RSS

Category Archives: Chummaa

கங்கை நீரும் கானல் நீரும்

கல்லூரிப் பருவம் வரை தீவிர ரஹ்மான் ரசிகனாக இருந்த என்னை இளையராஜாவின் பக்தனாக மாற்றிய பாடல்களுள் ஒன்று. மனம் சரியில்லாத ஒரு நாள் இந்தப் பாடலைக் கேட்டபோது மயிலிறகால் வருடிய இதம் கிடைத்தது. அதிலிருந்து எப்போது மனது பாரமாக இருந்தாலும் நான் தேடும் சுமைதாங்கி ராஜாவின் இசையில் முதலில் இந்தப் பாடல்தான் கேட்பேன். சிந்து பைரவி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். குறிப்பாக இரண்டாம் இடையிசைச்சரத்தில் வரும் குழலோசை – Ultimate. வாலியின் வரிகளும் ராஜாவின் இசையும் இணைந்து மனதை இலேசாக்கும். பிரியமானவரின் தோளில் சாய்ந்துகொண்டு கவலைகளை மறப்பது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.

பல வருடங்களாக இப்பாடலின் ஒரு வரியில் ஒரு சந்தேகம் இருக்கிறது. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி என்று ஒரு வரி வரும். இந்த வரி ஒரு பொதுவான உண்மை. கங்கை நீரால்தான் தாகத்தைத் தீர்க்க முடியும், கானல் நீரால் ஒருபோதும் முடியாது. அப்படியிருக்கையில் இந்த வரி மிகச் சாதாரணமாக இருக்கிறது. கதையின்படி மனைவியால் சந்தோஷத்தை இழந்த நாயகன் வழியில் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் தன் மன பாரத்தை இறக்கி வைக்கிறான். வாழ்க்கைத்துணையை கங்கை நீருக்கும், வழித்துணையை கானல் நீருக்கும் அல்லவா உருவகப் படுத்தியிருக்க வேண்டும்? அதுவே கங்கை நீரால் தீராத தாகம் கானல் நீரால் தீர்ந்ததடி என்றிருந்தால் கவித்துவமாக இருந்திருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன் நண்பர் மகேஷ் தன் பதிவொன்றில் இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தபோதும் இதைப் பின்னூட்டமாக இட்டேன். இப்போது அவர் வலைப்பூவை நீக்கிவிட்டார். விகடன் மேடையில் வாசகர் கேள்விகளுக்குப் பதிலளித்த கே.பி.யிடம் கேட்கத் தோன்றியது. சோம்பேறித்தனத்தால் எழுதிப் போடவில்லை. ட்விட்டரில் மதன்கார்க்கியிடம் இதுபற்றி கேட்டபோது என்னுடன் அவர் உடன்பட்டார். வாலியைச் சந்திக்க நேர்ந்தால் இந்தச் சந்தேகத்தைக் கேட்கச் சொல்லியிருக்கிறேன். பார்ப்போம்!

என்.சொக்கனின் தாள்/தாழ் சந்தேகத்திற்குப் பிறகு இதைப் பதிவு செய்யத் தோன்றியது.

Advertisements
 
10 Comments

Posted by on October 23, 2011 in Chummaa, Ilayaraja, K.Balachander, Music

 

அவள் ஒரு தொடர்கதையும் நானும்

அவள் ஒரு தொடர்கதை – என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படம். எனது 12-வது வயதில் பார்த்து பிரமிப்பூட்டி இயக்குனர் ஆகும் ஆசையைத் தூண்டியது. அதுவரை பாலசந்தரின் சின்னத்திரை மூலமாகத்தான் அறிமுகமாகி இருந்தார். அதன்பின் கே.பி.யின் படங்களைத் தேடித் தேடித் பார்த்தேன். அப்போது சன் மூவீஸ் சேனல் மிகவும் உதவியாக இருந்தது. 13 வயதைத் தொட்டிருக்கும் என் மாமா பெண் இன்னும் Harry Potter-ஐயும் கார்ட்டூனையும் மட்டுமே பார்க்கிறாள் 😦
அவள் ஒரு தொடர்கதை இரவுக்காட்சி பார்த்துவிட்டு சைக்கிளை திரையரங்கிலேயே விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து தன் அப்பாவிடம் டோஸ் வாங்கியதாகவும், பின் பாலசந்தரிடம் உதவி இயக்குனராகும் வாய்ப்பு கேட்டு சென்றதாகவும் இயக்குனர் வஸந்த் ஒரு பேட்டியில் சொன்னார். அதைக் கேட்டதும் என்னைப் போலவே இன்னொருவருக்கும் அதே போன்ற தாக்கம் இருந்திருக்கிறதே என்று என் பிரமிப்பு இரட்டிப்பானது.
எம்.எஸ்.பெருமாளின் மூலக்கதையைக் கொண்டு கே.பி. திரைக்கதை-வசனம் எழுதி இயக்கிய இப்படம்  மலையாளத்தில் Aval oru Thudarukatha (Dubbing), தெலுங்கில் Anthu leni Katha, கன்னடத்தில் Benkiyalli Aralida Hoovu, ஹிந்தியில் Jeevan Dhaara, பெங்காலியில் Kabita என்று பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரித்விக் கட்டக்கின் Meghe Dhaka Tara படத்தின் தழுவல்தான் இப்படம் என்று சொல்லப்பட்டாலும் (நான் இன்னும் பார்க்கவில்லை) பெங்காலியிலும் ரீமேக் ஆனது ஆச்சரியம்.
பெங்காலி உட்பட அனைத்து மொழிகளிலும் கமல் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் மேலாளர் கதாபாத்திரம், கன்னடத்தில் பஸ் கண்டக்டர் கதாபாத்திரம், பெங்காலியில் அதே விகடகவி கதாபாத்திரம் என்று செய்தவர் ஹிந்தியில் மட்டும் தவற விட்டுவிட்டார். கன்னட அ.ஒ.தொ சுஹாசினியும் கமல்ஹாசனும் இணைந்து நடித்த இரண்டே படங்களில் ஒன்று. மற்றொன்று Y.Gee.மகேந்திரன்-சுஹாசினி நடித்த உருவங்கள் மாறலாம். சிவாஜி கடவுளாக நடித்தார். ரஜினி, கமல், ஜெயஷங்கர் உள்ளிட்டோர் Cameo Appearance செய்தனர். நல்ல வேளையாக அவள் ஒரு தொடர்கதை படத்தில் இப்படி ஒரு பாட்டு இல்லாமல் போனது.
கே.பி.யின் பெண் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது கவிதா – நடமாடும் நெருப்புராட்(ச்)சஸி (அடுத்து சிந்து) அண்ணியின் காய்ச்சலுக்கு மருந்து வாங்க பணம் கொடுக்காமல் உதட்டுச்சாயம் வாங்க பணம் கொடுத்தனுப்புவது செயற்கையான, சினிமாத்தனமான குணாதிசயம் என்றாலும் அவளது திமிர் எனக்கு மிகவும் பிடிக்கும்.  முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை சுஜாதா அனாயாசமாக செய்திருப்பார். அவர் வாழ்நாள் முழுவதற்கும் இந்தப் படமே போதும். ஜெயப்ரதாவுக்கும், மாலா சின்ஹாவுக்கும் சுஜாதா அளவுக்கு திமிரும் மிடுக்கும் இல்லை. தெலுங்கில் மூர்த்தியாக ரஜினி கலக்கியிருப்பார் 🙂 கன்னடத்திலும் ஹிந்தியிலும் பார்த்ததில்லை. சுஹாசினியும் ரேகாவும் திறமையான நடிகைகள் என்றாலும் சுஜாதா அளவுக்குச் செய்திருப்பார்களா என்று பார்க்க வேண்டும். CD/DVD பல நாட்களாகத் தேடுகிறேன். பெங்களூருவில் கூட கிடைக்கவில்லை 😦
இன்றைய காலக்கட்டத்திற்கும் Relevant-ஆக இருக்கும் இப்படத்தை ரீமேக் செய்தால் இப்போதுள்ள கதாநாயகியரில் கவிதா கதாபாத்திரத்திற்கு யார் பொருந்துவார்? இப்போது இருப்பவர்கள் எல்லாம் எங்கே நடிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?. சில நாட்கள் முன்பு வரை என் சாய்ஸ் ஸ்நேஹா, பின் பத்மப்ரியா. இப்போது அனுஷ்கா 😉
 
4 Comments

Posted by on October 9, 2011 in Chummaa, Movies

 

வசந்தபாலனும் வணிகக் குப்பைகளும்

இன்று மாலை பலரும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் முறையே சந்திரமுகி மற்றும் சிவாஜி படங்களை விளம்பர இடைவேளைகளில் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். ட்விட்டரிலும் கூட இப்படங்கள் இடைவேளை இன்றி ஓடிக்கொண்டிருந்தன. அறை நண்பர்கள் அனைவரும் டிவி முன் இருக்கையில் நான் மட்டும் மற்றொரு அறையில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். சந்திரமுகி இறுதிக் காட்சி மட்டும் ஜோதிகாவுக்காக பார்க்கச் சென்றேன். நண்பர் ஒருவர் ‘உடம்பு சரியில்லையா?‘ என்று கேட்டார். இல்லை என்றதும் ‘அப்பறம் ஏன் இவ்ளோ நேரம் படம் பாக்க வரல?’ என்றார். இரண்டு படங்களும் எனக்குப் பிடிக்காது என்று சொன்னதும் ஒரு வினோத ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தனர்.

சந்திரமுகியின் ஒரிஜினல் மணிச்சித்ரத்தாழ் தான் பிடிக்கும். ரஜினிக்காக வைக்கப்பட்ட    ஹீரோயிசக் காட்சிகளும் வடிவேலுவுடன் தோன்றும் மட்டமான நகைச்சுவைக் காட்சிகளும்  எரிச்சலின் உச்சம். ஆனாலும் ஜோதிகாவையும் ரஜினியின் வில்லத்தனமும் மிகவும் பிடிக்கும் என்பதால் இறுதிக் காட்சி மட்டும் பார்ப்பேன். தனது அனேக மலையாளப் படங்களைத் தமிழிலும் இயக்கும் ஃபாசில் ஏன் மணிச்சித்ரத்தாழை மட்டும் விட்டு வைத்தார்? ஷோபனாவையே நடிக்க வைத்திருக்கலாம். அல்லது அன்றைய பானுப்ரியா கூட அழகாகப் பொருந்தியிருப்பார்.

ஷங்கர் படத்தில் எனக்குப் பிடிக்காத படம் சிவாஜி. அதற்கு முன் வரை பாய்ஸ். நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த முதல் ரஜினி படம் சிவாஜி. கல்கத்தாவில் இருந்தபோது தமிழ்ப் படங்களே வராது. நான் இருந்த மூன்று வருடங்களில் வெளியான இரண்டே படங்கள் சிவாஜி மற்றும் தசாவதாரம். அதனால் இரண்டையும் முதல் நாளே பார்த்தேன்.  தசாவதாரத்தை நான்கு முறை பார்த்தேன். ஆனால் சிவாஜியை ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியவில்லை. அது போன்ற ஒரு பிரம்மாண்டக் குப்பையை எடுக்க ஷங்கர் தேவையில்லை  ரஜினியின் ஒப்பனையில் மட்டுமே ஷங்கர் தெரிந்தார். இறுதியில் வரும் மொட்டை பாஸாக ரஜினி வரும் காட்சிகள் மட்டும் பிடிக்கும். ஆனால் எந்திரனில் ரஜினி தன்னை முழுவதும் இயக்குனரிடம் ஒப்படைத்து கடினமாக உழைத்திருந்தது Making of Endhiran-ல் பார்த்து பிரமித்துவிட்டேன்.  இனிமேலாவது ஹீரோவாக நடிக்காமல் அமிதாப் பச்சன் போல் கதையின் நாயகனாக படங்களைத் தேர்வு செய்து அவர் நடிக்க வேண்டும்.
இரண்டு படங்கள் முடிந்ததும் ஜெயா டிவியில் அரவான் இசை வெளியீட்டு விழா கொஞ்சம் பார்க்க நேர்ந்தது. அதற்கு சற்று முன் தான் பாடல்களைத் தரவிறக்கிக் கொண்டிருந்தேன். அறை நண்பர் ஒருவர் வசந்தபாலன் யார் என்று கேட்டார். ‘வெயில்‘, ‘அங்காடித் தெரு‘ படங்களை இயக்கியவர்.ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஆல்பம் என்ற படத்தை முதலில் இயக்கினார்’ என்றேன். ‘அங்காடித் தெரு’ மட்டும் கேள்விப் பட்டிருப்பதாகவும் மற்ற எதுவும் ஹிட் ஆகவில்லையே என்றார். ஹிட் ஆகும் படங்கள் எல்லாம் நல்ல படங்கள் அல்ல என்று சொன்னேன். நல்ல படங்கள் தோல்வியடைந்து வணிகக் குப்பைகள் வெற்றிபெறும்போது ஒரு சினிமா ஆர்வலனாக மிகுந்த வேதனை அளிக்கிறது.
 ‘நல்ல படங்களை மட்டுமே எடுப்பேன் என்று ஒரு வெறியோடு இருப்பவர் வசந்தபாலன்’ என்று சேரன் சொன்னார். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் என்ற நாவலில் ஒரு பகுதியை அரவான் படத்தின் கருவாக்கியுள்ளார். வசந்தபாலன் வணிகரீதியாக சமரசமும் செய்துகொள்ளாமல் தரமான படைப்புகளைக் கொடுக்க முயற்சிக்கும் ஓர் இயக்குனர். என்னைப் பொறுத்தவரை பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களைப் போல் வரக்கூடியவர். *ஈரம்* படத்திலிருந்து ஆதியைப் பிடித்தது, பிரத்யேகமாக அவரது குரல் மிகவும் பிடிக்கும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடக்கும் பீரியட் கதை என்பதும், என் அபிமான பாடகர் கார்த்திக் முதன்முறையாக இசை அமைத்துள்ளார் என்பதும் எதிர்ப்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. ஹிந்தி நடிகர் கபீர் பேடி, மலையாள நடிகை ஸ்வேதா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நிடித்துள்ளனர். நடிகர் பரத் கேமியோ ரோலில் நடித்துள்ளார். தமிழ் இலக்கியவாதிகள் சிலர் கலந்து கொண்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. அரவான் வெற்றி பெற வாழ்த்துகள்!
 
Leave a comment

Posted by on October 7, 2011 in Chummaa, Movies

 

கார்த்திக் ஜாக்கிரதை

கார்த்திக் என்ற என் பெயரை எனக்குப் பிடிக்காமல் இருந்தது. பத்துப் பசங்களில் குறைந்தது நான்கு ‘கார்த்திக்‘களாவது இருப்பார்கள். பள்ளியில் என்னுடன் ஐந்து கார்த்திக்கள் படித்தனர். அதனால் இனிஷியலை வைத்துதான் கூப்பிடுவார்கள். “ஏ.கார்த்திக்” என்று பள்ளி நாட்கள் முழுதும் விளிக்கப் பட்டேன். நண்பர்களுக்கு ஃபோன் செய்து (அப்போதெல்லாம் லேண்ட்லைன்) ‘கார்த்திக் பேசறேன்‘ என்றால் ‘எந்த கார்த்திக்?’ என்றுதான் எப்போதும் பதில் வரும். இவ்வளவு பொதுவான பெயரை வைத்ததற்கு என் அம்மாவை பலமுறை வைதுள்ளேன். நான் பிறந்தபோது இது வழக்கில் அதிகம் இல்லாத பெயர் என்று சொல்வார்.

வழக்கமாக திரைப்படங்களில் கதாநாயகனுக்கு ராஜா, ராமு, பாலு, சிவா, கண்ணன் இவற்றில் ஏதாவது ஒரு பெயர் இருக்கும். முதன் முதலில் ‘காதல் தேசம்’ படத்தில்தான் கதாநாயகனுக்கு கார்த்திக் என்று பெயர் வைக்கப்பட்டது ஆனால் ‘அலைபாயுதே‘வுக்குப் பிறகுதான் கார்த்திக் என்ற பெயர் மிகவும் Modern & Smart பசங்களுக்கு உரித்தான பெயராக மாறியது 😉 தேங்க்ஸ் டு மணிரத்னம். மாதவனும் நானும் ஒரே நாளில் பிறந்தோம். என்ன, அவர் பதினான்கு வருடங்கள் முன்னதாகப் பிறந்து விட்டார் 🙂 அதிலிருந்து என் பெயர் எனக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. (அன்றிலிருந்து ஷாலினி போல் ஒரு ஷக்தியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்). கல்லூரியில் சேர்ந்த வருடம் அந்தப் படம் வெளியானது. யாராவது என் பெயரைக் கேட்டு நான் சொன்ன பின் ‘கார்த்திக் நீ பணக்காரனா? கிளாஸ்ல லாஸ்டா? அடிக்கடி ஃபெயில் ஆவியா?’ என்று அலைபாயுதே வசனத்தைக் கண்டிப்பாக சொல்வார்கள். பிறகு உன்னாலே உன்னாலே, மொழி, தீராத விளையாட்டுப் பிள்ளை படங்களைத் தொடர்ந்து கார்த்திக் என்றால் Lover Boy/Casanova மாதிரியான கதாபாத்திரம் என்று உருவகப் படுத்தப்பட்டுவிட்டது. (‘ரிதம்’ படத்தில் அர்ஜுன் பெயர் கார்த்திகேயன் என்பதால் இங்கு சேர்க்கவில்லை)

விண்ணைத்தாண்டி வருவாயா வருவதற்கு முன் அந்தப் படத்தின் நாயகன் பெயர் கார்த்திக் என்று மட்டும் இருக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். அப்போது எனக்கு சிம்புவைப் பிடிக்காததால் அந்த எண்ணம். டிரெயிலரில் கார்த்திக் பெயரைக் கேட்டதும் போச்சுடா! என்று நொந்துகொண்டேன். ஆனால் அலைபாயுதேவைவிட வி.தா.வா.வில் கார்த்திக் என்ற பெயர் மிகவும் ஸ்பெஷல் ஆகிவிட்டது. என் பெயர் மீது மிகவும் கர்வம் கொள்ள ஆரம்பித்துவிட்டேன். Thanks a lot to கௌதம். சின்மயி குரலில் கார்த்திக் என்று கொஞ்சலாகவும் குழைவாகவும் கேட்டால் ஒன்பதாம் மேகத்தில் பறப்பேன். (அதாங்க Cloud Nine) அந்தப் படத்தில் எத்தனை முறை கார்த்திக் என்று வருகிறது என பலமுறை எண்ணிப் பார்த்து தோல்வி அடைந்துள்ளேன். சின்மயிகூட அந்தப் படத்தின் டப்பிங் முடிந்தபின் ‘கார்த்திக்… கார்த்திக்‘ என்று தூக்கத்தில் பிதற்றியுள்ளார் 🙂

பாலிவுட்டில் கார்த்திக்கிற்கு இணையான பெயர் ராஜ்/ராகுல். ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘குச் குச் ஹோத்தா ஹை’ படங்களுக்குப் பின் ஷாருக்கானால் பிரபலமானது. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத கார்த்திக் கதாபாத்திரம் என்றால் ‘சர்வம்’ படத்தில் வரும் ஆர்யாவினுடையது. ஆதவன் எழுதிய கார்த்திக் என்ற சிறுகதை சமீபத்தில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்து விட்டது. நான்கைந்து முறை படித்து விட்டேன் 🙂

ஆனால் இந்த செல்வராகவன் என் பெயரை நாறடித்து விட்டார். மயக்கம் என்ன படத்தின் பாடல்கள் வந்தபோதே எனக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் செல்வாவுக்காக கண்டிப்பாக படத்தைப் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். இப்போது ட்ரெயிலரைப் பார்த்த பின்பு படத்தைப் பார்க்கவே கூடாது என்று முடிவு செய்துள்ளேன். மயக்கம் என்ன படத்தில் கார்த்திக் என்பது தனுஷுடைய பெயரா இல்லை வேறொருவர் என்று தெரியவில்லை. தனுஷுக்கு அந்தப் பெயர் பொருந்தவே பொருந்தாது. இதைப் பார்த்ததில் இருந்து எங்கள் வீட்டிலும் கார்த்திக் ஜாக்கிரதை என்று ஒரு போர்டு மாட்ட என் தம்பி கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறான். நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் Hate U செல்வா.

ஆனாலும் படம் வெளியாகும் தேதிக்கு ஒருவாரம் முன் சத்யம் திரையரங்கின் இணையதளத்தில் முன்பதிவு செய்வதற்காக நள்ளிரவில் கண்விழித்துக் கொண்டுடிருப்பேன் என்பது வேறு விஷயம் 🙂 திவ்யா, அனிதா கதாபாத்திரங்கள் போல கார்த்திக்கையும் ஒரு மறக்கமுடியாத பாத்திரமாக சித்தரிப்பார் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருக்கிறது.

 
12 Comments

Posted by on September 25, 2011 in Chummaa

 

வாடா பின்லேடா

மங்காத்தாவில் ‘வாடா பின்லேடா’ என்ற கருத்தாழமிக்க ஒரு பாடலைக் கேட்டதுமே பிடித்துவிட்டது. பாடலாசிரியர் வேறு யாராக இருக்கும்? ‘பத்மஸ்ரீ’ கவிஞர் வாலிதான்! என்னமாய் எழுதி இருக்கிறார்! தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கிறேன் :)பாய்ஸ் படத்தில் வரும் முன்னாவின் அறிமுகக் காட்சியில் வரும் கவிதையை எழுதியவரும் ‘வாலி’தானா?

பாடலைப் பாடிய மிர்ச்சி சுச்சி – செம்ம ஹாட்டு மச்சி. பாடகர் க்ரிஷ்ஷின் குரல்கூட வித்தியாசமாக உள்ளது. வரிகள் ஒவ்வொன்றும் மணி மணியாய் உள்ளன. உதா – ‘நூலாடை நிற்காத இடுப்பு; நீ வந்து சோறாக்கும் அடுப்பு’. – Marvelous! மேலும் வரிகளுக்குப் பாடலைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். Beautiful… Wonderful… Marvelous…(ஆரண்ய காண்டம் ஜாக்கி ஷ்ராஃப் குரலில் படிக்கவும் ;-)) பின் லேடனைக் கொல்வதற்கு முன்னமே எழுதப் பட்டிருக்க வேண்டும். சென்சாரில் கத்தரிக்கப் படாமல் முழுவதுமாக திரையில் வருமா என்பது சந்தேகம்தான்.

வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கி பாடலாசிரியராக வந்தாலும் அவரது வாரிசு ‘ஹைக்கூ கார்க்கி’ வளர்ந்து பாடலாசிரியராக வந்தாலும் வாலி இதுபோன்ற பாடல்களை இளமை ததும்ப எழுதி தமிழ்த் துண்டு ஆட்டுவார் 🙂

சஹானாவிற்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த தெய்வீகமான ‘தர்மவதி’ ராகத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. இதை அருமையான மெலடி பாடலாக இசையமைக்காமல் யுவன் இப்படி கில்மா பாடல் ஆக்கிவிட்டாரே வருத்தம் என்ற இருந்தாலும் இடையிசை துணுக்குகளில் அதைச் சரி செய்து விட்டார். ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ (மன்மத லீலை) மீண்டும் மீண்டும் வா (விக்ரம்), ஒட்டகத்தக் கட்டிக்கோ என்று அவர் முன்னோடிகள் கூட இதுமாதிரி Erotic பாடல்களுக்கு இந்த ராகத்தில் இசையமைத்திருக்கிறார்களே!

தர்மவதியில் அமைந்த சில பாடல்கள்

ஒரு நாள் இரவு – காவியத்தலைவி
என்னுள்ளில் எங்கோ – ரோசாப்பூ ரவிக்கைக்காரி (Evergreen ! Esp 2nd interlude)
இளஞ்சோலை பூத்ததா – உனக்காகவே வாழ்கிறேன் (Simply ILAYARAJA)
தத்தித்தோம் – அழகன்
எழுதுகிறேன் ஒரு கடிதம் – கல்கி
வானவில்லே வானவில்லே – ரமணா
தவமின்றி கிடைத்த வரமே – அன்பு

தர்மவதியின் ஹிந்துஸ்தானி இணையான/ஜன்யமான ‘மதுவந்தியி’ல் அமைந்த பாடல்கள்

நந்தா நீ என் நிலா – நந்தா என் நிலா (இந்த ராகத்தில் ஆகச்சிறந்த பாடல்)
கனா காணும் காலங்கள் – 7/ஜி ரெயின்போ காலனி
கண்ட நாள் முதலாய் – கண்ட நாள் முதல்

 
2 Comments

Posted by on August 12, 2011 in Chummaa, Music

 

‘தெய்வத்திருமகள்’ நிலா அம்மா யாரு?

பொதுவாக பாலச்சந்தரின் படங்களில் திரையில் தோன்றாத உருவமில்லாக் கதாபாத்திரங்கள் இருக்கும். க்ளீஷேவாக இருந்தாலும் ரசிக்கும்படி சித்தரித்திருப்பார். படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் அக்கதாபாத்திரத்தைப் பற்றி அடிக்கடி சொல்லியோ, வெறும் குரலை மட்டுமே கேட்கச் செய்தோ Invisible Character-களைப் படைப்பதில் கே.பி.க்கு நிகர் அவரே. சில பிரத்யேக குணாதிசயங்களுடன் அழகாக Characterization செய்யப்பட்டு, திரையில் தோன்றாமலே நம்மை ரசிக்க வைக்கும்.

எதிர் நீச்சல் படத்தில் ‘இருமல்’ தாத்தா, தில்லு முல்லுவில் ரஜினியின் அப்பா அய்யம்பேட்டை அறிவுடை நம்பி, சொல்லத்தான் நினைக்கிறேன்-ல் சமையல்காரர் ஆனா ரூனாவின் மனைவி, மனதில் உறுதி வேண்டும்-ல் எஸ்.பி.பி.யின் மனைவி(One of the best), அழகன்-ல் மம்மூட்டியின் மனைவி, கல்கியில் ஃபாத்திமா பாபுவின் கணவர் போன்றவை திரையில் தோன்றாமலே படம் நெடுக குறிப்பிடப்படும்.

அதுமட்டுமன்றி உர்யிரற்றப் பொருட்களைக் கூட கதாபாத்திரம் ஆக்கி உயிரூட்டி விடுவார். அவர்கள் ‘ஜூனியர்’, அச்சமில்லை அச்சமில்லை ‘அருவி’ (டைட்டிலில் இவர்களுடன் ‘குற்றாலம் அருவி’ என்று போடப்படும்’!), அழகன் ‘தொலைபேசி’ (இதுவும் டைட்டில் கார்டில் இடம்பெறும்), அபூர்வ ராகங்கள் ‘நாற்காலி’, வானமே எல்லை ‘பணப்பெட்டி’, இருகோடுகள் FILE-ஐயும் புதுப் புது அர்த்தங்க ‘அமலா கட் அவுட்’டையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் மனைவி கதாபாத்திரமான பானுவை இறுதி வரைக் காட்டாமல் என் Curiosity-ஐ அதிகரித்துவிட்டனர். ஏற்கனவே இதுபோல் சில படங்களில் நடிகர்களைத் திரையில் காட்டாமல் புகைப் படங்கள் மட்டும் காட்டப் பட்டுள்ளன. மகாநதியில் கமலின் மனைவியாக ஜெயசுதா புகைப்படத்தில் மட்டும் காட்டப் படுவார். அதுபோல் ‘மேட்டுக்குடி’யில் ஜெமினியின் மனைவியாக கே.ஆர்.விஜயாவின் படம், ‘நினைவிருக்கும் வரை’யில் சுஜாதாவின் கணவராக முத்துராமனின் படம், ‘சிறுத்தை’-ல் கார்த்தியின் இறந்துபோன மனைவியாக பூமிகா போன்றவர்களின் புகைப்படங்கள் மட்டும் காட்டப்பட்டுள்ளன.

ஆனால் ‘தெய்வத்திருமகள்’-ல் ஃபோட்டோவில்கூட பானு காட்டப் படமாட்டார். அழகன் அளவுக்கு ஈர்க்காவிட்டாலும் என் மண்டைக்குள் நண்டைப் பிராண்டவிட்டதில் இயக்குனர் ஜெயித்துவிட்டார்! அந்தப் புகைப்படத்தை யார் பார்க்கிறார்களோ அவர்களது பிம்பம் மட்டுமே தெரியும். பின் நவீனத்துவம் அடிப்படையில் அலசி ஆராய்ந்ததில் சில குறியீடுகள் புலப்பட்டன. குழந்தை பிறந்து பானு இறந்ததும் அதை விக்ரம் பார்க்கும்போது அவர் பிம்பம் தெரியும். அப்போது அவர்தான் குழந்தைக்கு அம்மாவாகவும் இருக்கிறார். பின் நிலா வளர்ந்து அந்த ஃபோட்டோவைப் பார்க்கும்போது அவள் பிம்பம் தெரிகிறது. அப்போது அவள் விக்ரமுக்கு அம்மாவாக இருக்கிறாள். பின் அமலா பால் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது அவரது பிம்பம் தெரிகிறது. அதிலிருந்து நிலாவுக்கு அமலா பால்தான் அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள்கிறார் இதுபோன்ற பின் நவீனத்துவக் குறியீடுகள் வேறு யாருக்காவது தோன்றியதா? 😉

கடைசி இரண்டு பத்திகளைக் கண்டு கொள்ளாமல் தமிழ்த் திரையில் தோன்றாத மற்ற கதாபாத்திரங்களை மறுமொழியிடவும் 🙂

 
4 Comments

Posted by on July 28, 2011 in Chummaa, Movies

 

நான் கிரிக்கெட் பார்த்த கதை

முதலில் உலகக் கோப்பையை வெற்றிகரமாக வென்று நமக்குப் புகழைச் சேர்த்த இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகள். The Real Heroes! சச்சின் என்ற ஒற்றை மனிதன் நம் பெருமையை 21 வருடங்கள் வெற்றிகரமாக தன் தோள்களில் சுமந்திருந்த கம்பீரத்திற்கு ராயல் சல்யூட். இனிமேலும் அவருக்கு பாரத ரத்னா விருதைக் கொடுக்காமல் தாமதிக்கக் கூடாது.

கிரிக்கெட் – இந்தப் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வரும். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் சமயத்தில் யாராவது ஸ்கோர் என்ன என்று கேட்டால் அஃப்ரிடி பந்தை சச்சின் விளாசுவது போல் விளாசத் தோன்றும். கிரிக்கெட் பார்க்காமல் நீயெல்லாம் ஒரு மனுஷனா என்று யாராவது கேட்டால் ஹர்பஜன் ஸ்ரீஷாந்தை அடித்தது போல் அடிக்கத் தோன்றும். சினிமா, இசை, புத்தகங்கள் பற்றிய விவாதங்களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு நாள் முழுதும் உரையாடும் நான், அரசியலைப் பற்றியோ விளையாட்டைப் பற்றியோ குறிப்பாக கிரிக்கெட் பற்றி நண்பர்கள் விவாதித்தால் அங்கிருந்து ‘எஸ்ஸ்’ ஆகியிருப்பேன். BP, Tension அதிகமாகும் அளவுக்கு கிரிக்கெட்டை வெறித்தனமாக பார்ப்பவர்களைக் கண்டால் ஏன் இப்படி கிரிக்கெட் பார்த்து தறிகெட்டுப் போகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட லகான் மற்றும் சென்னை-600028 படங்களை மிகவும் ரசித்தது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

உண்மை இதுதான். நானும் என் தம்பியும் இந்தியா பாகிஸ்தான் போல. ஜென்ம விரோதிகள். அவனுக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காது, எனக்குப் பிடித்தது அவனுக்கு அறவே பிடிக்காது. அதனாலேயே அவனுக்கு உயிராய் இருந்த கிரிக்கெட் எனக்கு துளியும் பிடிக்காமல் ஒரு வெறுப்பு உண்டானது. எனது பத்தாவது வயது வரை நான் கிரிக்கெட் விளையாடிக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் அப்போது ஏழு வயதான என் தம்பி என்னை விட நன்றாக விளையாடியதால் ஒருவிதமான காம்ப்ளெக்ஸ் காரணமாக நான் விளையாடமால், பார்க்கக் கூட பிடிக்காமல் வெறுத்தேன். என் தம்பி இந்தியாவுக்கு ஆதரவு செய்தால் வேண்டுமென்றே நான் எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்பேன். என்னை தேசத்துரோகி என்பான். கிரிக்கெட் பார்த்துதான் நம் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பேன். பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் Cup of Joy என்ற Lesson இருந்தது. ஆங்கிலப் பாடத்தை விரும்பிப் படித்த நான் அதை மட்டும் தவிர்த்து விட்டேன். கிரிக்கெட் போட்டி நடந்தால் எங்கள் வீட்டில் யுத்தமே நடக்கும்.

அதனால் இசையிலும் படங்களிலும் புத்தகங்களிலும், என் தம்பிக்கு சுத்தமாக பிடிக்காத கர்நாடக இசையில் என் கவனத்தை செலுத்தினேன். கிரிக்கெட் பார்க்காமல் கர்நாடிக் பாடல் கேட்டால் நண்பர்கள் என்னை ஒரு ஜந்து போல பார்ப்பார்கள். மற்றவர்களிலிருந்து சற்று வேறுபட்டுத் தெரிவதை விரும்பும் நான் அவ்வாறே தொடர்ந்தேன். இதனால் என் ஒத்த கருத்துடைய நண்பர்கள் கிட்டவில்லை. நான் ஒரு தனித்தீவாகவே என் உலகத்தில் இயங்கிக் கொண்டிருந்தேன். சென்னை மீது நான் கொண்டிருக்கும் மோகம்தான் பல வருடங்கள் கழுத்து என்னை கிரிக்கெட் பார்க்கச் செய்தது. சென்ற வருட ஐ.பி.எல் நடந்து கொண்டிருந்த சமயம், என் சக பணியாளர்களில் உள்ள தெலுங்குக் காரர்கள் டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியைப் பற்றி இழிவாகப் பேசினர். சென்னையையும் இழிவு படுத்திப் பேசி எனக்கு கோபமூட்டினர். அரை இறுதியில் டெக்கன் சார்ஜர்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்தும் என்று சவால் விட்டேன். அதுவரை அந்த அணி எப்படி விளையாடும், அதில் தோனியைத் தவிர வேறு யாரெல்லாம் விளையாடுகின்றனர் என்று கூடத் தெரியாது. அதேபோல் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் மோதியது. சென்னைக்கு நிகரான மோகம் மும்பை மீதும் வைத்திருந்ததால் ஏதோ ஒன்று ஜெயிக்கட்டும் என்றிருந்தேன். என்னுடைய விருப்பம் அந்தந்த ஊர்களின் மீதுதானிருன்ததே தவிர விளையாட்டின் மீதோ வீரர்களின் மீதோ இல்லை. சச்சினை மட்டும் எனக்குப் பிடிக்கும். அவரது சாதனைகளையும் மீறி அவர் கொண்டிருந்த தன்னடக்கம் காரணமாக.

அதேபோல்தான் இம்முறை நடந்த உலகக் கோப்பைப் போட்டியையும் பார்த்தேன். உலகக் கோப்பை தொடங்கிய தினத்தன்று நான் தில்லியில் அலுவலக வேலையாக கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்தேன். உடன் இருந்த அனைவரும் துவக்க விழாவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நான் மட்டும் தனி அறையில் தி.ஜானகிராமன் சிறுகதைகள் வாசித்துக் கொண்டிருந்தேன். என்னை அழைத்த சிலர் எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வமில்லை என்றபோது விந்தையாக பார்த்தனர். அன்றிலிருந்து கிரிக்கெட் பற்றி அதிகம் அப்டேட் செய்யும் ஃபேஸ்புக் நண்பர்களை சிலகாலம் Hide செய்தேன். ட்விட்டரிலும் அதிகம் இயங்கவில்லை. எங்கு பார்த்தாலும் World Cup Fever என்ற வாசகம். எனக்கோ அது Headache 😦 

பெங்களூர் சென்ற பின்பும் நான் மட்டும் தனியாக புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன். புதிதாக நண்பர்களிடம் புரிய வைத்து சலிப்புற்றேன். இந்தியா-பாகிஸ்தான் அரை இறுதிக்கு முன்தினம், நண்பர்கள் சிலர் பாகிஸ்தான் அணி ஜெயித்து இறுதியில் ஸ்ரீலங்கா உலகக் கோப்பையை வெல்லும் என்று கூறிக் கொண்டிருந்தனர். அவர்களது எண்ணம் பொய்யாகும் இந்தியா வெல்லும் என்று சவால் விட்டேன். உனக்கு கிரிக்கெட்டைப் பற்றி என்ன தெரியும் என்று சிலர் ஏளனம் செய்தனர். எனக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் நம் நாட்டுக்கு ஆதரவளிக்கத் தெரியும் என்றேன்.

கிரிக்கெட் விளையாட்டில் எனக்குத் தெரிந்தவை ஃபோர், சிக்ஸர், அவுட், நாட் அவுட், வைட் மட்டுமே. எப்படிப் போட்டால் நோ பால், யார்க்கர், எப்படி LBW அவுட் ஆவார்கள் என்றெல்லாம் தெரியாது. ஸ்லிப், மிட் ஆஃப் போன்ற சொற்களை மட்டுமே கேட்டிருக்கிறேன். இந்திய அணியில் விளையாடும் நபர்களைக் கூட நான் அறிந்திருக்கவில்லை. சச்சின், சேவாக், டோனி, யுவராஜ், ஹர்பஜன், ஸ்ரீஷாந்த் இவர்களை மட்டுமே தெரியும். புதியவர்களான கொஹ்லி, ரைனா, முனாஃப், யூசப் படான், தமிழரான அஷ்வின் போன்றவர்களைப் பார்த்தது கூட இல்லை. நெஹ்ரா மட்டும் “ஓரம் நேரா பந்து போடுறான், நேரா ஓரமா பந்து போடுறான்” என்ற குறுஞ்செய்தி மூலம் பிரபலம் (?!) ஆகியிருந்தார்.

முதன் முறையாக அரை இறுதியின் இரண்டாம் பாதியை அறையில் பார்க்க அமர்ந்த போது விளம்பர இடைவேளையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்க்க வந்தேன் என்று நினைத்து சேனலை மாற்றினர். ஆனால் நான் கிரிக்கெட்டைப் போடச் சொன்னதும் ஆச்சரியம் அடைந்தனர். இந்திய அணி வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் வெளியில் சிலர் வெடிகளை வெடித்து ஆரவாரித்துக் கொண்டிருந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அன்று இந்தியா வென்றது. ஆனால் இறுதியில் கோப்பையை வெல்லாது என்று உறுதியாக சொன்னார்கள். அடுத்தவரின் கருத்துகளை முறியடிப்பது எனக்கு மிகவும் பிடித்தது. நான் தோற்றாலும் அவர்கள் கூற்றைப் பொய்யாக்க மிகவும் முயல்வேன்.

இறுதிப் போட்டியன்று சென்னைக்கு வந்துவிட்டேன். அன்று மதியம் இரண்டரை மணிக்கு ஸ்டார் கிரிக்கெட் எந்த சேனல் எண் என்று தம்பியிடம் விசாரித்தபோது ‘நீயெல்லாம் கிரிக்கெட் பாக்கறியா?’ என்றான். இறுதிப் போட்டியை அவன் நண்பர்களுடன் காணச் சென்றுவிட்டான். பார்த்துக் கொண்டிருக்கும்போது உறங்கிக் கொண்டிருந்த அம்மா வெளியில் சென்ற தம்பி வந்து விட்டானா என்று கேட்டார். இல்லை என்றதும் ‘நீயா மேட்ச் பாக்குற?’ என்று விநோதமாகக் கேட்டார். பெங்களூர் போய் மாறிட்டியா?’ என்றார். நான் முறைத்ததும் என் தம்பிக்கு ஃபோனில் நான் மேட்ச் பார்ப்பதைத் தெரிவித்தார். என் வாழ்நாளில் தேசிய கீதம் முதல் இறுதிவரை பார்த்த ஒரே மேட்ச் இதுவாகத்தான் இருக்கும்.

அம்மாவுக்கும் இரவுப் பணி என்பதால் மாலையிலிருந்து தனியாக பார்த்தேன். அப்போதுதான் நண்பர்களுடன் மேட்ச் பார்ப்பது எவ்வளவு உவப்பான தருணம் என்பதை உணர்ந்தேன். இத்தனை நாட்கள் இப்படி ஒரு பேரானந்தத்தைத் தவற விட்டோமே என்று வருந்தினேன். ஆனால் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பகிர்ந்து கொண்டு அதைக் கொஞ்சம் போக்கிக் கொண்டேன். ட்விட்டர் Website அன்று Down ஆகிவிட்டது. அந்த அளவிற்கு ரசிகர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். சேவாகைத் தொடர்ந்து சச்சின் அவுட் ஆனதும் பலர் நம்பிக்கையை இழந்தனர். சேனலை மாற்றி விடவும் என்றிருந்தனர். ஆனால் அப்போதும் சிலருடன் நானும் நம்பிக்கை இழக்காமல் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்தேன். நண்பர் கார்க்கியின் சில பதிவுகளும் ட்வீட்களும் குறிப்பிடத்தக்கவை. This guy will go places.

இந்தியா வென்றதும் கத்திக் கூச்சலிட வேண்டும் என்று தோன்றியது. சில வீரர்கள் கண்ணீர் விட்டதும் நெகிழ்ந்து விட்டேன். சச்சின் முகத்தில் தோன்றிய பரவசத்தை விவரிக்க முடியாது. ஒரு நாள் பார்த்த எனக்கே இப்படி ஆனது என்றால், கிரிக்கெட்டையே உயிராக நினைப்பவர்கள் எப்படி ஒரு உச்சக்கட்ட உற்சாகத்தை அடைந்திருப்பார்கள் என்று நினைத்ததும் அவர்கள் மீது சிறு பொறாமையும் ஏற்பட்டது. பொதுவாகவே எதிர்மறை எண்ணம் கொண்ட என்னுள் Positive Thinking உண்டானதை உணர்ந்தேன். A cynic is becoming an Optimist என்று நினைத்துக் கொண்டேன். தனித்து வித்தியாசமாக இருக்க வேண்டும் போலியாக என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறேன். “You think you are Unique and extra-ordinary. You are not extra-ordinary, you are abnormal.” என்று ஒரு வாக்குவாதத்தில் என் நண்பன் ஒருவன் சொன்னதை எண்ணி சிரித்துக் கொண்டேன்.

எனது ஃபேஸ்புக் Status Message-களைப் பார்த்து நண்பர்கள் கடுப்பாகி ஃபோனில் அழைத்து திட்டினர். ‘உனக்கு கிரிக்கெட் பத்தி என்ன தெரியும்னு இப்படி எல்லாம் அப்டேட் பண்ணி சீன போடுற’ என்றனர். அதற்காக இனி கிரிக்கெட் ரசிகன் ஆகிவிடுவேன் என்று சொல்லிவிட முடியாது. ஒரு விஷயத்திற்கு எதிர்மறையாக பேசுவதற்கும் அதைப் பற்றிய அடிப்படை அறிவு தேவை என்பதைப் புரிந்து கொண்டேன். அடுத்து நடக்கவிருக்கும் ஐ.பி.எல். போட்டிக்குள் தெரியாத சில வார்த்தைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். சுஜாதாவின் ‘நிலா நிழல்’ என்ற நாவல் கிரிக்கெட் பற்றியது என்று இதுநாள் வரை வாங்காமல் இருந்தேன். இப்போது அதைப் படிக்க எண்ணியுள்ளேன். பாமரனுக்கும் புரியும் வகையில் கிரிக்கெட் பற்றிய சங்கதிகளை வாத்தியார் எழுதியிருக்கிறார் என்று இப்பதிவில் படித்தேன்.

நான் பிறந்த வருடம் இந்தியா முதல் உலகக் கோப்பையை வென்றது (அய்யய்யோ என் வயசு தெரிஞ்சிடுச்சா?!). அதனால் இம்முறை இந்தியா வெற்றிபெற்றால் திருமணம் செய்து கொள்கிறேன் (‘உன் லாஜிக் சகிக்கலை’ என்று யார் சொல்வது :-)) என்று அம்மாவிடம் சொன்னது எனக்கே வினையாகிவிட்டது. நல்ல வேளை இந்தியா வெற்றி பெற்று 24 நாட்களில் திருமணம் முடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை 🙂

P.S: ஒரே ஒரு வருத்தம். 1983-ல் உலகக் கோப்பை வென்ற போது அணியில் இருந்தவர்கள் குழுவாக வந்திருந்து பாராட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சாதாரண போட்டிகளில் முகம் காட்டும் ஸ்ரீகாந்த், அப்போதைய கேப்டன் கபில் தேவ் போன்றவர்களாவது வந்து வாழ்த்தி இருக்கலாம்.

 
4 Comments

Posted by on April 4, 2011 in Chummaa, Cricket