RSS

ஆடுகளம் – என் பார்வையில்

15 Jan

பொதுவாக எனக்கு Action படங்கள் பிடிக்காது- நல்ல கதையம்சம் இருந்தாலொழிய. நாயகன், தளபதி போன்ற படங்கள் கூட சிறு வயதில் பிடிக்காமல் சற்று பக்குவமடைந்ததும் மிகவும் பிடித்தன. பார்த்ததும் பிடித்த படங்கள் தேவர் மகன், புதுப்பேட்டை, பொல்லாதவன். பொல்லாதவன் படத்தின் திரைக்கதையை மிகவும் ரசித்தேன். அதே கூட்டணியின் படம் என்பதால் ஆடுகளம் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பிருந்தது. மேலும் ஜி.வி.யின் இசையில் ‘யாத்தே யாத்தே’ மற்றும் ‘அய்யய்யோ’ பாடல்கள் மனதைக் கொள்ளை கொண்டு  எதிர்பார்ப்பை அதிகரித்தன. இப்போதெல்லாம் ஒரு சில படங்களைத் தவிர்த்து மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆனால் ஆடுகளம் என்னை ஏமாற்றாமல் முழுத் திருப்தியளித்தது.  மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆடுகளத்தின் கதைக்களமே தமிழ் சினிமாவுக்குப் புதிது. சேவல்சண்டை பல நாடுகளில் நடத்தப் பட்டாலும் அதன் மூலம் தமிழர்களுடையது (துவக்கத்தில் ஒரு Montage with narration கூட சொல்லப்படுகின்றது). இன்றும் கிராமங்களில் ஜல்லிக்கட்டுக்கு இணையாக திருவிழாக்களில் பொழுதுபோக்காகவும், சூதாட்டமாகவும், கௌரவத்திற்காகவும் நடத்தப்படும் சேவல் சண்டையை படத்தின் களமாக எடுத்திருக்கிறார். கிழக்குச் சீமையிலே படத்தில் சேவல் சண்டையை பாரதிராஜா ஒரு காட்சியில் பதிவு செய்திருந்தாலும் ஆடுகளத்தில் விஸ்தாரமாக கையாளப் பட்டிருக்கிறது. நாயகன் அறிமுகப் பாடல், பன்ச் டையலாக், குத்துப் பாட்டு, திணிக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் எதுவுமின்றி எவ்வித காம்ப்ரமைசும் செய்துகொள்ளாமல் இப்படியொரு யதார்த்தமான படத்தைத் தந்ததற்கு இயக்குனர் வெற்றிமாறனுக்கு முதலில் ஒரு பூங்கொத்து (பூந்தோட்டத்தையே தரலாம்). இரண்டாவது இயல்பாக நடித்திருக்கும் நடிகர்களுக்கு.
‘கருப்பு’ கதப்பாத்திரத்துக்கு தனுஷ் கனக்கச்சிதம்- Tailor-made Character! மதுரைத்தமிழ் பேசி (வசுவுகள் அனைத்தும் பீப் பீப் பீப்), அம்மாவைக் கூட ‘கொண்டே…போடுவேன்’ என்று முரட்டு சுபாவம் கொண்ட, கொண்டைகள் சிலுப்பும் சண்டைச் சேவல் போல் கோபம்கொண்டு, உரிச்ச கோழி டாப்ஸீயிடம் ‘ஐ யாம் லவ் யூ” என்று குழைந்து முதல் பாதி முழுதும் தனுஷின் அமர்க்களமான அதகளம். நிச்சயம் அவரது சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்! தனுஷ் தன் அப்பாவைவிட மதிக்கும் ‘பேட்டைக்காரன்’ ஜெயபாலனுக்கும் (யார் இவர்? அசத்தியிருக்கிறார் 🙂 ராதாரவி குரல் கொடுத்திருக்கிறார்!) உள்ளூர் காவல் அதிகாரி ரத்தினசாமிக்கும் (‘பாலுமகேந்திரா கதை நேரம்’ புகழ் நரேன். இனி வெள்ளித் திரையிலும் அதிகம் வலம் வருவார்!) சேவல் சண்டை எதிராளிகள். ஜெயபாலானை வீழ்த்தி ‘பேட்டைக்காரன்’ பட்டத்தை வெல்வதே நரேனின் லட்சியம். ஜெயபாலனின் வலது கையான துரையும் (விக் வைத்த கிஷோர்! வழக்கம்போல் கலக்கியிருக்கிறார்!) இளம் சீடனான கருப்பும் அவருக்கு உறுதுணையாக இருந்து எப்போதும் ஜெயித்து வருகின்றனர். இடையில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஐரீனுடன் கண்டதும் காதல் கொள்கிறார்.
படத்தின் முக்கிய இரண்டு வில்லன்கள் பொறாமை மற்றும் ஈகோ. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் எப்படியெல்லாம் மனிதர்களை மாற்றுகின்றன என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அவருக்கு பக்கபலமாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அதிலும் அதிகமாக வரும் இரவுக் காட்சிகளை இயல்பான Lighting-குடன் நடிகர்களின் உணர்ச்சிகளை அபாரமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். சேவல் சண்டை CG வேலை என்பது ஓரிரு காட்சிகளுள் மட்டுமே தெரிகிறது. யதார்த்தமான வசனங்கள் மேலும் அழகூட்டுகின்றன. தனுஷ் தன் அம்மாவிடமும் டாப்ஸீயுடனும் பேசும் வசனங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஜி.வி.பிரகாஷின் இசை ‘யாத்தே யாத்தே’ என்று காதலில் துள்ள வைத்து, ‘ஒத்த சொல்லால’ என்று குத்தாட்டம் போட வைத்து (லுங்கியை ஏத்திக்கட்டி தனுஷ் ஆடும் ஆட்டம் சூப்பர்! ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்), ‘ஏன் வெண்ணிலவே’ என்று காதலில் கரைந்துருகி, ‘அய்யய்யோ’ என்று செல்லமாக சிணுங்க வைக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு விஷயம் பாடல்களைப் படமாக்கிய விதம். எந்த ஒரு பாடலும் திணிக்கப் படாமல், நாயகன் நாயகி பாடுவது போன்றோ, கனவுப் பாடல்களோ இல்லாமல் கதையோடு காட்சிகளாக நகர்வது மிக அழகாய் காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. மதுரை என்றால் சண்டை இல்லாமலா. இதிலும் இருக்கின்றன. ஆனால்வழக்கமான மதுரைப் படங்களில் வரும் அரிவாள் கலாச்சாரமும் வன்முறையும் இன்றி கிராமத்துக் காரர்களுக்கே உரித்தான இயல்பான கோபங்களால் வரும் இயல்பான யதார்த்தமான சண்டைகள் கொஞ்சம் ஆறுதல் அளிக்கின்றன.
லொகேஷன்களும் கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருக்கின்றன. அதுவும் மலைப்பகுதியில் இருக்கும் பேட்டைக்காரனின் வீடு இருக்கும் பகுதி கொள்ளை அழகு. கதையின் அனைத்து பாத்திரங்களும், மனதில் பதிகின்றன. தனுஷின் அம்மா, நண்பன், பேட்டைக்காரனின் மனைவி, ரத்தினசாமியின் அம்மா, சேவல் தோற்கும் தருவாயில் அழும் சிறுவன், என்று அனைவரும் தம் பங்கைத் திறம்படச் செய்துள்ளனர். ஆனால் ஐரீன் அப்பாவின் நண்பராக வரும் அருமையான நடிகர் ஜெயபிரகாஷை (பசங்க, நான் மகான் அல்ல, வம்சம்) அநியாயமாக வீணடித்துவிட்டார் இயக்குனர். அவருக்கு ஓர் அழுத்தமான பாத்திரம் இருக்குமென நம்பி ஏமாற்றம் அடைந்தேன். அதேபோல் நாயகியின் வீட்டிலுள்ளோர் அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரரான கூலிங்கிளாஸ் இளைஞன் அளவுக்கு பதியவில்லை.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக, ஜனரஞ்சகமாக இருப்பதால், அந்த அளவு வேகமாக நகராத கொஞ்சம் வித்தியாசமான (சிறுகதை போன்ற) முடிவுடன் இருக்கும் இரண்டாம் பாதி (‘ஒரு படத்தை பாதிப்பாதியாக கூறு போடுவது எனக்குப் பிடிக்காது’ என்று சொல்லிக்கொண்டால்தான் விமர்சகன் என்று மதிப்பார்கள் 🙂 ) பலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் மாற்றுக்கருத்து கொண்ட, சினிமாவை பொழுதுபோக்காக அன்றி உண்மையாக நேசிப்பவர்களுக்கு, தமிழ் சினிமா மேலும் முன்னேற நினைப்பவர்களுக்கு இதன் முடிவு பிடிக்கும் (என்று நினைக்கிறேன்). உலகம் என்னும் ஆடுகளத்தில் வாழ்க்கை என்னும் விளையாட்டு மனிதர்களால் எப்படி விளையாடப்படுகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடனும் வித்தியாசமான முடிவுடனும் அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் வெற்றிமாறன். வெற்றிமாறனுக்கு நிச்சயம் வெற்றிதான். குருநாதர் பெயரை மீண்டும் காப்பாற்றியுள்ளார். Hat-trick அடிக்க வாழ்த்துகிறேன்.
சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்தி.ஜானகிராமனின் பாயாசம் போன்ற சிறுகதைகளை  நினைவு படுத்தியது (தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையை படம் பார்க்கும் முன் பேருந்தில் செல்லும்போது படித்தது தற்செயலாக நடந்தது என்று ஏனோ மனம் நம்ப மறுக்கிறது!)
மைனஸ் : படத்தில் சில குறைகள் இருந்தாலும் பல நிறைகள் இருப்பதால் மன்னிக்கலாம் (சுஹாசினி Effect?!). மிகப் பெரிய மைனஸ் பாயின்ட் சன் பிக்சர்ஸ். கலாநிதி மாறனின் அதிகப்பிரசங்கித்தனமான மார்க்கெட்டிங் உத்தி இல்லாமலே இப்படம் வெற்றி பெறும். ஆனால் அளவுக்குமீறிய அமுதம் விஷமாவது போல் அது பலரை எரிச்சலூட்டிவிடும் அபாயம் உள்ளது (என் ஆதர்ச பதிவர் சுரேஷ் கண்ணன் மற்றும் சிலர் எந்திரன் பார்க்காதது போல்!)
டிஸ்கி 1 : சங்கம் திரையரங்கில் ரசிகர்களின் கூச்சல்களுக்கிடையில் பார்த்ததால் முதல் பாதியில் பல வசனங்கள் புரியவில்லை. அதிலும் Hardcore Madurai Slang! சாந்தம்  எலைட்டில் இன்னொரு முறை பார்க்க வேண்டும்.
டிஸ்கி 2 : படம் முடிந்ததும் போடப்படும் End Credits-ல் Filmography என்று பல திரைப்படங்களின் பெயர்கள் வந்தன. ஆனால் முழுவதும் பார்க்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதையும் இரண்டாம்
முறை பார்க்க வேண்டும்!
ஈகோ, பொறாமை, வன்மம், காழ்ப்புணர்வு போன்ற தீய எண்ணங்களை போகித்தீயில் எரித்து, நிம்மதியும் இன்பங்களும் கலந்த இனிமையான பொங்கல் தங்கள் வாழ்வில் என்றும் பொங்கிட வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் 🙂
Advertisements
 
7 Comments

Posted by on January 15, 2011 in Movie Reviews, Movies

 

7 responses to “ஆடுகளம் – என் பார்வையில்

 1. Dharshan

  January 15, 2011 at 8:24 am

  அருமயான விமர்சனம்
  நானும் ஆடுகளம் பார்க்கத்தான் ஆசைப்பட்டேன் ஆனால் என்ன செய்வது பக்கத்தில் உள்ள திரையரங்கில் சிறுத்தைத்தான் திரையிடப்பட்டது.

   
  • Kaarthik Arul

   January 15, 2011 at 10:31 am

   வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. தவறாமல் பார்த்து ரசிக்கவும்

    
 2. siventh

  January 19, 2011 at 2:19 pm

  அவர் ஈழத்தின் பிரபல கவிஞர்களில் ஒருவரான
  வ ஐ ச ஜெயபாலன்.
  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5._%E0%AE%90._%E0%AE%9A._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%

   
 3. sbskannan

  February 6, 2011 at 4:33 pm

  Nalla padam, Sirappana nadipu melum sirantha kathai kalam

   
  • Kaarthik Arul

   February 10, 2011 at 10:59 pm

   Thanks Kannan 🙂

    
 4. matheyu

  February 10, 2011 at 2:48 pm

  you did excellent comment, for example: மிகப் பெரிய மைனஸ் பாயின்ட் சன் பிக்சர்ஸ். கலாநிதி மாறனின் அதிகப்பிரசங்கித்தனமான மார்க்கெட்டிங் உத்தி இல்லாமலே இப்படம் வெற்றி பெறும். ஆனால் அளவுக்குமீறிய அமுதம் விஷமாவது போல் அது பலரை எரிச்சலூட்டிவிடும் அபாயம் உள்ளது (என் ஆதர்ச பதிவர் சுரேஷ் கண்ணன் மற்றும் சிலர் எந்திரன் பார்க்காதது போல்!)

   
  • Kaarthik Arul

   February 10, 2011 at 10:46 pm

   Thanks 🙂

    

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: