RSS

Daily Archives: October 23, 2011

கங்கை நீரும் கானல் நீரும்

கல்லூரிப் பருவம் வரை தீவிர ரஹ்மான் ரசிகனாக இருந்த என்னை இளையராஜாவின் பக்தனாக மாற்றிய பாடல்களுள் ஒன்று. மனம் சரியில்லாத ஒரு நாள் இந்தப் பாடலைக் கேட்டபோது மயிலிறகால் வருடிய இதம் கிடைத்தது. அதிலிருந்து எப்போது மனது பாரமாக இருந்தாலும் நான் தேடும் சுமைதாங்கி ராஜாவின் இசையில் முதலில் இந்தப் பாடல்தான் கேட்பேன். சிந்து பைரவி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். குறிப்பாக இரண்டாம் இடையிசைச்சரத்தில் வரும் குழலோசை – Ultimate. வாலியின் வரிகளும் ராஜாவின் இசையும் இணைந்து மனதை இலேசாக்கும். பிரியமானவரின் தோளில் சாய்ந்துகொண்டு கவலைகளை மறப்பது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.

பல வருடங்களாக இப்பாடலின் ஒரு வரியில் ஒரு சந்தேகம் இருக்கிறது. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி என்று ஒரு வரி வரும். இந்த வரி ஒரு பொதுவான உண்மை. கங்கை நீரால்தான் தாகத்தைத் தீர்க்க முடியும், கானல் நீரால் ஒருபோதும் முடியாது. அப்படியிருக்கையில் இந்த வரி மிகச் சாதாரணமாக இருக்கிறது. கதையின்படி மனைவியால் சந்தோஷத்தை இழந்த நாயகன் வழியில் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் தன் மன பாரத்தை இறக்கி வைக்கிறான். வாழ்க்கைத்துணையை கங்கை நீருக்கும், வழித்துணையை கானல் நீருக்கும் அல்லவா உருவகப் படுத்தியிருக்க வேண்டும்? அதுவே கங்கை நீரால் தீராத தாகம் கானல் நீரால் தீர்ந்ததடி என்றிருந்தால் கவித்துவமாக இருந்திருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன் நண்பர் மகேஷ் தன் பதிவொன்றில் இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தபோதும் இதைப் பின்னூட்டமாக இட்டேன். இப்போது அவர் வலைப்பூவை நீக்கிவிட்டார். விகடன் மேடையில் வாசகர் கேள்விகளுக்குப் பதிலளித்த கே.பி.யிடம் கேட்கத் தோன்றியது. சோம்பேறித்தனத்தால் எழுதிப் போடவில்லை. ட்விட்டரில் மதன்கார்க்கியிடம் இதுபற்றி கேட்டபோது என்னுடன் அவர் உடன்பட்டார். வாலியைச் சந்திக்க நேர்ந்தால் இந்தச் சந்தேகத்தைக் கேட்கச் சொல்லியிருக்கிறேன். பார்ப்போம்!

என்.சொக்கனின் தாள்/தாழ் சந்தேகத்திற்குப் பிறகு இதைப் பதிவு செய்யத் தோன்றியது.

 
10 Comments

Posted by on October 23, 2011 in Chummaa, Ilayaraja, K.Balachander, Music