RSS

சென்னையில் திருவையாறு – நித்யஸ்ரீ மகாதேவன் – 18.12.10

19 Dec

நான் ஈரோட்டிலும் கோவையிலும் சில கச்சேரிகளுக்குச் சென்றிருந்தாலும் சென்னையில் இதுவரை ஒரே ஒரு கச்சேரிதான் கேட்டிருக்கிறேன். சென்ற வருடம் சுதா ரகுநாதனின் மார்கழி மஹா உற்சவம் நிகழ்ச்சியின் கச்சேரி. அதன் பிறகு இன்று நித்யஸ்ரீ மகாதேவன் காமராஜர் அரங்கில் பாடிய ‘சென்னையில் திருவையாறு’ கச்சேரி. இதுநாள் வரை அனுமதி இலவசம் கச்சேரிகளுக்கு மட்டுமே போய்க்கொண்டிருந்தேன். டிக்கெட் வாங்கிக் கொண்டு போன முதல் கச்சேரி என்ற பெருமைக்குள்ளாகிறார் நித்யஸ்ரீ. சுதாவிற்குக் கிட்டாத பெருமை!

அம்மாவுக்கு சென்னையில் முதல் கச்சேரி.  அம்மாவுக்கும் எனக்கும் ஒரு வாரம் முன்பே ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து கொண்டேன். பாட்டிக்கு நெடுநாளாக பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரியை மியூசிக் அகாடெமியில் கேட்க வேண்டுமாம்.  மியூசிக் அகாடமியில் டிக்கெட்டை நேரில் போய் காலையில் வாங்க வேண்டுமாம். அதனால் அவரது ஆசையை இம்முறை நிறைவேற்ற முடியவில்லை. மாமாவின் நண்பர் மனைவியான ரஞ்சனி (காயத்ரி) கச்சேரிக்கு இலவசமாக டிக்கெட் கிடைத்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்!

திரைப்பட விழாவின் நிகழ்ச்சி நிரல் அப்போது தெரியாததால் கச்சேரிக்கு புக் செய்துவிட்டேன். பின்புதான் ஷெட்யூல் கிடைத்தது. அதனால் சனிக்கிழமை அரை நாள் வேலை முடிந்ததும் உட்லண்ட்ஸ் சென்று போலந்து படமான ALL THAT I LOVE மற்றும் பிரெஞ்சு படமான QUEEN OF HEARTS பார்த்துவிட்டு காமராஜர் அரங்கம் வந்தடைந்தபோது சொல்லிவைத்தார் போல் அம்மாவும் வந்து சேர்ந்தார். கச்சேரிக்கு வந்திருந்த கூட்டத்தைக் கண்டதும் திகைத்துத்தான் போனேன். காரணம் இலவசக் கச்சேரிக்குக் கூட ஈரோட்டிலும் கோவையிலும் இந்த அளவு கூட்டத்தைப் பார்க்க முடியாது. சென்னையில் இலவசக் கச்சேரியொன்றை ஒன்றரை மணி நேரம் அரங்கின் வெளியில் டிவியில் சுதாவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தது வேறு விஷயம். தள்ளுமுள்ளுகளுக்கிடையே அம்மாவுடன் இருக்கையில் அமர்ந்தேன். ‘பட்டுப்புடவை சரசரக்க மாமிகளும் வெள்ளை ஜிப்பாக்கள் மாமாக்களும்’ என்பது குறைந்து ஜீன்ஸ் அணிந்த இளைஞர் இளைஞிகளையும் அதிகமாக காண முடிந்தது. நான்கு நாட்கள் முன் சாருவின் நூல் வெளியீட்டு விழாவில் வெறிச்சோடி இருந்த அரங்கமா இது என்று ஆச்சரியப்பட்டேன்!

சிந்துபைரவி படத்தில் ஜே.கே.பி அறிமுகமாகும் மஹா கணபதிம் பாடல் போல் நித்யஸ்ரீயின் ச-ப-ஸ ஆலாபனையுடன்  திரை உயர்ந்தது. பிரம்மாண்டமான மேடையில் பக்க வாத்தியக் கலைஞர்கள் (வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா) புடைசூழ நடுவில் அமர்ந்திருந்த நித்யஸ்ரீயைப் பார்க்கையில் அல்லிக் குளத்தில் மலர்ந்திருந்த தாமரை போல் இருந்தார். அருகில் ஒரு குமுதமலர் தம்புராவில் சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. முதல் பாடலாக கம்பீர நாட்டையில் ஊத்துக்காடு வேங்கட கவி இயற்றிய ‘ஸ்ரீ விக்னம் ராஜம் பஜே’வில் துவங்கினார். தொடர்ந்து மலயமாருதத்தில் தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனை. இளையராஜாவின் ஊமை நெஞ்சின் சொந்தம் மற்றும் கண்மணி நீ வர காத்திருந்தேன் நினைவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து விஸ்தாரமாக நளின காந்தியில் ஆலாபனை செய்து முத்துத்தாண்டவர் ஈசன் மேல் இயற்றிய பாடலைப் பாடினார். நளின காந்தியை நித்யஸ்ரீ பாடும்போது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடலும், அப்படத்தில் ஐஸ்வர்யா ராய் சங்கீதம் கற்றுக் கொள்ளும் இடத்தில் வரும் நளினகாந்தி ஆலாபனையை (அதிலும் நித்யஸ்ரீ) நினைவூட்டியது. அம்மா சரியாக ‘எந்தன் நெஞ்சில் நீங்காத..’ நளினகாந்திதானே ?’ என்றார் நூற்றி எட்டாவது முறையாக! கேதாரத்தை ஒத்து இருக்கும் நளின காந்தியின் ஆலாபனையில் தேஷ் ராகம் ஒரு கணம் தோன்றி மாயமானது போல் உணர்ந்தேன்.
அதன் பின் முத்துச்வாமி தீட்சிதரின் மிக பிரபலமான கீர்த்தனை ‘ஸ்ரீ ரங்கபுர விஹாரா’ பாடலை பிருந்தாவன சாரங்காவில் துவங்கியதும் ரசிகர்கள் ‘உச்’ கொட்டினர். மத்யமாவதி போலிருந்த பிருந்தாவன சாரன்காவைத் தழுவியது ‘நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்’. பின் ஜிங்காளா என்னும் அரிய ராகத்தில் தியாகராஜரின் பாடலொன்றைப் பாடினார். நாட்டுப்புறப் பாடலின் தாள லயம் போலிருந்தது. ரசிகர்கள் அதற்கேற்ப கைதட்டி மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து ஆபேரி/கர்நாடக தேவகாந்தாரி/பீம்ப்ளாஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் ராகத்தில் ஒரு பாடல் பாடினார். எப்படி பாடினரோ என்ற கீர்த்தனையைப் போலவே இருந்தது. பின் கச்சேரியின் முக்கியமான அம்சமான ராகம் தானம் பல்லவிக்கு சிம்மேந்திர மத்யமம் ராகத்தை எடுத்துக் கொண்டார். சுவாதி திருநாள் மகாராஜாவின் கீர்த்தனை. ஆலாபனையின்போது ‘அசைந்தாடும் மயில் ஒன்றா’ என்று அம்மா அபத்தமாக கேட்டார். ‘அது ஊத்துக்காடு பாடல்’ என்றேன் சற்று சலிப்புடன். சிம்மேந்திர மத்யமத்தில் அமைந்த அற்புதமான பாடலான ஆனந்த ராகத்தையும் அதன் ஹிந்தி பாடலுமான சாரா ஏ ஆலம், நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே, தாலாட்டும் பூங்காற்று நானல்லவா, இளையராஜாவின் பாடல் என்று வெகு நாட்கள் எண்ணிக் கொண்டிருந்த அந்த டெம்ப்ளேட்டில் பாலபாரதி இசையமைத்த தாஜ்மஹால் தேவையில்லை என்று அசை போட்டுக்கொண்டிருந்தேன். இந்த ராகத்தை மற்ற இசையமைப்பாளர்கள் கையாண்டதுபோல் தெரியவில்லை. நெரவலின்போது ஸ்வரஜதியில் அமர்க்களப்படுத்தி விட்டார். லோக்கலாக பின்னி பெடல் எடுத்துவிட்டார்! ஆலாபனையின்போது சிலர் எழுந்து சென்றனர். பாடகர் ஓய்வு எடுத்துக் கொள்ளும் தனியாவர்தனத்தின் போது சிலர் பலராயினர். ஆனாலும் கூட்டம் இருந்தது. மிருதங்கக் கலைஞர் அபாரமாக வாசித்தார். அவர் நித்யஸ்ரீயின் தகப்பனார், டி.கே.பட்டம்மாளின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகம் தானம் பல்லவியால் களைப்புற்ற ரசிகர்கள் அடுத்து பாரதியார் பாடல் என்றதும் History Class முடிந்து P.E.T Period வந்தது போல் உற்சாகமாகும் பள்ளிக் குழந்தைகள் போல் உற்சாகமாயினர். தனம் தரு கல்வி தரும் என்ற அபிராமி அந்தாதி விருத்ததைத் தொடர்ந்து பிருந்தாவனியில் ஓம் சக்தி ஓம் சதி ஓம் பாடலைப் பாடினார். எனது மூன்றாம் வகுப்பு நியாபகம் வந்தது. ஒரு ஃப்ரீ பீரியடில் எங்கள் தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்த பாடல் பசுமையாக நெஞ்சில் இருந்தது. பல வருடங்கள் கழித்துக் கேட்டாலும் நினைவில் இருந்தது சில வார்த்தைகளைத் தவிர. பலத்த கரகோஷத்தில் முடிந்தது.
அடுத்து அவர் பாடிய பாடல்தான் கச்சேரியின் ஹைலைட். ராகமாலிகை என்று ஒன்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடுவது வழக்கம். பொதுவாக சரணங்களில் ராகங்கள் மாறும் அல்லது பல்லவி ஒரு ராகத்தில் அனுபல்லவி ஒரு ராகத்தில் சரணம் ஒரு ராகத்தில் என்றிருக்கும். ஆனால் இரண்டு ராகங்களை எடுத்துக் கொண்டு ஒரு வரி ஒரு ராகம் பாடி அடுத்த வரி இன்னொரு ராகமாக மாறி மாறி பாடுவதை நான் கேட்டதில்லை. கந்தனும் கண்ணனும் என்ற தலைப்பில் ஷண்முகப் ப்ரியா ராகத்தை முருகனுக்கும் மோகனம் ராகத்தைக் கண்ணனுக்கும் எடுத்துக் கொண்டு ராகம் மாற்றி மாற்றிப் பாடி பிரமாதப் படுத்தினார். இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளையும் அரிய ராகங்களைப் பாடுவதிலும் நித்யஸ்ரீக்கு நிகரில்லை. கேட்டவர் அனைவரும் மெய்மறந்து போனோம். வரிகளும் அருமையாக இருந்தன. புதிய வார்ப்புகள் படத்தில் வரும் தம்தன தம்தன தாளம் வரும் ஷண்முகப்ரியாவிலும் வான் மேகங்களே மோகனத்திலும் அமைந்தது. பிறகுதான் என் மாமா மூலம் தெரிந்தது இப்பாடலை முன்பே ஜெயா டிவியின் மார்கழி மஹா உற்சவம் நிகழ்ச்சியில் பாடியுள்ளார்.
மீண்டும் ஒரு பாரதியார் பாடல் என்று திலங் ராகத்தில் ஆலாபனை செய்தார். சாந்தி நிலவ வேண்டும் என்று நினைத்தேன். மாறாக பாரத சமுதாயம் வாழ்கவே என்று தன் குருவும் பாட்டியுமான டி.கே பட்டம்மாள் திரைப்படத்தில் பாடிய பாடலைப் பாடினார். ரசிகர்களிடையே மீண்டும் உற்சாகம் ஊற்றெடுத்தது. அதன் பின் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியாக அமரர் கல்கியின் வரிகளில் எம்.எஸ் சுப்புலக்ஷ்மியால் புகழ்பெற்று அமரத்துவம் வாய்ந்த பாடலான காற்றினிலே வரும் கீதம் பாடலோடு மங்களம் பாடி நிறைவு செய்தார். மூன்று மணி நேரம் ஆகியிருந்ததே தெரியவில்லை.
நிகழ்ச்சி முடிந்தும் அரங்கில் சாருவின் விழாவை விட அதிக கூட்டமிருந்ததைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. என்ன இது?! நூல் வெளியீட்டு விழாவில் எண்ணிக்கை பற்றியே பேசிக்கொன்டிருந்தவர்களிடமிருந்து தொற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன்! நிகழ்ச்சி முடிந்தது வீடு செல்ல 200 ரூபாய் கேட்ட ஆட்டோக்காரரிடம் 150-க்கு பேரம் பேசிவிட்டு வழியில் அம்மா சொன்னார் ‘ஆசைக்கு ஒரு தடவ வந்தாச்சு. இதை விட நல்லா வீட்லயே LCD TV-ல பாத்துக்கலாம்.’ மனதிற்குள் மட்டும் சிரித்துக்கொண்டு தலையசைத்தேன்! வெற்றிகரமாக இந்த வாரம் புத்தக வெளியீட்டு விழா, திரைப்பட விழா, இசைக் கச்சேரி என்று நிறைவாகக் கழிந்தது. நாளை திரைப் பட விழாவில் ஐந்து படங்களைப் பார்க்கும் எண்ணம்!
Advertisements
 
2 Comments

Posted by on December 19, 2010 in Music

 

2 responses to “சென்னையில் திருவையாறு – நித்யஸ்ரீ மகாதேவன் – 18.12.10

 1. Aishwarya

  December 21, 2010 at 5:36 pm

  Nice..Thats why Its always a bliss listening to Nithyashree singing Bharathiyar’s.. 🙂 Its anaathudanu gaanu raamane U mentioned about? I think its the Only jingala based thyagarajar krithi..!..n kandhanum kannanum is one famous composition from Nithyashree’s Mother lalitha..One fav pick of Nithyashree herself.. 🙂

   
  • Kaarthik Arul

   January 2, 2011 at 12:40 am

   I was not sure about the lyrics of that Jingala song

    

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: