RSS

யுத்தம் செய்

09 Feb

இரண்டாம் நாளே பார்த்துவிட்டேன். இப்போதுதான் நேரம் கிடைத்தது.


படம் பார்க்கச் சென்ற ஒரே காரணம் மிஷ்கின் மட்டுமே. (மூன்று காரணங்கள்: 1.மிஷ்கின் 2.மிஷ்கின் 3.மிஷ்கின் என்று சொன்னால் CSKவைக் காப்பி அடித்தது போல் ஆகிவிடும்) கதாநாயகன் சேரனுக்கு போலீஸ் வேடம் என்றதும் சிரிப்புதான் வந்தது. ராமன் தேடிய சீதையில் நவ்யா நாயரிடம் அடிவாங்கும் அப்பாவி இளைஞனாக மட்டுமே ஏற்றுகக் கொள்ளக் கூடிய தோற்றம். பாடல்களை முன்பே கேட்கவில்லை. யாரோ புதிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், முக்கியமாக
கதாநாயகி என்று யாரும் இல்லை. இப்படி எந்தவித நிறைகளின்றி எதிர்பார்ப்புமின்றி போன என் நம்பிக்கையைக் குலைக்காமல் மேலும் ஆச்சரியங்களில் ஆழ்த்திவிட்டார் இயக்குனர் மிஷ்கின்.

இப்படி ஒரு படம் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டது என்று சொல்ல முடியாது. இப்படி ஒரு படத்தை நான் இதற்குமுன் பார்த்ததே இல்லை. காதலை மட்டுமே இன்னும் நம்பியிருக்கும் தமிழ்ச்சினிமாவில் இப்படம் நிச்சயம் ஓர் ஆறுதல், த்ரில்லர் திரைப்படங்களில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். ஆரம்பம் தொடங்கி இறுதி வரை மர்மம் கொண்ட த்ரில்லர் வகை திரைப் படங்களை தமிழில் பார்த்ததில்லை. த்ரில்லராக இருந்தாலும் அதிலும் காதலை நுழைத்து டூயட் பாடலைச் செருகி, கிளர்ச்சியூட்டும் காட்சிகளைப் புகுத்தி ஒரு வழி செய்துவிடுவார்கள். ஆனால் மர்ம முடிச்சுகள் கொண்ட த்ரில்லரை அதன் அழகியல் கெடாமல் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியதுபோல் இயக்கியதற்கு மிஷ்கினுக்கு ஒரு பூங்கொத்து! (இன்னும் எத்தனை நாளைக்குதான் பூச்செண்டையும் பூங்கொத்தையுமே கொடுக்கறது  புதுசா ஏதாவது கொடுக்கணும் 🙂 )

போலீஸ் கதாப்பாத்திரம் என்றால் திடகாத்திரமான உடலும், எப்போதும் விறைப்பாக இருந்து கர்ஜிக்கும் குரலும் இருக்கும் என்ற மரபைத் தகர்த்திருக்கிறார் மிஷ்கின். சிபிசியிடிக்கு மூளையும் Presence of mind-ம் மட்டுமே அவசியம் உடல் அல்ல என்று ஜேகே கதாப்பாத்திரத்தில் சேரன் கச்சிதமாகப் பொருந்தி உணர்த்தியுள்ளார். மம்மூட்டியையும் அவ்வப்போது கமலையும் இதுபோன்ற கதாபாத்திரத்தில் ஜோலித்துள்ளனர். இப்போது சேரனும் மிளிர்கிறார். வழக்கமான Melodramatic நடிப்பை மூட்டை கட்டிவைத்து செய்து முழுக்க முழுக்க தன்னை ஓர் இயக்குனரின் நடிகனாக மிஷ்கினிடம் ஒப்படைத்து அடுத்த பூங்கொத்தைப் பெறுகிறார் சேரன். குறிப்பாக நகவெட்டியை மட்டும் வைத்துக்கொண்டு வரும் சண்டை கலக்கல். ஆனாலும் வழக்கமான சோகமூஞ்சி சேரன் இறுதியில் வரும் தங்கை செண்டிமெண்ட் காட்சியில் தலைநீட்டுகிறார். But not an issue.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்தாலே த்ரில்லர் படங்கள் 75 %  வெற்றி பெற்றுவிடும். ஈரம் மற்றும் யாவரும் நலம் நல்ல உதாரணங்கள். இவ்விரு படங்களையும் மிஞ்சி விட்டது இப்படத்தின் பிரமிப்பூட்டும் பின்னணி இசையும், துல்லியமான ஒளிப்பதிவும் கோணங்களும் . புதியவர்களான கே (கார்த்திக்?) மற்றும் சத்யாவிற்கு முறையே பூங்கொத்துகள். இசையையும் ஒளிப்பதிவையும் மட்டும் சிலாகிக்கும் பலர் ஒலிப்பதிவையும், படத்தொகுப்பையும்  மறந்துவிடுகின்றனர். ஒலிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக ஒரே இடத்தில் காட்சிகள் அன்றும் இன்றுமாக மாறும்போது  அபாரம். இதேபோல் வேறு சில படங்களில் வந்திருக்கிறது. யாரேனும் நினைவு படுத்தினால் நல்லது.

தன் முந்தைய படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பதில் புதியவர்களை அறிமுகப் படுத்திஇருந்தாலும்  அவற்றை விட (நந்தலாலாவின் பின்னணி இசையைக் கணக்கில் கொள்ளவில்லை) சிறப்பாகவே அமைந்துள்ளது. அவரது வழக்கமான பாணியில் பாடல் இடம் பெற்றிருந்தாலும் இப்படத்தில் இடைச்செருகல் போல் தெரியவில்லை. கதையை நியாயப் படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. அதுவும் படு சீரியசாக போய்க்கொண்டிருக்கும் படத்தில் சாரு தோன்றும் காட்சிகள் நல்ல நகைச்சுவை. அதுவும் ஆர்மோனியம் வாசிக்கும் அந்த விரல்கள்! சிக்கில் ஷண்முகசுந்தரமாக சிவாஜி நாதஸ்வரம் வாசித்ததை எல்லாம் தூள் தூள் ஆக்கிவிட்டார் சாரு 😉 இருந்தாலும் அமீருக்கு இது தேவையா??

Casting பிரமாதம். வழக்கமாக குணசித்திர வேடங்களுக்கேன்றே சில default நடிகர்கள் தமிழில் இருந்து வந்தனர். நாகேஷ், மனோரமா, தேங்காய் சீனிவாசனைத் தொடர்து சிவகுமார், ஜெய்ஷங்கர், விஜயகுமார், லக்ஷ்மி, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயசித்ரா, டெல்லி கணேஷ். பின் நாசர், பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி, டெல்லி குமார், கிட்டி, கலைராணி, ஜானகி சபேஷ், ராஜசேகர்.

அதுபோல் இப்போது சில புதியவர்கள் ஆச்சரியப் படுத்துகின்றனர். முதலில் ஜெயப்ரகாஷ். பசங்க, நாடோடிகள், வம்சம், நான் மகான் அல்ல என்று மனிதர் எந்த வேடத்திலும் பிச்சு உதறுபவர். இவரைப் பற்றி பதிவர்/நண்பர் கார்க்கி ஒரு பதிவு எழுத முற்பட்டது குறிப்பிடத்தக்கது ஆடுகளம் படத்தில் நல்ல கதாபாத்திரம் தரப்படவில்லை குறித்து மிகவும் வருந்தினேன். இறுதியில் அவர் பேசும் நாலு வரி வசனம் நறுக் என்று இதயத்தில் குத்துகிறது. அக்காட்சியில் காமிரா கோணமும் அருமை. அடுத்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன். ஈரம் படத்தில் எதிர் வீட்டு Auntyயாக வந்து நீருக்கு இரையாகி, பாஸ் என்கிற பாஸ்கரனில் நகைச்சுவை அம்மாவாக வந்தாலும் இன்னும் என்னாலும் என் நண்பர்களாலும் விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸியின் அம்மா  என்றே எப்போதும் அறியப்படுவார். ஆனால் இனி ‘யுத்தம் செய்’ இவரது அடையாளமாக ஆகப் போகிறது. அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். ரோஹிணியைத் தொடர்ந்து இவருக்கும் மொட்டை போட்டுவிட்டார் மிஷ்கின். ஆனால் வீண் போகவில்லை. இனி குணசித்திர அப்பா அம்மா வேடங்கள் என்றால் கூப்பிடு ஜெயப்ரகாஷ் லக்ஷ்மியை என்ற நிலைமை வந்துவிடும் .

செல்வா என்ற கதாநாயகனை (கோல்மால், சக்திவேல் படங்கள் ஞாபகம் வரவில்லையா? ராஜாவின் அருமையான ‘மல்லிக மொட்டு மனச தொட்டு’ என்ற பாடலில் வருவாரே அவரேதான்! டாக்டர் ராஜசேகரின் தம்பி) பலரும் மறந்திருக்கையில் இப்படத்தில் மீண்டும் வந்திருக்கிறார் வில்லனாக. அதேபோல் யுகேந்திரன். மாணிக்க விநாயகம் இதுபோன்ற ஒரு பாத்திரத்திற்கு எப்படி ஒப்புக் கொண்டார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இவரும் நன்றாகவே செய்திருக்கிறார். பிரசன்னாவையும் பாண்டியராஜனையும்  வில்லன்களாக யாராவது நினைத்திருப்பார்களா? மிஷ்கின் மீது இப்போதும் அந்த வியப்பு இருக்கிறது! கொலைசெய்யப் படும் ஒரு மகனின் அம்மாவாக ஒரு சினிமா வாடையே இல்லாத ஒரு பெண் அசத்தியுள்ளார். சேரனின் உதவியாளராக வரும் தீபா ஷாவின் முகம் முதலில் பொருந்தாததுபோல் இருந்தாலும் பிறகு பழகிவிட்டது. தமிழ் முகம் உள்ள பெண்களே கிடைக்கவில்லையா? சேரனின் சீனியராக வரும் நரேன் (‘ஆடுகளம்’ ரத்தினசாமி) தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

ஜெயமோகன் கதைகளைப் படித்தாலே சிறுகதை எழுதலாம் என்று எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தம் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுபோல்  மிஷ்கின் படங்களைப் பார்த்து திரைப்பட இயக்கம் கற்றுக் கொள்ளலாம்! அந்த அளவுக்கு காட்சிக்குக் காட்சி பிரமிக்க வைக்கிறார். தன் வழக்கமான Longshots ,கால்களின் close-up, top angle -கள் என்று கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் மிஷ்கின். தகேஷி கிடாநோவிடமிருந்தும் அகிரா குரோசாவாவிடமிருந்தும் சுட்டுவிட்டார் என்று பல அறிவுஜீவிகள் சொல்லலாம். நந்தலாலாவின் மூலம் கிகுஜிரோ என்பதுபோல் இதன் மூலமும் ஒரு கொரியப் படம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. நான் அதைப் பார்க்கவில்லை. அதனால் சுடப் பட்டதா என்று தெரியவில்லை. கமலும், மணிரத்னமும் சுடவில்லையா? தான் வியந்து ரசித்த ஒன்றைத் தம் நாட்டு மக்களும் ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கப் பட்டாலும் அதை தைரியமாக ஒப்புக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம்.

படத்தில் குறைகள் என்று எனக்குத் தெரிந்தது நகவெட்டி சண்டைக் காட்சியில் சேரனை அடிக்க வருபவர்கள் ஒருவராக, இருவராக, மூவராக என்று அடிமேல் அடிவைத்து நகர்வது
சொல்லிக் கொடுத்த Choreography போல் உள்ளது. அதேபோல் இறுதியில் லக்ஷ்மி நடக்கும் போதும் உள்ளது. (நந்தலாலா விமர்சனத்தில் சுஹாசினி சொன்னது!). தனது பிரதேயக்மான காட்சிகள் என்று கால்களையும் Long Shot களையும் மிஷ்கின் தன் அடுத்த படத்திலும் காட்டினால் சலிப்பு ஏற்பட்டுவிடும். இறுதிக் காட்சியின் லொகேஷன் அஞ்சாதே படத்தில் வருவது போலவே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். சமீபத்தில் வெளிவந்த ஈசன் படம் போல் உள்ளது என்று பலரும் சொல்கின்றனர். நான் பார்க்கவில்லை. ஆனால் அதைவிட பன்மடங்கு நன்றாகவே இருக்கிறதாம். ஈசனைப் பார்க்க வேண்டும்.

அந்தக் கடைசி Long-shot ஏதோ ஓர் அயல் சினிமாவை நினைவூட்டினாலும் கண்கள் பனிக்கச் செய்தது. The film deserves Standing Ovation. நூறு சதவிகித நிறைவை அளித்தது. நன்றி மிஷ்கின் 🙂

மிஷ்கின் தமது ஒளிப்பதிவாளர்களை மிகவும் நேசிப்பவர் போலிருக்கிறது. ஒரு கதாபாத்திரத்திற்கு தன் முந்தைய படங்களின் ஒளிப்பதிவாளரான மகேஷ் முத்துஸ்வாமியின் பெயரை வைத்ததோடு மட்டுமின்றி, படம் முடிந்து “A Film by Mysskin” என்று போடாமல் ‘ஒளிப்பதிவு-சத்யா’ என்று போட்டது பாராட்டத்தக்கது. இறுதி வரை மிஷ்கின் பெயரே வரவில்லையே என்று நண்பன் சொன்னான். Longshot-ல் கால்களின் Close-up காட்டியதிலேயே ‘இயக்கம் -மிஷ்கின்’ என்ற குறியீடு உள்ளதே என்றேன் அவனிடம் 🙂

ஒரு படமாக ரசிக்க முயன்றாலும் இதுபோன்ற குற்றங்கள் நம்மைச் சுற்றி நடக்கின்றன
என்று நினைக்கையில் திக் என்கிறது. பெண்கள் அந்நியர்களிடம் மட்டுமின்றி அன்னியோன்யமானவர்களிடமும் கவனமாக செயல்பட வேண்டுமென்ற எச்சரிக்கை மணியை சற்று பலமாகவே அடிக்கிறது.

பி.கு : த்ரில்லர் படங்கள் மா…ஆஆஆதம் போலிருக்கிறது. பயணம், நடுநிசி நாய்கள், ஆரண்ய காண்டம் என்று வரிசையாக இம்மாதம் சினிமா ரசிகர்களுக்கு விருந்து. ‘கோ’ கூட அயன் போல் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம். அடுத்து வரும் படங்கள் குறிப்பாக நடுநிசி நாய்கள் இந்த அளவு இருக்குமா இல்லை இன்னும் சிறப்பாக இருக்குமா இல்லை கௌதம்  காதலைச் செருகி சொதப்பிவிடுவாரோ என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
12 Comments

Posted by on February 9, 2011 in Movie Reviews, Movies

 

12 responses to “யுத்தம் செய்

  1. Rachana

    February 10, 2011 at 2:02 am

    ‘K’ என்றாலே ‘கார்த்திக்’ தானா, கார்த்திக்??? 😉

     
    • Kaarthik Arul

      February 10, 2011 at 10:47 pm

      எனக்கு ‘கார்த்திக்’தான் முதலில் தோன்றும். பிறகு கிஷோர், Singer Kishore Kumar 🙂

       
  2. Carol.S

    February 10, 2011 at 10:40 pm

    I always love watching Cheran films coz it has a good story line..
    And with Mysskin dis one s gonna be special..
    Am gonna watch it 2moro..
    And U r one of d best CRITIC..

     
    • Kaarthik Arul

      February 10, 2011 at 10:45 pm

      Thanks Carol. Mysskin has done magic. If u watch in Sathyam screen, you’ll experience the BGM at its best 🙂 Don’t miss it.

       
  3. Arunram Subbiah

    February 11, 2011 at 1:04 am

    A pretty nice capture of the whole movie.. Felt it to have watched it for the 3rd time already.. Nice analysis of the down-ends.. About various minute nuances of the whole art.. I am sure directors will come to this write up to check the possible Character Artists’ Database.. I liked the part about the Director’s Name.. ;)..

     
    • Kaarthik Arul

      February 12, 2011 at 1:09 am

      Thanks Arun :-). I wud like to reveal the truth that u r the friend I’ve mentioned at the last 🙂

       
  4. Subramanian

    February 11, 2011 at 9:55 am

    Kaarthik neenga inga iruka vendiya alley illa!!!!!!!!!!! Really nice…………

     
    • Kaarthik Arul

      February 12, 2011 at 1:09 am

      Thanks Subbu 🙂 Ippadi ellaam solli enna yethi vidaadhe 🙂

       
  5. Thiyagu

    February 11, 2011 at 2:43 pm

    Dai perter…..unga manasula ennada nenachikitu irukeenga……nattula evvalavo nadakuthu…..athai ellam vitutu enda epppa parthalum neenga cinema pathi mattum pesareenga……..

     
    • Kaarthik Arul

      February 12, 2011 at 1:11 am

      Cinema dhaan enakku ulagame. Anyways thanks for ur 1st comment 🙂

       
  6. lgb

    February 12, 2011 at 1:25 pm

    Nice review bt felt it is too long.. Konjam chinnnatha iruntha “innum” nalla irunthirukkum 🙂

     
    • Kaarthik Arul

      February 18, 2011 at 5:23 pm

      @LGB, Welcome n Thanks for the comments 🙂 next time try panREn 🙂

       

Leave a reply to Kaarthik Arul Cancel reply