RSS

Category Archives: Music

இக்குதே கண்கள் விக்குதே

கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, சின்மயி, ஷ்வேதா பாடிய மூன்று மெலடிகள் காதுகளில் ரீங்காரமிடும் வகை. அதிலும் அதிகமாக கேட்டது ஷ்ரேயா-ஹரிஹரன் பாடிய இக்குதே கண்கள் விக்குதே பாடல்தான். Best of the Album.

முன்பெல்லாம் ஒரு ஆல்பத்தில் ஷ்ரேயா கோஷால் பெயருள்ள பாடலைத்தான் முதலில் கேட்பேன். அதைக் கேட்டால் மற்ற பாடல்களைக் கேட்காமல் இக்னோர் செய்துவிடுவதால் இப்போதெல்லாம் எல்லாப் பாடல்களைக் கேட்டபின் ஷ்ரேயாவின் பாடலை இறுதியாக கேட்கிறேன். ஆனாலும் அதுதான் பிடிக்கிறது. கொடியசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடியசைந்ததா என்பதுபோல் சிறந்த பாடலை ஷ்ரேயாவிற்குக் கொடுக்கிறார்களா இல்லை ஷ்ரேயா பாடுவதால் அது சிறந்த பாடலாகி விடுகிறதா? 😉

காதல் சொட்டச் சொட்ட பார்த்திபன் எழுதிய வரிகள் மிகவும் கவர்ந்தன.

இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

அட்டையாய் ஒட்டியே
உணர்ச்சியை உறிஞ்சியே
வெறும் சக்கையாய் சாய்கிறேன்
நீ துப்பிடும் பார்வையால்

அதிகாலை செய்தித்தாள் போலே
நுழைந்தாயே… கதவோரம்
ஓ.. நிழல் தானே என நான் நடந்தேனே
தொடர்ந்தாயே… அழகாக

நிழலுக்கும் புவியிர்ப்பு விசை கொண்டாயே
மிதக்கும் நிலை தரை மீதே நான் கொண்டேனே

அன்பை வெடிக்க வைத்து என்னை இழக்க செய்த
கண்ணே கன்னி வெடிகுண்டே

புடவைக்குள் ஒரு போர்க்களம்
கூறாயுதங்கள் ஓராயிரமே இவளிடம்
வெல்வதோ மடி வீழ்வதோ
போரிடுவதே பேரின்பமே பெருந்தவம்

இருட்டாக்கும் உன்னால் மின்வெட்டாய்
அணைத்தாயே மணி நேரம்
ஓ.. மின்சாரம் உற்பத்தி செய்தோம்
ஏராளம் இதழோரம்

கவனம் கொள் கணிதத்தில் என்னை கொல்லாதே
கணக்கின்றி வழக்கின்றி இன்பம் துய்ப்போமே

மறுகன்னம் காட்டி முத்தம் வாங்கித் தின்னும்
சிலுவைக் காதல் பெண்ணே…

(இக்குதே)

Advertisements
 
1 Comment

Posted by on November 10, 2011 in Music, Shreya Ghoshal

 

கங்கை நீரும் கானல் நீரும்

கல்லூரிப் பருவம் வரை தீவிர ரஹ்மான் ரசிகனாக இருந்த என்னை இளையராஜாவின் பக்தனாக மாற்றிய பாடல்களுள் ஒன்று. மனம் சரியில்லாத ஒரு நாள் இந்தப் பாடலைக் கேட்டபோது மயிலிறகால் வருடிய இதம் கிடைத்தது. அதிலிருந்து எப்போது மனது பாரமாக இருந்தாலும் நான் தேடும் சுமைதாங்கி ராஜாவின் இசையில் முதலில் இந்தப் பாடல்தான் கேட்பேன். சிந்து பைரவி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். குறிப்பாக இரண்டாம் இடையிசைச்சரத்தில் வரும் குழலோசை – Ultimate. வாலியின் வரிகளும் ராஜாவின் இசையும் இணைந்து மனதை இலேசாக்கும். பிரியமானவரின் தோளில் சாய்ந்துகொண்டு கவலைகளை மறப்பது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.

பல வருடங்களாக இப்பாடலின் ஒரு வரியில் ஒரு சந்தேகம் இருக்கிறது. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி என்று ஒரு வரி வரும். இந்த வரி ஒரு பொதுவான உண்மை. கங்கை நீரால்தான் தாகத்தைத் தீர்க்க முடியும், கானல் நீரால் ஒருபோதும் முடியாது. அப்படியிருக்கையில் இந்த வரி மிகச் சாதாரணமாக இருக்கிறது. கதையின்படி மனைவியால் சந்தோஷத்தை இழந்த நாயகன் வழியில் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் தன் மன பாரத்தை இறக்கி வைக்கிறான். வாழ்க்கைத்துணையை கங்கை நீருக்கும், வழித்துணையை கானல் நீருக்கும் அல்லவா உருவகப் படுத்தியிருக்க வேண்டும்? அதுவே கங்கை நீரால் தீராத தாகம் கானல் நீரால் தீர்ந்ததடி என்றிருந்தால் கவித்துவமாக இருந்திருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன் நண்பர் மகேஷ் தன் பதிவொன்றில் இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தபோதும் இதைப் பின்னூட்டமாக இட்டேன். இப்போது அவர் வலைப்பூவை நீக்கிவிட்டார். விகடன் மேடையில் வாசகர் கேள்விகளுக்குப் பதிலளித்த கே.பி.யிடம் கேட்கத் தோன்றியது. சோம்பேறித்தனத்தால் எழுதிப் போடவில்லை. ட்விட்டரில் மதன்கார்க்கியிடம் இதுபற்றி கேட்டபோது என்னுடன் அவர் உடன்பட்டார். வாலியைச் சந்திக்க நேர்ந்தால் இந்தச் சந்தேகத்தைக் கேட்கச் சொல்லியிருக்கிறேன். பார்ப்போம்!

என்.சொக்கனின் தாள்/தாழ் சந்தேகத்திற்குப் பிறகு இதைப் பதிவு செய்யத் தோன்றியது.

 
10 Comments

Posted by on October 23, 2011 in Chummaa, Ilayaraja, K.Balachander, Music

 

Happy B’day Asha Bhonsle

இன்று 78வது பிறந்தநாள் கொண்டாடும் பாடகி ஆஷா போன்ஸ்லேவின் ஆகச்சிறந்த பாடலாக நான் கருதுவது. எப்போதுமே அதிரடியாக பாடும் ஆஷா, தன் அக்கா லதா மங்கேஷ்கரைப் போல் மிக மென்மையாகவும் இனிமையாகவும் பாடிய பாடல். தேசிய விருதுக்கான எல்லா தகுதிகளையும் கொண்ட பாடல்.

அதேபோல் குல்ஸாரின் வரிகள் அபாரமானவை. தன்னை ஒரு பெண்ணாக பாவித்து எழுதியிருப்பார் என எண்ணுகிறேன். பிரிந்து போன காதலனுக்குக் காதலி எழுதுவது போன்ற பாடல். கூட்டுக் குடும்பத்தில் வாழும் மனைவி ஒருத்தி வெளியூரில் இருக்கும் தன் கணவனுக்குக் கடிதம் எழுதுவது போல் லா.ச.ரா. எழுதிய ‘பாற்கடல்’ சிறுகதை போல.

 
Leave a comment

Posted by on September 8, 2011 in Birthdays, Music

 

வாடா பின்லேடா

மங்காத்தாவில் ‘வாடா பின்லேடா’ என்ற கருத்தாழமிக்க ஒரு பாடலைக் கேட்டதுமே பிடித்துவிட்டது. பாடலாசிரியர் வேறு யாராக இருக்கும்? ‘பத்மஸ்ரீ’ கவிஞர் வாலிதான்! என்னமாய் எழுதி இருக்கிறார்! தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கிறேன் :)பாய்ஸ் படத்தில் வரும் முன்னாவின் அறிமுகக் காட்சியில் வரும் கவிதையை எழுதியவரும் ‘வாலி’தானா?

பாடலைப் பாடிய மிர்ச்சி சுச்சி – செம்ம ஹாட்டு மச்சி. பாடகர் க்ரிஷ்ஷின் குரல்கூட வித்தியாசமாக உள்ளது. வரிகள் ஒவ்வொன்றும் மணி மணியாய் உள்ளன. உதா – ‘நூலாடை நிற்காத இடுப்பு; நீ வந்து சோறாக்கும் அடுப்பு’. – Marvelous! மேலும் வரிகளுக்குப் பாடலைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். Beautiful… Wonderful… Marvelous…(ஆரண்ய காண்டம் ஜாக்கி ஷ்ராஃப் குரலில் படிக்கவும் ;-)) பின் லேடனைக் கொல்வதற்கு முன்னமே எழுதப் பட்டிருக்க வேண்டும். சென்சாரில் கத்தரிக்கப் படாமல் முழுவதுமாக திரையில் வருமா என்பது சந்தேகம்தான்.

வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கி பாடலாசிரியராக வந்தாலும் அவரது வாரிசு ‘ஹைக்கூ கார்க்கி’ வளர்ந்து பாடலாசிரியராக வந்தாலும் வாலி இதுபோன்ற பாடல்களை இளமை ததும்ப எழுதி தமிழ்த் துண்டு ஆட்டுவார் 🙂

சஹானாவிற்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த தெய்வீகமான ‘தர்மவதி’ ராகத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. இதை அருமையான மெலடி பாடலாக இசையமைக்காமல் யுவன் இப்படி கில்மா பாடல் ஆக்கிவிட்டாரே வருத்தம் என்ற இருந்தாலும் இடையிசை துணுக்குகளில் அதைச் சரி செய்து விட்டார். ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ (மன்மத லீலை) மீண்டும் மீண்டும் வா (விக்ரம்), ஒட்டகத்தக் கட்டிக்கோ என்று அவர் முன்னோடிகள் கூட இதுமாதிரி Erotic பாடல்களுக்கு இந்த ராகத்தில் இசையமைத்திருக்கிறார்களே!

தர்மவதியில் அமைந்த சில பாடல்கள்

ஒரு நாள் இரவு – காவியத்தலைவி
என்னுள்ளில் எங்கோ – ரோசாப்பூ ரவிக்கைக்காரி (Evergreen ! Esp 2nd interlude)
இளஞ்சோலை பூத்ததா – உனக்காகவே வாழ்கிறேன் (Simply ILAYARAJA)
தத்தித்தோம் – அழகன்
எழுதுகிறேன் ஒரு கடிதம் – கல்கி
வானவில்லே வானவில்லே – ரமணா
தவமின்றி கிடைத்த வரமே – அன்பு

தர்மவதியின் ஹிந்துஸ்தானி இணையான/ஜன்யமான ‘மதுவந்தியி’ல் அமைந்த பாடல்கள்

நந்தா நீ என் நிலா – நந்தா என் நிலா (இந்த ராகத்தில் ஆகச்சிறந்த பாடல்)
கனா காணும் காலங்கள் – 7/ஜி ரெயின்போ காலனி
கண்ட நாள் முதலாய் – கண்ட நாள் முதல்

 
2 Comments

Posted by on August 12, 2011 in Chummaa, Music

 

இந்தி இளைய நிலா

டிஸ்கி: முந்தைய இரு பதிவுகளைப் படித்தவர்கள் இதுவும் ‘தெய்வத்திருமகள்’ நிலா பற்றியது என்று எண்ண வேண்டாம். இந்தப் பதிவிற்கும் ‘தெய்வத்திருமகள்’ படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை 🙂

நான் கல்கத்தாவில் இருந்தபோது பெங்காலி நண்பன் ஒருவனின் ரிங்டோனைக் கேட்டு பரவசம் அடைந்தேன். ஆர்வத்தில் அந்தப் பாடலை எப்படி ரிங்டோனாக வைத்திருக்கிறான் என்று கேட்டேன். தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொன்னான். இளையராஜாவின் இசை வங்காளத்தில் கூட பிரபலமாய் இருக்கிறதே என்ற பூரிப்பில் எனக்கும் மிகவும் பிடிக்கும் என்று என் மடிக்கணினியில் அந்தப் பாடலை ஒலிக்கச் செய்தேன். குழப்பம் அப்பிய முகத்துடன் ‘இந்தப் பாடல் தமிழிலும் இருக்கிறதா?’ என்று கேட்டு என் முகத்திலும் கொஞ்சம் குழப்பத்தைப் பூசிவிட்டான். ‘இது தமிழ்ப் பாடல்தான், இளையராஜா இசை அமைத்தது’ என்று சொன்னேன். ‘இல்லை இது ஹிந்திப் பாடல். கிஷோர் குமாரின் பிரபலமான பாடல்’ என்று சொன்னான். நான் நம்பவில்லை. அவன் மடிக்கணினியில் அப்பாடலை ஒலிக்கச் செய்தான். என் காதுகளை நம்பவே முடியவில்லை. ‘இளைய நிலாபொழிகிறது’ பாடலின் மெட்டில் ஹிந்தி பாடல் ஒன்று ஒலித்தது . அதே பல்லவி ஆனால் சரணங்களில் மட்டும் மெட்டு மாறிவிட்டது. தமிழில் காப்பி அடித்துவிட்டார்கள் என்று நண்பன் பரிகசித்தான். உண்மையிலேயே இளையராஜா ஹிந்தியில் இருந்து காப்பி அடித்து விட்டாரா என்று வருந்தினேன். ஏனென்றால் கிஷோர் குமார் பழைய படங்களில்தான் பாடி இருக்கிறார் என்று நினைத்திருந்தேன்.

உடனே இணையத்தில் அந்தப் பாடலைப் பற்றிய விபரங்கள் சேகரித்தேன். பயணங்கள் முடிவதில்லை 1982ல் வெளியானது அதன் ரீமேக் கலாக்கார் 1983-ல் வெளியானது. ஆகவே தமிழில் இருந்துதான் ஹிந்திக்கு வந்தது என்று ஆதாரங்களுடன் அவனுக்குக் காட்டினேன். ‘இளைய நிலா’வின் பல்லவியை மட்டும் எடுத்துக் கொண்டு சாமர்த்தியமாக சரணங்களை மாற்றி விட்டார் இசையமைப்பாளர் பப்பி லஹரி. நம் இயக்குனர்கள் ஆங்கிலப் படங்களைக் காப்பி அடிப்பது போல் முழுவதும் சுடாமல் ஆங்காங்கே டிங்கரிங் செய்து ஹிந்தி மக்களுக்கு ஏற்றவாறு மாற்றிவிட்டார்.

அனைவரும் பெரிதாகச் சொல்லும் கிஷோர் குமாரின் குரல் பிடித்திருந்தாலும் இந்தப் பாடலில் ஈர்க்கவில்லை. முதலில் எஸ்.பி.பி. பாடிக் கேட்டது காரணமாக இருக்கலாம். பிறகு கிஷோர் குமாரின் பழைய பாடல்களைத் தேடித் தேடிக் கேட்டேன். எல்லா வகைப் பாடல்களிலும் கலந்து கட்டி இசை விருந்தளித்தவர். சோனி டிவியில் K for Kishore என்று அவரது பாடல்களை மட்டும் பாடும் ஒரு ரியாலிடி ஷோவைத் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் ஒருமுறை அலுவலகத்தில் நடந்த பார்ட்டியில் இளைய நிலாவைப் பாடி இறுதியில் நீலே நீலே அம்பரில் முடித்தேன். இந்தப் பாடலின் இன்னொரு வெர்ஷனை இளம் சாதனா சர்கம் பாடியுள்ளார். படத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

பிரபல ஹிந்தி நடிகர் மனோஜ் குமாரின் மகன் குணால் கோஸ்வாமி கதாநாயகனாகவும் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்தனர். ஸ்ரீதேவியின் தோழியாக உதிரிப் பூக்கள் படத்தில் விஜயன் மச்சினியாக நடித்த மதுமாலினி நடித்துள்ளார்.
ஏ ஆத்தா அத்தோரமா வாரியா பாடலின் ஹிந்தி வெர்ஷன்.

மணியோசை கேட்டு எழுந்து பாடலின் ஹிந்தி வெர்ஷன்.

 
Leave a comment

Posted by on August 5, 2011 in Music

 

போறானே போறானே – வாகை சூடவா

சமீபத்தில் வந்த பலரும் நன்றாக இருப்பதாக சொன்ன ‘வாகை சூடவா’ பாடல்களை வார இறுதியில் தரவிறக்கி வைத்திருந்தேன். இன்றுதான் கேட்க முடிந்தது. களவாணி இயக்குனர் சற்குணம் இயக்கும் இப்படத்தில் மீண்டும் விமல்தான் நாயகன். களவாணி என்னை வெகுவாகக் கவராததால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தேன். ஆனால் 70களில் நடப்பதுபோல் கதை கொண்ட இந்த பீரியட் படத்தின் ஸ்டில்களை விகடனில் பார்த்தபோது ‘அட’ போட வைத்தன.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்த ஜிப்ரான் என்பவரின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. கேட்டவுடனே இரண்டு பாடல்கள் மிகவும் ஈர்த்துவிட்டன. ஒன்று சின்மயி பாடி ‘சாரக் காத்து’. இன்னொன்று நேஹா பசின் மற்றும் ரஞ்சித் பாடிய ‘போறானே போறானே’.
இரண்டாவது பாடலை மாலையிலிருந்து இப்போதுவரை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

வசீகரிக்கும் வாஸந்தி ராகத்தில் அமைந்த இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவது இசை, வைரமுத்துவின் வைடூரிய வரிகள் மற்றும் நேஹா பசினின் மண் மணம் கமழும் குரல். ‘சத்தம் போடாதே’ படத்தில் அவர் பாடிய ‘பேசுகிறேன் பேசுகிறேன்’ பாடல் மிகவும் பிடித்திருந்தாலும் இதுபோன்ற ஒரு கிராமியப் பாடலை Nativity சிறிதும் சிதைக்காமல் பாடியிருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. சில இடங்களில் ஹிந்தி பாடகி ரேகா பரத்வாஜை நினைவு படுத்துகிறார். புதிய இசையமைப்பாளர் ஜிப்ரான் ‘வாகை சூடவா’ மூலம் தமிழ்த்திரை இசையில் நிச்சயம் வெற்றி வாகை சூடுவார் 🙂

வைரமுத்துவின் பிறந்த நாளான இன்று அந்தப் பாடல் வரிகளை இங்கு பகிர்கிறேன்.

Lyrics Courtesy http://www.dhool.com

போறானே…போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல

போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

பருவம் தொடங்கி ஆசை வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூசை வச்சேன்
மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட
ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா
அட நல்லாங்குருவி ஒண்ணு மனச மனச
சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன தொரட்டிப்பொண்ணு
கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட
உன்னை பார்த்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்
மூக்கணாங்கவுற போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடை காக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு
அடி மஞ்சக்கிழங்கு உன்னை நினைச்சு நினைச்சு
தினம் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிட்டேன்
உன் பிஞ்சுவிரல் பதிச்ச மண்ணை எடுத்து
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்

போறாளே…போறாளே
போறாளே…போவாமத்தான் போறாளே

அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே…போறானே…போறானே

காத்தோட தூத்தல போல போறானே,

மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட

டீத்தூளு வாசம் கொண்ட மோசக்காரா

ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட

மூக்கணாங்கவுறப் போல உன் நெனப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு

உன்னை பாத்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்

போன்ற வரிகளை வெகுவாக ரசித்தேன்!

 
7 Comments

Posted by on July 13, 2011 in Movies, Music

 

சுஜாதா- சில்லென்ற காலைப்பனி

Sujatha's pic from A.R.Rahman Foundation Calender

 
பெயர் ராசியோ என்னவோ எனக்கு மிகப் பிடித்த பாடகிகளில் ஒருவர். புது வெள்ளை மழையிலிருந்து இவரது குரலுக்குத் தீவிர ரசிகன். சித்ரா இவரை விட சிறந்த பாடகி. ஆனால் சுஜாதாவை அதிகம் பிடிக்கக் காரணம் பள்ளிப் பருவதில் என் Dream Girlன் குரல் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்த குரலுக்கு மிகவும் நெருக்கமான குரல் இவருடையது. தற்போதைய Dream Girlன் சாரீரம் மட்டுமில்லாது சரீரத்தையும் கொண்டுள்ளார் ஷ்ரேயா கோஷால் 😉 பல நாட்கள் இவரது குரலை சித்ராவினுடையது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். (பொதுவாகவே கேரளத்தின் அனேக ஆண் குரல்கள் ஜேசுதாசின் குரலைப் போலவும் பெண் குரல்கள் சித்ராவின் குரல் போலவும் இருக்கும்.) ஆனால் சித்ராவிற்கு முன்பே இளையராஜாவால் அறிமுகப்படுத்தப் பட்டவர் சுஜாதா. 10-12 வயது சிறுமியாக கவிக்குயில் படத்தின் ‘காதல் ஓவியம் கண்டேன்’ பாடல் மூலம் அறிமுகம் ஆகியிருந்தாலும் அப்பாடல் படத்தில் இடம் பெறாததால் ‘காயத்ரி’ திரைப்படத்தில் ‘காலைப் பனியில்’ பாடல் வெளிவந்து ஹிட் ஆனது. மீண்டும் ஸ்ரீதேவிக்கு ஜானியில் ‘ஒரு இனிய மனது பாடலை’ மிகவும் இனிமையாகப் பாடினார். இப்போதும் பலர் அப்பாடலைப் பாடியது ஜென்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இளமைக் கோலம் படத்தில் மலேசியா வாசுதேவனோடு ‘நீ இல்லாத போது’ என்ற டூயட்டுக்குப் பிறகு 80களில் தமிழில் வேறு பாடல் பாடியதாக தெரியவில்லை.

ஆனால் இவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது ரோஜா. அதற்குள் சித்ரா  தென்னிந்திய இசை சாம்ராஜ்யத்தின் இளவரசி ஆகியிருந்தார். ‘புது வெள்ளை மழை’ சுஜாதாவுக்கு மட்டுமின்றி உடன் பாடிய உன்னி மேனனுக்கும் ரீஎன்ட்ரி. காதல் ரோஜாவே பாடலில் வரும் ‘ல ல ல ல ல ல ல ல லா’ ஹம்மிங் அத்தனை இதம்.  புது வெள்ளை மழை போன்ற ஒரு அற்புதப் பாடலை இசையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த சித்ராவைப் பாட வைக்காமல், புதியவரான ரஹ்மான் ஏன் சுஜாதாவிற்குக் கொடுத்தார் என்று  பலமுறை நினைத்திருக்கிறேன். அவரது குரலில் அதிகாலைப் பனித்துளியைப் போன்ற ஒருவித குளிர்ச்சி உண்டு. அவர் பாடினால் தீப்பொறிகூட சில்லென்று ஆகிவிடும்.

 
 தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பல அருமையான பாடல்களை அவருக்குக் கொடுத்தார். நேற்று இல்லாத மாற்றம், ஆத்தங்கரை மரமே, போறாளே பொன்னுத்தாயி, நாளை உலகம் இல்லையென்றால் போன்ற பல பாடல்களுக்குப் பின்தான் சுஜாதா என்றவரைத் தெரிந்தது. அப்போது அம்மா சொன்னார் இவர் சிறுமியாக ஜேசுதாசுடன் பல கச்சேரிகளில் பாடியவர் என்று. இன்று போல் தொண்ணூறுகளில் ரியாலிட்டி ஷோக்கள் இல்லை. ஏ.வி. ரமணனின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில்தான் சுஜாதாவை முதன் முதலில் பார்த்தேன். சித்ரா பாடியது என்று நான் நினைத்துக் கொண்டிருந்த பல பாடல்களைப் பாடினார். அதன் பின் ராஜ் டிவியில் பி.எச்.அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கிய பாடகர்களின் நேர்காணல் நிகழ்ச்சியில் வந்தார். அவர் பாடலைக் கேட்பது இனிமை என்றால், பார்ப்பது இனிமையிலும் இனிமை. பொதுவாகவே சில பாடகர்கள் பாடுவதைப் பார்க்க சகிக்காது. ஆனால் காதுகளில் விரலை  வைக்காமல், கண்களைச் சுருக்காமல் மிக இயல்பாக உச்ச ஸ்தாயியில் மனதைக் கொள்ளைக் கொள்ளும் புன்னகையுடன் சுஜாதா பாடல்களை மிகவும் ரசித்துப் பாடும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். திரு..மோகன் மிகவும் கொடுத்து வைத்தவர்.

காதலன் படத்தில் வரும் சிறு பாடலான ‘காற்றுக் குதிரையிலே’ பாட்டுக்கு உயிரையே தரலாம். என் வீட்டுத் தோட்டத்தில், சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹால், சந்திரனைத் தொட்டது யார், பூ பூக்கும் ஓசை, பூவுக்குள் ஒளிந்திருக்கும், மெல்லிசையே, அதிசயம், முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் என்று பல பாடல்களைப் பாடினாலும் இளையராஜாவின் இசையில் ‘ஒரு பட்டாம்பூச்சி’ பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. அப்பாடல் முதல் அவரது குரலை அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தேன். பிறகு நினைத்த வரம் கேட்டு, காதல் நீதானா, மஞ்சள் பூசும் வானம் தொட்டு என்று ராஜாவுடன் மீண்டும் இணைந்தார்.  கார்த்திக் ராஜாவின் இசையில் கவிதைகள் சொல்லவா, தேசிங்கு ராஜா, காதல் வானொலி யுவன் ஷங்கர் ராஜா இசையில் இரவா பகலா, நெஞ்சோடு கலந்திடு, தீண்டித் தீண்டி; வித்யாசாகர் இசையில் உன் சமையல் அறையில், ஒ நண்பனே, தித்திக்குதே, அழகூரில் பூத்தவளே, ஆசை ஆசை, காற்றின் மொழி, etc அழகிய ராவணன் (மலையாளம்) படத்தில் ‘ப்ரனயமணித் தூவல் பொழியும் பவிழமழா’, பிரணயவர்ணங்கள் படத்தில் வரும் ‘வரமஞ்சள் ஆடிய ராவின்ட மாரில்’, Summer in Bethlehem படத்தில் எத்ரையோ ஜென்மமாய் போன்ற பாடல்கள் என் All Time Favourites. அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களிடமும் பாடியுள்ள இவர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் எனக்குத் தெரிந்து ரங்கோலா (கஜினி) பாடல் மட்டுமே பாடியுள்ளார்.  சமீபத்தில் இவர் ரஹ்மானுக்குப் பாடி அதிகம் கவனிக்கப் படாமல் போன அருமையான பாடல்கள் ‘நெஞ்சம் எல்லாம் காதல்’ மற்றும் குரு படத்தில் வரும் ‘ஏ மாண்புறு மங்கையே…’ 
 
கிரீடம் படத்தில் வரும் விழியில் பாடலை சுஜாதா பாடியது என்று பல நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகுதான் தெரிந்தது அப்பாடலைப் பாடியது அவர் மகள் ஷ்வேதா என்று. குரல் மட்டுமின்றி உருவமும் தன் அம்மாவின் அச்சு அசல். ஆனாலும் ஷ்வேதாவைவிட சுஜாதா அழகு 😉 ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக, போட்டியாளர்கள் மனதைப் புண்படுத்தாமல் மலையாளம் கலந்த தமிழில் அவர் சொல்லும் கமெண்ட்டுகளுக்காகவே விரும்பிப் பார்ப்பேன். எஸ்.பி.பி போல் இவர் குரலுக்கும் இன்னும் வயதாகவில்லை. சமீபத்தில் ஆடுகளம் படத்தில் வந்த ‘அய்யய்யோ’ பாடலில் எஸ்.பி.பி மற்று எஸ்.பி.சரண் இருவரையும் இணைந்து பாடவைத்துபோல், பிரஷந்தினிக்கு பதில் சுஜாதாவையும் ஷ்வேதாவையும் இணைந்து பாட வைத்திருக்கலாம். ஸ்ரீனிவாசுடனும்   உன்னி கிருஷ்ணனுடனும் சுஜாதா பாடும் டூயட் பாடல்கள் மிகவும் பிடிக்கும். எஸ்.பி.பி. போல சுஜாதாவின் குரலும் வயதாகாமல் எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுகிறேன். Happy Birthday Sujatha chechi 🙂

 

Time Pass: பீகி பீகி ராத்தொன் மேன் என்ற கிஷோர் குமார்-லதாமங்கேஷகர் பாடிய ஆர்.டி.பர்மனின் அருமையான பாடலின் ரீமிக்ஸில் சுஜாதாவும் ஸ்ரீநிவாசும் பாடியது

 
பிற்சேர்க்கை: எழுத்தாளர் சுஜாதாவிற்கும் பாடகி சுஜாதாவிற்கும் உள்ள ஒற்றுமைகள். இருவருக்கும் முதல் திரைப்படம் காயத்ரி. பாடகி சுஜாதாவின் ரீ எண்ட்ரியான ரோஜாவில் எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதினார். ஒருவகையில் அவருக்கும் விக்ரம் படத்திற்குப் பிறகு ரோஜா ஒரு ரீ எண்ட்ரிதான். எழுத்தாளர் சுஜாதாவின் கடைசிப் படமான எந்திரனில் சுஜாதா பாடவில்லை என்றாலும் ஷ்வேதா பாடியுள்ளார். ரூம் போட்டு யோசிச்சது 🙂 
 
7 Comments

Posted by on March 31, 2011 in Birthdays, Filmy Freak, Music, Sujatha