RSS

ஆரண்ய காண்டம் – சுந்தர காண்டம்

17 Jun

Disclaimer: படம் பார்க்காதவர்கள் இதைப் படிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாக எனக்கு ஆக்ஷன்/வன்முறை அதிகமுள்ள திரைப்படங்கள் பிடிக்காது. நாயகன், தளபதி விதிவிலக்குகள் . தமிழர்களால் அதிகம் ரசிக்கப்படும் ஹாலிவுட் ஆக்ஷன் படங்களான டெர்மினடர் போன்ற படங்களைக் கூட பார்க்கமாட்டேன். ‘காக்க காக்க’ படத்தைக் கூட சூர்யா-ஜோதிகா காதல் காட்சிகள் மட்டுமே பார்ப்பேன். ஒரு நாள் எதேச்சையாக நண்பனின் மடிக்கணினியில் வெகு நாட்களாக பார்க்காமலிருந்த ‘புதுப்பேட்டை’ மற்றும் ‘அஞ்சாதே’ படங்களைப் பார்த்து ஸ்தம்பித்துவிட்டேன். அதிலிருந்து ஆக்ஷன் கம் ட்ராமா படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். டிரெய்லர் வந்ததிலிருந்தே ஆரண்ய காண்டம் ஓர் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. சர்வதேச விருது பெற்ற படம் என்றபோது இன்னும் கூடியது. கடந்த ஆறு மாதங்களாக காத்திருக்கும் ஒரு படம். தணிக்கைக் குழுவின் கத்திரிக்குப் மிகுந்த Work Pressure கொடுத்து எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டு சற்று தாமதமாக வந்தாலும் It’s Worth the Wait!

ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சுரேஷ் கண்ணன் ‘தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா’ என்று தமது Buzz-ல் தெரிவித்திருந்தார். ஆம் தமிழ் சினிமா இதுபோன்ற முயற்சிகளால் முதிர்ச்சி பெற்று வயதுக்கு வந்துவிட்டது! முதிர்ச்சி என்பது வயதில் இல்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். பக்குவப்பட்ட ரசிகர்களுக்கானது. வழக்கமான சினிமாவின் சூத்திரங்களை சுக்கல் சுக்கலாக்கி புதியதொரு அனுபவத்தைக் கொடுத்தது. சற்றே வித்தியாசமான Gangster படம். படத்தில் நல்லவர்களே இல்லை எனலாம். ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் என்று எவரும் இல்லை. அனைவரும் கதாபாத்திரங்கள்! அதிலும் வில்லன்கள். அதிபயங்கர டெசிபெல்லில் அலறும் வில்லன்களைப் பார்த்து பழகிப்போன நமக்கு மணிரத்னம் படத்தில் பேசுவதுபோல் பேசும் இந்த வில்லன்கள் மிகுந்த ஆறுதல் அளிக்கின்றனர். ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் இருந்தாலும், Raw-வாக, யதார்த்தமாக இருக்கிறது.

முதல் காட்சியே தமிழ் சினிமா கண்டிராத ஒரு காட்சி. தான் கட்டாயப் படுத்தி ‘வைத்திருக்கும்’ பெண் சுப்புவுடன் (யாஸ்மின் பொன்னப்பா) முழுமையாக சல்லாபிக்க முடியாத ஒரு முக்கால் கிழட்டு தாதா சிங்கம்பெருமாள் (ஜாக்கி ஷ்ராஃப்) அவளை அடித்துத் துன்புறுத்துகிறான். வெளியில் அவரது அடியாட்கள் Auntyகளை மடக்குவது எப்படி என்று சுவாரசியமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கம்பெருமாளின் பிரதான சிஷ்யனான பசுபதி (சம்பத்) அவருக்கு வயதாகிவிட்டதால் (டொக்கு ஆகிவிட்டதென்று சொல்லப்படுகிறது) தான் ரிஸ்க் எடுத்து தனியாக வியாபாரத்தை ஆரம்பிப்பதாகக் கூறியதும், இருவருக்கும் ஈகோ மோதல் ஆரம்பமாகிறது. பசுபதியிடம் தனியாக ஆரம்பிக்கச் சொல்லிவிட்டு அவனைப் போட்டுத் தள்ளி அவன் கடத்திய போதை மருந்தை எடுத்து வர தன் ஆட்களை அனுப்புகிறான். சேவல் சண்டை மூலம் பணம் பெற்று தன் கடனை அடைக்க கிராமத்திலிருந்து வரும் ஒரு அப்பா மகன் ஜோடியிடம் அந்த போதை மருந்து கிடைக்கிறது. போதை மருந்தைத் தேடிவரும் கஜேந்திரன் (ராம்போ ராஜ்குமார்) என்ற இன்னொரு தாதாவின் கும்பல் இருவரையும் துரத்துகிறது. இதற்கிடையில் சிங்கம்பெருமாளின் நம்பிக்கையைப் பெற்ற காயடித்த காளை போலிருக்கும் அடியாள் சப்பையும் (ரவி கிருஷ்ணா) அவரது கீப் சுப்புவும் சேர்ந்து அவரை ஏமாற்றி பணத்தை எடுத்து மும்பை செல்ல திட்டமிடுகின்றனர்.இறுதியில் என்ன ஆகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையால் சொல்லி அசத்தலான ஓர் அனுபவத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் குமாரராஜா.

முதலில் தயாரிப்பாளர் எஸ்.பி.சரணுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். சென்னை-28, குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும், நாணயம் போன்று தொடர்ந்து பல வித்தியாசமான முயற்சிகளைத் தயாரித்து புதியவர்களுக்கு ஆதரவளித்து தமிழ் சினிமாவில் ஓர் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியுள்ளார். அடுத்து அறிமுக இயக்குனர் குமாரராஜா. ‘ஓரம்போ’ படத்தின் வசனகர்த்தா. (புதுமையான முயற்சி என்று பலரும் சொல்லியும் இன்னும் நான் அப்படத்தைப் பார்க்கவில்லை)இதிலும் வசனங்கள் நறுக்குதெரித்தாற்போல் இருக்கின்றன. அன்றாட வாழ்வில் பேசப்படும் வசனங்களைக் கொஞ்சம் மெருகூட்டியிருக்கிறார். “சப்பையும் ஒரு ஆம்பளைதான், எல்லா ஆம்பளைங்களும் சப்பைதான்”, “உன் அப்பாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா? அப்படியில்ல..ஆனா அவர் என் அப்பா..”; “மவனே! நீ மட்டும் உயிரோட இருந்தே உண்ணக் கொன்னுருப்பேண்டா” போன்று விசிலடிக்க வைக்கும் வாசனைகள் மூலம் சிக்ஸர் அடிக்கிறார் குமாரராஜா!

பின் கனக்கச்சிதமான பாத்திரத் தேர்வு. ஜாக்கி ஷ்ராஃபை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ரங்கீலாவில் பார்த்தவரா இவர்! வசனத்தை விட உடல்மொழியிலேயே அதிகம் பேசுகிறார்! நல்ல வேளை! பிரகாஷ் ராஜைத் தேர்வு செய்யாமல் இருந்தவரை நிம்மதி. சம்பத் வழக்கம்போல் அருமை. ரவிகிருஷ்ணா 7-ஜிக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு பாத்திரம். அந்த அப்பா-மகன் ஜோடியை எங்கிருந்து பிடித்தனர்? அதிலும் கொடுக்காப்புள்ளியாக வரும் அந்தச் சிறுவன் Simply Superb! ஒரே உறுத்தல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப் படும் படங்களில் சிறுவர்களை எப்படி நடிக்க வைக்கின்றனர்? அதுவும் தன் அப்பாவிடமே கெட்ட வார்த்தைகள் சரமாரியாக உதிர்க்கிறான்! யாஸ்மின் பொன்னப்பா பெங்களூர் மாடல் என்று படித்தேன். அவர் தன் பங்கைச் செவ்வனே செய்திருக்கிறார். முதலில் பூஜாவை அணுகி பின் இவரைத் தேர்ந்தெடுத்த செய்தியை அறிந்ததும் இவரைக் கொஞ்சம் பிடிக்காமல் போய் விட்டது. Miss you Pooja 😦

படத்தில் கதாநாயகன் இல்லை என்று முதலில் சொன்னேன். திருத்திக் கொள்கிறேன். இரண்டு பிரதான நாயகர்கள் உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் வினோத். அதிஅற்புதமான பின்னணி இசை மூலம் இளையராஜாவின் வாரிசென மீண்டும் நிரூபித்துள்ளார் யுவன். வன்முறைக் காட்சிகளுக்கு ரொமாண்டிக்கான இசையும் ரோமான்ஸின்போது கொஞ்சம் திகிலான இசையும் இழைத்து புதுமை செய்திருக்கிறார். குறிப்பாக கொடுக்காப்புள்ளி பையை மறைத்துவைக்குபோது வரும் பின்னணி இசையும் இறுதியில் பசுபதி மற்றும் கஜேந்திரன் மோதிக்கொண்டு சண்டையிடுமிடத்தில் வரும் பின்னணி இசையும் உலகத்தரம்! படத்தில் பாடல்களே இல்லை. ஆன்னால் பின்னாணியில் ஆங்காங்கே பாடல்கள் ஒலிப்பது, குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கும்போது பரம சுகம். மணிரத்னம் படமா என்று எண்ணுமளவு அருமையான ஒளிப்பதிவு. நிழல் உலகைக் காட்டுவதால் அதிகம் இருளில் படமாக்கப் பட்டிருக்கிறதோ?

பலரால் சிலாகிக்கப்படும் இத்திரைப்படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. சிங்கம்பெருமாளின் ஆட்களிடமிருந்து தப்பித்து ஓடும் பசுபதி, அவரது மனைவிக்கு ஆபத்து என்று தெரிந்தும் அவருக்கு ஒரு ஃபோன் செய்து எச்சரிக்காமல் இருப்பது பெரிய குறை. அவர் தப்பிச் செல்ல பைக் கிடைத்தது போல் காட்டுவதில் இருந்த கவனம் இதில் செலுத்தியிருக்க வேண்டாமா> அட்லீஸ்ட் அவர் மொபைலுக்கு அழைக்க முயற்சி செய்து ‘Not Reachable’/’Switched off’ என்று வருவது போலாவது காட்டியிருக்கலாம். உயிருக்கு பயந்து ஓடும் பசுபதி ஓட ஓட புத்திசாலித்தனமான முடிவுகள் எடுப்பதைக் கூட ஓரளவு ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இறுதிச் சண்டைக் காட்சியில் அவனுக்கு ஒன்றுமே ஆகாமல் அசால்ட்டாக கஜேந்திரனைப் போட்டுத் தள்ளுவது எல்லாம் கொஞ்சம் நெருடுகிறது.இருந்தாலும் படம் முடிந்ததும் மனதுக்கு ஒரு நிறைவைத் தருகிறது.

க்வெண்டின் டாரண்டினோ படத்தைத் தமிழில் பார்த்ததுபோல் இருந்தது. Guy Ritchie படங்களை இதனுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் நான் அவரது படங்களைப் பார்த்ததில்லை. பார்க்கும் எண்ணம் தோன்றியிருக்கிறது. ஹிந்தியில் அனுராக் காஷ்யப் படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். Cliche கதைகளில்கூட ஒரு Niche plot இருக்கும். அதுபோல் க்ளீஷேவான தாதா கதையில் (சொல்லப்போனால் கதையே இல்லை, வெறும் திரைக்கதை மட்டும்தான்) புதுமையான விஷயங்களைப் புகுத்தி பார்வையாளர்களை புத்திசாலிகளாக எண்ணிய இயக்குனருக்கு Hats Off!
நல்லதொரு படம் பார்த்து மனதுக்கு மிக நிறைவாய் இருந்தது. ஆனால் நான் வழக்கமாக படம் பார்க்கும் நண்பர்களுடன் பார்க்க முடியாததால் தனியாக பார்த்து அவர்களை மிகவும் மிஸ் செய்தேன் 😦

ஆரண்ய காண்டம் – ஆகா 🙂

ஆரண்ய காண்டம் படத்தின் பின்னணி இசைத்துணுக்குகளைத் தரவிறக்கம் செய்து கேட்கவும் http://www.backgroundscore.com/2011/06/aaranya-kaandam-background-score.html

Advertisements
 
1 Comment

Posted by on June 17, 2011 in Movie Reviews, Movies

 

One response to “ஆரண்ய காண்டம் – சுந்தர காண்டம்

 1. எம்.ரிஷான் ஷெரீப்

  June 17, 2011 at 12:07 pm

  நல்ல பதிவு.

  நடிகை பூஜா பற்றிக் கூறியிருந்தீர்கள்.

  பூஜா, தனது படிப்புக்காக தங்கமெடல் பெற்ற ஒரே நடிகை. இயக்குனர் ஜீவா நடிக்க அழைத்தபோது,
  பத்துப் படங்கள் மட்டுமே நடிக்கப் போவதாகச் சொல்லித்தான் பூஜா திரையுலகுக்கு வந்தார்.

  பத்துப் படங்கள் முடித்த அவர் இனி நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

  தற்பொழுது பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: