercsk.com/
X – http://www.xlri.ac.in/
Y – http://www.youtube.com/
Z – http://www.zhagaram.blogspot.com/

 
2 Comments

Posted by on February 3, 2011 in Chummaa