RSS

எங்கேயும் எப்போதும்

22 Sep

இந்தப் படத்தின் எதிர்பார்ப்புக்கு ஒரே காரணம் ஹாலிவுட் நிறுவனமான Fox Star தயாரிக்கும் முதல் தமிழ்ப் படம் என்பது மட்டுமே. தவிர இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம். வேறு எந்த ஒரு நட்சத்திர அந்தஸ்தும் இல்லாததால் எவ்விதமான ஓர் எதிர்பார்ப்பும் முன்தீர்மானமும் இருக்கவில்லை. பாடல்களைக் கூட முன்னமே கேட்க்காமல் படத்தில்தான் முதன் முறை கேட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டு ஈரோட்டில் பார்த்தேன். (கடைசியாக அங்கு பார்த்த ‘வாரணம் ஆயிரம்’ படத்திற்குக்கூட வரிசையில் நிற்கவில்லை)

சென்னையில் இருந்து திருச்சிக்குச் செல்லும் தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து சென்னைக்குச் செல்லும் அரசுப் பேருந்தும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாவதோடு படம் தொடங்குகிறது. அந்தப் பயணத்திற்கு முன்னும் பயணத்தின்போதும் நடக்கும் காட்சிகளை பொதுவாக குழப்பமளிக்கும் நான்-லீனியர் உத்தி மூலம் தெளிவாக காட்சிப் படுத்தியுள்ளார் அறிமுக இயக்குனர் எம்.சரவணன். ஜெய்-அஞ்சலி, ஷர்வானந்த்-அனன்யா ஜோடிகளின் கதைகள் கிளைகளாக விரியும் காட்சிகள் மிகவும் அருமை. இறுதியில் யாரெல்லாம் இருந்தார்கள், இறந்தார்கள், காதலர்கள் என்ன ஆனார்கள் என்று பரபரப்பான இறுதிக் காட்சியில்தான் சொல்ல வந்த செய்தியை, பிரசார நெடியின்றி நுண்மையாக பதிவு செய்துள்ளார். கொஞ்சம் அசந்தாலும் டாகுமெண்டரி போல் ஆகிவிடக் கூடிய படத்தை ஜனரஞ்சகமாக கொடுத்திருக்கும் இயக்குனர் சரவணனுக்கு பெரிய பூங்கொத்து.

திருச்சியில் வரும் ஜெய்-அஞ்சலி காதல் காட்சிகள் புதுமையானவை. மிகவும் பிராக்டிகலான பெண்ணாக தடாலடியாக வரும் அஞ்சலி அப்பாவியான ஜெய்யை ரொம்பவே இம்சிக்கிறார். ஆனாலும் ஆனந்த இம்சை. படம் முழுவதும் அஞ்சலியை ஜெய் ‘நீங்க’ ‘வாங்க’ என்று அழைப்பதும் அஞ்சலி ஜெய்யை ஏகவசனத்தில் அழைப்பதும் அழகாகவே உள்ளது. நேர்முகத் தேர்வுக்கு திருச்சியில் இருந்து சென்னைக்குப் புதிதாக வரும் அனன்யா வழியில் உதவி செய்யும் ஷர்வானந்த் மீது முதலில் சந்தேகமும் பின்பு வழக்கம்போல் காதலும் கொள்கிறார்.ஒரே நாளில் காதல் மலருமா என்று நமக்கு இயல்பாக எழும் கேள்வியை கதாபாத்திரம் மூலமே எழுப்பி இன்னொரு கதாபாத்திரம் மூலமே விடையளிக்க வைத்தது இயக்குனரின் சாமர்த்தியம். படத்தில் தனியாக காமெடி டிராக் இல்லை. இவர்களைக் கொண்டே நகைச்சுவையைப் படம் முழுதும் இழைய விட்டுருக்கிறார் இயக்குனர். அஞ்சலி கிடைத்த பந்துகளில் எல்லாம் சிக்ஸர் அடித்து விளாசி ஆச்சரியப் படுத்துகிறார். ஜெய்யும் அபத்தமான ஹீரோயிசம் எதுவும் இன்றி இயல்பாக நடித்துள்ளார். ஷர்வானந்த் மற்றும் அனன்யாவும் நிறைவாக நடித்துள்ளனர்.

ஒரு பாடலைத் தவிர அனைத்து பாடல்களும் மாண்டேஜ் பாடல்கள். கதையுடனும் காட்சிகளுடனும் நகரும் பாடல்கள்தான் எப்போதும் என் சாய்ஸ். பாடல்கள் மனதில் பதியாவிடினும் காட்சிகள் பதிந்து விடுகின்றன. படத்தின் பாடல்களை விட அதிகம் ஈர்த்தவை பேருந்தில் ஒலிக்கும் இளையராஜா பாடல்கள்தான். ஆரண்ய காண்டம் போல் இதிலும் பின்னணியில் ராஜாவின் பாடல்கள் வரும் இடங்களில் நம்மையும் அறியாமல் உதடுகள் அப்பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடும். மெதுவாக செல்ல ஆரம்பித்திருக்கும் பேருந்தில் ஸ்வர்ணலதாவும் எஸ்.பி.பி.யும் இணைந்து ‘எ/உன்னைத் தொட்டு’ என்று பாடும்போது நாமும் அந்தப் பேருந்தில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறோம். Characterization-ல் மிகுந்த அக்கறை எடுத்துள்ளார் இயக்குனர். சிறு கதாபாத்திரம் கூட மனதில் பதிந்து விடுகிறது. பேருந்தில் அம்மாவைத் தூங்கவிடாத குழந்தை முதல் ஃபோனில் முகம் தெரியாதவரிடம் ‘சாப்டீங்களா?’ என்று கேட்கும் முகம் காட்டாத குழந்தை வரை கச்சிதம். மனைவியைப் பிரிய மனமின்றி அவளுடனே பேருந்தில் வரும் கணவன் பாத்திரம் மட்டும் செயற்கையாக திணிக்கப் பட்டதுபோல் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்றாசும் படத்தொகுப்பாளர் கிஷோரும் இயக்குனருக்குப் பக்க(கா) பலம். சத்யாவின் இசை நிறைவு.

ஆரம்பக் காட்சியே வாகன விபத்து காட்டப்பட்டதும் Alejandro González Iñárritu-ன் அமோரேஸ் பெர்ரோஸ், 21 Grams போன்ற படங்களின் தாக்கத்தில் உருவானது என யூகித்து விடலாம். ஆனால் அதன் தாக்கத்தில் மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்தை’ விட நன்றாக உள்ளது. காரணம் அதிக சிக்கல் இல்லாத தெளிவான திரைக்கதை. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளைப் புள்ளிகளாக்கி, திரைக்கதை என்ற கோடு மூலம் அவர்களை இணைத்து, கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு, மிக யதார்த்தமான வசனங்கள், அற்புதமான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நிறைவான இசை போன்ற வண்ணங்கள் கொண்டு அழகிய திரைக்கோலமிட்டுள்ள இயக்குனர் சரவணன் நம்பிக்கை அளிக்கிறார். எங்கேயும் எப்போதும் கவனம் தேவை என்று சொல்லி நம் கவனத்தை ஈர்க்கிறார். குடும்பத்துடன் சென்று நிச்சயம் பார்க்கலாம்.

பி.கு: ஈரோட்டில் இதுவரை படம் முடிந்ததும் மக்கள் கைதட்டி நான் பார்த்ததில்லை. இயக்குனருக்கு ‘ஓ’ கூட போட்டார்கள்!

Advertisements
 
1 Comment

Posted by on September 22, 2011 in Movie Reviews, Movies

 

One response to “எங்கேயும் எப்போதும்

  1. எம்.ரிஷான் ஷெரீப்

    September 22, 2011 at 8:10 am

    நேற்றுத்தான் இலங்கையில் திரையிட்டார்கள். முதல்காட்சியே பார்த்து விட்டேன். மிகவும் அருமையான படம். பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். படத்தின் இறுதிப் பகுதி அதிர்ச்சி தருகிறது. ஒரு சண்டைக் காட்சி கூட இல்லாத படம் இதுதானென்று நினைக்கிறேன்.

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: